ஊமை அழுக்கு
நான் அவளை பின்
தொடர்ந்து செல்கிறேன். இனி வரப்போகும்
எல்லா விடியலிலும் அவளது
சாயல் இருக்கப் போகிறதென்று
எனக்கு ஏன் தெரியாமற்
போனது.
உற்றார் உறவினர் பெற்றோர் என
அனைவரின் வெறுப்பையும் ஒரு சேர தின்று விழுங்கியபின்
நடந்து முடிந்த எனது
காதல் திருமணத்தின் மங்கல
வாசம் எங்களிருவர் உடலையும்
மனத்தையும் விட்டு இன்னும்
அகலவில்லை. நான் வேறொருத்தியை
பின் தொடர்ந்து நடக்கிறேன்
என்பதே எனக்கு ஆச்சரியமாக
இருக்கிறது.
கோவிலுக்குள்
நுழைந்த எங்களிருவர் கைகளில்
அரங்கநாதனுக்கு அணிவித்த மாலை என்று
கூறி ஆளுயர பன்னீர்
ரோஜா மாலையை என்
மனைவியிடம் கொடுத்து ஆசீர்வதித்தார் பூசாரி.
அவள் சட்டென்று அந்த
மாலையை தன் கழுத்தில்
போட்டுக் கொண்டு "நான் அழகா
இருக்கேனா" என்று கேட்டாள்.
அவ்வளவுதான் கேட்டாள். அதற்குள் இவள்
குறுக்கிட்டு விட்டாள். நான் இவளை
பின் தொடர்கிறேன்.
ஓட்டமும் நடையுமாக இவள் எங்கே
செல்கிறாள் என்று யோசித்துக்
கொண்டே இதோ இவளுக்குப்
பின்னே நானும் அதே
வேகத்தில் செல்கிறேன்.
அவளது சேலையின் நிறம் புதிதில்
பச்சையாக இருந்திருக்க வேண்டும். இப்பொழுது
அதில் ஊமை அழுக்குப்
படிந்து அது சாம்பல்
நிற சாய்வு கொண்டிருந்தது.
சேலை விலகலில் அவளது
தோலின் மினுமினுப்பு அவளை
செந்நிறத்தவள் என்று பறைசாற்றியது.
இரண்டடி முன் சென்றால்
அவளது முகத்தைப் பார்த்து
விடலாம் என்பது புத்திக்குத்
தெரிந்தாலும் மனம் அதன்
எல்லைக் கோட்டை அழுத்தமாக
வரைந்து என்னைத் தடுத்தது.
அவளாவது ஒரு முறை
திரும்பியிருக்கலாம். எந்த எல்லைக்கோட்டிற்குள்
அவள் சிக்குண்டிருக்கிறாள் என்று
தெரியவில்லை.
அவளை முன் செல்ல
அனுமதித்ததே நான்தானோ என்கிற வறட்டு
பெருமிதமும் இந்நேரத்தில் என்னுள் தோன்றி
மறைகிறது. நான் அவளைத்
தொடரந்து செல்கிறேன்.
இரண்டு மூன்று பேருந்து
நிறுத்தங்கள் கடந்து நாங்கள்
நடந்து கொண்டிருக்கிறோம். புது
மனைவியை எங்கேத் தொலைத்தேனென்று
வேறு நினைவில்லை. எங்காவது
தொலையட்டும் என்றது மனம்.
நேற்றிரவு என் மனைவியிடம்
நான் பேசியதை பிடித்துக்
கொண்டே அவள் இன்னும்
சில பிறவிகளை என்
நாமத்தை போற்றிக் கொண்டே
கடந்து விடலாம். அவ்வளவு
பேசினேன். இப்போதைக்கு அதைப் பற்றிய
எண்ணமெல்லாம் எனக்குத் தேவையில்லை. இந்த
பழுப்புச் சேலைக்காரி இவ்வளவு பதற்றத்துடன்
எங்கே செல்கிறாள் என்று
பார்த்தாக வேண்டும்.
அவள் கைகளில்
இறுக்கமாக பின்னப்பட்ட ஒரு வயர்
கூடை இருந்தது. அதில்
இரண்டு சிறிய மூடி
போட்ட குடுவைகள், பவழமல்லிகை
மலர்கள் சிலவும் ஒரு
தீப்பெட்டியும் இருப்பது தெரிகிறது. கோவிலுக்குச்
சென்று திரும்புகிறாள் போலும்.
சாமி கும்பிட்டுத் திரும்புகிறவளிடம்
ஒரு அமைதி இருக்க
வேண்டுமே அது இவளிடம்
இல்லையே. அங்கிருந்துத் தப்பித்து ஓடி
வரும் அபலை போலல்லவா
நடக்கிறாள். எட்டிப் பார்த்துக் கொண்டே
நடக்கிறாள். ஒரு வேளை
என்னைப் போலவே இவளும்
யாரையோ பின் தொடர்ந்து
செல்கிறாளோ என்று பல
கோணங்களில் சிந்தித்தேன். ஆனாலும் அவளை
பின் தொடரும் வேகம்
மட்டும் குறையவில்லை.
சட்டைப் பையில் செல்
ஃபோன் சிணுங்கியது. மனைவி
என்று தகுதி மாற்றம்
செய்திராத எனது காதலியின்
பெயர் தோன்றியதும் மனதை
குற்றவுணர்ச்சி கவ்வியது. இப்படியே திரும்பிச்
சென்று விடலாமா என்று
கூட தோன்றுகிறது. காதலி
அவள். நேற்றுவரை அவளை
காதலிப்பதாக சத்தியம் செய்திருக்கிறேன். ஏதோவொரு
கோவில் வளாகத்தில் அவளைத்
தவிக்க விட்டு வந்திருக்கிறேன்
என்று நினைக்கையில் நானே
என்னை வெறுக்குமளவிற்கு துயரம்
என்னை சூழ்கிறது.
சுற்று முற்றும் திரும்பி பார்க்கிறேன்.
பழுப்புப் புடவைக்காரி தென்படவில்லையென்றால் நிம்மதியாக
இருக்கும். ஆனால் அவள்
தெரிகிறாள். நடைபாதைக் கடையொன்றில் நின்று
மரத்தாலான பல்லாங்குழிக் கட்டையை எடுத்து
பார்த்துக் கொண்டிருக்கிறாள். வியாபாரியிடம் தர்க்கம் புரிகிறாள்.
விலை படியவில்லை போலும்.
அதே நேரத்தில் கழுத்தை
எட்டி எங்கோ பார்க்கிறாள்.
அவள் முகத்தில் மீண்டும்
அதே தவிப்பு. நான்
அவளை நெருங்கி விட்டேன்.
அவள் பல்லாங்குழியை வைத்து
விட்டு மீண்டும் நடக்கிறாள்.
நான் எந்த தடுமாற்றமுமில்லாமல்
அவளை பின் தொடர்கிறேன்.
எனது செல்ஃபோன் சிணுங்குவதும்
நின்றிருந்தது.
அவளை என் கண்களால்
துழாவுகிறேன். நீண்ட கருங்கூந்தலில்
ஓரிரு பவழமல்லி மலர்களை
அழுத்திச் செருகியிருந்தாள். கூந்தல் பின்னலில் அப்படியொரு
இறுக்கம் நேர்த்தி. எங்களிருவரிடையே இருந்த தூரம்
ஒரு கணக்கிட்ட காந்த
விசைக்கு ஒத்திருந்தது. சற்றே நெருங்கியோ
விலகியோ இல்லாமல் கச்சிதமான
இடைவெளி அது.
மீண்டும் செல்ஃபோன் சிணுங்கியது. அம்மா
என்ற பெயர் திரையில்
மினுங்கியது. இந்நேரத்தில் அம்மாவிடம் எப்படி
பேச முடியும். பேசலாம்
அவளிடம் பேசலாம் என்று
மனம் சொல்லியது. அதற்குள்
அழைப்பு நின்று விட்டது.
வாட்ஸப் குறுஞ்செய்தியின் ஒலி
கேட்டது. நான் நடந்து
கொண்டே அதைத் திறந்து
பார்க்கிறேன். மிஸ் யூ
டியர் சன் என்று
எழுதி அதனுடன் ஒரு
புகைப்படம் அனுப்பியருந்தாள் அம்மா. அதில்
ஒரு கோபிகையின் முதுகில்
குழந்தையான கிருஷ்ணன் அமர்ந்து குதிரை
சவாரி செய்வது போலிருந்தது.
அவன் தலையில் மயிற்பீலியும்
கையில் புல்லாங்குழலும் இருந்தது.
அம்மா தன்னை யசோதையாகவும்
என்னை கண்ணனாகவும் கற்பனை
செய்து கொண்டிருக்கிறாள் இன்று
வரை. என் மனைவியுடன்
நான் தனித்து சுற்றிக்
கொண்டிருக்கும் இந்நேரத்தில் அவள் மிஸ்
யூ என்று குறுஞ்செய்தி
அனுப்புகிறாள். என்ன அம்மா
இவள். இங்கிதம் தெரியாத
அம்மா. உனக்குதான் அப்பா
இருக்கிறாரே என்று பதிலனுப்ப
வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படி
செய்யாமல் மிஸ் யூ
டூ என்று அனுப்புகிறேன்.
பழுப்புச் சேலைக்காரி சாலையைக் கடந்து
ஒரு இருட்டான கட்டிடத்திற்குள்
நுழைகிறாள். அவள் முதுகு
புறம் வியர்த்துப் போய்
இரவிக்கைப் பகுதி நனைந்து
போயிருந்தது. வயர் கூடையைப்
பிடித்திருந்த பிடி இளகி
கூடை எந்நேரமும் கீழே
விழலாம் என்பது போல்
அவள் கைகளில் ஊசலாடியது.
நான் அவளைத் தொடர்கிறேன்.
அந்த இருண்ட கட்டிடத்திற்குள் வெளவால்கள் வட்டமடித்தன. அவற்றின் எச்சத்தின் நெடி என் குடலைப் பிரட்டுகிறது. நான் அவ்வுணர்வை விழுங்கி விட்டு சத்தமெழுப்பாமல் அவளை பின் தொடர்கிறேன்.
என்ன இவள் சேலைத்
தலைப்பை அவிழ்க்கிறாள். அவிழ்த்துக்
கொண்டே நடக்கிறாள். வயர்
கூடையை கைவிடுகிறாள். அதிலிருந்த
குடுவைகளின் மூடிகள் திறந்து அவற்றிலிருந்து
நறுமணம் கமழும் எண்ணெயும்
நெய்யும் வழிகிறது. பின் தொடர்ந்த
நான் அந்நறுமணத்தில் மதி
மயங்குகிறேன். வெளவால்கள் என் வலது
காதுக்குள் நுழைந்து இடது காது
வழியே வெளியேறுகின்றன. வழி
நெடுகிலும் பழுப்புச் சேலைக்காரி அவிழ்த்து
வீசிய தடையங்கள். கொலுசு,
கைவளை, மோதிரம், மணிமாலை,
திருமாங்கல்யம், பவழ மல்லி
சரடு, கூந்தல் இழைகள்
என ஒவ்வொன்றாக பார்த்துக்
கடக்கிறேன்.
தடயங்களைத் தொடர்ந்து சென்ற எனக்கெதிரே
ஒரு குகை தெரிகிறது.
இதற்குள்ளா சென்றிருப்பாள் என்கிற ஐயத்தோடு
உள்ளே நுழைகிறேன். நிணவாடை
என் முதுகுத் தண்டு
வரை சில்லிடச் செய்கிறது.
இதற்குள் எதற்கு நுழைந்திருக்கிறாள்.
இவள் நான் வருவது
தெரிந்தே இங்கு வந்திருக்கிறாளா
அல்லது என்னை அழைத்து
வந்ததே இவள்தானா.
அதோ அங்கு வெளிச்சம்
தெரிகிறது. இல்லை அது
வெளிச்சம் இல்லை. மஞ்சள்
நிறத்தில் ஒரு உருவம்.
நான் அதை நோக்கி
விரைகிறேன். குகைச் சுவற்றின்
ஒரு மடிப்பில் ஒரு
உடல் அசைவது போல்
தெரிகிறது. உற்றுப் பார்க்கிறேன். பசுமஞ்சள்
குழைவை உடல் முழுதும்
பூசிக் கொண்டு அமர்ந்திருக்கிறாள்
அவள். "நான் அழகா
இருக்கேனா" என்று என்னைப்
பார்த்து கேட்கிறாள். அவள் அமர்ந்திருக்கும்
மடி அதிர்கிறது. குகைச்
சுவற்றுக்கு உயிர் வந்தது
போல் அசைகிறது. அவள்
அதன் மீது ஏறி
ஒவ்வொரு மடிப்பாக பிடித்து
ஏறுகிறாள். அவள் மீது
படர்ந்திருக்கும் மஞ்சள் குகைச்
சுவற்றின் மீதும் படர்கிறது.
நான் அவளை பார்த்துக்
கொண்டிருக்கிறேன். தன்னுடலை மீறி ஏதோவொன்றை
சென்றடையும் முனைப்பில் அவள் இயங்குவது
புரிகிறது. என்னை ஏன்
இதையெல்லாம் பார்க்கச் செய்கிறாள். அவள்
படர்ந்து விழுந்து மீண்டும் எழுந்து
மீண்டும் படர்கிறாள். அவ்விடம் முழுதும்
மஞ்சள் நிறம் பூசுகிறாள்
அவள். தவறி விழுகிறாள்
மீண்டும் ஏறுகிறாள். படர்கிறாள். சுழன்று
நெளிந்து வளைந்து அவள்
ஏறி முடித்ததும் அந்த
குகை அசைவதை நிறுத்துகிறது.
அவள் என்னைப் பார்ப்பது
போலிருக்கிறது.
நான் அவளிருக்கும் திசையைத் திரும்பிப்
பார்க்காமல் வேகமாக வெளியேறுகிறேன்.
ஓடுகிறேன். தடுக்கி விழுந்து மீண்டும்
எழுந்து ஓடுகிறேன். வழியில்
பல்லாங்குழி கட்டை வியாபாரி
என்னை அழைக்கிறான். விலை
குறைத்துத் தருவதாகக் கூறுகிறான். நான்
அவனது பார்வையைத் தவிர்த்து
ஓடுகிறேன். செல்ஃபோன் சிணுங்குகிறது. யார்
அழைக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு
மனமில்லாமல் கோவிலை நோக்கி
ஓடுகிறேன். ஓடும் பொழுதே
என் மீது தெறித்திருந்த
மஞ்சள் குழைவின் அடையாளங்களைத்
துடைக்கிறேன். ஓட்டமும் நடையுமாக செல்லும்
என்னை யாரோ பின்
தொடர்வது போல் தெரிகிறது.
யாராக இருந்தால் என்ன
நான் ஓடுகிறேன் நடக்கிறேன்.
ஒருவழியாக நான் என்
மனைவியை விட்டுச் சென்ற
இடம் வந்துவிட்டது. எங்கே
அவள். என்னை நம்பி
கழுத்தை நீட்டியவள். அதோ
நான் விட்டுச் சென்ற
இடத்திலேயே நிற்கிறாளே. இது எப்படி
சாத்தியம். அவள் முகத்தில்
எவ்வித தவிப்போ பயமோ
பதற்றமோ இல்லையே ஏன்.
நான் அவளை நெருங்கி
அவள் முதுகைத் தொட்டேன்.
அவள் என்னைப் பார்த்து
"என்னங்க
அப்படியே நிக்குறீங்க..கேக்குறேன் ல
நான் அழகா இருக்கேனா..அரங்கனுக்கு சாத்தின மாலை நல்லாருக்கா"
என்கிறாள்.




Comments
Post a Comment