Light and Thread

 


(2024ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் ஹான் காங்கின் நோபல் பரிசு விரிவுரை)

               


ஒளியின் இழை

கடந்த ஜனவரி மாதம். திடீரென்று வந்த இடமாற்றலைத் தொடர்ந்து உடனடியாகக் கிளம்ப வேண்டியிருந்ததால் என் வீட்டின் கிடங்கறையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது, காலணிகள் வைக்கும் பழைய பெட்டி ஒன்று கிடைத்தது. திறந்து பார்த்தபோது, அதில் என் குழந்தைப் பருவத்து கையேடுகள் பல இருந்தன. அந்தக் குவியலுக்குக் கீழே ‘கவிதைகளின் புத்தகம்’ என்று பென்சிலால் குறுக்கும் நெடுக்குமாகக் கோடிடப்பட்ட தலைப்புடன் ஒரு சிற்றேடு இருந்தது. கையால் மடிக்கப்பட்ட ஐந்து A5 தாள்கள் குத்தூசிகளால் இணைக்கப்பட்டிருந்தன. புத்தகத் தலைப்பின் கீழே இரண்டு கோணல் மாணலான கோடுகள் வரைந்திருந்தேன். ஒரு கோடு இடப்புறமாக ஆறு படிகளில் மேலேறிச் செல்வதுபோலவும், மற்றொன்று வலப்புறமாக ஏழு படிகளில் கீழிறங்கி வருவதுபோலவும் இருந்தன. அது ஏதேனும் முன்னட்டை சித்திரமா? அல்லது வெறும் கிறுக்கலா? 1979 என்று வருடமும் என் பெயரும் பின்னட்டையில் எழுதப்பட்டு, உள்ளேயிருந்த பக்கங்களில் எட்டுக் கவிதைகள், இருபுற அட்டைகளையும் அலங்கரித்த அதே பென்சிலால் நேர்த்தியான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தன. காலவரிசைப்படி எட்டு வெவ்வேறு தேதிகள் ஒவ்வொரு பக்கத்தின் கீழும் எழுதப்பட்டிருந்தன. எனக்கு எட்டு வயதிருந்தபோது  எழுதப்பட்ட அந்தக் கவிதைகள் எல்லாவற்றிலும் போலித்தனமில்லாத குழந்தைத்தனம் வெளிப்பட்டாலும், ஏப்ரல் மாதம் எழுதப்பட்ட ஒரு குறிப்பிட்ட கவிதை என் கவனத்தை ஈர்த்தது. அதன் தொடக்கப் பத்திகள் இவ்வாறிருந்தன:

‘அன்பு எங்கிருக்கிறது? துடிக்கும் என் நெஞ்சினுள்ளே அது இருக்கிறது.’

‘அன்பென்றால் என்ன? அது நம் இதயங்களை இணைக்கும் பொன்னிற இழை.’

ஒருநொடியில் நான் நாற்பது ஆண்டுகள் பின்னுக்கு இழுத்துச் செல்லப்பட்டேன் – கையேடுகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த அந்த மதிய வேளையின் நினைவுகள் மீண்டும் வந்தன. பால் பாய்ன்ட் பேனாவின் மூடி பொருத்தப்பட்ட என்னுடைய சிறிய பென்சில், ரப்பர் துகள்கள், அப்பாவின் அறையிலிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்து வந்த ஸ்டேப்லர் இப்படி அனைத்துமே நினைவுக்கு வந்தன. என்னுடைய குடும்பம் சியோலுக்குக் குடிபெயரப்போவதை அறிந்ததும், வெவ்வேறு தாள்களிலும், நோட்டுப் புத்தகங்களின் ஓரங்களிலும், பயிற்சி ஏடுகளிலும் நான் கிறுக்கிய கவிதைகளை ஒரு புத்தகமாகச் சேகரிக்கும் எண்ணம் என் மனதில் எழுந்ததை நினைத்துப் பார்க்கிறேன். அதேபோல், என் ‘கவிதைகளின் புத்தகம்’ முடிந்தவுடன் அதை யாரிடமும் காட்டக்கூடாது என்று எந்தக் காரணமும் இல்லாமல் என் மனதில் எழுந்த உணர்வும் நினைவுக்கு வந்தது. 

அந்தக் கையேடுகளையும், சிற்றேடுகளையும் மீண்டும் பெட்டியில் வைத்து மூடுவதற்கு முன் அந்தக் கவிதையை என் அலைபேசியில் படம்பிடித்துக் கொண்டேன். இப்போதிருக்கும் எனக்கும் அந்தக் கவிதையை எழுதிய அப்போதைய எனக்கும் ஏதோ தொடர்ச்சி இருப்பதுபோல் தோன்றியதால் நான் அவ்வாறு செய்தேன். என் நெஞ்சினுள்ளே, துடிக்கும் என் இதயத்தினுள்ளே, நம் இதயங்களை ஒன்றிணைக்கும் பொன்னிற இழை – ஒளிவீசும் ஓர் இழை ஓடுகிறது.

*

பதினான்கு வருடங்கள் கழிந்து, என்னுடைய முதல் கவிதையும் அதற்கு அடுத்த வருடம் என்னுடைய முதல் சிறுகதையும் வெளியான பிறகு நான் எழுத்தாளர் என்று அறியப்பட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், நான் மூன்றாண்டுகளாக எழுதி வந்த என்னுடைய முதல் நீண்ட புதினத்தைப் பதிப்பித்தேன். கவிதை மற்றும் சிறுகதை உருவாக்கத்தின் முறைகள் குறித்து அவ்வப்போது நான் துணுக்குற்றாலும் நாவல் வடிவம் சற்றுக் கூடுதலாகவே என்னைக் கவர்ந்திழுப்பதாகத் தோன்றும். எழுதி முடிக்க ஓராண்டு முதல் ஏழாண்டுகள்வரை எடுத்துக்கொண்ட என்னுடைய புத்தகங்களுக்காக என்னுடைய தனிப்பட்ட வாழ்வின் பெரும்பகுதியை நான் விட்டுக்கொடுத்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். ஒருவிதத்தில் என்னை வேலை செய்யத் தூண்டுவதும் அதுவே (காலம்). அத்தியாவசியமானவை என்றும் தவிர்க்க முடியாதவை என்றும் நான் நினைக்கும் கேள்விகளைக் குறித்து ஆழமாக ஆராய்வதற்கும் அந்தச் சிந்தனைகளில் மூழ்கிப் போவதற்கும் இந்தக் கால இடைவெளி பயன்படுவதால் நான் இத்தகைய பரிமாற்றத்துக்கு உடன்படுவதுண்டு.

ஒவ்வொரு நாவலை எழுதும்போதும் நான் பல கேள்விகளை எதிர்கொள்கிறேன், அவற்றினுள் வாழ்கிறேன். அக்கேள்விகள் முடிவடையும் புள்ளியை நான் எட்டும்போது – கேள்விகளுக்கான விடைகள் கிடைப்பதும் கேள்விகள் முடிவுறுவதும் ஒன்றல்ல – என் எழுத்தும் அதன் (அந்தப் புள்ளியில்) முடிவைச் சந்திக்கிறது. எழுதத் தொடங்கும்போது இருந்த நான் முடியும்போது இருப்பதில்லை. அந்த மாற்றமடைந்த நிலையிலிருந்து மீண்டும் (எழுத) தொடங்குகிறேன். சங்கிலியின் இணைப்புகளைப்போல, டாமினோஸ் விளையாட்டின் காய்களைப்போல ஒன்றின்மீது ஒன்றாகக் குவிந்து தொடரும் கேள்விகள் எழுந்து, புதிதாக எதையாவது எழுத வழிவகுக்கின்றன. 

என்னுடைய மூன்றாவது நாவலான ‘The Vegetarian’ எழுதிய மூன்று ஆண்டுகளும் (2003 – 2005), பல வலிமிகு கேள்விகளுடன் நான் வாழ்ந்து வந்தேன்: ஒரு மனிதர் எப்போதும் அப்பாவியாக இருப்பது சாத்தியமா? எவ்வளவு தூரத்திற்கு நாம் வன்முறையைப் புறக்கணிக்க முடியும்? மனித இனத்தோடு தன்னை இணைத்துக்கொள்ள விரும்பாத ஒருவரின் நிலை என்ன? 

வன்முறையை எதிர்க்கும் விதமாக மாமிச உணவைத் தவிர்த்து, இறுதியில், தான் ஒரு தாவரமாக மாறிவிட்டதாக உணர்ந்து வெறும் தண்ணீர் உட்கொண்டு வாழும் இந்தக் கதையின் (The Vegetarian) நாயகியான யெங் – ஹை, தன்னைக் காத்துக்கொள்ள மேற்கொள்ளும் அதே முயற்சிகளால் மரணத்தை நெருங்கும் முரண்பாடான சூழலைச் சந்திக்கிறாள். யெங் – ஹை மற்றும் கதையின் இணைக் கதாநாயகியான அவளது சகோதரி இன் – ஹை இருவரும் கொடிய கனவுகளின் பிடியில் சிக்கித் தவித்து, மௌனமாகக் கதறி, உறவுகள் முறிந்து, இறுதியில் ஒன்று சேர்கின்றனர். இந்தக் கதையின் உலகத்தில் யெங் – ஹை வாழ வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன், இறுதிக் காட்சியை ஓர் ஆம்புலன்ஸில் வைத்தேன். பசுமையான இலைகள் கொண்ட மரங்கள் சூழ்ந்த மலையிலிருந்து வேகமாக இறங்கிய கார் சன்னலுக்கு வெளியே, மூத்த சகோதரி, ஏதோ ஒரு பதிலை எதிர்பார்ப்பதுபோல் – அது சாதகமானதோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் ஒன்றோ – தலையை நீட்டிப் பார்க்கிறாள். அந்த முழு நாவலுமே கேள்வியின் தொனியில் அமைந்ததுதான். வெறித்துப் பார்ப்பதும் எதிர்ப்பதுமாக. மறுமொழி எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒன்றாக.

‘The Vegetarian’ நாவலைத் தொடர்ந்து வெளியான ‘Ink and blood’ நாவல் அதே கேள்விகளுடன் தொடர்கிறது. வன்முறையை மறுக்கும் முயற்சியில் வாழ்வையும் உலகையும் புறக்கணிப்பதென்பது இயலாத ஒன்று. நம்மால் ஒருபோதும் தாவரங்களாக மாற முடியாது. பிறகு எப்படித்தான் இந்த வாழ்வைத் தொடர்வது? மர்மங்கள் நிறைந்த இந்த நாவலில் வரும் ரோமன் மற்றும் இடாலிக் (நேராக இருப்பவை ரோமன் வடிவம். சாய்ந்திருக்கும் எழுத்துகள் இடாலிக் வடிவம்) வடிவ வாக்கியங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுவதுபோல் அமைந்திருப்பது, மரணத்தின் நிழலோடு நீண்ட போராட்டத்தைச் சந்திக்கும் கதையின் நாயகி, தன் தோழியின் திடீர் மரணம் தற்கொலை இல்லை என்பதை நிரூபிப்பதற்காகத் தன் உயிரைப் பணயம் வைக்கும் போராட்டத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நாவலின் இறுதிக் காட்சியில், மரணம் மற்றும் அழிவின் பிடியிலிருந்து தப்பிக்கும் விதமாகத் தரையில் அவள் தவழ்ந்து வருவதை விவரித்து எழுதியபோது, இந்தக் கேள்விகளை நான் என்னிடமே கேட்டுக் கொண்டேன்: நாம் இறுதியில் பிழைத்திருக்க வேண்டியது அவசியமல்லவா? உண்மையின் சாட்சியாக நம் வாழ்வு இருக்க வேண்டுமல்லவா?

என்னுடைய ஐந்தாவது படைப்பான ‘Greek Lessons’ நாவலில் நான் இன்னும் ஆழமாகப் பயணிக்கத் தொடங்கினேன். இந்த உலகில் நாம் வாழ்ந்தாக வேண்டுமென்றால் அதற்கு எத்தகைய தருணங்கள் தேவைப்படுகின்றன? தங்கள் தனிமையான பாதைகள் சந்திக்கும்வரை மொழியை இழந்த ஒரு பெண்ணும், பார்வையிழந்த ஓர் ஆணும் வெறுமையிலும் இருளிலும் நடக்கின்றனர். கதையில் உணர்வுநிலைகள் (தொடு உணர்ச்சி) வெளிப்படும் அம்சங்களில் கவனம் செலுத்த விரும்பினேன். அந்தப் பெண் தன் கையை நீட்டி அந்த ஆணின் உள்ளங்கையில் ஏதோ எழுதும் இடம் வரும்வரை அந்த நாவல் மௌனத்திலும் இருளிலும் நிதானமாகப் பயணிக்கிறது. என்றென்றைக்கும் நினைவில் நிற்கப் போகும் அந்தப் பிரகாசமான தருணத்தில் இரண்டு கதாபாத்திரங்களும் தங்கள் மென்மையான பக்கங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இவ்விடத்தில் நான் கேட்க விரும்பிய கேள்வி இதுதான்: மனிதத்தின் இளகிய அம்சங்களைக் கருத்தில் கொள்வதன் மூலம், மனதிற்குள் எப்போதும் இருக்கும் அந்தக் கதகதப்பை, அரவணைப்பை உணர்வதன் மூலம், வன்முறை நிறைந்த இந்தப் பூமியில் சொற்ப காலம் மட்டுமே இருக்கப்போகும் இந்த வாழ்வை நாம் தொடர முடியுமோ? 

இந்தக் கேள்வியின் முடிவை எட்டியதும் நான் என்னுடைய அடுத்த புத்தகத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். அது 2012ம் ஆண்டின் வசந்த காலம். Greek lessons வெளியாகி சில நாள்களே ஆகியிருந்தன. ஒளியையும் அரவணைப்பையும் நோக்கி மற்றொரு அடியெடுத்து வைக்கும் ஒரு நாவலை எழுதப்போவதாக என்னிடமே கூறிக் கொண்டேன். வாழ்வையும் உலகையும் இணைக்கப்போகும் இந்தப் படைப்பைப் பிரகாசமான, வெளிப்படையான தொடுதலின் ஆற்றலைக் கொண்டு நிரப்ப வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். நாவலின் தலைப்பை உடனடியாக முடிவு செய்து, முதற் பிரதியின் இருபது பக்கங்களைக் கடந்தபிறகு, எழுதுவதை நிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டேன். என்னுள் இருந்த ஏதோவொன்று நான் எழுதுவதைத் தடுப்பதாக உணர்ந்தேன்.

*

அதுவரை, க்வாங்ஜுவைப் பற்றி எழுத வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. 

1980ம் ஆண்டு ஜனவரி மாதம். தொடர் படுகொலை சம்பவங்கள் நடப்பதற்குச் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, என் குடும்பம் க்வாங்ஜுவிலிருந்து வெளியேறியபோது எனக்கு ஒன்பது வயது. சில வருடங்கள் கழித்து, பெரியவர்கள் யாரும் சுற்றி இல்லாத ஒரு சமயம், தலைகீழாக அச்சடிக்கப்பட்டிருந்த க்வாங்ஜு புகைப்பட இதழின் தண்டுப்பகுதியைப் பார்த்துவிட்டு, அதன் பக்கங்களை நான் புரட்டியபோது எனக்குப் பன்னிரண்டு வயது. புதிதாக உருவான ராணுவப் படைகள் கட்டமைத்த தாக்குதலை எதிர்த்த க்வாங்ஜூ பகுதி மக்களும் மாணவர்களும் கைத்தடிகளாலும், துப்பாக்கி முனை கத்திகளாலும், துப்பாக்கிகளாலும் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட புகைப்படங்கள் அந்தப் புத்தகத்தில் இருந்தன. தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்களும், பலியானோரின் குடும்பத்தினரும் சேர்ந்து, (ஊடகத்துறை மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி) உண்மையின் சாட்சியங்களாக அப்புகைப்படங்களை ரகசியமாக வெளியிட்டனர். அப்புகைப்படங்களின் அரசியல் தாக்கத்தைச் சிறுமியாக இருந்த என்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், சிதைந்துபோன முகங்களின் பிம்பங்கள் என் மனத்தில் ஆழப்பதிந்து மனிதர்களைப் பற்றிய அடிப்படையான கேள்வியொன்றை என்னுள் எழுப்பின: ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யக்கூடியது இதுதானா? பின்பு, ரத்த தானம் செய்வதற்காகப் பல்கலைக்கழக மருத்துவமனையின் வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களின் புகைப்படங்களைப் பார்க்கையில், இதுதான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் செயலா? என்ற அதே கேள்வி மீண்டும் எழுந்தது. இரு வேறு பொருள்களில் எழுந்த அந்த ஒரே கேள்வி, என் மனத்தில் முட்டி மோதி, பதில் இல்லாமல், அவிழ்க்க முடியாத ஒரு முடிச்சாக விழுந்தது.

2012ம் ஆண்டின் வசந்த காலத்தில் மீண்டுமொருமுறை, வாழ்வின் பொருள் உணர்த்தும் என்னுடைய உன்னத நாவலை நான் எழுத முயன்றபோது, தீர்க்கப்படாத பிரச்சினையாக அந்தக் கேள்வி என் முன் எழுந்தது. மனிதர்கள் மீதான ஆழமான நம்பிக்கை குலைந்து வெகு நாள்கள் ஆகியிருந்தன. அப்படியென்றால் இந்த உலகத்தை இனி நான் எப்படி அணுகுவேன்? இந்தப் புரியாத புதிரை எதிர்கொண்டால் மட்டுமே என்னால் தொடர்ந்து எழுத முடியும் என்று புரிந்தது. அந்தச் சவாலைச் சந்திப்பதற்கும் அதைக் கடந்து செல்வதற்குமான ஒரே வழி, எழுத்து மட்டுமே என்ற தெளிவும் பிறந்தது. 

அவ்வருடத்தின் பெரும்பகுதியை - 1980ம் வருடம், மே மாதத்தின் கவாங்ஜுவை ஒரு படிமமாகக் கற்பனை செய்து - என் நாவல் எழுதுவதில் கழித்தேன். டிசம்பர் மாதம், மாங்வால் – டாங் கல்லறைக்குச் சென்றேன். மதியவேளை கடந்து வெகு நேரமாகியிருந்தது. முந்தைய நாள் பொழிந்த பனி அப்படியே இருந்தது. இருள் சூழத் தொடங்கியதும் பனி உறைந்த அந்தக் கல்லறையைவிட்டு வெளியே வந்தேன். கைகளை இதயத்தின் அருகில், நெஞ்சின் குறுக்கே கட்டியபடி வெளியேறினேன். க்வாங்ஜுவை ஒரு படிமமாக அல்லாமல் அதைத் தீர்க்கமாகப் பார்க்கும் ஒரு படைப்பாக என்னுடைய இந்த அடுத்த நாவல் இருக்கும் என்று என் மனதோடு சொல்லிக்கொண்டேன். சுமார் 900 வாக்குமூலங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை, தினமும் ஒன்பது மணி நேரங்கள் ஒதுக்கி ஒரு மாதத்தில் வாசித்து முடித்தேன். அதிலிருந்த ஒவ்வொரு தகவலையும் சேகரித்தேன். அதன்பிறகு, க்வாங்ஜு பகுதி மட்டுமல்லாது, மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலும் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களைப் பற்றி வாசித்தேன். அதன் தொடர்ச்சியாக, இன்னும் பின்னோக்கிச் சென்று, வரலாற்றில் இதுவரை மனிதர்கள் அரங்கேற்றிய படுகொலை சம்பவங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.

என்னுடைய நாவலைக் கட்டமைக்கும் இந்த ஆராய்ச்சியின்போது, இரண்டு முக்கியமான கேள்விகள் என் மனத்தை ஆக்கிரமித்தன. எனது இருபதுகளின் பருவத்தில், நான் பயன்படுத்திய ஒவ்வொரு கையேட்டின் முதல் பக்கத்திலும் நான் பின்வரும் வாக்கியங்களை எழுதியிருந்தேன்: 

‘கடந்தகாலத்திற்கு நிகழ்காலம் உதவுமா?

இறந்து போனவற்றை உயிருடன் இருப்பவை காப்பாற்றுமா?’

என்னுடைய தொடர் வாசிப்பனுபவத்தின் முடிவில், இவ்விரண்டு கேள்விகளுக்கும் விடைகள் கிடைப்பது அரிது என்பது தெளிவாகப் புரிந்தது. மனிதத்தின் பலவீனமான கூறுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டதன் விளைவாக, மானுடத்தின்மீது நான் கொண்டிருந்த பலவீனமான நம்பிக்கையும் ஒரேயடியாகச் சிதைந்துபோனதை உணர்ந்தேன். ஆனால் அப்போதும் என்னுடைய நாவலை நான் கைவிடவில்லை. சில நாள்களுக்குப் பிறகு, மாலை நேரப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் கையேட்டுக் குறிப்புகளை வாசிக்க நேர்ந்தது. 1980ம் ஆண்டு மே மாதம் க்வாங்ஜு பகுதியில், சுயாட்சியை வலியுறுத்திய குடிமக்கள் சிலரின் ‘முழுமையான சமூகம்’ என்ற அமைப்பு பத்து நாட்களாக நடத்திய எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற பார்க் யோங் - ஜுன் என்ற அமைதியான கூச்சச் சுபாவம் கொண்ட இளைஞரின் கையேடு அது. மாகாண நிர்வாக தலைமையகத்தின் அருகே இருந்த YWCA கட்டடத்தில், ராணுவத்தினரின் வருகையை அறிந்தும், அவர் அங்கு பதுங்கியிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். வாழ்வின் கடைசி இரவில் அவர் தனது கையேட்டில் அவர் இவ்வாறு எழுதினார்: “ஏன் கடவுளே? என்னைக் குத்திக்கிழித்து வலி தரும் மனசாட்சியை ஏன் எனக்குக் கொடுத்தாய்? நான் வாழ விரும்புகிறேன்.” 

இந்த வரிகளைப் படித்ததும், என் நாவல் பயணிக்க வேண்டிய திசை மின்னல் வெட்டியதுபோல் தெளிவாகத் தெரிந்தது. என்னுடைய இரண்டு கேள்விகளையும் நேரெதிராகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிந்தது.

நிகழ்காலத்திற்குக் கடந்த காலம் உதவுமா? மடிந்துபோனவை உயிருடன் இருப்பவற்றைக் காப்பாற்றுமா?

பிறகு, நான் எழுதியவை Human Acts என்ற நாவலாக உருவெடுத்தபோது, நிகழ்காலத்திற்குக் கடந்தகாலம் உதவுவதை என்னால் சில தருணங்களில் உணர முடிந்தது, அதேபோல் இறந்துபோனவர்கள் உயிருடன் இருப்பவர்களைக் காப்பாற்றுவதையும் உணர முடிந்தது. நான் அவ்வப்போது அந்தக் கல்லறைக்குச் சென்று வந்தேன். வானிலை பெரும்பாலும் தெளிவாகவே இருந்தது. என் கண்களை மூடியபோது, சூரியனின் செம்மஞ்சள் கிரணங்கள் என் இமைகளை ஊடுருவிச் செல்வதை என்னால் உணர முடிந்தது. வாழ்வின் ஒளியாகவே அது எனக்குத் தோன்றியது. அந்த ஒளியும் காற்றும் இனம்புரியாத ஒரு கதகதப்போடு என்னை அரவணைப்பது போலிருந்தது.

புகைப்படங்களின் புத்தகத்தைப் பார்த்த பிறகு நெடுநாள்களாக எனக்குள் தங்கிவிட்ட கேள்விகள் இவைதான்: மனிதர்களுக்குள் இவ்வளவு வன்முறை எப்படி வந்தது? அதே நேரத்தில் மனத்தில் பொங்கியெழும் வன்முறை உணர்வை எதிர்க்கவும் அவர்களால் எப்படி முடிகிறது? மனித இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதன் பொருள் என்ன? மனித மனத்தின் குரூரம், மனிதமெனும் மாண்பு ஆகிய இரு துருவங்களுக்கிடையே உள்ள வெற்றிடத்தினூடே பயணிப்பதற்கான பாதையைக் கண்டறிவதற்கு, மடிந்துபோனவர்களின் உதவி எனக்குத் தேவைப்பட்டது. Human Acts என்ற இந்த நாவலில் வரும் டாங் – ஹு என்ற சிறுவன் தன் அம்மாவைச் சூரியனை நோக்கித் திரும்பச் செய்வதற்காக அவளுடைய கைகளை இறுகப்பற்றி இழுத்து அவளைச் சம்மதிக்க வைப்பதுபோல ஓர் உதவி எனக்குத் தேவைப்பட்டது.

இறந்தவர்களுக்கும், துயரடைந்தவர்களுக்கும், தப்பிப்பிழைத்தோருக்கும் நடந்த துயரங்களை என்னால் ஒருபோதும் இல்லாமல் செய்துவிட முடியாது. ஆனால் எனக்குள் துடிக்கும் உயிரின் துணைகொண்டு அவர்களுக்கு உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் என்னால் தர முடியும். அது மட்டும்தான் என்னால் முடியும். நாவலின் தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிவைப்பதுபோல், நாவலின் முதல் காட்சியை இறந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடத்தில், இறுதிச் சடங்குகள் நடைபெறுமிடத்தில் வைத்தேன். அங்கே, பதினைந்து வயதான டாங் – ஹு,  அந்த உடல்களின்மீது வெள்ளைத் துணி போர்த்திவிட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிக்கொண்டிருக்கிறான். அவற்றின் வெளிர்நீல நிற மையப்பகுதியை அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். 

இந்த நாவலின் கொரிய மொழி தலைப்பு, Sonyeon – i – onda. ‘onda’ என்பது oda என்ற வினைச்சொல்லின் நிகழ்கால வடிவம். அதற்கு ‘வருகிறது’ (to come, coming) என்று பொருள். அந்த இளஞ்சாரணரை (sonyeon என்றால் சாரணர் என்று பொருள்), ‘நீ’ என்று நெருக்கத்துடனோ அல்லது நெருக்கமில்லாமலோ, முன்னிலை இடத்தில் வைத்து அழைத்த நொடியில், மங்கலான வெளிச்சத்தில் அவன் கண்விழித்து நிகழ்காலத்தை நோக்கி வருகிறான். அவனுடைய காலடிகள் ஓர் ஆன்மாவின் காலடிகளை ஒத்திருக்கின்றன. அவன் மேலும் நெருங்கி வந்து இந்தப் பொழுதாகிறான். மனித மனங்களின் குரூரமும் அன்பும் இணைக் கோடுகள்போல் இருக்கும் ஓர் இடத்திற்கு க்வாங்ஜு என்ற பெயரிருந்தால், அது  ஒரு குறிப்பிட்ட நகரத்தை மட்டும் குறிக்கும் பெயர்ச்சொல்லாக இல்லாமல், அதுபோன்ற பல இடங்களைக் குறிக்கும் பொதுப்பெயராக மாறிவிடும் என்பதை இந்த நாவல் எழுதும்போது நான் புரிந்துகொண்டேன். காலவெளியைக் கடந்து அது நம்மிடம் வருகிறது, அதுவும் நிகழ்காலமாக. இப்போதும்கூட. 

*

நாவல் ஒரு வழியாக முடிந்து, 2014ம் ஆண்டு வெளியானதும், அதைப் படிக்கும்போது தாங்கள் உணர்ந்த வலியை வாசகர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது நான் வியந்து போனேன். நாவலை எழுதுகையில் நான் உணர்ந்த வலியும், அதை வாசிக்கையில் வாசகர்கள் உணர்ந்த வலியும் எந்தப் புள்ளியில் இணைந்தன என்பதைச் சிறிது நேரமெடுத்துத்தான் நான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அந்தத் துயரத்தின் காரணம் என்ன? மனிதம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, அந்த நம்பிக்கை உடையும்போது, நாமே அழிந்துவிடுவதுபோல் உணரும் துயரமா? அல்லது மனிதத்தை நேசிக்க விரும்பும் நாம், அந்த நேசம் உடையும்போது உணரும் துயரமா? அன்பு வலி தரும் ஒன்றா? ஒருவேளை அதுதான் அன்பிற்கான சாட்சியமா?

அதே வருடம் ஜூன் மாதத்தில் நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில்,   பரந்த சமவெளி ஒன்றில் மெலிதான பனிப்பொழிவினூடே நான் நடந்துகொண்டிருந்தேன். ஆயிரமாயிரம் கறுத்த மரத்தண்டுகள் அந்தச் சமவெளி முழுதும் காணப்பட்டன, ஒவ்வொரு மரத்தண்டின் பின்னாலும் ஒரு புதை மேடு இருந்தது. ஒரு புள்ளியில், நான் நீருக்குள் இறங்கிக் கொண்டிருந்தேன், அங்கிருந்து திரும்பிப் பார்த்தபோது சமவெளியின் ஒரு முனையில், தொடுவானம் என்று நான் கற்பனை செய்த அந்த மூலையில், கடல் வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தது. இந்த இடத்தில் ஏன் இத்தனை கல்லறைகள் இருக்கின்றன என்று வியந்தேன். கடலருகே இருந்த கல்லறை மேடுகளின் கீழே புதைந்திருந்த எலும்புகள் கடல் நீரால் இழுத்துச் செல்லப்பட்டிருக்காதா? சமவெளியின் மேற்பகுதியில் இருந்த கல்லறை மேடுகளின் அடியிலிருந்த எலும்புகளை, அவை அடித்துச் செல்லப்படும் முன் நான் இடம் மாற்றிவிட வேண்டாமா? ஆனால் எப்படி? என்னிடம் மண்வெட்டி கூட இல்லையே? நீரின் அளவு ஏற்கெனவே என் கணுக்கால்களை எட்டிவிட்டது. கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். அசைவற்ற சன்னல் கம்பிகள் வழியாக வெறித்துப் பார்த்த எனக்கு, அந்தக் கனவு ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றிய உள்ளுணர்வு என்பது புரிந்தது. அந்தக் கனவைத் தெளிவாக விவரித்து எழுதினேன். அதுவே என்னுடைய அடுத்த நாவலின் தொடக்கமானது. 

அந்தக் கனவும், அதைத் தொடர்ந்து என் மனத்தில் எழுந்த எண்ணங்களும் எதை நோக்கிச் செல்கின்றன என்ற தெளிவில்லாதிருந்தாலும், அவை பல நல்ல கதைகளின் தொடக்கத்திற்கு வித்திட்டன என்றே கூற வேண்டும். இறுதியாக, 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஜெஜு தீவில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கினேன். அடுத்த இரண்டு வருடங்கள் ஜெஜு தீவிலும் சியோலிலும் என் நாள்களைக் கழித்தேன். ஜெஜு தீவின் காடுகளில், கடற்கரையில், ஊர் வீதிகளில், அதன் கடுமையான காலநிலையை உணர்ந்தவாறு - புயலிலும் கோடை வெளிச்சத்திலும் பனியிலும் மழையிலும் – நடந்தபோது நாவலின் வரைவு ஓரளவு கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன். Human Acts நாவலுக்காக, படுகொலை சம்பவங்களில் தப்பித்தவர்களின் வாக்குமூலங்களையும் இன்னபிற தகவல்களையும் சேகரித்த பிறகு, சொற்களில் அடங்க மறுத்த பல கொடூரமான விஷயங்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் எழுத்தில் கொண்டு வந்தபோது உருவானதுதான் We Do Not Part என்ற படைப்பு. கறுத்த மரத்தண்டுகளையும் பொங்கும் கடலையும் கனவில் நான் கண்டு சுமார் ஏழு வருடங்கள் கழிந்த பிறகு அந்தப் புத்தகம் வெளியானது.

அந்த நாவலை எழுதும்போது என்னுடைய கையேட்டில் நான் எழுதிய குறிப்புகள்:

‘உயிரானது வாழ்வை விரும்புகிறது. உயிர் என்றால் அரவணைப்பு. 

மரணம் என்பது உணர்வுகள் மரத்துப்போவது. 

ஒருவர் முகத்தில் விழும் பனி உருகாமல் உறைந்துபோவது போன்ற நிலை. கொலை என்பது உணர்வுகளைக் கொல்வது.

வரலாற்றிலும் மனிதர்கள், பிரபஞ்சத்திலும் மனிதர்கள். புயலும் கடல் நீரோட்டமும். 

காற்றும் நீரும் சுழன்று சுழன்று இந்தப் புவி முழுவதையும் இணைக்கின்றன. நாம் அனைவரும் இணைந்திருக்கிறோம். இணைந்திருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. என் வேண்டுகோள்.’

அந்த நாவல் மூன்று கோணங்களில் நம்முன் விரிகிறது. கதைசொல்லியான க்யுங்ஹா, தன் நண்பரின் மகனான இன்செனின் இல்லத்திற்கு, அவனுடைய செல்லப் பறவையைக் காப்பாற்றும் பொருட்டு சியோலிலிருந்து ஜெஜு தீவிற்குக் கடுமையான பனிப்பொழிவையும் மீறிச் செல்வது கிடைநிலை கோணமாக இருந்தால், க்யுங்ஹாவும் இன்செனும் மானுடத்தின் இருண்ட இரவுகளுக்குள் பயணிப்பது அதன் செங்குத்து கோணம். மூன்றாவது பகுதியில் இருவரும் சேர்ந்து கடலின் அடிவாரத்தில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள். 

இந்த இரு நண்பர்களும்தான் நாவலை நகர்த்திச் செல்வதுபோல் தோன்றினாலும், கதையின் முக்கிய கதாபாத்திரமாகவும் க்யுங்ஹாவையும் இன்செனையும் இணைக்கும் நபராகவும் வருபவர் இன்செனின் அம்மா ஜெங்சிம். ஜெஜு தீவில் நடந்த படுகொலைகளில் தப்பிப்பிழைத்த அவள், கொலையுண்ட தனது உறவினரின் சின்னஞ்சிறு எலும்பு கிடைத்தாலும் அவரது இறுதிச் சடங்கை நடத்திவிடலாம் என்ற முனைப்புடன் போராடினாள். துக்கம் அனுசரிப்பதை அவள் நிறுத்தவில்லை. வலியைச் சுமந்துகொண்டு புறக்கணிப்பை எதிர்த்து நிற்கிறாள். அவள் விடைகொடுக்க மறுக்கிறாள். வலியும் நேசமும் ஒரே அளவிலான அடர்த்தியோடும் வெப்பத்தோடும் அவள் வாழ்க்கையை நிரப்பியிருந்ததைக் குறித்து அவதானிக்கையில், என்னுள் எழுந்த கேள்விகள்: நாம் எந்த அளவிற்கு (ஒருவரையோ அல்லது எல்லாரையுமோ) நேசிக்க வேண்டும்? நமக்கான வரையறை என்ன? கடைசிவரை மனிதத்தை இழக்காமலிருக்க நாம் எந்த அளவிற்கு நேசிக்க வேண்டும்?

*

We Do Not Part நாவலின் கொரிய மொழி பதிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் என்னுடைய அடுத்த நாவலை என்னால் முடிக்க முடியவில்லை. அந்தப் புத்தகத்திற்குப் பிறகு நான் எழுத நினைத்திருந்த புத்தகம் நெடுநாள்களாக எனக்காகக் காத்திருப்பதாகத் தோன்றியது. என் வாழ்வின் சிறு பகுதியை, பிறந்த இரண்டு மணி நேரங்களில் இறந்துவிட்ட என் மூத்த சகோதரியின் நினைவுகளுக்கு ஒப்படைத்து, எங்கள் இருவருக்குள்ளுமிருந்த அழிக்க முடியாத சில பகுதிகளைக் கூர்ந்து கவனிப்பதுபோல எழுதப்பட்ட அந்தப் புத்தகம், The White Book நாவலுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தது. ஒரு விஷயம் எப்போது முடிவடையும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எவ்வளவு தாமதமானாலும் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பேன். ஏற்கெனவே எழுதி முடித்த புத்தகங்களைக் கடந்து நான் தொடர்ந்து எழுதுவேன். என் பார்வையிலிருந்து மறையும் புள்ளியை அவை அடையும்வரை. என் வாழ்க்கை அனுமதிக்கும் தூரம்வரை நான் எழுதிக் கொண்டிருப்பேன். 

ஆம்புலன்ஸினுள்ளே, அதன் கண்ணாடிக்கு வெளியே பற்றியெரிந்த தீப்பிழம்புகளைப் பார்த்தபடி இருந்த அந்த இரட்டை சகோதரிகளைப்போல, தன் பேச்சாற்றலைத் திரும்பப் பெறும்முன், அந்த மனிதரின் உள்ளங்கையில் ஏதோ எழுதிய அந்தப் பெண்ணைபோல, பிறந்த இரண்டு மணி நேரத்தில் இறந்துபோன என் சகோதரியைப்போல, “இறந்துவிடாதே, தயவுசெய்து இறந்துவிடாதே என்று அவளிடம் கெஞ்சிய என் தாயைப்போல, என் புத்தகங்களைவிட்டு நான் விலகிச் சென்றதும் அவை தனித்துச் சுதந்திரமாகத் தத்தமது விதியின்படி பயணிக்கத் தொடங்குகின்றன. அந்த ஆன்மாக்கள் எவ்வளவு தூரம் செல்லும்? – மூடிய என்னுடைய கண்ணிமைகளுக்குள் என்னை அரவணைத்த அந்தச் செம்மஞ்சள் நிற ஒளியில் திரண்ட அந்த ஆன்மாக்கள் எங்கு செல்லும்? அந்த மெழுகுவர்த்திகள் எவ்வளவு தூரம் செல்லும் – ஒவ்வொரு கொலைக்குப் பிறகும் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள், கட்டுக்கடங்கா வன்முறையின் விளைவாக ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள், ஒருபோதும் விடைகொடுக்க முடியாதென்ற உறுதியோடு இருப்பவர்கள் ஏந்திய மெழுகுவர்த்திகள் - எவ்வளவு தூரம்வரை பயணிக்கும்? ஒரு திரியிலிருந்து மற்றொரு திரிக்கு, ஓர் இதயத்திலிருந்து மற்றொரு இதயத்திற்கு, ஒரு பொன்னிற இழையின்மீது அவை பயணித்துச் செல்லுமா? 

*

கடந்த ஜனவரி மாதம், பழைய காலணிப் பெட்டியிலிருந்து கண்டெடுத்த என்னுடைய சிற்றேட்டில், 1979ம் ஆண்டு எதையோ எழுதிய அப்போதைய நான், தன்னிடம் சில கேள்விகள் கேட்டிருந்தாள்: அன்பு எங்கிருக்கிறது? அன்பென்றால் என்ன?  

அதேபோல், 2021ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் We Do Not Part வெளியாகும்வரை என் மனத்தின் ஆழத்தில் இருந்த இரண்டு பிரச்சினைகளைக் குறித்து நான் சிந்தித்தேன்: இந்த உலகம் இவ்வளவு வன்முறையும் வலியும் நிறைந்ததாக இருக்கும் அதே நேரத்தில் இவ்வளவு அழகாகவும் இருக்கிறதே, அது எப்படி?

அவ்வாக்கியங்களின் இடையே நிலவிய பதற்றமும் அகவயப் போராட்டமும்தான் நான் எழுதுவதற்கான உந்து சக்தியாக இருந்ததாக நான் நீண்ட நாள்களாக நம்பிக் கொண்டிருந்தேன். என்னுடைய முதல் நாவல் தொடங்கி அண்மையில் வெளியான நாவல்வரை, என் மனத்தின் கேள்விகள் வெவ்வேறு விதத்தில் மாறிக்கொண்டே இருந்தாலும், இந்த இரண்டு கேள்விகள் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குச் சில சந்தேகங்கள் தோன்ற ஆரம்பித்தன. 2014ம் ஆண்டின் வசந்த காலத்தில் என்னுடைய Human Acts நாவல் வெளிவந்த பிறகுதான் அன்பைப் பற்றியும் அதனால் ஏற்படும் வலியால் நாம் இணைக்கப்படுவது பற்றியும் என்னுடைய கேள்விகள் முளைத்தனவா? என்னுடைய முதல் நாவல் தொடங்கி அண்மையில் வெளியான நாவல்வரை, என்னுடைய பலவிதமான விசாரணைகள் அன்பை நோக்கியே இருந்திருக்கிறதல்லவா? ஒருவேளை என் வாழ்வின் அடிப்படையான அடிநாதம் அன்பாக இருக்கக்கூடுமோ? 

அன்பு, ‘என் இதயம்’ என்ற தனி அறையில் உறைவதாக நான் எனும் சிறுமி 1979ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எழுதினாள். ‘துடிக்கும் என் இதயத்துக்குள் அது இருக்கிறது.’ அன்பென்றால் என்ன என்ற கேள்விக்கு அவள் அளித்த பதில் இதுதான்.  ‘அது நம் இதயங்களை இணைக்கும் பொன்னிற இழை.’

எழுதுவதற்கு நான் என் உடலைப் பயன்படுத்துகிறேன். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலன்களின் துணைகொண்டு என் உடலின் பல்வேறு உணர்வு நிலைகளான, நெகிழ்ச்சி, அரவணைத்தல், கோபம், வலி ஆகியவற்றை உணர்கிறேன். என் இதயத் துடிப்பு, பசி, என் நடை, ஓட்டம், குளிர், பனி ஆகியவற்றை உணர்கிறேன். கைகளை ஆதுரமாகப் பற்றிக்கொள்வதை உணர்கிறேன். ஓர் உயிரினமாக, என் உடலின் துணைகொண்டு நான் உணரும் அந்த நுண்ணுணர்வுகளை என் எழுத்தில் வடிக்கிறேன். ஒரு மின்னதிர்வை எழுத்தில் செலுத்தி, அது என் வாசகரைச் சென்றடையும்போது நான் உவகையில் திகைத்துப் போகிறேன். அத்தகைய தருணங்களில் மொழி எனும் இழை நம்மை இணைப்பதை உணர்கிறேன். அந்த இழையினூடாக வாசகர்களைச் சென்றடையும் என்னுடைய கேள்விகளை உணர்கிறேன். மொழி எனும் இழையால் என்னுடன் இணைந்திருக்கும் அனைவருக்கும், இனி இணையப்போகும் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றியை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன். 

*

கொரிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்:  e. yaewon மற்றும் Paige Aniyah Morris

தமிழில்: ஷாலினி பிரியதர்ஷினி.


Comments

  1. Please write more madam. It has been more than a year since you wrote the blogs. Looking forward to more of your writings

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஹருகி முராகாமி- யதார்த்தத்திற்கு வண்ணம் பூசும் எழுத்து.

ஊமை அழுக்கு