மனு ஆலயம்.
மனு ஆலயம். "என் மனதை உனதென்று கற்பனை செய்து பார்" -கன்ஃபூசியஸ். "இவனுங்க ஊரு பொம்பளைங்க முகத்தை விட எங்கூரு பொம்பளைங்களோட கால்கள் அழகா இருக்கும், சாலா!! "என்று முகநூலில் யாரோ கிளப்பிய வன்மத்திற்கு பதிலளிப்பதாய் உரத்தக் குரலெடுத்து சிரித்துக் கொண்டே கூறிய பொழுது கே.எல் என்று அவனால் செல்லமாக அழைக்கப் பட்ட கயல் எனும் கயல்விழி அங்குதான் அமர்ந்திருந்தாள். ஸாகர், முந்தைய இரவுதான் கயல் என்பதற்கு பொருள் என்னவென்று கேட்டுத் தெரிந்துக் கொண்டான். "கயல் என்றால் மீன், மச்லி இன் ஹிந்தி" என்றாள். ஓஹோ அப்படியா? மீன் என் விருப்ப உணவு என்று அவள் கண்களிலிருந்து உடல் உயிர் வரை பயணித்தவனிடமிருந்து இத்தகைய சொற்களை அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. நேற்றும் இன்றும் பேசியதில் எது அவனது மனதின் நிஜம் என்பது புரிய நெடுநேரமாகவில்லை கயலுக்கு. இயல்பிலேயே அறிவாளி அல்லவா, சட்டென விளங்கிக் கொண்டாள். நேற்று அவன் பேசியதில் தேவையின் நெடி இருந்தது தெரிந்திருந்தாலும் இன்று அவன் பேசியதிலிருந்து அதற்கு இன்னும் கூடுதல் அர்த்தம் இருக்கக் கூடுமோ என்று தோன்றியது. அவளது உடல...