எஸ்தரின் தனங்கள்
எஸ்தரை நினைவுகூரும் போதெல்லாம் எனக்கு, அதாவது இதை எழுதும் பெண்ணான எனக்கு சட்டென ஞாபகம் வருவது அவளுடைய தனங்கள்தான்.
கடைசியாக அவளை நான் சந்தித்த பொழுது அவள் சென்னை கல்யாணி மருத்துவமனையில் ஜென்ரல் வார்டின் ஒரு மூலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தாள்.
அதுவரை அவளது மூத்த மகளின் ஒண்டுக் குடித்தன வீட்டின் கதவிடுக்கு சந்தில் பழைய சாக்குத் துணியில் மலமும் மூத்திரமுமாகக் கிடந்தாள் எஸ்தர் . எண்பத்திரண்டு வயது அவளுக்கு.
சுமார் இருபத்திரண்டு வருடங்கள் முன்பு சில ஆண்டுகள் நான் அவளுடன் வாழ்ந்தேன். என் வாழ்வின் மிக முக்கியமான பருவத்தில் அவள் என்னோடு இருந்தாள்.
எஸ்தரின் கால் விரல்கள் தவளையின் விரல்களைப்போல விரிந்திருந்தன. ரப்பர் செருப்பணிந்து அவள் வேகமாக நடக்கும்போதெல்லாம், அவளுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக அவளைப் பின் தொடர்ந்தபோது, "இம்மாதிரியான விரல்கள் நீர் வாழ் மிருகங்களுக்குத்தானே இருக்கும், ஒரு வேளை இரவில் அனைவரும் உறங்கிய பின் எஸ்தர் மீனாகவோ தவளையாகவோ ஆமையாகவோ மாறி விடுவாளோ என்று கற்பனை செய்திருக்கிறேன்.
எஸ்தர் தனது காதலனைப்பற்றி ஒருநாள் பேசினாள். ஓர் அதிகாலை வேளையில் நாங்கள் இருவர் மட்டும் சித்தூர் பகுதியில் 'கொத்தப்பல்லி மிட்டா' கிராமத்தின் புதிதாக முளைத்திருந்த ஒரு தேவாலயத்தில் அமர்ந்திருந்தோம். எஸ்தரின் மகன் அங்கு போதகராக நியமிக்கப் பட்டிருந்தார். நான் எஸ்தருடன் மதப்பிரச்சாரம் செய்வதற்காக அங்குச் சென்றிருந்தேன்.
எஸ்தரின் காதலர், ஓவியர் ஜோசஃப். மலையாள நாட்டைச் சேர்ந்த அவர், ஓவிய ஆசிரியராக எஸ்தருக்கு அறிமுகமானார். அவருக்கும் எஸ்தருக்கும் பதினைந்து வயது இடைவெளி. எஸ்தரின் தாய் சிந்தாமணியம்மாள் ஜோசஃப் வாத்தியாரின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தார்.
தன் ஆசிரியரையே காதலிக்கிறோம் என்ற வருத்தம் துளியும் இல்லாத எஸ்தருக்கு ஏனோ தன் தாய் அவர் வீட்டில் வேலை செய்வதை மட்டும் சகித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியெல்லாமோ முனைந்தும் அவளால் அதை மட்டும் நிறுத்த முடியவில்லை. காதலுக்கான காரணங்களையும் மீறி வறுமையின் காரணங்கள் வலுவாயிருந்தன.
ஜோசஃப் வாத்தியாரைப்பற்றி நிறைய ரகசியங்கள் என்னிடம் கூறியிருக்கிறாள் எஸ்தர். தனது பதினான்காவது குழந்தை பிறந்து மூன்று மாதம் கழித்து ஜோசஃப் வாத்தியார் இறந்துபோனார்.
முதன்முதலாக ஓவிய வகுப்பில் அவரை சந்தித்த பொழுது அவர் வரைந்த ஓவியத்தைப் பற்றி பலமுறை என்னிடம் சிலாகித்து கூறியிருக்கிறாள் எஸ்தர். ஒவ்வொரு முறையும் முதல் முறையாக கூறுவது போல பரவசமும் வியப்பும் அவளது குரலில் ததும்பும்.
அது ஒரு கானகக் காட்சி, ஒரு சிங்கம் மானைத் துரத்தும் பாய்ச்சல், " நாலே கோடுதான் இழுத்தாக , ஒரு சிங்கமும் மானும் உசுரோட வந்த மாதிரி இருந்துச்சு" என்பாள். அவள் அதைக் கூறும்போதெல்லாம் அவள் பதின்பருவத்து எஸ்தராகி விடுவதை என்னால் நன்கு உணர முடிந்தது. நாணமும் பெருமிதமும் பெருங்காதலும் அவள் கண்களில் ததும்பும்.
தன்னிடம் எஸ்தர் நேசம் கொண்டிருப்பதையறிந்த ஜோசஃப் வாத்தியார் அவளை எப்பொழுதும் சிறுமியாகவே பார்த்தார். எஸ்தருக்கு அதில் துளியும் விருப்பமில்லை. தனக்கு மிகவும் விருப்பமான ஆரஞ்சு மிட்டாய் நிறத்தில் பாவாடை தாவணி அணிந்திருந்த அன்று அவரிடம் தன் காதலைச் சிறிதும் தயக்கமின்றி வெளிப்படுத்தினாள் எஸ்தர் "ஸார், நீங்க வரையும்போது உங்கள ரொம்ப புடிக்குது, என்னையும் அந்தமாதிரி நீங்க படம் வரஞ்சு தருவீகளா?" என்றாள். ஜோசஃப் வாத்தியார் அவளை அங்கிருந்து வெளியேறுமாறு கண்டித்தார். "ஓர் ஓவியனிடம் பேசும்போது நீ கவனமாக இருக்க வேண்டும் எஸ்தர். அவனுடைய தூரிகைக்கு பலியாகுமுன் நீ பலமுறை யோசித்துக் கொள்வது நல்லது. ஓவியம் வரைந்து முடித்த நொடியில் அந்த ஓவியத்தை அவன் மறந்து விடுவான், அதனோடு தொடர்புடைய அனைத்தையும் அனைவரையும்" என்றார்.
எஸ்தர் அவருடைய தூரிகைகளை எடுத்து துடைத்து வைத்துக் கொண்டிருந்தாள். திரும்பி நின்றிருந்தவளின் உடலை அந்த ஓவியனின் கண்கள் ஊடுருவிப் பார்த்தன. அது அவளுக்கு தெரிந்திருந்தது. அந்தக் கருமை, சுருண்ட தலைமயிர், திண்மையான தோள்கள் அவளைச் சற்று திரும்புமாறு அவரைக் கேட்கவைத்தது. ஜோசஃப் எனும் ஓவியனின் கைவண்ணத்தில் எஸ்தரின் தனங்கள் ஒவியமாகின.
அந்த ஓவியத்தைக் குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியது. ஜோசஃப் வாத்தியார் தன் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. ஜோசஃப் வாத்தியார் தலைகுனிந்து விடக்கூடாது என்று எண்ணிய எஸ்தர், "நா கேட்டுதான் அவரு வரஞ்சாரு, நா அவரோட பொஞ்சாதி" என்று அங்குக் கூடியிருந்த அனைவரிடமும் கூறிவிட்டு வெளியேறினாள் எஸ்தர்.
வேறு வழியில்லாமல்தான் எஸ்தரை ஜோசஃப் மணந்தார். அவளுடைய தனங்களை மட்டும் மணந்து கொள்ள முடியாதே!!
அன்றிலிருந்து எஸ்தருடைய தாய் வாத்தியார் வீட்டிற்கு வேலைக்கு செல்லவில்லை. வேற்று சாதி பெண்ணைத் திருமணம் செய்ததால் ஜோசஃப் வாத்தியாரின் குடும்பமும் சுற்றமும் அவரைத் தள்ளி வைத்தன. ஜோசஃப் வாத்தியாருக்குமே அதில் வருத்தம்தான், "கொஞ்சம் சுதாரிச்சிருந்தா இவள கெட்டாம இருந்திருக்கலாம்" என்று நண்பர்களிடம் புலம்புவதை எஸ்தரும் அறிந்திருந்தாள்.
மனவேற்றுமை சமூக அழுத்தம் எல்லாம் இருந்தபோதிலும் இரண்டு வருட இடைவெளியில் குழந்தைகள் மட்டும் பிறந்தன. எண்ணிக்கையில் மொத்தம் பதினான்கு, அதில் தப்பிப் பிழைத்தது பன்னிரண்டு.
"என் மனசுல நெனச்ச மொத ஆம்பள அவருதேன், அவர கெட்டணும்னு முடிவு பண்ணிதான் எல்லார் முன்னயும் மானம் போனாலும் பரவால்லன்னு ஒத்துக்கிட்டேன், அப்பதான் அவர எனக்குக் கட்டி வெப்பாக" என்றாள் எஸ்தர்.
"நீ நல்ல பொண்ணு இல்ல எஸ்தர்" என்றேன் நான்.
"நான் பொண்ணு ...அவ்ளோதான்" இது எஸ்தர்.
கழுத்துப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஜோசஃப் வாத்தியார் இறந்த போது அவர்களுக்குப் பன்னிரண்டாவது மகன் பிறந்திருந்தான். எஞ்சிய வாழ்வு முழுதும் அவர் விட்டுச்சென்ற சொற்ப அரசாங்க வருவாயில் குழந்தைகளையும் அவர்களோடு தன் வாழ்வையும் இணைத்துக் கொண்டு பயணித்தாள் எஸ்தர்.
மிகவும் முயன்று சத்துணவு கூடத்தில் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது அவளுக்கு. தூய வெண்ணிற கச்சையும் பருத்தி சேலைகளையும் மட்டுமே அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் அவள். அவள் தன் கச்சையை இறுக்கிக் கட்டியபொழுதெல்லாம் அதில் ஒரு வல்லமை மிளிர்ந்தது. ஒரு பெண் மிருகம் வேட்டைக்குத் தயாராவது போல் அவள் ஒவ்வொரு நாளையும் அந்த வல்லமையின் துணை கொண்டு கடந்தாள்.
கோடைகாலத்தில் ஒரு நாள் அதிகாலையில் என்னை எஸ்தர் எழுப்பினாள். அப்பொழுது விடிந்திருக்கவில்லை. என்னை எழுப்பிக்கொண்டே தன் மார்புக் கச்சையை இறுக்கிக் கட்டினாள்.
"எந்திரிச்சு வா வெளிய போலாம்" என்றாள்.
"இந்நேரத்துலயா? என்றேன், உறக்கமும் விழிப்புமாய்.
"ஆமா இப்போதான் எந்திரி" என்று கண்டிப்புடன் கூறினாள். அன்றுதான் எங்களது கடைசி உரையாடல் நிகழப்போகிறது என்று அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. அவளுக்கு தெரிந்திருந்தது போலும். அந்தக் குரலில் ஒலித்த உறுதி இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.
வேகவேகமாக குளித்து முடித்து வந்தேன். அப்பொழுதும் விடிந்திருக்கவில்லை. வெளிர்நீல நிற சேலையில் எஸ்தர் எனக்கு தேவதைபோல் தெரிந்தாள். என்னுடைய கைப்பிடித்து அழைத்து சென்று ஒரு மரத்தடியில் அமரச் செய்தாள் எஸ்தர்.
வயோதிகத்தால் தளர்வுற்றிருந்த முழங்கால்களை பிடித்தபடியே அங்கிருந்த சிறிய பாறையின் மீது அமர்ந்தாள். ஒரு தீர்க்கதரிசியின் தோற்றம், முக்காலமும் முப்பொருளும் தெளியப்பெற்ற ஆன்மாவின் வெளிச்சம் அந்த கண்களில் ஒளிர்ந்தது. கலைந்திருந்த என் கேசத்தை திருத்தி பின்னியவாறே அவள் கூறினாள், "புள்ள.... என்னைக்குமே ஒரு பொம்பள தான் மனசுல நெனைக்குறத சொல்லிரணும், எல்லாமே இந்த நெஞ்சுல இருக்கு, இந்த நெஞ்சுக்குள்ள தோணுற விஷயத்த ஒடச்சு பேசவோ, அதுக்காக காலம்பூராவும் சொன்ன சொல்லுக்காக வாழவும் செய்யணும். இந்த நெஞ்சுக்கு மட்டும் துரோகம் நெனைக்கக்கூடாது, அம்ம அப்பன், புருசன், புள்ள எல்லாம் பொறவுதேன்" என்று கூறியவள் தன் நெஞ்சில் என் கைகள் இரண்டையும் பதித்துக் கொண்டாள். எஸ்தரின் நெஞ்சில் கைவைத்ததும் என்னுடல் முழுதும் சிலிர்த்து அடங்கியது. அவளிடமிருந்து ஏதோ ஒன்று என்னுள் பாய்ந்ததுபோல். "பிரபஞ்சத்தின் பசிக்கு முலையூட்டிய ஆதித்தாய் இவள்தானோ" என்ற எண்ணம் மனதில் முதன்முதலாக அன்றுதான் தோன்றியது.
வருடங்கள் கழிந்து, மரணத்தின் விளிம்பில் அவளைச் சந்தித்தப் பொழுது, அவள் கண்கள் வழியே கசிந்த கண்ணீர், அது மெல்ல மெல்ல ஊற்றெனப் பெருகி, நதியாய் பாய்ந்து, உலகைச் சூழூம் பேராழியாக என்னுள் தளும்பிக் கொண்டிருக்கிறது. நிறைய நிறையத் தளும்பினாலும் ஒரு துளிகூட சிந்தாமல் நிற்குமாம் கடல்.
எஸ்தரின் தனங்கள் சமுத்திரத்தைக் குடித்த மலைகள்.
%20(22).jpeg)
%20(23).jpeg)
%20(24).jpeg)

Comments
Post a Comment