ஆண் நதி

 ஆண் நதி.

நானும் பத்மபென்னும் மொட்டை மாடியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம்.  அவர் தமது வெண்டைச் செடிகளை பார்வையிட்டவாறே தேநீர் அருந்தினார். வெண்டைப் பூக்கள் வசீகர நிறக்கோர்வை கொண்டவை.என்னைக் கேட்டால் ரோஜாப் பூக்களைவிட வெண்டை பூக்கள்தான் அழகென்பேன். இளமஞ்சல் நிற இதழ்கள் நடுப்பகுதி அரக்குச் சிவப்பு. குவிந்தும் குவியாமலும் ஒரு மலர்ச்சி. பூக்களைக் கிள்ளிப் பறிப்பதை அதுவரை செய்திராத என்னை மோகத்தில் ஆழ்த்தின அப்பூக்கள். "ஒரு பூ எடுத்துக்கட்டுமா பத்ம" என்றேன். தேநீர் அருந்தியபடியே அவர் "ம்ஹூம்" என்றார். அவர் பொதுவாக அப்படி மறுப்பவர் அல்ல. என் பெருமூச்சின் வெப்பம் அவரை நிச்சயம் தடுமாறச் செய்திருக்கும். அவர் சிரித்துக் கொண்டே  " நிறைய வெண்டைக்காய் தருகிறேன் சரியா? என்றார். 

"அட போங்க பத்ம,யாருக்கு வேணும் வெண்டைக்காய், இந்த பூ ஒண்ணு போதும், தலையில சூடிப்பேன். ப்ளீஸ்" என்றேன்.

அவரால் அது முடியவில்லை. கவனமாக எங்கள் உரையாடலின் திசையை மாற்றினார்.

    என் பெயருக்கு ஏதோ கடிதம் வந்திருப்பதாகக் கூறினார். அடுத்தமுறை தெருவின் பெயரை சரியாக எழுதுமாறு கூறினார். "நிரிபிலி பத்" என்பதை தமிழ்நாட்டிலிருந்து எழுதுபவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்றேன். அதற்கு அவர் தெருவிற்கு அந்தப் பெயர் வைப்பதற்கு  மிகவும் போராடியதாகக் கூறினார். தெருவில் சொந்த வீடு வைத்திருக்கும் பதினைந்து பேரில் பத்து பேர் "காமாக்யா பத்"என்று பெயரிட   வலியுறுத்தவே இவர் மட்டும் "நிரிபிலி பத்" என்று மீண்டும் மீண்டும் கூறினாராம். "நிரிபிலி" என்றால் பெங்காலியிலும், அஸ்ஸாமிய மொழியிலும் "ஏகாந்தம்" என்று பொருளாம். 

பத்மபென் ஒரு ஆச்சரியம். அறுபது வருட அனுபவமும் முதிர்ச்சியும் அவரை இன்னும் அழகாகக் காட்டியது.

'நிரிபிலி பத்' அவர் கூறியது போல ஏகாந்தம் சூடியிருந்ததென்பது உண்மைதான். பருவமழை காலங்களின் பின் மதிய வேளைகளில் பால்கனியில் அமர்ந்தவாறு எதிரிலிருக்கும் நீரல்லி குளத்தை வேடிக்கை பார்க்கும்பொழுதெல்லாம் என்னையுமறியாமல் "நிரிபிலி பத்" என்று கூறியிருக்கிறேன். 

    வடகிழக்கு இந்தியாவின் நில அமைப்பின் மற்றுமொரு அதிசயம் அப்பகுதியில் டெக்டானிக் தட்டுகள் அடிக்கடி ஒன்றையொன்று உரசிக் கொள்ளுமாம். அதன் விளைவாக குறைந்த முதல் மித அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நான் அங்கு வாழ்ந்த மூன்று வருடங்களில் பலமுறை நிலநடுக்கங்களை உணர்ந்திருக்கிறேன். ஆனால் எதுவுமே முதல் முறை நிகழும்போது அச்சம் ஏற்படுவது இயல்பு. ஒரு அதிகாலை வேளை, கையில் தேநீரோடு அல்லிக் குளத்தை ரசித்தவாறு நின்றிருந்தேன்.திடீரென்று குளம் கலங்குவதைக் காண முடிந்தது. குளத்தில் அடுக்கு வட்டங்களாக நீர் தளும்பியது, தெளிந்த மேற்பரப்பு நீரில் அடிமண் கலந்து பழுப்பு நிறத் தோற்றமளித்தது. காலடியில் மின்சாரம் பாய்வதை உணர முடிந்தது. பயத்தில் செய்வதறியாது அலறினேன். கீழே செடிகளுக்கு நீர் பாய்ச்சியபடி சலனமில்லாமல் பத்மபென் நிமிர்ந்து பார்த்து "ஒன்றுமில்லை , சில நொடிகளில் நின்று விடும் பயப்படாதீர்கள் என்றார்" .ரிக்டர் அளவில் 5.4 என பதிவாகியிருந்ததாக செய்தியில் வந்தது. முதல் முறை தான் எதுவுமே மனிதனை அசைத்துப்பார்க்கும், முதல் காதல், முதல் முத்தம், முதல் மரணம், முதல் தோல்வி, முதல் அவமானம், முதல் வெற்றி, முதல் பிரிவு இப்படி. அதன் பின் அனைத்துமே பழக்கத்தில் சேர்ந்துவிடும்.நிலநடுக்கங்களுக்குப் பழகியதும் அப்படித்தான். 

  குவஹாத்தியின் நரம்பு போல பாய்வது பிரம்மபுத்திரா நதி. எங்கள் வீட்டின் மாடியிலிருந்து பிரம்மபுத்திராவின் நீட்சியை காண முடியும். ஒரு முறை ஏதோ ஒரு உரையாடலின் போது நதிகளை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நதியின் ஓசை கொலுசொலி போன்றது என்றேன். அதற்கு பத்மபென், பிரம்மபுத்திரா "ஆண் நதி" என்றார். நதி என்பது பெண் பால் பெயராம், "நத்" என்பதே சரி என்றார். நிழற்படம் எடுக்க தயாராகும்போது யாரோ ஒருவர் பின்புறமிருந்து கேமராவின் கோணத்தை மாற்றி விடுவது போலிருந்தது அவர் கூறியது. ஆண் நதி. சற்றும் கற்பனை செய்திராத ஒரு கோணம்.நதியென்றாலே பெண் உவமைகள் தானே பொருத்தமாயிருக்கும் அதென்ன ஆண் நதி? 

    பிரம்மபுத்திரா, ஆண் நதியாம். திபெத்தில் "ட்ஸாங்போ" என்றழைக்கப்படும் அந்நதி, அருணாச்சல பிரதேசத்துக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்களிலெல்லாம் பாய்ந்து இறுதியில் "மேக்னா" என்ற பெயரோடு கங்கையுடன் கூடி கடலில் கலந்து விடுகிறதாம். 2016 இல் சீனா, அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியாக ட்ஸாங்போவைத் தடுத்து அணையெழுப்பத் திட்டமிருப்பதாகக் கூறியதாம். அம்மாநிலங்களின் நீராதாரமே அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டதாம்.பிறகு இரு நாட்டு அரசுகளும் பேசி ஒப்பந்தமிட்டு திட்டம் கைவிடப்பட்டது. இதைக் கூறும் போது பத்மபென்னின் குரலில் வருத்தம் தொனித்தது. காலம் முழுதும் நமதென்று சொந்தம் கொண்டாடி மகிழ்ந்ததை அயலான் ஒருவன் திடீரென்று உரிமைக் கொண்டாடும் பொழுது ஏற்படும் ஏமாற்றத்தின் வலி அது. சிறிது யோசனைக்குப் பின் இயல்பிற்கு திரும்பினார் பத்மபென்.

  அன்றிலிருந்து எனக்கு பிரம்மபுத்திரா ஒரு புதிய கோணத்தில் தெரிந்தது. ஆண் என்ற கோணம் அது. நிஜமாகவே அந்நதிக்கு ஆண் குணங்கள்தான் போலும். நளின வளைவுகள் இல்லாத நதி அது. பிரம்மாண்டமான சுயத்தோடு பிரவாகித்து பாய்வது போலிருக்கும். பருவமழை காலத்தில் சற்றும் கருணையில்லாமல் அழிவுகள் ஏற்படுத்தும் நீர். காஜிரங்கா வனப்பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி வனவிலங்குகள் அழியும் செய்தி ஒவ்வொரு வருடமும் நிகழும் அவலம். கருணையற்ற பிரம்மபுத்திரா என்ற நாட்டுப்புற பாடல்கள் அங்கு மிகவும் பிரசித்தி. பிரம்மபுத்திராவை நேரில் கண்டவர்கள்  இக்கருத்துக்களை நிச்சயம் ஏற்பர். எனக்கும் உடன்பாடு உண்டு. பெரும் வீரியத்தோடு கங்கையுடன் கூடிவிட வேண்டுமென்ற வேட்கையோடு பாய்ந்தோடுவது போலிருக்கும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில், அஸாமிய வருடப் பிறப்பான "பிஹு" விற்கு சில தினங்களுக்கு முன் "நமாமி பிரம்மபுத்திரா" விழா கோலாகலமாக அரங்கேறும். அது நன்றி செலுத்தும் விழாவாக மட்டுமல்லாமல் வரவிருக்கும் மழை காலத்தின் போது தங்களை அதிகம் வருத்தாமல் கருணை பொழிய வேண்டி விண்ணப்பிக்கும் விழாவாகவும் இருக்கிறது. பத்மபென் பிரம்மபுத்திராவை சிலாகித்து நிறைய கவிதைகள் கூறுவார். அந்தக் கவிதைகளில் நம் பக்கத்து நதி கவிதைகளில் உள்ளது போல் பெண்மை ததும்பாது, மாறாக வேண்டுதலும் தொழுதலுமாய் துறவுப் பாடல்கள் போல் இருக்கும். 

   பிரம்மபுத்திராவைக் காண மனம் சமீபமாய் ஆவல் கொள்கிறது.வெகு நாட்களாகிவிட்டன அதன் கரையில் அமர்ந்து புல்லாங்குழல் இசை கேட்டு மகிழ்ந்து. என்னதான் சுவாரஸியமற்ற நதியான போதிலும் அதற்கான லட்சணங்களுடன் பிரம்மபுத்திரா என்னை ஈர்க்கவே செய்தது. 

Comments

Popular posts from this blog

ஹருகி முராகாமி- யதார்த்தத்திற்கு வண்ணம் பூசும் எழுத்து.

Light and Thread

ஊமை அழுக்கு