முதுபறவை



அவளை சந்தித்து பல மாதங்கள் வரை வெறும் நலம் விசாரிப்புகள் அளவிற்கு மட்டும்தான் அவள் பழக்கமாயிருந்தாள். நானும் அவளும் பழக எந்தவொரு காரணமும் அவசியமும் ஏற்பட்டதில்லை என்பதே அதற்கான நியாயமாயிருந்தது. முற்றிலும் வெவ்வேறான இன்னும் சொல்லப்போனால் முற்றிலும் எதிரெதிர் கோணங்களில் வாழ்வை எதிர்கொண்டிருந்தவர்கள் எனவும் கொள்ளலாம். அவள் முகத்தைக் கூட சரியாகக் கண்டதில்லை நான். எந்நேரமும் முக்காடிடப்பட்ட முகம், கணவருடன் மட்டுமே வெளியே செல்வதும் வருவதுமாக அவள் வாழ்க்கை,வீடு, வீட்டின் முற்றம், குழந்தைகள், அண்டை வீட்டாரிடம் குடும்ப பெருமைகள் குலப்பெருமைகள் பேசிக்கொண்டு கழிந்த அவளது பகல் நேரங்களோடு சற்றும் பொருந்திப் போகாத என் வாழ்வும் நேரமும் நாங்கள் அன்னியப்பட்டே இருந்ததற்கு போதுமான காரணங்கள் அளித்திருந்தன.

அவள் அப்பொழுதே ஐம்பது வயதைக் கடந்திருந்தாள். தலைமுறை இடைவெளியும் எங்களுக்குள் தேவையான இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. அவளால் எனக்கு எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை ஆனால் நான் அவள் மனதில் பெரிய அளவில் தாக்கங்கள் ஏற்படுத்தியிருப்பது யாரோ ஒரு மூன்றாம் நபர் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அப்பொழுதிலிருந்து நானும் அவளை கவனிக்கத் துவங்கினேன். 

என் ஒழுக்கத்தின் மீதும், குடும்பம் பேணும் விதம் குறித்தும் அவள் நிறைய கருத்துகள் கொண்டிருப்பது தெரிய வந்தது. நான் ஒருமுறை கூட முகம் கொடுத்து பேசாத ஒரு நபர் எப்படி இவ்வளவு ஆணித்தரமாக என்னைப் பற்றி அனைவரிடமும் வாஞ்சையாக பேச முடியும் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னால் அப்படி யாரைப்பற்றியும் அவ்வளவு எளிதாக பேசிவிட முடியாது. அது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பது என் நம்பிக்கை. ஒருவரைப் பற்றி கருத்துக்களை அள்ளி வீசுவதற்கு முன் அவருடன் குறைந்தபட்ச  பழக்கமாவது இருக்க வேண்டும் என்றே அன்று வரை நம்பியிருந்தேன். ஆனால் மனிதர்கள் அப்படியிருப்பதில்லை பெரும்பாலும். தனக்குத் தெரிந்த மிகக்குறைந்த கடுகளவு பரிச்சயங்கள் கொண்டு மலையளவு தீர்மானங்களை எடுத்துக் கொண்டு அதை நம்பிக் கொண்டும் காலம் தள்ளுவது தெரிந்த பொழுது சற்று தடுமாற்றமாகத்தான் இருந்தது. சுலாஹ் சிங் அன்றிலிருந்து என் கவனத்தில் வந்தாள்.அவளுடைய அணுகுமுறை தவறென்று உணர்த்த வேண்டியதில்லை என்றபோதும் நான் சரியாக இருக்கிறேன் என்பதை அவளுக்கு புரிய வைத்துவிட முடிவெடுத்தேன். ஏனென்றாள் அவளுக்கு ஒரு மகள் இருந்தாள். அவளைக் குறித்த அக்கறை என்னுள் மிகுந்திருந்தது. எனக்கு சுலாஹ் யாரோ ஆனால் அவளது மகளுக்கு அவள் தாய். ஏதோ ஒரு பொறுப்புணர்வு உந்தித்தள்ள அன்றிலிருந்து சுலாஹ் சிங்கின் நட்பைப் பெறும் வேலைகளில் இறங்கினேன். அருணிமா அவளது மகளின் பெயர். அவளைப் பெண்ணாகவே சுலாஹ் இருக்கவிட்டதில்லை. அவளது அண்ணனின் பழைய உடைகளை மட்டுமே அணிந்தாள். திருத்தப்படாத கேசம், பராமரிப்பின் நிழல் கூட அவள் மேல் விழவில்லை என்பது அவளைப் பார்க்கும்பொழுதே தெரிந்தது. ஆனால் மகனை அப்படி வளர்க்கவில்லை அவள். குலத்தின் வாரிசு என்பதால் கவனிப்பும், மரியாதையும் அன்பும் அவனுக்குக் குறைவில்லாது வழங்கப்பட்டது. சுலாஹ்வின் வாழ்வை கவனிக்கத் துவங்கிய சில நாட்களிலேயே இவ்வளவும் புரிந்துவிட்டது. 


பள்ளி விடுமுறை நாட்களில், அலுவல்கள் குறைந்திருந்த மதிய வேளைகளில் சுலாஹ்விடம் சென்று வலிய பேச்சு கொடுத்தேன். முக்காடுக்குள் இருந்தபடியேதான் பேசுவாள். ஒருவித பயமும் அவள் குரலில் இருக்கும். அவள் என்னைக் குறித்து பரப்பி வந்த செய்திகள் அவ்வாறானவை. ஆனால் எனக்கு அதைக்குறித்த அக்கறையேதுமில்லை. அவளையும் அவளுக்கு வழங்கப்பட்ட வாழ்வும் அவளைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருந்த சமூக அழுத்தங்களும் அவளை அப்படி பேச வைத்திருந்தது. 


முதல் சில சந்திப்புகள் மிகவும் அயர்ச்சி தருவனவாய் இருந்தன. இவளுக்கெல்லாம் என்ன சொல்லி என்ன புரிய வைப்பதென்று கோபமும் வருத்தமும் ஒரு சேர வாட்டின. அப்பொழுதெல்லாம் அருணிமாவின் முகம் கண்முன்னே வரும். "உங்களுக்காக அல்ல எனக்காக பேசுங்கள் அக்கா" என்று கெஞ்சுவது போலிருக்கும். நாட்கள் மிக சலிப்புடன் கடந்தன. சுலாஹ் நிறைய பேசினாள். ஆனால் அதில் தொண்ணூறு சதவிகிதம் குலப்பெருமையும், கணவரின் பெருமையும். ராஜபுத்திரர்கள் வாளுக்கு ஏழுலகங்களும் சிரம் தாழ்த்தும் எனவும், அவர்களின் வீர பராக்கிரமத்திற்கு இணையான இன்னொரு குலம் உலகில் இல்லை என்றும் மீண்டும் மீண்டும் கூறுவாள். குலப்பெருமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு கற்புநெறி வழுவாத பெண்டிரின் அணிகலன் என்று மணிக்கொருமுறை கூறுவாள். என்னையும் கேட்பாள் "உங்கள் ஊர் வழக்கம் எப்படி? உங்கள் குலமென்ன? நீங்கள் உரத்த குரலில் பேசுவதை உங்கள் ஆண்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்? அன்றொரு நாள் நீங்கள் உங்கள் கணவரல்லாத வேறொரு ஆணுடன் பால்கனியில் அமர்ந்து தேநீர் அருந்தினீர்களே? இப்படியான வழக்கமான சந்தேகங்கள் அவளுக்கு வந்தது. நான் எதற்கும் பதிலளித்ததில்லை. அவளது பேச்சில் ஏக நையாண்டியும், எள்ளலும் தொனிக்கும். நான் புன்னகையுடன், "ஆமாங்க நா கொஞ்சம் அப்படித்தான், அடங்க மாட்டேன்" என்பேன் விளையாட்டாக. அவளது அகங்காரத்திற்கு தீனி கிடைத்தாற்போல் அவள் மேலும் மேலும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவாள். வயதில் வேறு மூத்தவளாயிற்றே கேட்க வேண்டுமா? . சுற்றி சுற்றி அவளது பேச்சு படுக்கையறையிலேயே வந்து நிற்கும். கணவரின் ஆண்மை குறித்த பெருமைகள், அவரிடம் சரணடைந்து பெறும் சுகங்களை குறித்த நாணம் நிறைந்த வருணனைகள் என மெதுவாக எங்களது நட்பு வலுப்பெற்றது. எப்பொழுதும் நான் செவிசாய்ப்பவளாகவே இருந்தேன். அவள் பேசி முடித்ததும் தேநீர் நேரம் முடிந்து விடும். மீண்டும் சில சந்திப்புகளிலும் அவள் இதையேத்தான் தொடர்ந்தாள். சலிப்பின் உச்சத்தில் இவள் என்று பேசி முடிப்பது நான் என்று மாற்றம் குறித்த எண்ணங்களை விதைப்பது என்று வேதனையோடு வந்துவிடுவேன். சில நாட்கள் அவளைச் சந்திப்பதை தவிர்த்து விடுவேன். புலம்பல்களைக் கூட கேட்டுவிடலாம், அறியாமையை சகித்துக் கொள்வது சுலபமல்ல. ஆனால் நான் அவளை என்றுமே வெறுத்ததில்லை. சுலாஹ் என் வசப்படுவாள் என்று நம்பினேன்.


கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சந்தித்தோம். என்னைவிட அவள் ஆவலாயிருந்தாள் என்பது அவள் கண்களில் தெரிந்தது. சுலாஹ்விடம் வழக்கமாக தென்படும் கம்பீரம் குலைந்திருந்தது. நான்தான் தேநீர் தயாரித்தேன். சில நிமிடங்களிலேயே பெருங்குரலெடுத்து அழத்துவங்கினாள் சுலாஹ். அழுது முடியும் வரை காத்திருந்தேன். அப்பொழுதும் அவள் பேசவில்லை. கூரையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அருணிமா பக்கத்து அறையில் இருந்தாள். பதின்வயது சிறுமிக்கான எந்த துள்ளலும் என்றுமே அவளிடம் இருந்ததில்லை, இப்பொழுது மிரட்சியும் தொற்றிக்கொண்டது போல ஒரு தோற்றம். சுலாஹ் பேசவேயில்லை. என்ன ஆச்சு சுலாஹ்? என்றேன் சற்று கோபமாக. அவள் தேம்பிக் கொண்டே பேசினாள்," எல்லாம் இந்த சனியன் வந்து பொறந்ததுதான், இதனாலதான் பெரிய தொல்லையெனக்கு, இது பொறந்ததுல இருந்து ஏதாவது ஒண்ணு வந்துட்டேயிருக்கு" என்றாள்.

அருணிமா முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள். விசும்பல் கேட்டது. 

"மேல சொல்லுங்க" என்றேன்.

ஆம்பளைங்க முன்ன பின்னதான் இருப்பாங்க, அதெல்லாம் ஒரு விஷயமாக்கி எல்லார் முன்னாடியும் பஞ்சாயத்து வெச்சுட்டா சனியன்"

"யாரு ஊருல யாராவது ஏதும்?

இல்ல...ஆதித்யாதான் குடிச்சுட்டு வந்திருப்பான் போல,போதையில கை வெச்சுட்டான், அதுக்கு அவங்க அப்பாகிட்ட சொல்லி பெரியப்பா சித்தப்பான்னு வீட்டு ஆம்பளைங்கக் கிட்டலாம் சொல்லி பெரிய களேபரம் பண்ணிட்டா. என்ன பொண்ண வளத்திருக்கன்னு அவரு என்னைய ராவெல்லாம் போட்டு அடிச்சாரு. அதுகூட பரவால்ல குடும்பத்துல எல்லாருக்கும் தெரிஞ்சு என்னைய எல்லாரும் கேவலமா பாத்ததுதான் என்னால தாங்க முடியல" என்றாள். ஆதித்யா சுலாஹ்வின் மகன், அருணிமாவின் அண்ணன்.

இவளைப்போன்றவளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியுமென்று எனக்குத் தெரிந்தேயிருந்தது. 


அருணிமா பற்றிய எந்த கருத்தும் சுலாஹ்விற்கு இல்லை. இதெல்லாம் நடப்பதுதான் என்றுதான் பேசினாள். அவள் திருமணமாகி வந்தபோது தனது மூத்தார் மாமனார் என் அனைவராலும் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளாகியிருந்ததாகவும், என்ன செய்வது அதுதான் விதி, அதற்காக எந்த கணவனை விட்டு எங்கு ஓடுவது. உலகத்தின் அனைத்துத் திசையிலும் அவன்தானே இருந்தான் என்றாள். 


எங்கிருந்து எப்படித் துவங்குவது என்று புரியாமல் விழித்தேன். புரையோடிக் கிடக்கும் இவளது நம்பிக்கைகளை எப்படி மாற்றுவது, மாற்றவும் முடியுமா என்றே தோன்றியது. 


சுலாஹ்விற்கு ஒரு பழக்கமிருந்தது. அதுவும் அவளது குல வழக்கமே. சுலாஹ் தனிமையில் சுருட்டு பிடிப்பாள். அவளே வீட்டில் தயாரிக்கும் சுருட்டு. புகையிலை, பாக்குப்பொடி,பட்டைப்பொடி என்று இன்னும் சில போதை வஸ்துக்களை சிறிது சிறிதாக சேர்த்து புகையிலையினுள் வைத்து மிக அழகாக சுருட்டுத் தயாரிப்பாள். இது எனக்கு பல நாட்கள் பழக்கத்திற்கு பின் அவள் கூறியது, அவளது குலப்பெருமையில் ஒன்றாக.

நான் முதன்முதலில் புகைக்கப் பழகியதும் அப்பொழுதுதான். அவளிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். அதற்கு முன்னர் ஓரிருமுறை விளையாட்டாக செய்திருந்தாலும், புகைப் பிடிக்கும் கலையை அவளிடமே கற்றேன். அச்சமயங்களில் அவள் முக்காடு களைந்திருப்பாள். கூந்தலை அவிழ்த்துவிட்டு மேலாடையை அகற்றி வெறும் கச்சையும் பாவாடையும் மட்டும் அணிந்து ஒரு ஜிப்சியின் தோற்றம் பூண்டிருப்பாள். 

"ஏன் சுலாஹ், இந்த முக்காடு,சிகையலங்காரம், சுமையான நகைகள் இதெல்லாம் இல்லாமலே இலகுவா இருக்கணும்னு உங்களுக்கு தோணினதே இல்லையா? என்றேன்

சற்றுத் திடுக்கிட்டவள் சுதாரித்துக் கொண்டு, 

"தோணும்தான், ஆனா முடியாதே"

ஆனா தோணுதுல்ல?

"ஆமா தோணத்தான் செய்யும்"

அது போதுமே, அப்புறம் ஏன் அருணிமா செஞ்சது தப்புன்னு சொல்றீங்க?

சுலாஹ் ஆழமாக புகைத்தாள், நுரையீரலில் புகையை நிரப்பினாள், சில நொடிகள் கழித்து மூச்சுக்காற்றுடன் புகையை வெளியேற்றினாள். 

"தப்புன்னு சொல்லல மனசுக்கு வலிக்கத்தான் செய்யது, பெத்த மகனே என் மவள இப்படி செஞ்சுட்டான்னு ஆனா அதுக்கு மேல ஒண்ணும் செய்ய முடியாதே இங்க நெலமையெல்லாம் அவனுங்களுக்கு சாதகமாத்தான் இருக்கும் எப்பவுமே, பொம்பளைங்கதான் அவமானப்பட்டு நிக்கணும்"

சரி புரியுது, எதையுமே ஒரே நாளுல மாத்திர முடியாதுதான், ஆனா உங்களுக்கு நடந்தது அருணிமாவுக்கோ வேற ஒரு பொண்ணுக்கோ நடக்காம பாத்துக்க முடியும்தான?

அதெல்லாம் முடியாதுங்க எதுவுமே என்னால, என் வாழ்க்கையே இவங்கள நம்பித்தான் ஓடுது, அப்றம் எப்படி?

உங்கள நான் கொடி புடிச்சு கூட்டம் போட்டு கதற சொல்லல.  அருணிமாவுக்கு தைரியம் கொடுங்க போதும். அவளுக்கு அநியாயம் நடக்குறப்போ அவளே அதுக்கு குரல் குடுக்குறப்போ நீங்க நடுவுல வந்து நிக்காதீங்க, அவள குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காதீங்க, முடிஞ்சா அவளோட தைரியத்த வெச்சு உங்களுக்கு நடந்த கொடுமைக்கும் விடை கிடைக்குதான்னு பாருங்க"

என்னென்னமோ சொல்றீங்க 

அட பெருசா ஒண்ணுமில்லங்க ...உங்க மூத்தாரும் மாமனாரும் ஏன் உங்க புருசனோ கூட உங்களுக்கு விருப்பமில்லாம உங்கள வற்புறுத்துனப்போ நீங்க எவ்ளோ வலிக்கு ஆளானிங்களோ அத அப்பப்போ கண்முன்னாடி கொண்டு வந்து பாத்துக்கோங்க ,அப்ப தானா உங்க பொண்ணையோ இல்ல வேற எந்த பொண்ணோட தைரியமும் உங்களுக்கு புடிச்சு போகும். உங்களோட வலிக்கெல்லாம் அவங்களோட துணிச்சல் கொஞ்சம் ஆறுதல் கொடுக்கும். புரியுதா?

அவள் பதிலளிக்காமல் புகைத்துக் கொண்டே இருந்தாள். நானும் அவளும் ஒரே புகைச்சுருட்டை மாறி மாறி புகைத்தோம். அதில் பெரிய புரிதல் நிகழ்ந்தது. 


"சரி நான் ஒண்ணு கேக்குறேன் தப்பா நெனச்சுக்கக் கூடாது " என்றாள் சுலாஹ்

ம்ம்ம் கேளுங்க?

எப்பவுமே அவங்க கூப்ட்டா மட்டும் நாம போறோமே, எப்பவாச்சும் நமக்கும் தோணுச்சுன்னா?

எது கேக்குறீங்க?

இல்ல கூச்சமா இருக்கு.

"ஓஹோ புரியுது...நாம கூப்ட்டாலும் அவங்க வரணுமுங்க அதான நியாயம்"

உங்க வீட்ல எப்படி? என்றாள்

"சொன்னா கண்ணு வெச்சுட்டீங்கன்னா?" என்றேன்.

என்னளவில் அது சுலாஹ்விடமிருந்து வெளிப்பட்ட புரிதலுக்கான முதல் அடையாளம். அவள் தன்னை மறந்து சிரித்தாள். 

இப்ப சொல்லுங்க அருணிமா உங்கள மாதிரி வாழணுமா என்ன மாதிரி வாழணுமா? 

சிரித்துக் கொண்டே இன்னொரு புகைச்சுருட்டை அனாயாசமான தோரணையில் பற்ற வைத்தாள் சுலாஹ். 

அந்த முதுபறவை சற்றே தன் சிறகுகளை கட்டவிழ்த்து அசைத்துப் பார்த்துக் கொண்டது. 

அருணிமா பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறாள் இப்பொழுது.

Comments

Popular posts from this blog

ஹருகி முராகாமி- யதார்த்தத்திற்கு வண்ணம் பூசும் எழுத்து.

Light and Thread

ஊமை அழுக்கு