நைலான் திணை
முதற்கிளை:
"தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்".
- மாதவிக் கூற்று( சிலம்பு)
'நமை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்'. ஓரிரு முறைகள் அவ்வரிகளை தானும் முணுமுணுத்து விட்டு நடன நிகழ்ச்சியின் அழைப்பிதழில் பதிந்திருந்த அவ்வரிகளின் மீது விரல்களை படர விட்டடாள் மீனாட்சி. நடிகை தங்க மால்யாவின் நடன நிகழ்ச்சி. புது தில்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராக பதிந்ததிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு தமிழ் நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்தது.பெரும்பாலும் கர்நாடக இசைக் கச்சேரிகளும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளுமே நடைபெறும். நடன நிகழ்ச்சிகள் அரிதாகவே நிகழந்தன. அப்படி நிகழும் நடன நிகழ்ச்சிகளுக்கு மீனாட்சி தவறாமல் சென்றாள்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வரை இம்மாதிரியான கலை நிகழ்ச்சிகளின் வாயிலாகவே இலக்கியத்தோடு இணைந்திருக்க முடிந்தது. மெய்நிகர் வாழ்க்கை முறைக்குள் அவள் புகுந்திருக்கவில்லை. விரல் சொடுக்கில் உலகம் விரியவில்லை அப்பொழுது. வாய்ப்புகளும் தேடல்களும் கடினமாகவே இருந்தன. அதனாலேயே தேடல்களின் மீதான காதல் தீவிரமாக இருந்தது. ஏதொன்றையும் அடைவதற்கான முயற்சிகளும் சிக்கல்களும் இலக்கின் சுவையைக் கூட்டித் தந்தன என்றே கூற வேண்டும்
சனிக்கிழமை மாலைகளுக்காக ஆர்வமாய் காத்திருந்தாள் மீனா. வேற்று மொழி மனிதர்களிலிருந்து விலகி வந்து தனது மொழி பேசும் மனிதர்கள் கூடும் இடமாக தமிழ்ச் சங்கம் இருந்தது. அங்கு சென்றால் காதும் மனமும் குளிர தமிழில் கதைத்து விட்டு வரலாம். அறிமுகமில்லா மனிதர்கள் கூட உற்ற நண்பர்களாக சில பொழுது உரையாடிக் களித்து மீண்டும் தத்தமது வழிகளில் பிரிந்து செல்வது அவளது தனிமைக்கு பெரும் ஆறுதலாக இருந்தை அவள் உணர்ந்தாள்.
தங்கமால்யா அப்பொழுது சின்னத் திரை பிரபலம். இளைஞர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராய் மிகவும் பிரபலமடைந்திருந்தார்.நவநாகரீக தோற்றமும் அதற்கேற்ற மொழியும் பேசிய அவர் சிலப்பதிகாரத்தின் மாதவியாய் மாறி நடனமாடவிருக்கிறார் என்பது மீனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிலும் முக்கியமாக " நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்" என்னும் வரிகளை அவர் எவ்வாறெல்லாம் அபிநயத்தில் வெளிப்படுத்துவார் என்று மீனா தனக்குள்ளேயே பல்வேறு விதமாக கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள்.தங்கமால்யா கூட அவ்வளவு யோசித்துப் பயிற்சி எடுத்திருப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் மீனா அவ்வரிகளுக்கு தங்கமால்யா என்னவெல்லாம் நியாயம் செய்ய முனையலாம் என்று மனதிற்குள்ளேயே அவரை வைத்து ஓராயிரம் நிகழ்ச்சிகள் நடத்தி விட்டாள்.
சிறுவயதில் ஒரு நாள் நடன வகுப்புகளில் சேர்வதற்காக அடம்பிடித்து அழுதவளை "அது தேவடியா ஆட்டம் நீயும் அதான் ஆகணுமா?" என்று தந்தை நிதானமாய் சிரித்துக் கொண்டே கேட்டது இன்றும் நினைவிருக்கிறது அவளுக்கு. தேவடியாளுக்கும் பத்தினிக்கும் வேற்றுமை அறியாத பருவத்தில் "ஆமா அதுதான் ஆகணும்" என்று பிடிவாதமாகக் கூறியவளை அமர்த்தி இடுப்பில் நான்கு கோடுகள் பணியாரக் கம்பியால் சூடு பட்ட பொழுதுதான் அவளுக்கு "தேவடியா" என்னும் சொல்லின் வலி புரிந்தது. தன் தந்தையை சிலநூறு முறைகள் மனதிற்குள் கொன்று புதைத்துவிட்டு நடன வகுப்புகளில் சேரும் எண்ணத்தையும் அதே குழியில் புதைத்து விட்டாள்.
புதைந்து புரையோடிப்போன கனவுகள் யாவும் விதையரும்பி விருட்சமாய் மாறும் என்று அவளுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. ஆனால் வழி நெடுகிலும் வாழ்க்கை அவளுக்கு அவ்வுண்மையை உணர்த்திக் கொண்டே இருந்தது. இன்று தங்கமால்யாவின் நடனத்தைக் காண ஆவல் மிகுந்ததும் அவ்விருப்பத்தின் சிறு விளைவுதான்.
கிளை இரண்டு.
"இன்ஸான் கிஸி ஸே
துனியா மே
ஏக் பார் மொஹபத் கர்தா ஹே
இஸ் தர்த் கோ லேகர் ஜீதா ஹே
இஸ் தர்த் கோ லேகர் மர்த்தா ஹே
ப்யார் கியா தோ டர்னா க்யா
ஜப் ப்யார் கியா தோ டர்னா க்யா.
-( முகல்-ஏ-ஆசம்)
ஜமா மசூதியின் முதல் நுழைவாயிலின் முன்னே அமைந்திருந்த நெரிசல் மிகுந்த தெருவில்தான் முகலாய பிரியாணியின் அசல் சுவையை ஒருவர் ருசிக்க முடியும். கரீம் ஹோட்டல் அதற்கு பிரசித்தி பெற்றது. சுற்றுலாப் பயணிகள் தேடிக் கண்டுப்பிடித்து அங்கு செல்வது வழக்கம். சனிக்கிழமை மதியங்களில் மீனா தவறாமல் தன் கணவருடன் அங்கு செல்வாள். மதிய உணவு அங்கு முடித்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்து தமிழ்ச் சங்கம் வந்தடைய நேரம் சரியாக இருக்கும். அன்றும் அப்படியே முடிவு செய்து கொண்டு சென்றாள். தங்கமால்யாவின் மாதவிக் கூற்று நடனத்தைக் காண வேண்டிய பரவசமும் முகலாய பிரியாணியின் வாசமும் அவளை குதூகலத்தில் ஆழ்த்தியது.
பாரம்பரிய முகலாய பிரியாணியும் "சீக் கபாப்" எனப்படும் ஆட்டுக்கறி கோலா வறுவலும்தான் மீனாவின் விருப்ப உணவு. அவள் வேறெதுவும் ஆர்டர் செய்ததில்லை. "எப்பவும் ஒரே விஷயத்தையே சாப்பிடுறியே புதுசு புதுசா ட்ரை பண்ணு" என்பான் அருள். "ஒண்ணு புடிச்சிருச்சு அதுக்கப்புறம் எவ்வளவு புதுசு புதுசா டேஸ்ட் பண்ணாலும் மனசு அந்த புடிச்சதையே சுத்தி வரும், அதுக்கு பேசாம அதையே சாப்டலாம்ல". மீனா அப்படித்தான் யதார்த்தத்திற்கு பழகவே விரும்பாதவள். வாய்ப்புகள் அமைந்தாலும் பழகாதவள்.
வெண்ணிற பீங்கான் தட்டில் பிரியாணியுடன் சில துணைக் கறிகளும் பரிமாறப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் அருளுக்கு வைத்து விட்டு வெறுமனே பிரியாணியை மட்டும் உண்பாள் மீனா. வாழ்வின் மூலைகளில் கிடைக்கும் இன்பங்கள் விலைமதிப்பற்றவையாகும் தருணங்கள் அவை.
கிளை மூன்று
உணவகத்தில் அமர்ந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அந்த நான்கு பெண்களின் வருகையும் அவர்களது ஒய்யாரமும் சிரிப்பும் பேச்சும். காஜல், புஷ்பா, ரேகா, சலோனி என்று ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டனர். இறுக்கமான நைலான் சுடிதார்களில் அவர்களது உடல்களின் உபயோக அயர்ச்சி நன்றாக விளங்கியது. அளவுகள் மீறிய சதைத் துருத்தல்களை நினைத்து அங்கலாய்க்காமல் அவற்றையும் காட்சிப் படுத்தத் தயங்கவில்லை அவர்களது வறுமை. பளீரென்று முகத்திலறையும் நிறங்களில் உடைகளும், உலர்ந்து போகாத உதட்டுச்சாயப் பொலிவும், ஓயாத சிரிப்பும் மற்ற மேசைகளில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து எளிதாக அழைப்பதுமாக இருந்தனர்.
மீனாவின் கவனம் பிரியாணியின் சுவையையும் மீறி எதிர் மேசையில் அமர்ந்திருந்த அப்பெண்களிடம் குவிந்தது. அவர்கள் ஓட்டலுக்குள் நுழைந்ததிலிருந்தே அவர்களிடம் ஒரு அவசரம் தெரிந்தது. பசியின் அவசரம் அது. நுழையும்போதே நால்வரும் அவரவர் உணவை ஆர்டர் செய்து விட்டு இரவிக்கை மடிப்பிலிருந்து வியர்வையில் தோய்ந்த நோட்டுகளை எடுத்து மேனஜர் மேசையில் வைத்து விட்டே உள்ளே வந்தனர். உழைத்து சம்பாதித்த காசு என்று மேனஜருக்கும் புரிந்திருக்கும். அதையும் லட்சுமி படத்தின் முன்னால் காட்டிவிட்டு கல்லாப் பெட்டியில் வைத்தார்.
காஜல் மற்றும் ரேகா இருவரும் உலகின் கண்களை பார்க்க விரும்பாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். ஆனால் புஷ்பாவும் சலோனியும் இயங்கிய விதம் ஆச்சரியமாக இருந்தது மீனாவிற்கு. அவர்களிடம் கலைஞர்களின் தோரணை மிளிர்ந்தது. ஆனால் நால்வரின பார்வையும் சமையலறையிலிருந்து வெளிவரும் உணவுத் தட்டுகளின் மீதே பதிந்திருந்தன. வேட்டைக்காகக் காத்திருக்கும் ஓநாய்கள் போல் பசியின் வெப்பம் வயிறிலிருந்து கண்களில் புகுந்து கனன்று கொண்டிருந்தது. உலகத்து குரூரங்களின் பசியெல்லாம் வாங்கிச் சுமந்திருக்கும் உடல்களின் பசி அது. மீனாவுக்கு அவர்களைப் பார்க்கவே அசெளகரியமாக இருந்தது. அதிலும் ரேகா அங்கிருந்து மீனாவை பார்த்துக் கொண்டிருந்தாள். மீனா என்ன என்பது போல் புருவம் உயர்த்த ரேகா சட்டென அருளின் பக்கம் புருவங்கள் உயர்த்தி உதடு சுழித்து புன்னகைத்து மீண்டும் மீனாவை ஏளனமாகப் பார்த்தாள்.
மீனாவுக்கு பயத்தில் சாப்பிட மறந்து போனது.அருள் அவர்களைப் பார்க்கிறானா என்பதே இப்பொழுது மீனாவின் கவலையாக இருந்தது. அருள் மீனாவைப் பார்த்து "லூஸு பேசாம சாப்பிடு" என்றான்.
எதிர் மேசை பெண்களுக்கு உணவு வந்து சேர்ந்தது. அதோடு அவர்களின் பேச்சும் நின்று போனது. நான்கு மிருகங்கள் அருகருகே அமர்ந்து தத்தமது இரையை குத்திக் கிழித்துத் தின்னும் காட்சி அது. யாரும் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. பசியும் காமமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
கிளை நான்கு:
சிறிது நேரம் ஆரவாரம் ஓய்ந்திருந்த ஓட்டலில் இரண்டு போலீஸ்காரர்களின் வருகையால் மீண்டும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அதிலொருவன் நேரே அப்பெண்களின் மேசையருகே வந்து நின்றான். வாயில் பான்பராக்கைக் குதப்பியவாறே புஷ்பாவின் முதுகில் கையால் அழுத்தினான். அடுத்த நொடி அவன் முகத்தில் எச்சில் பருக்கைகள் தெறித்தன. "மாதர்ச்சோத் சாலே!! தின்னுட்டிருக்கும்போதும் கூப்டுவியா?" என்று புஷ்பா அவன் முகத்தில் குத்தினாள்.
அவன் வேகமாக அவ்விடம் விட்டு வெளியேறினான். வெளியெறும்பொழுது ஒரு நொடித் திரும்பி புஷ்பாவையும் மற்ற மூவரையும் பார்த்துக் கொண்டான். ரேகாவும் காஜலும் அச்சத்தில் கலங்கினர். புஷ்பா மும்முரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மீனா அங்கிருந்து கிளம்பிவிட முடிவெடுத்தாள். ஆனால் அவர்கள் சாப்பிட்டதற்கான பில் வருவதற்கு தாமதமாகியதால் அங்கேயே இருக்க வேண்டிய சூழல். மீண்டும் அந்நால்வரையும் கவனிக்கத் துவங்கினாள். அவர்களும் சாப்பிட்டு முடித்திருந்தனர். சற்றுமுன்னர் நடந்த எந்த விஷயமும் அவர்களை பாதித்ததாகத் தெரியவில்லை. வயிறாற உணவு உண்ட திருப்தியில் பெருஞ்சீரகத்தை மென்றபடி ஆசுவாசமாய் அமர்ந்திருந்தனர். அப்பொழுது ஒலிப் பெருக்கியில் முகல்- ஏ- ஆசம் படத்திலிருந்துப் பாடல் ஒலித்தது
"ஜப் ப்யார் கியா தோ டர்னா க்யா
ஜப் ப்யார் கியா தோ டர்னா க்யா"
புஷ்பா அமர்ந்து கொண்டே அவ்வரிகளுக்கு கண்களால் அபிநயம் பிடித்தாள். சற்று நேரத்திற்கு முன்பு கொதித்துக் கத்திய புஷ்பா இல்லை இப்பொழுது. அவள் தேவதை போலிருந்தாள். முகத்தில் நிறைவுப் புன்னகை. அது அவளது அபிநயங்களிலும் வெளிப்பட்டது. விரல்கள், கண்கள் மற்றும் மந்தகாசம் இவை மூன்றும் கொண்டு அப்பாடல் முழுவதற்கும் நடனம் அமைத்தாள். அவள் ஆடி முடித்த பொழுது உணவகத்தில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். மீனா தன்னையுமறியாமல் அவள் மேசைக்கே சென்று அவள் கைகளை இறுகப் பற்றி "அற்புதம் புஷ்பா, அற்புதம்!" என்றாள். புஷ்பா குறுநகையொன்றைப் பரிசளித்தாள். அந்தக் கண்களில் எத்தனை மென்மை. சற்றுமுன் உக்கிரம் தெறித்தவையா அவை என்னுமளவிற்கு அவ்விழிகளில் தெய்வீகம் மிளிர்ந்தது.
கிளை ஐந்து:
அவர்களை அவ்விடம் விட்டு செல்லும்படி யாரும் கூறவில்லை. பழரசம் அருந்தியபடி அவர்கள் அமர்ந்திருந்தனர். அப்பொழுது உணவக வாசலில் ஒரு சிறுமி வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் புஷ்பா வேகமாக எழுந்து சென்றாள். அவளை அவ்விடம் விட்டு விரட்டுவது போலிருந்தது புஷ்பாவின் உடற்மொழி. அச்சிறுமி பிடிவாதம் பிடிக்கவே புஷ்பா அருகிலிருந்த தந்தூரி அடுப்பில் பொசுங்கிக் கொண்டிருந்த கறித்துண்டங்களை எடுத்து பாலிதீன் பையில் அடைத்துக் கொடுத்துவிட்டு அவ்விடம் விட்டு செல்லுமாறு கண்டித்தாள். அவளது கைகளில் கெபாப் கம்பி சிவந்து கனன்று கொண்டிருந்தது. அதைக் கண்ட அச்சிறுமி அழுது கொண்டே நடந்து சென்று விட்டாள்.
மீனாவிற்கு மூளையில் ஏதோ இடித்தது போலிருந்தது. புஷ்பாவின் அச்செயல் அவள் மகளின் மனதில் நிரந்தரமாக பதிந்து அதன் விளைவுகளில் புஷ்பாவே பொசுங்கி விடும் நிலை ஏற்படும் என்பது மீனாவிற்கு புரிந்திருந்தது. சிறுபிராயத்தில் இறுகிப் போகும் மனங்கள் அதன் பின் எப்பொழுதும் இளகுவதில்லை.
ஆனால் புஷ்பாவின் உலகில் இவ்வகையான நியாயங்களுக்கு ஏது இடம். அந்தந்த நொடிக்கான நியாயங்களுக்காக மட்டுமே வாழ்வதற்கு அவள் பணிக்கப்பட்டிருந்தாள். தான் பிழைத்திருப்பது போல் தன் மகளும் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை போலும்.
சிறிது நேரத்திலெல்லாம் அவர்கள் மீண்டும் உற்சாகமாகிவிட்டனர். கழிவறை சென்று திரும்பிய அந்நால்வரும் புதுப் பொலிவுடன் வேளியேறினர். திருத்திய கேசம், உதட்டுச்சாயம் பளீரிட அஞ்சனம் தீட்டிய விழிகளில் தேடல் நிரப்பிக் கொண்டு வெளியேறினர். மீனா அவர்களைப் பின் தொடர்ந்து நடந்தாள். நால்வரும் ஜமா மசூதி வாயிலில் அமர்ந்திருந்த ரோகிகளுக்கும் முதியவர்களுக்கும் சில்லறைகளை வழங்கியபடி ஒரு நொடி நின்று பிரார்த்தித்துவிட்டு கிளம்பினர். அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த ரோகியான முதியவர் புஷ்பாவின் உடையைப் பற்றி இழுத்தார். புஷ்பா அவரது தலையை ஆதுரமாக வருடிக் கொடுத்து விட்டுக் கிளம்பினாள். புஷ்பா போன்றவர்களை மீனா போன்றவர்களால் என்றுமே புரிந்து கொள்ள முடியாது.
கிளை ஆறு:
பேருந்துப் பயணத்தின் பொழுது் மீனாவின் மனம் புஷ்பா மற்றும் அவளது தோழிகள் மற்றும் அச்சிறுமியைச் சுற்றியே வந்தது. நால்வரில் எந்தவொரு மாதவியும் "எமை மறந்தாரை யாம் மறக்க மாட்டேமால்" என்று பாடியிருக்க்கூடும் என்று தோன்றவில்லை. மணிமேகலைகளை உருவாக்கும் புனிதத்தையும் அடைந்திருக்கப் போவதில்லை என்பதும் தெளிவாகப் புரிந்தது. கண்ணகிகள் குறித்தோ எண்ணம் எதுவுமே எழவில்லை. கண்ணகிகளுக்கும் மாதவிகளுக்கும் தலைவிதிகள் வயிற்றால் எழுதப்படுபவை என்ற அளவில் மட்டும் மீனாவிற்குப் புரிதல் துவங்கியது.
இப்பொழுது தங்கமால்யாவின் நடனம் குறித்த எதிர்பார்ப்பு பெரிதளவு குறைந்துவிட்டிருந்தது.
கிளை ஏழு.
பார்வையாளர்கள் வந்தமர்ந்து வெகு நேரமான பின்னர் தங்கமால்யா மேடையில் தோன்றினார். பொன்னாடை மற்றும் பொற் கேடய பரிசளிப்பு நிகழ்விற்குப் பின் அரங்கில் விளக்குகள் அணைக்கப்பட்டன. தங்கமால்யா மீது ஃபோகஸ் லைட் படர்ந்தது, அவரது நடனம் மட்டும் பார்வையாளர்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக. தங்கமால்யா நின்றார், அசைந்தார் மீண்டும் நின்றார், கை கால்களை உயர்த்தித் தாழ்த்தி ஏதோ செய்தார். பிறகு "எமை மறந்தாரை யாம் மறக்க மாட்டேமால்" வரிகளுக்கு செய்வதறியாமல் திகைத்தார். பின் எங்கோ பார்ப்பது போல் சிலையாகி நின்றார். வெகுநேரம் பாடல் முடியும் வரை அப்படியே நின்றார். அதற்கு மேல் அவருக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லையா அல்லது செய்யத் தெரியவில்லையா என்பது பலருக்கும் புரியவில்லை ஆனால் மீனாவிற்கு புரிந்தது. அவள் மனமெங்கும் புஷ்பாவின் "ஜப் ப்யார் கியா தோ டர்னா க்யா" என்னும் வரிகளுக்கான நியாயத்தை அவள் செவ்வனே செய்து முடித்திருந்தது மீண்டும் மனதில் நிழலாடியது.
தங்கமால்யாவின் நடனத்தை யாரோ ஒருவர் ஒலி பெருக்கியில் பன்மடங்கு விவரித்துப் புகழ்ந்து கொண்டிருந்தார். தமிழ்ச் சங்க நிர்வாகி.ஓய்பு பெற்ற வங்கி அதிகாரி. மீனா அருளை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.
"ஏன் மீனா டான்ஸ் புடிக்கலையா? தங்கமால்யா கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கலாம்னு இருந்தேன்" என்றான் அருள்.
"போய் சிகரெட் வாங்கிட்டு வா அருள் நான் இங்கேயே வெய்ட் பண்றேன்".
அன்றைக்கான மனநிறைவை புஷ்பா அளித்து விட்டதாக அவள் உணர்ந்தாள்.
Comments
Post a Comment