மோஹினி.
அவளை மோஹினி என்பேன், மோகினி அல்ல.. மோஹினி.
இன்று வரை அவள் என்னை பார்த்தது போல வேறு கண்கள் என்னை பார்த்ததில்லை. இதே வசந்தகாலம்தான் அப்பொழுதும். மருள்மாலை நேரம். மலர்களின் வாசத்திற்கும் அரும்புகளின் வாசத்திற்குமான வேறுபாடு உணர வேண்டுமெனில் வசந்தத்தின் மாலை நேரங்கள் உகந்தவை. வனமெங்கும் மந்தகாசம் தூவியது போல் அன்றரும்பிய மலர்களின் மர்ம வாசம், நாசியிலேறி நரம்புகளூடே பாய்ந்து மனதிற்கு ஒரு இளகிய வண்ணம் தீட்டியிருந்தது.
நானும் அவளும் சிறு இடைவெளி விட்டு நடந்தோம். நான் முன்னும், அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்தவளாய் பின்னுமாக நடந்தோம். கத்தரிப்பூ நிறத்தில் பொன்னிற சரிகை பதித்த சேலையில் நானும் முழுதுமே பொன்னிறத்தாலான சேலையில் அவளும் அன்று அதிக நேரமெடுத்து நேர்த்தியாய் ஒப்பனை செய்து கொண்டோம். மல்லிகை சரங்கள் சூடியே தீரவேண்டுமென்று சென்னையிலிருந்து விமானத்தில் வரவழைத்தோம் மல்லிகை பூக்கூடையை. இரண்டு நாட்களுக்கு முன்னரே மருதாணியை தைல இலைகளுடன் சேர்த்து அரைத்து கை கால்களில் அழகழகான வடிவங்களில் சூடிக் கொண்டோம். அவள் தான் அத்தனை மெருகூட்டலுக்கும் காரணம். அவள் அப்படியானவள். கேரளத்து நடனக் கலையை கற்றுத் தேர்ந்திருந்தாள். நயனங்களும் கழுத்தும் இடையும் பாதங்களும் அதனதன் இயல்பினில் நடனமாடும் மாயம் அறிந்தவை.
நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது ஒரு அலுவலக கலந்துரையாடலின் போது. இருவரின் ரசனைகளும் கச்சிதமாக ஒன்றோடொன்று பொருந்திக் கொள்ள, அவள்தான் முதன்முதலில் என்னிடம் நட்பு கொண்டாள். நான் அவளுக்கு எவ்வகையிலும் இணையானவளல்ல. அவள் கலையழகின் திரவியம், நானோ கருப்பு வெள்ளை நிறங்களில் என்னை விளக்கிவிடுபவள். உன்னால் நடனம் ஆட முடியுமா? என்றாள். நிச்சயமாக முடியாது, நான் நளினங்களை விரும்பாதவள் என்றேன். அவள் கண்களில் ஒரு கணம் மோஹினி தெரிந்தாள். "யார் கூறியது நளினமில்லையென்று, உன் நளினம் உன் பெயரில் உன் கூந்தலில் உன் தோள்களில் தெரிகிறது" என்றாள். இருந்தாலும் நடனம் போன்ற விஷயங்கள் எனக்கு பழக்கமில்லை என்றேன். "இல்லை நீதான் என்னுடன் ஆட வேண்டும், மிக எளிதாக உன்னால் ஆட முடியும், உன் உடலி்ல் அதற்கான வாகு இருக்கிறது, முயற்சித்து பார், இக்கட்டான நிலையில் உதவி கேட்கிறேன்" என்று மீண்டும் மோஹினியாய் மன்றாடினாள். மோஹினிகளுக்கு மறுப்பு கூற இயலாது என்பது அன்றுதான் எனக்கு புரிந்தது.
ஏறத்தாழ ஒரு மாத காலம் தீவிர பயிற்சியின் விளைவாக அவள் விரும்பிய வண்ணம் என்னால் அவளுடன் இயைந்து அசைய முடிந்தது. எனக்கு கடினமான கதாப்பாத்திரம் இல்லை. அவள் காதலிக்கும் கனவுப்பெண் நான், அவளின் வினைகளுக்கேற்ப எதிர்வினையாற்ற வேண்டும், பாங்கோடு புன்முறுவலோடு, மற்றவை அவள் பார்த்து கொள்வாள். அழகிய நடன நாடகம் ஒன்றை இருவரும் சேர்ந்து எழுதி இயக்கியிருந்தோம். எழுதியது நான், நடன இயக்கம் அவள், இசையமைத்தவர் ஆண். ஆக எங்கள் இருவரோடு ஒரு ஆண் வந்து சேரும்பொழுது மோஹினி என்ன செய்வாளோ அதையேதான் செய்தாள்.
எழுத்துக்கும், நடனத்திற்கும் முடிசூட்டுவது போலிருந்தது அவரது இசை. குழலிசையும், பறையிசையும் மாறி மாறி அமைந்திருந்த மெட்டுகளுக்கு அவளின் நடனம், என்னையே மறந்த சூழலில் நான் எழுதிய வசனங்கள் குரல்களாய் பின்னணியில் ஒலிக்க, அந்த நடன நாடகம் ஒரு அற்புத இரசவாதமாய் அமைந்துவிட்டதென்றே கூற வேண்டும்.
ஒரு நாளின் பல மணிநேரங்கள் பயிற்சி எனும் பேரில் மூவரும் நிறைய பேசினோம், நிறைய கற்றோம், நிறைய கற்பித்தோம், இயல் இசை நாடகம் எனும் முப்பரிமாணங்களும் ஒரு சேர அற்புதமாகக் கலந்திருந்த பொழுதுள் அவை. மூன்றும் மூன்று மனித உருவம் கொண்டு உரையாடுவது போலிருக்கும் அப்பொழுதெல்லாம். இதில் மோஹினி மட்டும் அவ்வபொழுது தோன்றி மறைவாள்.
பயிற்சிகள் முடிவடைந்து அரங்கேற்றத்திற்கான நாள் நெருங்கியது. மூவருமே தத்தமது வேலைகளில் மும்முரமாய் இருந்தோம். ஒரு கட்டத்தில் மூச்சும் நினைவும் அந்நிகழ்வுக்கான வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட பயணமாக மாறியது. அரங்கேற்றத்திற்கான நாளின் முற்பகுதியில்தான் அத்தனை ஒப்பனையும் செய்தோம். இசைக்கு பொறுப்பேற்றிருந்த அந்த ஆண் மற்றும் அவளுக்கு, இருவருக்கும் அலாதியான ஒரு நட்பு மலர்ந்துவிட்டது தெரிந்தது. எனக்கு அவர்களிருவரின் இடையே அமர்ந்து பேசுவது கூட அசெளகரியமாகிவிட்டது. அவள் அவரை அவ்வளவு தனக்குள் ஏற்றுக்கொண்டிருந்தாள். எனக்கு அவள் அளவிற்கு கலையார்வம் இல்லையென்றே கூறலாம்.எனது படைப்பாற்றலில் பகுத்தறிவும் கலந்திருந்ததால் நான் மிக எளிதாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவதுண்டு, என்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து விடுவதில் விருப்பமற்ற சுயநலம் என்னிடமிருந்தது. அதை நான் விரும்பவும் செய்தேன். ஆனால் அவள் மோஹினி, அவள் நடனமாகவே மாறி விடுபவள். இசையமைத்தவரும் அவளும் மாயங்கள் புரிந்தனர். எனக்கு பல நேரங்களில் அது பயத்தை கொடுத்தது. இருவரும் தம்மை அந்த மாய அக்கினியில் மாய்த்து கொண்டு விடுவார்களோ என்று. எது எப்படியோ போகட்டும் என்று கைகளை உதறிவிட்டு இயல்பு நிலைக்கு வந்து விட்டேன்.
நிகழ்ச்சி அரங்கேறியது. மூவரும் மேற்கொண்ட பயிற்சியின் பலனாக அன்று மாலை அந்த நடன நாடகத்தின் வெற்றி நினைத்த படியே அற்புதமாக இருந்தது. கைத்தட்டல் ஓயவே சில நிமிடங்களாகின. விழா நிறைவுபெற்று அன்றிரவு விருந்துபசாரத்திற்கு ஏற்பாடாகியிருந்தது. நாடகத்தின் வசனங்கள் குறித்து அதிக பேச்சிருந்தது. இசையும் நடனமும் கச்சிதமாக இருந்தாலும், நாடகத்திற்கு உயிரூட்டியது வசனங்கள்தான் என்ற புகழுரைகள் எங்கள் காதுகளில் விழுந்தன. எனக்கு அளவில்லா மகிழ்ச்சிதான். அத்தனை மாயமும் இசையும் நடனமும் நிகழ்த்தியிருந்தன என்று நான் நினைத்திருக்கையில், கதையும் வசனமும் சிறப்புப் பெற்றதில் நிறைவான சந்தோஷம் அடைந்தேன். இசையமைத்தவர் என்னை நெருங்கி வந்து தோள் குலுக்கி ஆதுரமாய் அணைத்து பாராட்டினார். நானும் அந்த அரவணைப்பில் நெகிழ்ந்து போனேன். அப்பொழுது அங்கு மோஹினி தோன்றினாள்.
முதலில் குறிப்பிட்டிருந்த அந்த யோசனையில் ஆழ்ந்த அவளின் நிதானமான நடைக்குக் காரணமும் அதுதான். ஒப்பனை களைந்து விட்டு இருவரும் விருந்து நடக்கும் இடத்திற்கு சென்றோம். நான் அவளிடம் "சந்தோஷமா?" என்றேன். உடனே பதிலளித்தாள் "ஆமாம்". அவ்வளவுதான் "ஆமாம்" என்று மட்டும் கூறினாள். நானும் அதற்குமேல் பேசவில்லை. அயர்ச்சி வாட்டியது என்னை. உணவருந்திவிட்டு உறங்கச் சென்று விட வேண்டும் என்று உடலும் மனமும் கெஞ்சின. இருவரும் பேசிக்கொள்ளாமல் நடந்தோம். அவள் சற்று கண்டிப்புடன் "நில்" என்றாள். நான் அசட்டையாய் திரும்பி "என்ன" என்பது போல் பார்த்தேன். பெரிய அரச மரமொன்றின் கீழே நின்றிருந்தோம். கருமையான இரவின் ஆழத்தில் அம்மரத்தின் நிழலானது கரிய பிசாசு ஒன்றின் மடியில் நின்றிருப்பது போன்ற தோற்றமளித்தது. எங்கிருந்து தோன்றினோளோ மோஹினி, உறுதியாக என்னைப் பற்றியிழுத்து மரத்தில் அழுந்த சாய்த்தாள். அது நிச்சயமாக மோஹினியின் பிடிதான். அவள் மூச்சினிலிருந்து தெறித்த வெப்பம் உரைத்தது அவளது கோபத்தை. எனக்கு நிலைகொள்ளவில்லை, அவள் பிடியைத் தளர்த்த புன்னகைத்து பார்த்தேன், அவள் பெயர் சொல்லி அழைத்தேன். அவள் அசரவில்லை. நேரே என் கண்களுக்குள் நோக்கி "அவனை நெருங்காதே, அவன் என்னுடையவன், புரிகிறதா?" என்றாள். எனக்கு அச்சத்தில் உதடுகள் உலர்ந்து வார்த்தைகள் வற்றிப்போயின. மீண்டும் கூறினாள் "அவனை நெருங்காதே" என்றாள். " நீ நினைப்பது போல் எதுவும் நான் நினைக்கவில்லை, நீ மோஹினி, நான் பெண், இரண்டுக்கும் வேறுபாடு உண்டு" என்று அவள் பிடியிலிருந்து வலுக்கட்டாயமாக விலகிச் சென்றேன்.
விருந்தின் போது அவள் நிம்மதியாக இருந்தாள். இசையமைப்பாளரின் அருகாமையில் மகிழ்ச்சியாக இருந்தாள். விருந்து முடிந்து விடைபெறும் நேரத்தில் மூவரும் பிரியாவிடை அளித்து திரும்பினோம். சற்று தூரம் நடந்திருப்பேன், அவள் விதைத்த அவமானம் இப்பொழுது எனக்கு புரிந்திருந்தது. அவளை அழைத்தேன் " நில்" என்றேன். நின்றாள். அவளருகே சென்று அவளை அணைத்துக் கொண்டு அவள் காதோரம் படர்ந்திருந்த கூந்தலை ஒதுக்கி அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினேன், "ஆண்கள் என்றுமே பெண்களைத்தான் நேசிப்பார்கள், மோஹினிகளை அல்ல, நான்தான் பெண், நீ மோஹினி" என்றேன்.
அவள் மோஹினியாகவே இருப்பதைத்தான் நானும் விரும்பினேன்.
Comments
Post a Comment