மழை நிமித்தம்



கேதுரு மரங்களைக் குறித்த அறிமுகம் உலகிற்கு விசேஷமாகத் தேவையில்லைதான் ஆனால் கார்கால நாட்களில் அவற்றின் திசுக்களிலிருந்து துளிர்த்து வனமெங்கும் பரவும் நறுமணம் பற்றி என்னால் மட்டுமே கூற முடியும். ஒரு வேளை எனக்கு முன்பே யாரும் உங்களிடத்தில் அந்நறுமணத்தைப் பற்றி கூறியிருந்தால் அவர்களும் நானே என்று அறிவீர்களாக.

கேதுரு மரத்தின் உச்சிக் கிளைகள் மேகங்களை ஸ்பரிசித்து கலக்கும் பொழுதில் மழை பொழியத் துவங்குவதாக இப்பகுதி மக்கள் கூறுவர். மழை நனைத்த வனம் பூசிக் கொள்ளம் வாசத்தை நுகர்ந்துத் திளைக்கும் வேட்கை இக்காலத்தில்ஆஶா மனதில் எழும்புவது எனக்கு வழக்கமாகிவிட்டது. கேதுரு மரத்தின் உடற்வாசத்திற்கு என்னுடலின் ஐம்புலன்களும் விழித்துக் கொண்டு களிப்புறும். மரங்களை ஆறத்தழுவிக் கொள்ளும் பழக்கத்தையும் கேதுரு மரத்தின் வாசமே என்னுள் விதைத்ததெனலாம். ஒரு மழைநாளில் அது நிகழ்ந்தது. வானம் ஒரு தவணையை பொழிந்து ஓய்ந்திருந்தது. அங்கிருந்த ஒரு கல்லறையின் மறைவில் ஈரம் உலர்த்தியபடியே வனத்தின் உயிருக்குள் பிரவேசித்தேன். இன்று வரை என்னால் வார்த்தைகளில் அடக்கிக் கொணர முடியாது போன ஒரு உணர்வை அன்றுதான் முதன்முதலில் உணர்ந்தேன். காற்றில் ஒரு வாசம்,அது நிச்சயம் எந்த மலரினுடையதுமாயிருக்க முடியாது ஏனென்றால் மலரின் வாசத்தில் நோக்கமிருக்கும். கவர்ந்திழுக்கும் நோக்கம். ஆனால் இந்த வாசம் அப்படியிருக்கவில்லை, எதற்கும் யாருக்கும் அழைப்பும் விடுக்காமல் அதே சமயம் வனத்தின் முழுமையையும் தன் வாசக் கயிற்றால் பிணைத்தது போன்றதொரு மகத்துவம். அதிலும் குறிப்பாக ஒரு கேதுரு மரம் தனித்துத் தெரிந்தது. பிரம்மாண்டமான அதன் முழுமையைக் காண தலையை நிமிர்த்தினால் பூமியிலிருந்து வானம் வரை கழுத்து குனிந்து நிமிர்வது ஒவ்வொரு முறையும் நிகழும். அடேங்கப்பா!! என்று நான் வியக்கும் போதெல்லாம் ஒரு சொட்டு நறுமணத்தைக் கூட்டி படரச் செய்தது அம்மரம். 

மழைக்கால கொடையாக அம்மரத்தின் பாதத்தை அலங்கரித்திருந்தன மஞ்சளும் சிவப்பும் நீலமும் கலந்து முளைத்திருந்த மழைக்காளான்கள். அப்பொழுதுதான் புடைத்தெழும்பியிருந்த வனப்பும் கவர்ச்சியும் நிரம்பிருந்தன அவற்றின் தோற்றத்தில். மீண்டும் பூமியிலிருந்து வானம் வரை நீண்டிருந்த மரத்தை வியந்தபடியே அதனருகில் சென்றேன். தன் நறுமணக் கைகள் நீட்டி என்னை அந்த மரம்தான் முதலில் அணைத்துக் கொண்டது. நெடுநேரமாகியும் அப்படியே நின்றுக் கொண்டிருந்தோம் இருவரும். கலவியினிடையே காதலியின் முகம் காண விழைந்து சற்றே அவளை தன்னிடமிருந்து தள்ளி வைத்துப் பார்க்கும் காதலன் போல் இப்பொழுது அம்மரம் என்னை அசைத்தது.

 "நீ மீண்டும் இங்கு வருவாய், அவன் உன்னை அழைத்து வருவான், அன்றும் இதே போல் மழைநாளாயிருக்கும்.காற்றெங்கும் என் வாசமும், வண்ணமயமான மழைக்காளான்களின் மெத்தை விரிப்பும், அதோ அந்தக் கல்லறை மறைவில் உன் நிர்வாணமும், அனைத்தும் மீண்டும் நிகழும். அவனோடு நீ இங்கு வா அதற்காகத்தான் உன்னை இப்பொழுது விடுவிக்கிறேன்" என்றது அம்மரம்.


 "அவனா? யார் அவன்? மீண்டும் ஒரு ஆணா?  ஆண்கள் இல்லாத அற்புதங்களே என் வாழ்வில் சாத்தியமில்லையா? ஆணினம் புதுமைகளற்றது, ஆச்சரியங்களற்றது, நிறங்களற்றது, நுணுக்கங்களற்றது"என்றேன். காற்றில் மரத்தின் வாசம் ஒரு துளி மிகுந்து என்னை வழியனுப்பி வைத்தது அம்மரம்.


நான் சென்றிருந்த அந்த கிராமத்தில் மணியோசை ஒன்று கேட்டபடியே இருந்தது. மணியோசை என்றால் இப்படி கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு முறை மட்டுமே அடித்ததில் ஒலிக்கத் துவங்கிய மணியின் ஓசை மலைகளின் மதில்களிலெல்லாம் மோதி  எதிரொலித்துக் கொண்டே இருந்தது. எதிரொலிதான் என்றாலும் அவையெல்லாம் ஒரே ஒலியின் நீட்சியாகவே இருந்தது. ஏதோ ஒரு இதயத்தின் நேர்மையான வேண்டுதலிலிருந்து எழும்பிய ஓசையானது மலை முழுதும் மோதி எதிரொலிப்பது போலிருந்தது. முதலில் அவ்வொலி நின்று போக மனம் காத்திருந்தது. ஆனால் அது முடிவடையாது எதிரொலித்துக் கொண்டிருக்கவும் ஒரு புள்ளியில் மனதின் முகடுகளிலும் அவ்வொலியானது மோதி அகத்தினுள்ளும் ஒலிக்கத் துவங்கியது. அதுவரை புறவயமான ஒரு நிகழ்வாக இருந்தது இப்பொழுது இயக்கத்தினுள்ளும் ஊடுருவியிருந்ததை உணர முடிந்தது. நிலைமை சீரானது. மணியோசை எதிரொலித்தபடி இருந்தது. 


 இதற்கு முன்னமே சில முறை நான் அவ்விடத்திற்கு சென்றிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் சாயல்களையெல்லாம் மழை வந்து அழித்திருந்தது. ஒவ்வொரு முறையும் எனக்கு முதல் முறையாகவே இருந்தது அவ்வூரில் மட்டும். கேதுரு மரத்தின் அசரீரி மனதின் ஒரு ஓரத்தில் ஒலித்த படியே இருந்தது. அதற்கு செவி சாய்க்காமல் முன்னேறினேன். "அவன் அழைத்து வருவான், அவனை நீ அழைத்து வருவாய்", இவ்விரண்டுமே நிகழக்கூடாதென மனம் நிச்சயித்துக் கொண்டது. ஆண்கள் திசைகளற்றவர்கள், அவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள ஏதுமில்லை. இட்டு நிரப்ப வேண்டிய உடற்கலன்கள் அவர்கள். ஆண்களின் மனதில் ஒரு அறை மட்டுமே உண்டு.தேடிக் கண்டடைய ஆச்சரியங்கள் ஏதுமில்லாத சாம்பல் நிற அறை அது. அதனால் கேதுரு மரம் கூறியதை விரும்பி மறந்துவிட்டேன்.  வழி நெடுகிலும் பரிச்சயமில்லாத மனிதர்கள், மலையில் விளைந்த காய் கனிகள், மலர்ச் செடிகள், தேனடைப் தட்டுகள், செம்மறியாட்டுத் தோலில் செய்த ஆடைகள் என ஏதோவொன்றை விற்பனைக்கு வைத்துக் காத்திருந்தனர். அங்காடித் தெருவைக் கடந்து சென்றால் அடுத்த மலையின் ஏற்றம் துவங்கிவிடும். அம்மலையின் உச்சியில்தான் அனைத்து மதங்களும் சொந்தம் கொண்டாடும் பல்லாயிரமாண்டுகள் பழமையானதொரு கோவில் இருப்பதாகப் படித்தேன். அங்கு வாழும் மனிதர்கள் நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை வாழ்வதாக படித்திருந்தேன். மூப்பு, நோய், மரணம் இம்மூன்றையும் வெல்லும் யோகப் பயிற்சிகள் அறிந்தவர்கள் என்றும் உலகின் அனைத்து விதமான நோய்களுக்கும் அவர்கள் மருத்துவம் செய்து குணப்படுத்துவதாகவும் செய்தி உண்டு. அங்கு சென்று வர வேண்டுமென்று மனம் உந்தியது. 


தேநீர் அருந்தலாமென ஒரு கடையில் ஒதுங்கிய பொழுதுதான் அவனைக் கண்டேன். கந்தர்வன் என்று பார்த்ததும் தெரிந்து கொண்டேன். விலையுயர்ந்த ரத்தினங்கள் என்று சிலவற்றை விற்றுக் கொண்டிருந்தான். விலையுயர்ந்த அளவிற்கு ரத்தினங்களின் தரம் உயர்ந்திருக்கவில்லை என்றுதான் தோன்றியது. அவனுக்கு அதிலெல்லாம் பெரிய கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. அவனது கருத்தும் கவனமும் அங்கு சுற்றி வந்த பெண்களிடமே நாட்டம் கொண்டிருந்தது. பெண்களுக்கு பொருத்தமான ஆணாக இருந்தான்.உடல் முழுதும் வசீகரம், கண்களில் காமம், குரலில் மென்மை. இது போதுமென்று அனைத்து வயது பெண்களும் அவனைச்சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். சிலருக்கு அவர்களின் விரல் பிடித்து மோதிரம் அணிவித்தான், வேறு சிலருக்கு காது மடல் வருடி  இரத்தினக் குழல்கள் அணிவித்தான், இன்னும் சிலருக்கோ அவர்களின் அனுமதியோடு கெண்டைக் கால் தாங்கிப் பிடித்து இரத்தினக் கொலுசு சூட்டிவிட்டான். இத்தனைக்கும் அவனிடத்தில்  என்ன மாயம் இருந்துவிடப்போகிறது என்று மனதிற்குள் நினைத்த மாத்திரத்தில் அத்தனைப் பெண்களும் ஒரே நேரத்தில் என்னைப் பார்த்து கேலி பேசுவது புரிந்தது. கந்தர்வனும் அவனது காதலிகளும் தங்கள் நெஞ்சின் வெறுமையை விரட்ட போராடுவது புரிந்தது. அவ்விடத்தில் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை, தேநீரும் சுவைக்கவில்லை. 

கந்தரவன் என்னை விரட்டியடிப்பது போல் பார்த்தான். நான் மேலும் பயணிக்கத் தேவையான நியாயத்தை கந்தர்வன் செய்து கொடுத்தான். 


ஒருவழியாக நான் சென்றடைய வேண்டிய மடப்பள்ளி மலையின் உச்சியில் கம்பீரமாக நிற்பதைக் காண முடிந்தது. நோய் தீர்க்கும் மூலிகை மலை என்பதால் ஆங்காங்கே மனிதர்கள் விரவியிருந்தனர். இத்தனை நோய்களா மனித இனத்தை பீடித்திருக்கின்றன என்று திகைத்துப் போகுமளவிற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நோய். சிலருக்கு உடலை வருத்தும் நோய்கள், வேறு சிலருக்கு மனப் பிறழ்வு நோய்கள், இன்னும் சிலருக்கோ மரணத்தின் கதவுகள் திறக்காத வயோதிகமே நோயாகிப் போன நிலை. உடல் சிதையத் துவங்கிவிட்டபோதும் உயிர் கூட்டைவிட்டு பறக்கத் துணியாத நோய்நிலை. இப்படி மழையிலும் குளிரிலும் தவிக்க விடப்பட்டிருந்த போதும் உயிரைப் பிரிய உடலும் உடலைப் பிரிய உயிரும் முடிவெடுத்தாலொழிய வேறொரு சக்தியானது மரணத்தை நிகழ்த்த இயலாது என்ற உண்மை விளங்கியத் தருணமது.


 மடப்பள்ளியை அடைந்த  நேரம் அந்தி சாய்ந்து இரவு விரியத் துவங்கியிருந்தது. இனி காலை விடிந்ததும்தான் சித்தர்களைத் தரிசிக்க முடியும். மழை அதன் காலத்திற்கான நியாயத்தை செய்து கொண்டிருந்தது. இரவு முழுதும் ஒவ்வொரு மேகமாக நின்று நிதானமாகப் பொழிந்தபடியிருந்தது. பூமியே உனக்கு இவ்வளவுத் தாகமா? என்று குகையின் சுவற்றில் எழுதினேன். 


விடிந்து கொண்டிருப்பதை பறவைகள் அறிவித்தன.வானம் நீலம் பூண்டு கொண்டிருந்தது. அருவியிலிருந்து உயிர் பெற்று வந்தவன் போல் அவன் நடந்து வந்தான். 

ஓ மீண்டும் ஆண்!! இம்முறை கந்தர்வனல்ல மாறாக இவன் சித்தன் எனும் அடையாளம் கொண்டிருந்தான். அவன் உடல் வனப்பின் வசீகரச் செருக்குக் கொண்டிருந்தான், இவன் ஞானச் செருக்கு கொண்டிருந்தான். ஆண்கள் எளிதில் பெற்றுவிடும் ஒரே உணர்வு தங்களைக் குறித்த ஏதோவொரு வகையிலான செருக்கு. அந்த கந்தர்வனையாவது சிறிது நேரம் கண்ணெடுத்து காண முயன்றேன்.  என்னை நெருங்கி வந்த சித்தனைக் கண்ட மாத்திரத்தில் முகந்திருப்பிக் கொண்டேன். அவனிடம் எனக்கு வேண்டியதான எதுவுமில்லை முக்கியமாக அவனிடத்தில் இயல்பே இல்லை. அவன் குழம்பினான். அது எனக்குப் பிடித்திருந்தது. அவன் கோபமாக ஏதோ முணுமுணுத்துக் கொண்டே சென்றான். "அடேய்"என்று அவனை அழைத்தேன். அவன்  நின்ற இடத்திலிருந்து என்னைத் திரும்பிப் பார்த்தான்.கை நிறைய கூழாங்கற்களை எடுத்து வேகமாக அவன் மேல் ஒவ்வொன்றாக எறிந்தேன். அவன் தலைதெறிக்க ஓடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. யோகமும் அறிவும் ஞானமும் உயிர்பிழைத்து ஓடியதைப் பார்க்க ஆறுதலாயிருந்தது.


இலக்குகள் எப்பொழுதுமே சலிப்பைத் தருவன, அவற்றை  அடைய மேற்கொள்ளும் பயணங்களே சுவாரசியமானவை என்று மீண்டுமொரு முறை இந்த அனுபவமும் உணர்த்தியது. மலையின் மறுபக்கத்தின் இறங்கலானேன். அங்குதான் அவன் அமர்ந்திருந்தான். மூங்கில் கூடைகளில் கொய்யாக் கனிகளும், இலைகளை மடித்து அதில் நிலக்கடலைகளையும் நிரப்பி வைத்திருந்தான். அவனிடம் ஏதோ ஒரு வேற்றுமைத் தெரிந்தது. அவனது செயல்களில் வேகமில்லை. பார்வை  ஓரிடத்தில் நிலைபெறவில்லை. அவனால் சொற்களை ஒருங்கிணைத்து பேச முடியவில்லை. அவனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்து சென்ற துறவி ஒருவர் சிறுவனாயிருந்த போதே நோயை காரணம் காட்டி அவனை யாரோ இங்கு விட்டுச் சென்றதாகவும், அதன் பின் இதுவரை அவனைத் தேடி யாரும் வந்ததில்லை எனவும் கூறினார். அவன் இந்த மலையின் குழந்தை என்றார். யாரிடமும் யாசகம் பெற்று வாழ விரும்பாதவன் எனவும் அதனால்தான் பழங்களையும்  நிலக்கடலையும் விற்று அதில்  கிடைக்கும் வருமானத்தை மடத்தில் ஒப்படைத்து அங்கு வாழ்வதாகவும் கூறினார்.

அவனிடம் பழங்கள் வாங்கிக் கொள்ள முடிவெடுத்தேன். கருணை தான் துளிர்த்தது. கூடையில் இருந்த பழங்களைக் காட்டி  அது வேண்டுமென்றேன். "அம்ருத்" என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் அவன் கூறிய   விதம் என்னை மயக்கியது. கொய்யாக் கனிகளுக்கு அவன் மொழியில் "அம்ருத்" என்று பொருள். அம்ருத் என்றால் அமிர்தம் என்று எனக்கு புரியவே செய்தது. அவன் ஒவ்வொரு பழமாக அணுகி ஆராய்ந்தெடுத்து என்னிடம் கொடுத்தான். மயங்கினேன். கடைசியாக எடுத்த பழத்தை லாவகமாக உடைத்தான். கொய்யாக்கனியின் இளஞ்சிவப்பு ரகசியத்தை அவனும் நானும் ஒரே நேரத்தில் ரசித்து பார்த்தோம். மீண்டும் மயக்கம். நான் கொடுத்த பணத்தை பொறுமையாக எண்ணி மிஞ்சியத் தொகையை என்னிடமே கொடுத்தான். அவன் செய்த ஒவ்வொன்றிலுமிருந்த நிதானமும் நேர்த்தியும் நோய்க் குறியீடாக எனக்குத் தோன்றவே இல்லை. அதுதான் சரியென்று தோன்றியது. வேகவேகமாக வாழும் மனிதர்கள் ஆச்சரியங்களைத் தொலைத்தவர்களாயிருக்கின்றனர். இவன் அப்படியானவனல்ல என்றே தோன்றியது. அவன் ஒரு குறிப்பேடு வைத்திருந்தான். அதில் தன்னிடம் பழங்கள் வாங்குபவர்களின் பெயர்களை அவர்களே எழுத வேண்டுமாம். அவர்களின் பெயர்களை குறிப்பிட்டே மடத்திற்கு காணிக்கை செலுத்துவானாம். எத்தனை அற்புதமான மனிதன் இவன் என்று தோன்றியது. அந்த குறிப்பேட்டில் "உமா" என்று தமிழில் எழுதினேன். எழுத்துகளின் அமைப்பு அவனுக்குப் புரியவில்லை போலும்." இது என்ன?" என்பது போல் தலையை பொறுமையாக உயர்த்தி கண்களால் கேட்டான். "உமா" என்றேன். உங்க பெயரென்ன? என்றேன். அவன் சொற்களை ஒருங்கிணைக்கத் தீவிரமாக முயற்சித்து தலையை இருபுறமும் அசைத்தவாறு நிதானமாக அழுத்தமாக "ஷி.....வா...." என்றான். பிரபஞ்சத்தின் முழுமைக்கும் அவன் கூறியது கேட்டிருக்கும். ஷி...வா..!!


அவனும் நானும் சில மணிநேரங்கள் ஏதேதோ பேசினோம். அவன் பேசவில்லை ஆனால் நான் பேசுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டான். இடையிடையே நிலக்கடலையை உடைத்து ஒவ்வொன்றாக என் உள்ளங்கையில் வைத்தான். அவனது செயல்களில் ஒரு அசாத்திய ஒழுங்கிருந்தது. ஆடைகளின் தூய்மையும் அவனது கேசத்தின் தூய்மையும் அவனை ஒரு பக்குவப்பட்ட மனிதனாகவே எனக்குக் காண்பித்தது. அவன் புன்னகைத்தபடியே இருந்தான். சலனங்கள் ஏதுமற்ற நிரந்தர யோகம் பயின்றவன் போல் தெரிந்தான் அவன். அவனோடு இருந்த நேரம் எனக்கு சொல்லொண்ணா நிறைவைத் தந்தது. 


அப்பொழுது வானில் மாற்றங்கள் தென்படத் துவங்கின. எங்கிருந்தோ கிளம்பி வந்த இராட்சத மேகங்கள் மலையை சூழ்ந்து கொண்டன. எந்நேரமும் அவை பொழியத் துவங்கலாம் என்பது மனதில் பதற்றத்தைத் தோற்றுவித்தது. நான் அவ்விடம் விட்டு கிளம்பத் தயாரானேன். அவனுக்கு விடைக் கொடுத்தேன். அவனது பழக்கூடைகளை மடத்தின் மறைவிடத்தில் வைக்க உதவினேன். "சரி ..ஷிவா..மீண்டும் சந்திப்போம்" என்று அவனது கைகளைப்பற்றி விடைப் பெற்றேன். அவன் ஏதோ கூற முற்பட்டான். ஆனால் எனக்கு செல்ல வேண்டிய அவதியில் அவனைக் கேட்க முடியாமல் போனது. நான் வேகமாக மலையிறங்கத் துவங்கினேன். கனத்த மழை பொழிவின் சப்தம் என்னை அச்சுறுத்தியது. மழை இன்னும் துவங்கியிருக்கவில்லை. அதற்குள் நிலத்தையடைந்து விட்டால் ஏதாவதொரு விடுதியில் அன்றிரவைக் கழித்து விடலாம் என்று பலவாறு யோசித்துக் கொண்டே இறங்கலானேன். காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல் என்னை உ.....மா...என்றழைத்தது. அவன்தான் அழைத்தான். உ....மா...!!

அவனது குரல் அம்மலை முழுதும் மோதி எதிரொலித்தது அந்த மணியோசையைப் போலவே.உ..மா..என்னுடன் வா என்று சைகையில் அழைத்தான். அவனது குரலின் ஆழம் அவனுக்கு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்றுணர்த்தியது. வேகமாக ஏறி அவன் நின்ற இடத்தை வந்தடைந்தேன். இப்பொழுது அவன் எனக்கு வழிகாட்டியானான். வேறொரு குறுக்குப் பாதையில் என்னை அழைத்துச் சென்றான். நான் முன்னர் இறங்கிய பாதையில்  பாறைகளும் மண்ணுருண்டைகளும் சரிந்து விழுந்து பெரும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஷிவா ..ஷிவா என்று நான் அழைத்தது அவன் காதுகளில்  உரைக்கவில்லை. அவனைத் தொடர்ந்து செல்வதொன்றே எனக்கான வழியாய் தெரிந்தது. எங்கெங்கோ புகுந்து ஓடி சரிந்து விழுந்து இறுதியில் ஒரு பள்ளத்தாக்கில் இருவரும் விழுந்தோம். அவனுக்கு மலையும் வனமும் தாய்மடி போல சுலபமாக விளையாடித் திரிய அனுமதித்தது. மயக்கம் தெளிந்து கண் விழித்த எனக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. காற்றில் அதே வாசம், கேதுரு மரக்காடு, மழைக்காளான்கள், கல்லறை மறைவு மற்றும் அவன், ஷிவா. 

"அவன் உன்னை அழைத்து வருவான். நீ அவனை அழைத்து வருவாய்", என்ற குரல் மனதில் கேட்கவே நான் வியப்பில் சுற்றுமுற்றும் பார்த்தேன். கல்லறை மறைவிலிருந்து "உ...மா.." என்ற அவனது குரல் மட்டும் கேட்டது. காற்றில் ஒரு துளி மணம் அதிகமானது. அவன் அழைப்புக்கு செவி மடுக்குமுன் ஒரு முறை அந்த நெடுமரத்தை அணைத்துக் கொண்டேன்.

 உ...மா.. என்று அவன் அழைத்தான். நான் கல்லறையை நோக்கி விரைந்தேன். மழை பொழிந்து ஒரு வழியாக ஓய்ந்தது. 

Comments

Popular posts from this blog

ஹருகி முராகாமி- யதார்த்தத்திற்கு வண்ணம் பூசும் எழுத்து.

Light and Thread

ஊமை அழுக்கு