ஏ.ஜெ.
"நீங்கள் எப்பொழுதாவது இப்படி நினைத்ததுண்டா? இதே மனிதரை இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்துச் சந்தித்தால் அவர் எவ்வாறெல்லாம் அவர் மாறியிருப்பார் என்று? நான் நினைத்திருக்கிறேன். ஏ.ஜே வுடன் பழகிய அந்த நாட்களின் முடிவில் நான் அப்படி நினைத்தேன். இதே ஏ.ஜே வை நான் வாழ்வின் இன்னொரு பருவத்தில் சந்திக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு சுமார் பதிமூன்று வருடங்களுக்கு முன்னர் அவரிடமிருந்து விடை பெற்றேன். சில நாட்களுக்கு முன்பு ஏ.ஜே வை சந்தித்தேன். பழுப்பேறிப் போன கைக்குட்டையை காதுகளின் இடுக்கில் செருகி வைத்திருந்தார். ஆனால் கண்கள் போதுமே காட்டிக் கொடுக்க. "ஏ.ஜே!!!" என்று அதிர்ச்சியில் சற்று சப்தமாகவே அழைத்து விட்டேன். மனிதர்கள் மாறி விடுவார்கள் என்பதுதானே நாமனைவரும் அறிந்த நிஜம். ஆனால் ஏ.ஜே என் குரலுக்குத் திரும்பிய வேகத்திலிருந்தே புரிந்து கொண்டு விட்டேன், ஏ.ஜே என்று நான் உரிமையாக அழைத்த அர்ஜுன் சிங் சிறிதும் மாறவில்லை என்று. அதே அர்ஜுன் சிங், விலங்கியல் சேனல்களில் சிங்கங்களும் சிறுத்தைகளும் மான்களையும் வரிக்குதிரைகளையும் குரல் வளையில் கவ்விப் பிடித்து அவை சாகும் வரை காத்திருக்கும் வன்மத்தையும் மான்களின் மரண ஓலத்தையும் கண்கொட்டாமல் ரசித்து மகிழும் அதே அர்ஜுன் சிங் என்கிற ஏ.ஜே.
பொதுவாக மனிதர்களிடம் இணக்கம் கொள்வதற்கு ஏதாவதொரு உறவுமுறை வளையத்திற்குள் அவர்களை கொண்டு வந்து நிறுத்தியப் பிறகுதான்அவ்விணக்கத்தை உணர மனம் நம்மை அனுமதிக்கும். மூன்றாம் நபர் என்ற இடத்தில் இருக்கும் வரை நாம் எவர் குறித்தும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அவர் எவ்வளவு வித்தியாசமான மனிதராய் இருப்பினும் அவர் நம் கவனத்தைப் பெறுவதில்லை. ஆனால் உறவின் வெளிச்சத்திற்குள் வந்துவிட்டாலோ நிலைமை தலைகீழ். அவரது ஒவ்வொரு அசைவும் நம் மனதில் பதியத் துவங்கி விடும். இது யதார்த்தம். ஆனால் எனக்கு மூன்றாம் மனிதர்கள்தான் எப்பொழுதுமே ஆச்சரியமூட்டுபவர்களாகி விடுகின்றனர். ஒரு தொலைவில் வைத்து ஒருவரை கவனிக்கும் பொழுது அவரது வாழ்வியல் மிகத் துல்லியமாக புலப்படும். அதனாலேயே நான் உறவுகளைக் கூட மூன்றாம் நபர் கோணத்திலேயே அணுகிவிடுவேன். அது சுலபம். மூச்சடைக்க வைக்கும் நெருக்கம் என்னை அதிக அசெளகரியத்திற்குள்ளாக்கி விடுவன. நானும் ஏ.ஜே. வும் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தோம். என்னை விட அவர் இருபது வயது மூத்தவர்.மனைவியை இழந்து இரண்டு மாத விடுமுறைக்குப் பின்னர் அவர் அலுவலகம் திரும்பிய பொழுது நான் பணிக்கு சேர்ந்திருந்தேன். இரண்டு குழந்தைகளுடன் நிராதரவாக நிற்கும் தந்தையின் எந்த பெருஞ்சோக ரேகைகளும் அவர் முகத்தில் புதிதாகத் தென்படவில்லை ஏனென்றால் நிரந்தர சோகத்தை வரமாக பெற்று வந்தவர் போலவே அவர் எப்பொழுதும் இருந்தார். மனைவியின் மரணம் , குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்சம், தன்னுடைய நிராதரவு நிலை என அனைத்தையுமே முன்னரே யூகித்து வைத்திருந்த லாவகத்தோடு வாழ்க்கையை அணுகினார் ஏ.ஜே. அது வாழ்வின் திருப்பங்களுக்கு அவர் விடுத்த சவால். "உன்னால் எனக்கு அதிர்ச்சிகளையும் சோகங்களையும் மட்டும்தானே தர இயலும், அதற்காகக் காத்திருந்து நான் ஏன் துக்கம் அனுசரிக்க வேண்டும். ஒரு மாறுதலுக்கு நான் சோகத்தையும் துயரத்தையும் எனது அங்கியாகத் தரித்துக் கொள்கிறேன், முடிந்தால் நீ எனக்கு சுகங்களைப் பரிசளித்துச் செல்" என்பது போன்ற சாத்வீக எதிர்ப்பு அவருடையது. ஏ.ஜேவின் முகத்தில் எந்த ஒரு உணர்வின் சுவடும் எப்பொழுதுமே பதிந்து யாரும் பார்த்ததில்லை. சில நேரங்களில் நான் அவரை மெளனமாக கவனித்ததுண்டு. ஆனால் அவரது முகம் எந்தவித உணர்வையும் எப்பொழுதும் பிரதிபலித்ததில்லை. மாலை அலுவலக நேரத்திற்குப் பின் ரெக்ரியேஷன் அறையில் அமர்ந்து விலங்குகளின் கொடூர வேட்டையாடுதல் காட்சிகளை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு தேநீர் அருந்துவார். சரியாக அரை மணிநேரம்தான் அதுவும், அதன்பிறகு அதேத் தட்டையான முகபாவத்தோடு அலுவலகம் விட்டு புறப்பட்டு விடுவார். அவர் ஏதோ ஒரு சூனியத்திற்குள் நிரந்தரமாய் தொலைந்து விட்டது போல் எனக்குத் தோன்றும். இவருடனா என் அலுவலக நேரங்களை செலவிட வேண்டும் என்று விரக்தியில் புலம்பிய நாட்கள் இன்றும் நினைவிருக்கின்றன. ஏ.ஜே நிறங்களற்றத் தன்மையின் உருவம்.
மாலீஷ் மம்தா:
மம்தா ஹரியானா மாநிலத்தின் ரெவாரி கிராமத்தைச் சேர்ந்தவர். வயல்களிலும் பண்ணைகளிலும் வேலை செய்து முறுக்கேறிய உடற்கட்டு. உயரமும் சராசரி பெண்களைவிட அதிகம். வயது நாற்பதுகளினூடே இருக்கலாம். அப்பொழுதெல்லாம் வீட்டிற்கே வந்து மாலீஷ் செய்து விடும் வழக்கம் இருந்தது. நம்மூரில் கைவைத்தியம் செய்பவர்கள் போல் மாலீஷ் செய்பவர்களுக்குத் தனி மரியாதை உண்டு. அதிலும் மம்தாவின் மாலீஷ் என்றால் எவ்வளவு செலவு செய்தும் அந்த சுகத்தை அனுபவிக்கத் தயாராயிருந்தார்கள் என்னுடைய உயர் அதிகாரிகள். மம்தா பெண்களுக்கு மட்டுமே மாலீஷ் செய்து விடுவார்.
அப்படி ஒரு சமயம் என்னுடைய உயரதிகாரி மனீஷாவிற்கு அலுவலகத்திலேயே இடுப்பில் தசைப் பிடித்துக் கொண்டதில் வலியில் துடித்துப் போனார். தசைப் பிடிப்பிற்கும் தனது உடல் பருமனுகும் எந்த சம்பந்தமுமில்லையென்றும் அனைத்திற்கும் காரணம் தன் கணவரின் மகிமைதான் என்று உதட்டுச்சாயம் பளீரிட வெட்கப்பட்டுக் கொள்வது மனீஷாவின் வழக்கம். நான் அவருடைய பர்ஸனல் செகரட்டரி என்பதால் அவருடையக் கூற்றையெல்லாம் ஆமோதித்துத் தலையசைப்பதே என் தலையாய கடமையாக கொண்டிருந்தேன்." உடனே கார் அனுப்பி மம்தாவை அழைத்து வரச் சொல்லுங்கள்" என்றார். சிறிது நேரத்திலெல்லாம் புயல் போல் அலுவலகத்தினுள் நுழைந்தார் மம்தா. அப்படியொரு பெண்ணை நான் அதுவரை சந்தித்ததில்லை. தேக்கு மரமொன்று கால் முளைத்து நடந்து வந்தது போலிருந்தது அவளது உடலமைப்பு. தலையில் இறுகச் சுற்றியிருந் த முக்காட்டிற்குள்ளிருந்து பளபளத்தது மூக்குத்தியொன்று. அவள் அறையினுள் நுழைந்நதும் மனீஷா சட்டென்று எழுந்து விட்டார். மம்தா தலையசைத்துத் தன் மரியாதையைத் தெரிவித்து விட்டு மனீஷாவின் உடற்தசைகளை பரிசோதித்து விட்டு, மாலீஷ் செய்யத் துவங்கினாள். கண்ணாடி தடுப்பின் மீது தீரைச்சீலையை இழுத்து விட மறந்த அவதியில் நான் வேகமாகச் சென்ற பொழுதுதான் அக்காட்சியைக் கண்டேன். ஏ.ஜே தலை நிமிர்த்தி மம்தாவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். முதன்முறையாக அவ்விழிகளில் உயிர் பாய்வதைப் பார்த்தேன். பிறவி முழுதும் அடக்கி வைத்திருந்த அத்தனை வேட்கையும் ஒரு நொடி அவரது விழிகளில் ஒளிர்ந்து மிளிர்வதைக் கண்ட பொழுது ஏ.ஜே முற்றிலும் வேறொரு மனிதராய் எனக்குத் தெரிந்தார்.
மம்தா மாலீஷ் முடித்து வேகமாக வெளியேறிய பொழுதும் ஏ.ஜேவின் பார்வை அவளையேத் தொடர்ந்தது. ஆனால் ஏ.ஜே மம்தா எனும் குன்றின் முன் சிறு கல்லாகத் தெரிந்தார். மம்தாவின் ஒரு பிடியில் அவர் உடைந்து விடக் கூடிய அளவிற்கு சோகையும் நலிவும் அவர் உடலை ஆக்கிரமித்திருந்தன. ஏ.ஜே அன்று மாலை என்னிடம் முதன்முறையாகப் பேசினார். "மம்தாவின் தொலைபேசி எண் வேண்டும்" என்றார். "அவர் பெண்களுக்கு மட்டுமே மாலீஷ் செய்பவர்"என்றேன். "அர்ரேரே..அதுக்கில்ல சும்மாதான் கேட்டேன்" என்று மிகுந்த பணிவுடன் கூறிவிட்டு சென்றார். நானும் அவரது ஆர்வத்திற்கு உதவி செய்யலாமென்று, அந்த கண்கள் பெற்ற உயிர்ப்புக்காக மம்தாவின் எண்ணை அவரிடம் கொடுத்தேன். அவர் முகத்தில் மீண்டும் ஒரு நொடி உயிர்ப்பு. என்னை ஏறெடுத்தும் அவர் பார்க்கவில்லை.
மனிதர்களின் ரசனைகளும் விருப்பங்களும் சில நேரங்களில் நம்மை வியப்பிலாழ்த்தி விடுகின்றன. ஏ.ஜே மம்தாவை எப்படி அணுகுவார் என்று யோசித்தபடியே அன்றைய பேருந்து பயணப் பொழுது கழிந்தது. ஏ.ஜே வின் அன்றைய புன்னகை காலத்தில் உறைந்து விட்டது. அதற்குப் பிறகு அவர் புன்னகைப்பதற்கான வாய்ப்பு அமையேவில்லை. மம்தாவைக் குறித்து கேட்கலாமென்றால் ஏ.ஜேவின் முகத்தில் கூடியிருந்த ஏமாற்றத்தின் தாக்கம் அதற்கு இடங் கொடுக்கவில்லை. முன்னிலும் அதிகமாக ஏ.ஜே துவண்டு போய்விட்டார். வழக்கமான அவருடைய சூனியத்திற்குள் நிரந்தரமாக ஒடுங்கிவிட்டார். எனக்கும் அவருக்கும் பொதுவில் மம்தா எனுழ் கதாப்பாத்திரம் இருந்ததால் எங்கு நான் ஏதும் கேட்டு விடுவேனோ என்ற அச்சத்தில் என் பக்கம் திரும்பவதைக் கூட தவிர்த்து விட்டார் ஏ.ஜே. எனக்கோ அவரை கவனிப்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. அவர் அதைக் கண்டுபிடித்து விட்டதாலோ என்னவோ முன்னிலும் அதிகமாக அவர் என் பார்வையை சந்திப்பதைத் தவிர்த்தார்.
அன்று ஒரு விந்தையான எண்ணம் என் மனதில் எழுந்தது. இதே மனிதரை இன்னும் சில வருடங்கள் கழித்து சந்தித்தால் என்ன பெரிதாய் மாறியிருக்கும்? எப்பொழுதும் வெளிச்சத்தில் ஆரவாரமாய் வாழ்பவர்களின் நாட்கள் அனுதினமும் ஒரு நிறம் பூணும். ஆனால் ஏ.ஜே போன்றோரின் வாழ்வுகளைக் குறித்து யாரும் பெரிதுப் படுத்துவதில்லை. ஏ.ஜே உட்பட யாரும் பெரிதுபடுத்துவதில்லை.
ஏ.ஜேவை மீண்டும் சந்திப்பதைக் குறித்த எண்ணங்களெல்லாம் புதைந்தழிந்து போன காலச்சக்கர சுழற்சியில் அந்த நாள் சுற்றி வந்து நின்றது. நானும் ஏ.ஜேவும் எதிரெதிரே நின்றிருந்தோம். அதே உயிரற்ற களையிழந்த கண்களை ஏந்திய முகம். "எப்படியிருக்கீங்க? "என்று ஏதோ பால்ய நண்பனைச் சந்தித்தது போன்ற உற்சாகம் பொங்கக் கேட்டேன். ஏ.ஜே அதே பழைய ஏ.ஜேவாவே இருந்தார். காலத்தின் எந்தத் தழும்பும் அவருடைய குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. அதே சூனியப் பார்வை. "இங்க என்ன பண்றீங்க ஏ.ஜே?"என்றேன். பணியிடை மாற்றம் பெற்று வந்திருப்பதாகக் கூறி பேச்சை முடித்துக் கொண்டு சென்று விட்டார். "என்ன மனிதர் இவர்? வயது கூடிவிட்டது ஆனால் குணம் சற்றும் இளகவேயில்லையே" என்று நினைத்துக் கொண்டேன். ஒருவேளை ஏ.ஜே அதை விரும்பவில்லை போலும்.
அதே வாரத்தில் மீண்டும் ஒரு நாள் ஏ.ஜேவும் நானும் வங்கியில் சந்தித்துக் கொண்டோம். இம்முறை நானே அவரிடமிருந்து விலகி வந்து விட்டேன். சிலரின் மெளனமும் இறுக்கமும் நோய் போல் நம்முள்ளும் பரவி அதே விளைவை ஏற்படுத்தி விடும். நான் வெளியே கிளம்பும் நேரத்தில் ஏ.ஜேவின் குரல் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பினேன். "ஆர்த்தி"
"ஏ.ஜே சொல்லுங்க"
"எனக்கு என்னோட அகெளன்ட் ஸ்டேட்மென்ட் பாக்கணும், ரொம்ப நேரமா ஒவ்வொரு கெளன்டரா கேக்குறேன் யாரும் பதில் சொல்ல மாட்டேங்குறாங்க"
"ஹே ....ஏ.ஜே இப்ப அதெல்லாம் ஆன்லைன் ல பாத்துரலாமே? "
"இல்ல ஆர்த்தி எனக்கு அதெல்லாம் தெரியாது."
"என்னது தெரியாதா? சரி உங்களுக்குத் தெரியலன்னா என்ன, பசங்கக்கிட்ட கேக்குறதுதான?"
"பசங்க செய்ய மாட்டாங்க."
"ஏன்?"
"அவங்க அம்மா சாவுக்கு நானும் என்னோட கோழைத்தனமும்தான் காரணம் னு நெனச்சிட்டிருக்காங்க. அது உண்மையும் கூட."
ஏ.ஜே பேச ஆரம்பித்திருந்தார் ஒரு வழியாக.
"என்னால அவங்க அம்மாவ பாத்துக்க முடியல. அவங்கள காப்பாத்துறதுக்கு தெரியல. பசங்களுக்கு இந்த மாதிரி ஒரு பலவீனமான அப்பன புடிக்காதுதானே ஆர்த்தீ?"
"ஓ..ஏ.ஜே.. இப்ப என்ன பண்றாங்க பசங்க?"
"பையன் லண்டன்ல டாக்டரா இருக்கான். பொண்ணு கனடாவுல கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிட்டா. சி.ஏ படிச்சிருக்கா."
"பையன் டாக்டர், பொண்ணு சி.ஏ ஆனா அப்பாவுக்கு பேங்க் அகெளன்ட் ஆன்லைன் ல பாக்கத் தெரியல ம்ம்ம்ம்??? "
"அவங்க படிச்சாங்க போய்ட்டாங்க. நான் இப்படித்தானே எப்பவும் ஆர்த்தி. எனக்கு எதுவும் கேக்கவும் தெரியாது சொல்லவும் வராது. அழவும் தெரியாது சிரிக்கவும் தெரியாது."
"ஏ.ஜே ...கம் ஆன்...உங்க ஃபோன் குடுங்க நான் இன்ஸ்டால் பண்ணி சொல்லித் தாரேன்."
ஏ.ஜே தன் அலைபேசியை என்னிடம் தந்துவிட்டு என்னருகில் சாலையோரத்தில் ஒதுங்கியிருக்கும் நாய்குட்டி போல் ஒடுங்கிக் கொண்டார்.
ஏ.ஜேவின் அலைபேசி எந்தக் கடவுச்சொல் கேள்விகளுமின்றி அடுத்தடுத்து அனைத்து அறைகளும் தானாக திறந்துக் கொண்டன. வங்கியின் செயலியை இன்ஸ்டால் செய்துவிட்டு, அவரது விபரங்களை விண்ணப்பத்தில் பதிந்து வங்கி ஊழியரிடம் ஆன்லைன் பேங்கிங் துவக்கிவிடுமாறு கூறிவிட்டு அதைக் குறித்து அவருக்கும் விவரித்தேன். ஏ.ஜேவிற்கு எதையுமே தெரிந்து கொள்ள விருப்பமில்லாதவர்போல் சலிப்புடன் தலையசைத்தார். விடைபெற்றுக் கொண்டோம்.
மீண்டும் ஏ.ஜே,
"ஆர்த்தி?"
"ம்ம்ம் ஏ.ஜே."
"மம்தா நெனவிருக்கா உங்களுக்கு?"
"நல்லாவே நெனவிருக்கு ஆனா நீங்கதான் அதப்பத்தி பேச விரும்ப மாட்டீங்களே"
"ஆமா, பேசி என்ன ஆகப்போகுது. என்னால அவங்கக்கிட்ட பேசக் கூட முடியல. அவ்வளவு பயம்."
"ஏ.ஜே காலந்தாழ்ந்து பேசுறீங்க, தெரியுதா உங்களுக்கு?"
"ஆர்த்தி, உங்கக்கிட்டலாம் என்னால பேசவே முடியாதுன்னு நீங்க ஆஃபீஸ் ல சேர்ந்த அன்னைக்கே முடிவுப் பண்ணிட்டேன். அதான் பேசணும்னு எண்ணமே வரல."
"சரி விடுங்க. பிரச்சனையில்ல, பாக்கலாம். ஒரு நாள் வீட்டுக்கு வாங்க பேசுவோம்"என்று அவரது அலைபேசியை திரும்ப அவரிடமே கொடுத்துவிட்டு வந்தேன்.
ஏ.ஜே அவர் திசையில் நடந்தார்.
வீடு நோக்கிய பயணத்தில் மீண்டுமொருமுறை ஏ.ஜேவைக் குறித்த ஆச்சரியம். அவரது அலைபேசியின் திறந்த கேலரியினுள் அத்தனை கொடூரமான மிருக வேட்டைக் காட்சிகள். கேலரி முழுவதும் வேட்டைக் காணொளிகள். இரத்தம் பீய்ச்சிக் கொண்டிருந்த மான்களும், பறவைகளும், வரிக்குதிரைகளும்,அவற்றின் குரல்வளையைக் கடித்துக் குதறியபடியிருந்த புலிகளும் சிறுத்தைகளும் சிங்கங்களும். நூற்றுக்கும் மேற்பட்ட காணொளிகளால் கேலரி நிரம்பியிருந்ததை நினைத்துக் கொண்டே வீடு திரும்பினேன். மனிதர்கள் நாம் காண்பது போல் மட்டும் இருந்துவிடுவதில்லை. அவர்களுக்குள் வன்முறை,வன்மம், ஆசை, காமம், ஏமாற்றம் போன்றவை வெவ்வேறு பரிமாணங்களில் புதைந்திருக்கின்றன. வடிகால்களையும் அவர்கள் அதைப் பொருத்தேத் தேர்வு செய்கின்றனர்.
ஏ.ஜே எனும் அர்ஜுன் சிங் அப்படியானதொரு மனிதர். அவர் போல் இன்னும் அநேகர் உண்டு இங்கு.
Comments
Post a Comment