ஞானி ஏன் மெர்லினை அடித்தார்?

 


நீங்கள் எந்தப் புள்ளியில் இங்கிருந்து அங்கு தாவுவீர்கள்? மிகச்சரியாக எந்த சூழலில் நீங்கள் இதிலிருந்து அதுவாகவோ அல்லது அதிலிருந்து இதுவாகவோ மாறுவீர்கள் என்பதை எனக்குத் துல்லியமாகக் கணித்து கூறிவிடுங்கள் அப்பொழுது நானும் இனி இதுதான் என் மார்க்கம் என்று உங்களுடனோ அல்லது வேறு எந்த கொம்பனுக்கு பின்னாலோ கொடி பிடித்துக் கொண்டு குரல் வளை தெறித்துவிடும் அளவிற்கு கோஷம் போடுகிறேன். உங்களைப் போன்ற ஒருத்தனின் மிகக் கீழ்மையான வன்மத்தின் வெளிப்பாட்டை மிக அருகிலிருந்துக் கண்டவள் என்ற முறையில் இக்கேள்வி என்னுள் எழுகிறத. வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் பலியாகிறவர்களுக்கு ஏற்படும் அதேயளவு பாதிப்பு அவ்வன்மத்தை அடக்குமுறையை மிக அருகிலிருந்து கண்டுணர்ந்தவர்களுக்கும் ஏற்படும் என்பதே எனது நிலைப்பாடு. 


ஞானி ஏன் மெர்லினை அடித்தார்? இந்தக் கேள்வி இன்று வரை என் மனதை விட்டு அகலவேயில்லை. என்றாவது ஒருநாள் அவரை நேருக்கு நேர் சந்தித்து, "அன்று நீங்கள் ஏன் மெர்லினை அடித்தீர்கள் என்று எனக்குத் தெரியும் எனக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் அவளை அடித்த பொழுது ஒலித்த சப்தம், அந்த வலி என் மூளையைத் தட்டியெழுப்பி இன்று வரை அக்காட்சியை மறு ஒளிபரப்பு செய்கிறது. நீங்கள் ஒரு துரோகி, உங்களால் நீங்கள் பின்பற்றுவதாக சூளுரைத்த அனைத்து உயர் கொள்கைகளுக்கும் அழியா அவமானம் நேர்ந்தது. அதற்கு சாட்சியாக நான் என்றும் நிற்பேன்" என்று அவரிடம் கூறிவிட வேண்டும் என்றிருந்தேன், ஆனால் அவர் பல உயரங்களை அடைந்து, தன் இயக்கத்தின் கொள்கை வீரனாக அறியப்பட்டு வீர மரணம் எய்தினார். அவர் மரணித்த செய்தியறிந்ததும் எனக்கு இதுதான் தோன்றியது, உன்னைப் பற்றிய பிம்பத்தை மிக வலிமையாக கட்டமைத்துவிட்டால் போதும் உன் நிஜத்தைப் பற்றி இந்த மூடர்களுக்குக் அக்கறையில்லை என்பதுதான். ஆனால் உன் நிஜத்தின் ஒரு துகள் யாரோ ஒருவரின் உள்ளங்காலைத் தைத்திருக்கக் கூடும். அந்த ரணம் புடமேறி அவருக்குள் ஆறாத வலியை விதைத்திருக்கும். நீ என்ன விதைக்கிறாய் என்பது மிக முக்கியம்.


நாங்கள் சுமார் பதினைந்து பேர் அவரிடம் நாடகக் கலை அதாவது தியேட்டர் டிரெயினிங்க் கோர்ஸ் பயில்வதற்காக அவரிடம் சென்றோம். அவரது புகழும் கீர்த்தியும் எந்நேரமும் அவரின் முகத்திலும் சொற்களிலும் தாண்டவமாடும். அதனாலேயே அவரை அவ்வளவு எளிதாக நெருங்கி விட முடியாது. எந்தவொரு புதிய முயற்சியைக் குறித்து அவரிடம் பேசினாலும் அவரிடம் கேட்க காதுகள் இருக்காது. சொற்பொழிவாற்றும் பொழுதெல்லாம் மாணவர்கள் ஆர்வமாக முயற்சிள் செய்ய வேண்டும், எதையுமே அபத்தமாக நினைத்து முடங்கிவிடக் கூடாது என்று முழக்கமிட்டவர் நிஜத்தில் சிம்மசொப்பனமாக இருந்தார். மனிதன் எந்நேரமும் சிடுசிடுப்பாகவும், எரிச்சலோடும், எள்ளலோடும் எங்களைப் பார்த்தார். 


நான், மதுவந்தி, ஷைனி மற்றும் மெர்லின் ஒன்றாகத்தான் செல்வோம் வகுப்புகளுக்கு. 

மதுவந்தி அடையாரிலும், நான் பரங்கிமலையிலும் ஷைனி போட் கிளப்பில் ஒரு  ஹாஸ்டலிலும், மெர்லின் மீஞ்சூரிலும் வசித்து வந்தோம். மெர்லினை கடைசியாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இந்தக் கதைக்குள்ளதால் அவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.


மெர்லின் என்னைவிட இரண்டு வயது இளையவள். வகுப்பிலும் ஜூனியர். ஆனால் ஆர்வுமும் ஆற்றலும் எங்கள் எல்லோரையும்விட அதிகம். அவளது ஆர்வமிகுதி சில நேரங்களில் சுற்றியுள்ளோரை தொந்தரவு செய்தாலும் அவளது ஆர்வத்தை நாங்கள் யாருமே குற்றம் கூறியதில்லை. அக்கா எனக்கு அது சொல்லுங்க? இது எழுதிக் கொடுங்க, இந்த புத்தகம் எங்கக் கிடைக்கும்? நூலகத்துக்கு வாரியளா கொஞ்சம் புக்ஸ் எடுத்துக் கொடுங்க என்று சதா எதாவது தேடிய வண்ணமும், அறிந்து கொள்ளும் ஆவல் மிகுந்தே இருப்பாள். அவள் குடும்பத்தில் அவள்தான் முதன்முதலில் கல்லூரி வரை வந்திருக்கிறாள். தந்தையும் தாயும் மீன் வியாபாரிகள். உரிமையோடு என் வகுப்புக்குள் வருவாள் "அக்கா நீங்க என்கூட லைப்ரரி  வர்றேன்னு சொன்னீங்க  வாங்க போவோம்" என்று உரிமையாக இழுத்து செல்வாள்.


" மெர்லின் என்னடி அவசரம் இப்போ? பொறுமையா படிச்சுக்கலாம்" என்றால் கேட்க மாட்டாள்.

 "இல்லக்கா நெறைய ரெஃபர் பண்ணி எழுதுனாத்தான் எழுபது மார்க்குக்கு மேல வாங்க முடியும், பி.ஏ முடிச்சதும் எப்படியாவது சட்டம் படிச்சிரணும்"என்று ஆர்வம் பொங்கக் கூறுவாள். மெர்லின் எனது செல்ல ஜுனியர் என்றே சொல்லலாம்.


நாடகப் பயிற்சி வகுப்புக்கு நான்தான் அவளை வற்புறுத்தி வரவழைத்தேன். "அடியே மெர்லினு, நீயும் கிளாஸ்க்கு வா, வெறுமனே இங்லீஷ் எழுதிட்டா மட்டும் ஃப்ளூயன்சி வராது, நல்லா தைரியமா பேசவும் வரணும், நாளைக்கு லாயரா வேற ஆவணும்னு சொல்ற, கூச்சமில்லாம பேசிப்பழகத் தெரியணும்ல, நீயும் வா சரியா. நாளைக்கு சாயங்காலம் எங்க கிளாஸ்க்குதான் ஸார் வர்றாரு வந்துரு". மெர்லின் வந்துவிடுவதாகக் கூறினாள்.


ஸார் வேகமாக நடந்து வகுப்புக்குள் வருவார். ஜோல்னா பை, கதர் ஜிப்பா, புருவம் நெரித்த முகம், எப்பொழுதும் எதாவது ஒரு உயர்ந்த சிந்தனைக் குறித்து அலைபேசியில் உரையாடியபடியே இருப்பார். அவர் வாயுதிர்க்கும் சொற்களையெல்லாம் மெர்லின் கவனமாகக் குறித்துக் கொள்வாள். "ஏன்டி அந்தாளு தும்முனாக்கூட குறிச்சு வெச்சுப்பியா" என்பேன், அப்பாவியாக சிரிப்பாள் மெர்லின். எனக்கு நான் கற்க வேண்டுமென்பதைவிட மெர்லின் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். எனக்கு அப்பொழுதெல்லாம் வாழ்க்கையில் பெரிய பிடிப்பு இருந்ததில்லை. தான்தோன்றித்தனமாக சுற்றுவதும், வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு மரத்தடியில் அமர்ந்து வாசித்துவிட்டு பார்ட் டைம் வேலைக்கு செல்வதுமாக இருந்தேன். ஆனால் மெர்லின் அப்படியல்ல, அவளது முனைப்பும் ஆக்கப்பூர்வமான இலக்கும் எனக்கு பிடித்துப்போனதால் அவள் கேட்கும் எந்த உதவியும் நான் தட்டியதில்லை. 


ஸார் எப்பொழுதும் போல வருவார் போவார். மதுவந்திதான் வகுப்புகளை ஒருங்கிணைத்தாள். ஆள் சேர்த்ததும் அவள்தான். ஆனால் வகுப்பில் ஒன்றும் பெரிதாக நடக்காது. அவர் வகுப்பு முடிய கால் மணி நேரத்திற்கு முன்னர்தான் நுழைவார். வேகமாக எதையாவது கூறுவார். அவர் கூறுவதில் பெரும்பாடம் உள்ளதாக நாங்கள் அனைவரும் நம்பிக்கொண்டு காத்திருப்போம். "எதையுமே போலச்செய்வது நடிப்பல்ல, உணர்ந்து அதுவாக மாறி பிரதிபலிக்க வேண்டும்" என்றார். "பரவால்லயே மனுசன் ஏதோ நல்லா சொல்றாரே" என்று காது கொடுத்து கேட்க ஆரம்பிக்கும்போதே மதுவந்தி இடைமறித்து அவருக்கு தேநீர் உபசரிப்பாள், அடுத்த வாரம் தங்கள் ரோட்டரி சங்கத்தின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று தன் தந்தை கேட்டுக் கொண்டதாகக் கூறுவாள். அன்றைய வகுப்பு அதோடு நாசமாய் போய்விடும். மதுவந்தியும் அவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.நாங்கள் எங்கள் பங்குக்கு கதைத்திருப்போம். நானும் ஷைனியும் ஸாரையும் மதுவந்தியையும் போல் மிமிக்ரி செய்து கொண்டிருப்போம். 

"இதுக்கு பேசாம ஸார் மதுவந்திய மட்டும் உக்கார வெச்சு கிளாஸ் எடுத்திருக்கலாம்" என்று இரட்டை அர்த்த கேலிகள் செய்து கொண்டு சிரிப்போம். இதில் மெர்லின் ஒருத்தி மட்டும் மிகவும் வருந்துவாள். " அக்கா, என்னக்கா எதுவுமே நடக்க மாட்டேங்குது, நீங்க சொன்னீங்கன்னுதானே நான் வந்தேன், வீட்ல நெறைய வேலையிருக்குக்கா,இவர் தியரியும் சொல்லித்தரல, பிராக்டிகலாவும் பயிற்சி கொடுக்கல, ஏற்கனவே ஒரு வாரமாகிருச்சு"என்று அடிக்கடி புலம்புவாள். எனக்கும் அவள் கூறுவது சரியென்று தோன்றவே மதுவந்தியை அழைத்து "மது நீ அவரோட பர்ஸ்னலா கடல போடணும்னா கிளாஸ் முடிஞ்சதும் போட்டுக்கோ, எங்க முன்னாடி ஸீன் போடாத" என்றேன். மதுவந்திக்கேயுரிய நயமான குணத்தோடு நான் கூறிய அனைத்தையும் ஸாரிடம் அப்பாவியாகக் கூறிவிட்டாள் போலும், அடுத்த நாள் ஸார் என்னை நிற்க வைத்து சரமாரியாக நாடகக்கலை குறித்து விளாசிவிட்டார். என் புண்ணியத்தில் அன்றைய வகுப்பு சிறப்பாக நடந்தேறியது. ஆனால் அது தொடரவில்லை. மீண்டும் அவரின் மெத்தனம், அலட்சியம், மதுவந்தியின் பல்லிளிப்புகள், மெர்லினின் தவிப்பு என்று அதே பழைய போக்கு தொடர்ந்தது. 


மற்ற பேராசியர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்ற போதும், என் வார்த்தைகளுக்கு அங்கு மதிப்பிருந்ததில்லை. மதுவந்தியின் வாக்குமூலமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. மதுவந்தியை கேண்டினில் சந்தித்த பொழுது ஸார் அவளிடம் ஏதோ கூறிக் கொண்டிருந்தார் என்பதை கவனித்தேன். அவளை அழைத்து விசாரித்தேன் "அதென்ன உனக்கு மட்டும் ஸ்பெஷல் கிளாஸா??" என்று கண் சிமிட்டியவாறே. அவள் மிகவும் சினங்கொண்டாள், "இன்ட்ரெஸ்ட் இருந்தா நீங்களும் கத்துக்கோங்க" 


அதுக்குத்தான ஃபீஸ் கட்டி கிளாஸ்ல உக்காந்திருக்கோம், அதென்ன அந்தாளு கேண்டீன்ல உனக்கு கிளாஸ் எடுக்குறாரு? 


கண்கலங்கினாள் மதுவந்தி."ஸார் என்னோட தூரத்து சொந்தம், ஆனா அவரு இப்ப ஏதிஸ்ட் ஆகிட்டாரு" என்றாள்.  தான் மட்டுமே அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வழிவழியாக வருவதை சகிக்க முடியாமல்தான் அவளை எப்பொழுதும் சீண்டி பார்ப்பது என் வழக்கம். ஆனால் மெர்லின் அப்படியல்ல. மெர்லின் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு ஸார் இப்படி நடப்பது அதிக வருத்தத்தைக் கொடுத்தது. அவளுக்கு நேரமும் கல்வியும் மிகவும் முக்கியமாக இருந்தது. அவளுக்கு எதிலும் சமரசம் செய்து கொள்ள விருப்பமில்லாதிருந்தது. மெர்லின் முதன்முறையாக வகுப்பில் கோபமடைந்தாள்,

"ஸார், நான் இங்க இருந்து ரெண்டு பஸ் மாறி மீஞ்சூர் வரைக்கும் போகணும், இங்க எதுவுமே நடக்க மாட்டேங்குது, நீங்க எதுவுமே விரிவா சொல்ல மாட்டேங்குறீங்க. கோர்ஸ் ஃபீஸ் முந்நூறு ரூபா எனக்கு பெரிய விஷயம் ஸார்" என்று அடுத்தடுத்து அழகாக அவரின் தவறை சுட்டிக்காட்டினாள் மெர்லின். வழக்கறிஞர் தோரணை மிளிர்ந்தது அவளிடம். நானும் மற்றவர்களும் மதுவந்தியைத் தவிர அனைவரும் அவளை வழிமொழிந்தோம். அன்று ஸார் எதுவும் பேசவில்லை. தேர்வு நேரமாதலால் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அடுத்த செமஸ்டரில் தொடர்ந்தது. 


வெகுநாட்கள் கழித்து மீண்டும் பயிற்சி வகுப்புகள் துவங்கியதால் அனைவரும் பழைய விஷயங்களை மறந்து விட்டு ஆர்வமாக வகுப்புக்காகக் காத்திருந்தோம். ஸார் அன்றும் வழக்கம் போல் தாமதமாகவே வந்தார். நாங்கள் விடுமுறை நாட்களைக் குறித்துக் கதைத்திருந்தோம்.மெர்லின் உற்சாகமாக இருந்தாள். ஸார் அன்றுதான் முதன்முறையாக நாற்காலியில் அமராமல் நின்று பேசினார். எங்களை வட்ட வடிவில் சுற்றி அமரச் சொன்னார். நானும் மெர்லினும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தோம். ஸார் கண்ணாடியைக் கழட்டி மேசையின் மீது வைத்தார். சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டு தயாரானார். "இன்று உணர்வுகளை  வெளிப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்"என்றார். 

மதுவந்தியை அழைத்து சினத்தை வெளிப்படுத்துமாறு கூறினார். அவள் தடுமாறினாள், பின்பு தானறிந்த நாட்டிய பாவங்களில் ரெளத்திர ரசத்தை நடித்துக் காட்டினாள். அடுத்து என்னை செய்யுமாறு கூறினார். எனக்கு சட்டென வெளிப்படுத்த வரவில்லை. தயங்கினேன். கண்களை மூடி முயன்ற பொழுதும் என்னால் அவ்வுணர்வை வெளிப்படுத்த முடியவில்லை. உடனே ஸார் என்னருகில் வந்து விளக்க ஆரம்பித்தார்.

எதையுமே யோசிச்சிட்டே இருந்தா அத நடிப்புல கொண்டு வர முடியாது, ஒரு நொடியில வெளிப்படுத்திரணும், அப்பதான் ரியாலிட்டி இருக்கும் என்று கூறி முடிப்பதற்குள்ளாகவே என்னருகில் அமர்ந்திருந்த மெர்லினை ஓங்கி அறைந்தார். எனக்கு வார்த்தை வரவில்லை. பயத்தில் உறைந்து போனேன். மெர்லின் முகத்தில் வலியின் வீரியம் கண்ணீராய் வழிந்தது. அவள் வேகவேகமாகத் துடைத்துக் கொண்டு சமநிலைக்கு வந்தாற்போல நடித்தாள். அவள் நடித்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு யதார்த்தமான நடிப்பு அது. நானோ செய்வதறியாது வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் அந்த மனிதனை. "ஸார் நீங்க ஏன் மெர்லின அடிச்சீங்க? "

"அதான்மா நடிப்பு, பர்ஃபார்மன்ஸ், என்ன மெர்லின் புரியுதா? ?

மெர்லின் புரிந்தது போல் தலையசைத்தாள். ஆனால் அவள் முகம் கன்னிப்போய்விட்டிருந்தது. என்னால் மெர்லினை கண்ணுக்கு நேராக சந்திக்க முடியவில்லை. ஸார் ஏன் மதுவந்தியை அடிக்காமல் என்னை அடிக்காமல் எல்லாரையும் விடுத்து மெர்லினை அடித்தார். அவர் மெர்லினை ஏன் தேர்ந்தெடுத்தார். அவள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முற்படாதவர், அடிப்பதற்கு மட்டும் ஏன் அவளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்? மதுவந்தி தானே அவரது விருப்ப மாணவி அவளை ஏன் அடிக்கவில்லை? ஏன் மெர்லினை அடித்தார்? அவர் அவளை அடித்தபொழுது அவர் முகத்தில் நிரம்பியிருந்த வன்மத்தை நான் மிக அருகினில் கண்டதால் அவரது மனமொழி எனக்கு கேட்கவே செய்தது "நாயே, இனி என்னைய எதாச்சும் கேள்வி கேட்ப? என்று கேட்காமல் கேட்ட குரோதம் அது. அவர் மெர்லினை அடித்ததற்கான காரணத்தை தெரிந்த சாட்சி நான். அதற்குப்பின் நான் அந்த வகுப்புக்கு செல்லவில்லை. மெர்லினும் மற்றவர்களும் தொடரந்தனர். ஸார் என்னை அழைப்பதாக மதுவந்தி கூறியபோது அவளை அவச்சொற்களால் அவமானப்படுத்தியனுப்பினேன்.உடுமலைப் பேட்டையில் மாணவர் பத்திரிகையாளர் பயிற்சி பட்டறைக்கு என்னை ஸார் தேர்வு செய்திருந்த செய்தியறிந்ததும் மெர்லின் தான் அதை என்னிடம் முதலில் பகிர்ந்தாள். எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டேன். ஞானி மெர்லினை அடிக்கும்பொழுது நான் அவரை   அவர் சுமந்திருந்த போலி கொள்கைகளெல்லாம் அகன்று போய் அவரின் நிஜ முகத்தைக் கண்டேன். அதுதான் அவர். அவரது சாதியைக் குருதியில் கலந்து வைத்திருந்ததால் அவரால் அது தவிர வேறெதுவாகவும் ஆக முடியவில்லை. 


மெர்லின் அவள் நினைத்ததுபோலவே இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞைராக பணியாற்றுகிறாள். ஞானியும் மரித்து விட்டார். நானும் இருக்கிறேன்.

ஞானி ஏன் மெர்லினை அடித்தார் என்று எனக்கு மட்டும் புரிந்திருந்தது. 

Comments

Popular posts from this blog

ஹருகி முராகாமி- யதார்த்தத்திற்கு வண்ணம் பூசும் எழுத்து.

Light and Thread

ஊமை அழுக்கு