ஸாங்கா தாதா
நான் மரியா.
வாழ்வின் இப்பகுதியில் ஸாங்கா எனும் மனிதரைச் சந்தித்ததைக் குறித்து நான் மகிழ்ந்திருந்த பொழுதுதான் மிஸோரமிலிருந்து வந்த அந்த அலைபேசி அழைப்பு மனதில் இனம்புரியாததொரு அழுத்தத்தைத் தோற்றுவித்து என்னை கலங்கச் செய்தது. ஸாங்கா மரணிக்கப் போவதாக வந்தது அச்செய்தி. அனேகமாக இன்றைய சூரிய அஸ்தமனம் எனக்கு பெருமளவு துயரத்தை அளிப்பதாகவும் இருக்கக்கூடும். இதை நீங்கள் வாசிக்கும் பொழுது அந்நிகழ்வு கடந்த காலமாகியிருக்கவும் கூடும். இப்படி நிகழக் கூடிய எந்த சாத்திய சமிக்ஞைகளையும் ஸாங்கா எனக்கு அளித்துச் செல்லவில்லை என்பதால் நான் அவரது வரவுக்காகக் காத்திருக்கப் போகிறேன். அவர் பாதியில் நிறுத்திய கதைகளை திரும்ப வந்து எனக்கு முடித்துத் தருவதாகக் கூறிச் சென்றார். முற்றுப் பெறாத கதைகளின் சுமை என்னை அழுத்திக் கொன்று விடுவதற்க்குள் அவர் திரும்பி வந்து விடுவதாக உறுதியளித்துச் சென்றிருக்கிறார். அதை மட்டுமே நம்பிக் கொள்வது எனக்கு இப்பொழுது சிறிது ஆசுவாசம் கொடுக்கிறது. தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் அலைபேசியின் குரல்வளையை விரல் சொடுக்கில் நெறித்து ஊமையாக்கி விட்டேன். ஸாங்காவின் வரவு செலவுக் கோப்புகள், காப்பீட்டுத் தொகை விபரங்கள், நாமினேஷன் பரிந்துரைகள் யாவும் அலுவலகத்தில் சரி பார்க்கப்பட்டு மேலதிகாரியிடம் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகச் சற்று முன்னர் கேள்வியுற்றேன். உலகம் ஸாங்காவிற்கு விடைக்கொடுத்தனுப்பத் தயாராகிவிட்டது என்பது போல் தோன்றுகிறது. இப்பொழுது நான் என்ன செய்வது? என்னிடமிருக்கும் அவரது முடிவறியா கதைகளுக்கு யார் பொறுப்பு?
வென்ஹய் ஸாங்கா என்ற இயற்பெயர் கொண்ட அவரை அனைவரும் தாதா என்றே அழைத்தனர். மிசோரம் பகுதியின் "தலைவெட்டிகள்" வகை பழங்குடியினத்தவரான ஸாங்கா காலமாற்றத்தால் இன்று அரசாங்க ஊழியர். கடைநிலை ஊழியம்தான் என்றாலும் ஸாங்கா என்றுமே தன்னை அவ்வாறான ஒரு குறுகிய வட்டத்திற்குள் பொருத்திக் கொண்டதேயில்லை. சாராயமும், நாட்டு பீடியின் புகை நெடியும் அவரது அடையாளங்கள். அதற்காக அவர் மேல் ஒழுக்கமீறல் நடவடிக்கைகள் பல விதிக்கப்பட்டும் அவருக்கு அவைப் பற்றிய அக்கறையெல்லாம் இருந்ததில்லை. அவரது வருமானம் குறித்தத் தெளிவும் அவருக்கு இருந்ததில்லை. நானும் அவரும் நட்பானப் பிறகு ஒரு நாள் தயங்கியபடியே தனது வருமான விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதன் பின்னர் பெரிய மாறுதல்கள் ஏதும் ஏற்படவில்லையென்றாலும் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக என்னை நினைக்கிறார் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
மரியாவாகிய நான் ஸாங்காவாகிய அவரை ஒரு பெளத்த மடாலயத்தின் வாயிலில் சந்தித்தேன். உலகின் உயரமான சிகரங்களைத் தன் பின்னணியில் கொண்டு அமைந்திருந்த எழில்மிகு மடாலயம் அது. அதன் வாயிலில், மடத்தை எதிர்நோக்கும் திசையில் பீடி புகைத்தபடி அமர்ந்திருந்தார் ஸாங்கா. அவரது பார்வை மடத்தையும் மீறி அதன் பின்னால் விண்ணை முட்டி நின்றிருந்த சிகரங்களில் நிலைக்குத்தியிருந்தது. அவரருகே அமர்ந்து காலணிகளைக் கழற்றிய பொழுது அவரிலிருந்து கிளம்பிய புகையிலையும் வியர்வையும் கலந்த துர்நாற்றம் என்னை துன்புறுத்தியது. மனிதர்களின் புறம் விடுத்து அகம் காணும் கலையை அப்பொழுது பயின்றிருக்கவில்லை நான். என்னை ஓரிருமுறை ஏறெடுத்துப் பார்த்த அவரது பழுத்துச் சிவந்தக் கண்களையும் நான் அப்பொழுது வெறுத்தேன். மடத்தை மூன்று முறை சுற்றி வந்து நிலத்தில் விழுந்து தொழுது முடித்து மீண்டும் எழுந்து வந்து அவரருகே அமர்ந்து காலணிகளை அணியும் வரை ஸாங்காவின் பார்வை என் மேல் பதிந்திருந்ததென்பதை என்னால் உணர முடிந்தது. மீண்டும் அவர் மலைகளின் மேல் பார்வையைத் திருப்பினார். நானும் அவர் பார்த்திருந்த மலைகளை சற்று நேரம் நோக்கினேன். இன்னும் சிறிது நேரம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுந்தது, இன்னுமின்னும் என்று அப்படியே அமர்ந்து விட்டேன். ஸாங்கா நான், நான் ஸாங்கா, இருவரும் ஒரே காட்சியை கண்டபடி அமர்ந்திருந்தோம். மலைச் சிகரங்கள் மடிப்புகளாக தொடர் சங்கிலியாக அடுத்தடுத்து வெவ்வேறு உயரங்களில் கம்பீரமாக நின்றிருந்தன. முதல் சங்கிலித்தொடரின் மலைகள் யாவும் பச்சை மலைகள். பசும்போர்வை போர்த்திய வளமான மலைகளின் உடலிலிருந்து ஆங்காங்கே வெள்ளி நிற அருவிகள் பெருக்கெடுத்துப் பாய்ந்தன. அவற்றின் ஆரவாரம் தூரத்து இறைமையாக மேகங்களில் மோதி எதிரொலித்தன. பச்சை மலைகளின் பின்னே அவற்றை விட பன்மடங்கு உயர்ந்திருந்த பிரம்மாண்டமான பாறை மலைத் தொடர்கள். ஒரு துளி பச்சையுமின்றி சாம்பல் மற்றும் கருமை போர்த்திய கல் மலைகள் அவை. ஒரே நேரத்தில் இருவேறு நேரெதிர் உணர்வு நிலைகளில் என் மனம் தள்ளாடியதை ஸாங்கா கவனித்திருந்தார் போலும். புகைத்துக் கொண்டிருந்த பீடியை நிலத்திலழுத்தி அணைத்தவாறே கூறினார் "நீ பார்க்கும் இரண்டு மலைத்தொடர்களுக்குமிடையே பல்லாயிரம் மைல்கள் தொலைவிருக்கும். முன்னிற்கும் மலைகளின் பசுமைக்குப் பின்னிற்கும் மலைகளின் உயரம்தான் காரணம். வடக்கிலிருந்துத் தாக்கும் பனிப்புயலைத் தடுத்து நிற்கும் அவைதான் கீழிருக்கும் அத்தனை பசுமைக்கும் காரணம். அங்கு,அவ்வளவு உயரத்தில் ஒரு புல் பூண்டு கூட முளைக்க வாய்ப்பில்லை. ஆனால் அங்கும் மனிதர்கள் வாழ்கின்றனர். பல மடாலயங்களும், கலைக் கூடங்களும் அங்குண்டு. நான் இதுவரை அங்கு இரண்டு முறை சென்று திரும்பியிருக்கிறேன். மீண்டும் செல்ல ஆவல் மிகும்போதெல்லாம் ஆனால் அதற்கான போதிய பணமில்லாததால் நான் இங்கு வந்து அமர்ந்து அந்த சிகரங்களை மட்டும் நெடுநேரம் ஆசைத் தீர பார்த்துவிட்டு சென்று விடுவேன்" என்று நீண்ட பெருமூச்சுடன் கூறினார்.
ஸாங்கா தாதா மனதிற்கு நெருக்கமானவராக மாறிப்போனத் தருணங்கள் அவை. எந்த முன்னேற்பாடும் செய்து கொள்ளாமல் பேசும்பொழுதுதான் மனிதர்கள் அழகாய்த் தெரிகின்றனர். அப்படியான ஒரு நேர்மைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துப் பேசுபவர்களின் வாழ்வில் அதற்கு நியாயம் செய்யும் அனுபவங்கள் கொட்டிக் கிடக்கும். ஸாங்கா தாதா போன்ற மனிதர்களைச் சந்தித்தப் பிறகு என்னிடம் வாழ்வைக் குறித்த எந்த பதற்றமும் தோன்றுவதில்லை. அது ஸாங்கா தாதாவிற்கு நான் செய்யும் மரியாதை நிமித்தச் செயலாகக் கூட இருக்கலாம்.
பிற்பகல் வேளைகள் எங்களிருவருக்குமான நேரம். அலைபேசியின் வானொலி செயலியில் அவரது பிராந்திய கதைகள் பிற்பகல் வேளைகளில் ஒலிபரப்பாகும். அவற்றை ஆர்வத்துடன் கேட்கும் வழக்கம் அவருக்கு உண்டு. அலைபேசியைக் காதருகே வைத்துக் கொண்டு பீடி புகைத்தபடியே கதை கேட்பார். அந்த ஒரு மணிநேர கதை கேட்டலுக்குப் பின் ஸாங்கா புத்துணர்வோடு அதிகாரி வீட்டுத் தோட்டத்தைப் பராமரிக்கச் சென்று விடுவார். அப்பொழுதெல்லாம் அவரோடு பேசுவது எனது வழக்கம். செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சியபடி, மண்ணைக் கொத்தியெடுத்துச் சிறு பாத்திகள் அமைத்து விதைகள் தூவி, பூச்செடிகளை அழகாக கத்தரித்து என அவரது செயல்கள் மேல் அலாதி பிரியம் எனக்கு. இதையெல்லாம் செய்து கொண்டே அவர் கூறும் கதைகள் மேலும் அழகு.
ஸாங்கா, தன்னைச் சுற்றி வேகமாக மாறிக் கொண்டிருக்கும் உலகின் தாக்கத்தில் விழாமல் தன்னை பாதுகாத்துக் கொண்ட விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்ததை அவரிடமே பலமுறை கூறியிருந்தேன். அவருக்கு அதைக்குறித்த எந்தக் கருத்துகளும் இல்லாதது போல் என் வியப்பையெல்லாம் நிராகரித்து விடுவார் ஸாங்கா.
கடந்த மாதத்தில் ஒரு நாள் அவருடைய மூக்குக் கண்ணாடியின் வலப்பக்க பிடியானது உடைந்து விட்டது. பொது முடக்க விதிகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட நாட்கள் அவை என்பதால் அவரால் வெளியில் சென்று அதை சரிப்பார்க்க இயலவில்லை. ஸாங்காவின் பார்வை அவரது வயதைக்காட்டிலும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த பொழுதே அவர் தன் பங்கிற்கு வேகமாக யோசித்தபடி இருந்தார். சிறிது நேரத்திலெல்லாம் பொறித் தட்டியது போல் குப்பைத் தொட்டியிலிருந்து ரேனால்ட் பேனாவின் ரீஃபிள் ஒன்றை எடுத்து அதன் முனைகளுக்கு சூடு வைத்து அதனை வளைத்து தனது கண்ணாடியின் விளிம்புடன் பொருத்தி சில நிமிட நேரத்தில் அதை அணிந்து கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தார். என்னைப் பார்த்து கண் சிமிட்டிவிட்டு கடந்து செல்லவும் அவர் மறக்கவில்லை.
ஸாங்காவின் முகம் முதன் முறையாக அச்சத்தில் மூழ்கியதை கண்ட பொழுது அது எனக்கு நகைச்சுவையானதொரு தருணமாகத்தான் இருந்தது. சுனிஷ் ஷர்மாவின் குரல் வளையை அழுத்தி அவன் விழிகள் பிதுங்கி விடும்படி அவனை தாக்கிய பொழுது கூட அவரது முகத்தில் ஒரு துளி சலனத்தை நான் காணவில்லை. நிதானமாக நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தனைப் போல அவன் கழுத்தை நெறித்துப் பிடித்திருந்த ஸாங்கா தாதாவை நான்கைந்து பேர் சேர்ந்து இழுத்து விடுவித்தனர். முகம் சிவந்து போன ஷர்மா நிலை குலைந்துத் தலை குனிந்தபடியே அவ்விடம் விட்டு மறையும் வரை ஸாங்காவின் பார்வை அவன் மீது மட்டுமே நிலைத்திருந்தது. அதன் பிறகு அவர் தனது அறைக்குள் சென்று விட்டார்.
ஷர்மாவின் எந்தச் செயல் அவரை இவ்வளவு சினம் கொள்ளச் செய்திருக்கும் என்பது எங்களுக்கெல்லாம் புரிய அதிக நேரமெடுக்கவில்லை. கழுதைப் புலியிடம் சிங்கம் கொள்ளும் சினத்திற்குக் காரணங்கள் எப்படித் தேவையில்லையோ அதே போன்றதொரு சினம்தான் அன்று ஸாங்காவிற்குள்ளும் தோன்றியது.
ஸாங்காவை பயம் கொள்ளச் செய்தது விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம். ஒழுக்கமீறலுக்கான தண்டனை நடவடிக்கையாக அவருக்குக் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு அவரை உடனடியாக அறையை காலி செய்துகொண்டு கிளம்பச் சொல்லி அறிக்கை அனுப்பியிருந்தது நிர்வாகம். அதை என்னிடம் நீட்டி விளக்கம் கேட்டார். "அதனாலென்ன ஸாங்கா? நீங்க ஃப்ளைட்ல கெளம்புங்க, ஊருக்குப் போய் சந்தோசமா இருந்துட்டு லாக் டவுன் எல்லாம் முடிஞ்சதும் பொறுமையா வாங்க, இங்க எவ்வளவு நேர்மையா வேல செஞ்சாலும் ஷர்மா மாதிரி ஆளுங்க அவமானப் படுத்திட்டேதான் இருப்பாங்க. நீங்க மனச ஆசுவாசப்படுத்திட்டு தெம்பாத் திரும்பி வாங்க, நான் உங்க டிக்கெட் புக் பண்றேன் சரியா?"
அவர் சிந்தனையில் மூழ்கிப்போனார். அதுவரை விமானத்தில் பயணித்ததேயில்லை என்று குரல் தழுதழுத்தார். அவரது பயம் எனக்கு ஆச்சரியமூட்டியது. உலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்துப் பிழைத்திருக்கத் தவறிய உயிரினத்தின் சுவடுகள் அவர் முகமெங்கும் பரவியிருந்தன. அதோடு கூட அவமானத்தின் ரேகைகளும் சேர்ந்து கொண்டு அவரது முகத்தை இன்னும் பொலிவிழக்கச் செய்திருந்தது. வாழ்நாள் முழுதும் நேர்மையாகவும் கடினமாகவும் உழைத்துச் சேர்த்து வைத்திருந்த நிம்மதியை, சூழ்ச்சியால் பலி வாங்கி விடுபவர்களிடம் தோற்றுத் திரும்புவதை அவர் விரும்பவில்லை போலும். ஒரு வேளை அன்று ஷர்மாவைக் கொன்றுவிட்டு அதற்கான தண்டனையாக பணி விடுத்துச் செல்ல வேண்டிய நிலையை அவர் சந்தோஷமாக ஏற்றிருக்கக்கூடும். ஆனால் பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்படும் அவமானத்தைத் தாள முடியாமல் ஸாங்கா நொறுங்கிய மனநிலையில்தான் அன்று விமான நிலையத்தில் எனக்கு விடை கொடுத்தார்.
"போதும் ஸாங்கா, ரொம்ப சோகமா இருந்துட்டிங்க. எனக்கு உங்கள புடிக்கல. போய்ட்டு திரும்பி வரும்போது சந்தோசமா, நெறைய கதைகளோட வாங்க" என்று கட்டியணைத்து வழியனுப்பினேன். அழுத்தத்தில் காது வலிக்காமலிருக்க பஞ்சுச் சுருள் ஒன்றையும் சில மென்டாஸ் மிட்டாய்களும் கொடுத்தனுப்பினேன். தலையசைத்தபடி அதனைப் பெற்றுக் கொண்ட ஸாங்கா வெறுமையாகவே என்னைப் பார்த்தபடி சென்று விட்டார்.
மிஜோரம் அரசு மருத்துவ முகாம்களில் கடந்த எழுபது நாட்களாக நோய்த் தொற்று நீங்காமல் போராடிய ஸாங்காவின் நுரையீரல் செயலிழந்து விட்டதாகவும் அது தொடர்ந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாகி விட்டதாகவும் கிடைக்கப் பெற்ற செய்தியை அறிவிப்புப் பலகையில் கண்ட பொழுது அதில் சுனிஷ் ஷர்மா கையெழுத்திட்டிருந்தது ஏனோ மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது.
எனக்காக ஸாங்கா விட்டுச் சென்ற கதைகளின் முடிவுகளுக்காக மட்டுமே நான் காத்திருக்கவில்லை.
ஒரு கதை எப்படி வேண்டுமானாலும் முடியலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் நான் காத்திருக்கிறேன்
Comments
Post a Comment