மனு ஆலயம்.
மனு ஆலயம்.
"என் மனதை உனதென்று கற்பனை செய்து பார்"
-கன்ஃபூசியஸ்.
"இவனுங்க ஊரு பொம்பளைங்க முகத்தை விட எங்கூரு பொம்பளைங்களோட கால்கள் அழகா இருக்கும், சாலா!! "என்று முகநூலில் யாரோ கிளப்பிய வன்மத்திற்கு பதிலளிப்பதாய் உரத்தக் குரலெடுத்து சிரித்துக் கொண்டே கூறிய பொழுது கே.எல் என்று அவனால் செல்லமாக அழைக்கப் பட்ட கயல் எனும் கயல்விழி அங்குதான் அமர்ந்திருந்தாள்.
ஸாகர், முந்தைய இரவுதான் கயல் என்பதற்கு பொருள் என்னவென்று கேட்டுத் தெரிந்துக் கொண்டான். "கயல் என்றால் மீன், மச்லி இன் ஹிந்தி" என்றாள். ஓஹோ அப்படியா? மீன் என் விருப்ப உணவு என்று அவள் கண்களிலிருந்து உடல் உயிர் வரை பயணித்தவனிடமிருந்து இத்தகைய சொற்களை அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. நேற்றும் இன்றும் பேசியதில் எது அவனது மனதின் நிஜம் என்பது புரிய நெடுநேரமாகவில்லை கயலுக்கு. இயல்பிலேயே அறிவாளி அல்லவா, சட்டென விளங்கிக் கொண்டாள். நேற்று அவன் பேசியதில் தேவையின் நெடி இருந்தது தெரிந்திருந்தாலும் இன்று அவன் பேசியதிலிருந்து அதற்கு இன்னும் கூடுதல் அர்த்தம் இருக்கக் கூடுமோ என்று தோன்றியது. அவளது உடலை நிர்வாணப் படுத்தி அவளின் அந்தரங்கத்தை பார்த்து விட்ட வெற்றிக் களிப்பில் அவன் யாரிடமோ ரகசியமாக வெற்றிச் செய்தி கூற முற்பட்டானோ, "பாரடா, உன் இனத்தின் பெண் இப்பொழுது எனக்குக் கீழே படுத்திருக்கிறாள், நீ அன்று எம்பெண்களை தூற்றினாயல்லவா, இதோ இவள் இப்பொழுது என்னிடம் மண்டியிட்டிருக்கிறாள்" என்று மனதோடு எக்காளம் முழங்கியிருப்பானோ என்றெல்லாம் தோன்றிய கயல்விழிக்குத் தலைச் சுற்றி நின்றது. அவளது மாநிறக் கன்னங்களை கைகளில் ஏந்திய ஸாகர்,
"கே.எல், நான் பேசியது உன்னைக் குறித்து அல்ல மேரி ஜானே மன், அது யார் மீதோ தேக்கி வைத்திருந்தக் கோபத்தில் அப்படி பேசிவிட்டேன், இந்தக் கண்களுக்குள் என்னைக் கொன்று புதைத்துவிடு கே.எல் ஆனா என்கூட பேசாம இருந்துராத" என்று பாலிவுட் கதாநாயகன் போல் கெஞ்சினான். அவ்வளவு நெருக்கமாகக் கிடைத்த அவனது முகத்தில் நெடு மூச்சிழுத்துத் திரட்டிய எச்சிலை உமிழ்ந்து விட துடித்தாள் கயல். யார் மீது கோபமிருந்தாலும், எந்த சித்தாந்தத்தின் மீது வெறுப்பிருந்தாலும் ஒரு ஆணுக்கு எதிர் தரப்பின் பெண்களைக் கொச்சைப் படுத்தி பேசும் பொழுதுதான் அவன் வெற்றி பெற்ற நிறைவு கிடைக்கிறது என்பது அவளுக்கு புரிந்த பொழுது அவள் ஸாகர் எனும் அற்புதமான கவிஞன் மேல் கொண்ட மயக்கத்திலிருந்து பொறுமையாக தெளிந்துக் கொண்டிருந்தாள்.
நாட்டின் வடக்குக் கோடியில் அமைந்திருந்த புகழ்பெற்ற கலை இலக்கியக் கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு பயின்று கொண்டிருந்தனர் அனைவரும். கயல்விழி அவள் வகுப்பில் மட்டுமல்ல கல்லூரி முழுமைக்குமே பரிச்சயம், படிப்பிலும் கலை சார்ந்த விஷயங்களிலும். ஸாகர் ஆண்களில் கயல்விழி என்று கொள்ளலாம். அந்தக் கல்லூரியில் இடம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பது உலகறிந்த விஷயம். கயல்விழிக்கு அங்குதான் தனது முதுகலைப் படிப்பைத் தொடர வேண்டுமென்ற திண்ணமான முடிவில் இரண்டு வருடங்கள் காத்திருந்து அக்கல்லூரியில் சேர்ந்தாள்.
ஸாகர், தேவதை குலத்தோன்றல் போலிருந்தான். சிறுவயதிலிருந்து தனக்குக் கற்பிக்கப் பட்ட அனைத்து தேவ உருவங்களும் கூர் நாசியுடன், மென் சிரிப்புடன் அவனுக்கு அழகாய் பொருந்தின. இதிகாச கதாநாயகன் போன்ற தோற்றம். யாரையும் ஆணித்தரமாக மறுத்து பேசும் அறிவு. அவனுக்கென்று கல்லூரியில் ரசிகர் குழுவே இருந்தது. அவனைவிட ஓராண்டு ஜூனியர் கயல். ஏதோவொரு கருத்தரங்கில் அவனை நாலே வரிகளில் முடக்கி அமர வைத்த கயல்விழியை அவன் மனதார நேசிப்பதாகக் கூறினான். அதை அவளிடம் வெளிப்படுத்தவும் தயங்கவில்லை. தயங்க வேண்டிய தேவையும் அவனுக்கு இருக்கவில்லை. கயல்விழி முதல் பார்வையிலேயே அவனையும், மேற்கொண்டு சில தினங்களில் அவனது கவிதைகளையும் நேசிக்கத் துவங்கியிருந்தாள். "கயல் ஒரு உதவி செய்வியா? என்று கெஞ்சலாய் கொஞ்சினான்.
"ம்ம்ம் சொல்லு" என்றாள்
"நாளைக்கு மித்தாலஜி வகுப்புல நான் பேசும்போது என்னைய எதிர்த்து பேசாத ப்ளீஸ், தனியா நாம நெறைய பேசிக்கலாம் ,ஆர்க்யூ பண்ணலாம் ஆனா கிளாஸ்ல வேணாம், ப்ளீஸ்" என்றான்.
கயல்விழி கலைந்திருந்த தன் கூந்தலையும் உடையையும் சரி செய்தவாறு புன்னகைத்துக் கொண்டே , ஏன்? என்று மட்டும் கேட்டாள்.
அதற்கு மேல் அவளை அவன் பேச விடவில்லை. அவளும் அவனும் அப்படித்தான். ஸாகர் என்பவன் தமிழ் பொருளில் அவளின் கடலாகிப் போனான். அவனது கவிதைகள் போல் அவனும்.
கயல்விழி நிஜம் அறிந்தவள் ஆனால் இலக்கியக் கற்பனைகளை ஆராதிப்பவள். மொழியும் அதன் வெவ்வேறு பரிமாணங்களும் அவளது ஆர்வத் தேடல்கள். ஸாகர் அதன் உருவம்.
அவனும் கயல்விழியும் அமர்ந்து உரையாட ஏதுவாகக் குடை விரித்த குல்மோஹர் மரம் அவர்கள் புண்ணியத்தில் ஒரு நூறு மலர்களை கூடுதலாக பிரசவித்தது.
இத்தனை அழகியலும் கற்பனைகளும் இவ்வளவு சீக்கிரத்தில், அதுவும் சற்றும் எதிர்பாராததொரு தருணத்தில், இருவருமே பல சத்தியங்களால் ஒருவரையொருவர் நிரப்பி விட்டப் பிறகு ஸாகர் அப்படி பேசியது, இதயம் நோக்கி பின்னியிருந்த இரத்த நாளத்தை வெடுக்கென்று அறுத்து விட்டது போலிருந்தது அவளுக்கு. இன்னும் சில தினங்களில் மணாலி மற்றும் அதன் சுற்றுப்புற மலைப் பகுதிகளில் கூடாரமிட்டு இதிகாசங்களின் நுண்மைகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டதை ஸாகர், கயல் இருவராலும் ஏற்க முடியவில்லை. இருந்தாலும் மனதின் ஒரு மூலையில் ஸாகர் நம்பிக் கொண்டிருந்தான். அவனுக்குக் கயலின் மனம் தெரியும் என்பதால். அவள் அவனுக்காக ஏற்படுத்திக் கொடுத்த அனுபவங்கள் அவ்வாறானவை.
ஒரு குறிப்பு:
"ஏன் எப்பப் பாரு ஊதா கலர் எடுக்குற? ஃபேர் ஸ்கின்னுக்குதான் அது எடுப்பா இருக்கும், நீ உனக்கேத்த கலர்ல ட்ரஸ் பண்ணு கயல் என்று அம்மா எப்பொழுதோ கூறியது மனதில் ஆழப் பதிந்திருந்தது கயல்விழிக்கு." ஆனா எனக்கு வயலட் கலர் புடிக்குமே", என்றாள். "உனக்கு புடிக்கும், பாக்குறவங்களுக்கு புடிக்கணுமே" என்று அம்மா செல்லமாக கன்னத்தைத் தட்டினாள். பாக்குறவங்களுக்கு புடிக்கணும். பாக்குறவங்களுக்கு புடிக்கணும். பாக்குறவங்களுக்கு புடிக்கணும். கயல் மனதோடு இன்னும் சில முறைகள் கூறிக் கொண்டாள்.
-2-
எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் ஸாகர் அவளை நெருங்காமல் இருந்தான். பிரிவுக் கவிதைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பினான். கயல்விழி வேறு யாரோவாக மாறிவிட்டது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை .அவனறிந்த பெண்கள் யாவரும் எளிதில் மன்னிப்பதும் மறந்து விடுவதுமான தெய்வங்கள். கயலால் அவனை முழுவதுமாக ஒதுக்கி விட முடியவில்லை. நிஜம் அப்படித்தான், எளிதில் முடிவுகளை சாதித்து விட முடியாது. அதன் பிறகும் சில பொழுதுகள் அவர்கள் சந்தித்த பொழுதும் காமம் கரையேறியது. காதல் அரங்கேறவில்லை. கயலின் விழிகள் நிச்சலனம் தரித்திருந்தன. கயல்விழி ஊதா நிறத்தில் உடைகள் அணிவதை வழக்கமாக்கினாள். முக்கியமாக ஸாகரை சந்திக்கும் பொழுதெல்லாம்.
இதிகாசங்கள் குறித்து ஆய்வு செய்ய மணாலி சென்றிருந்த பொழுதுதான் ஸாகருக்கு கயல்விழியின் காணவியலாத, காணக்கூடாத முகம் ஒன்று புலப்பட்டது. மற்றவர்கள் கண்களில் விளங்காத விஷயங்கள் அனைத்தையும் முகர்ந்து சேகரித்து விடுவாள் அவள் என்று ஸாகருக்கு நன்குத் தெரியும். இயல்பானதொரு பெண்ணாய் அவள் என்றுமே அவனுக்குத் தெரிந்ததில்லை. "வேணாம், ஸாகர், என்னைய நேசிக்கணும்னா நீ என்னுடைய அடர்ந்த கருமையையும் நேசிக்க வேண்டியிருக்கும், கருமைக்கு ஆழம் அதிகம், வலி அதிகம், மர்மங்கள் அதிகம், புதைந்து அழிந்து விடாதே, நீயே நினைத்தாலும் மீண்டெழ இயலா வண்ணம் நான் உன்னை என்னுள் இழுத்து மூழ்கடித்து விடுவேன்" என்ற அவளது வார்த்தைகள் ஸாகருக்கு புரியவேயில்லை என்பது சில தினங்களாக அவளுக்கு புரியத் துவங்கியிருந்தது. ஸாகர் வேறொன்றை நினைத்திருந்தான். அனைவரும் சோம்பித் திரிந்த வேளைகளில் கயல் மட்டும் பயணித்துக் கொண்டும், குறிப்புகள் எடுத்துக் கொண்டும், புகைப் படங்கள் எடுத்துக் கொண்டும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தாள். அவளைத் தவிர்த்து அவளுக்கு எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனாலேயே அவள் மற்றப் பெண்களால் பெரிதும் தவிர்க்கப் பட்டாள். ஜூலை மாத மழையில் குல்லு மணாலியின் ஆப்பிள் தோட்டங்களிலிருந்து கிளம்பிய மதுர வாசம் வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் இனம்புரியாததொரு போதை நிலைக்கு ஆட்படுத்தியிருந்தது. அன்றிரவு அனைவரும் கூடிக் களித்திருந்த பொழுது கயல்விழியை மட்டும் காணவில்லை. அவளைத் தேடிக் கொண்டு வந்த ஸாகர் வெகு தொலைவு நடந்து வந்திருப்பதை சாலையோரத்தில் பாதி புதைந்திருந்த மைல் கல் சுட்டிக் காட்டியது. அங்கு அமைந்திருந்த ஒரு பழமையான பாழடைந்த குகைக் கோவிலின் வாசலில் காட்டு முயல்களுடன் விளையாடிக் கொண்டே காஞ்சா நிறைத்துத் தரப்பட்ட நாட்டுச் சுருட்டொன்றைப் புகைத்துக் கொண்டிருந்தாள் கயல்விழி. அவளருகே ஒரு கிழவி அமர்ந்து உள்ளங்கையில் காஞ்சாவைக் கசக்கி கயலின் பைப்பரில் நிரப்பிக் கொண்டிருந்தாள். கயலும் அவளும் பலகால நண்பர்கள் போல் மண் தரையில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர். இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்று குழம்பிப் போகும் வகையில் விசித்திர சாயல் ஒன்று அவர்களிருவருமிடையே இருந்தது. கயல் அக்கிழவியின் சால்வையை உரிமையோடு வாங்கி தன்னைச் சுற்றி போர்த்திக் கொண்டாள். பழுப்பு ஊதா நிறத்தில் காட்டு முயலின் ரோமங்கள் கொண்டு பின்னப் பட்டிருந்த சால்வை அது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப் படுபவை அவை. அதனால் தரமும் வேலைப்பாடும் சிறப்பாக இருந்தது.
"இந்த சால்வை அழகாயிருக்கே, அதனாலதான் நீங்களே வெச்சுக்கிட்டீங்களா?"என்று கயல் அந்த முதியவளிடத்தில் கேட்டாள்.
கசக்கிய காஞ்சாத் துகள்களைத் தன் கீழுதட்டை இழுத்து அதக்கிக் கொண்டே கிழவி பேசினாள்," இது பாக்குறதுக்கு அழகாயிருக்கு ஆனா இதுல நெறைய குறையிருக்கு, இழைகள் விட்டுப் போயிருக்கு, சாயம் ஒரே அளவுல இல்ல, ஒரு எடத்துல அதிகமாவும் ஒரு எடத்துல மங்கலாகவும் இருக்கு, பின்னியதுல நேர்த்தி இல்ல பாரு என்று சால்வையை அங்குலம் அங்குலமாக விரித்துக் காண்பித்து விவரித்துக் கொண்டிருந்தாள் அந்த முதியவள். அவள் கூறும் அனைத்தும் ஸாகர் என்பவனையே சுட்டுவது போலிருந்தது. அதுவரை அவள் தேக்கி வைத்திருந்த அத்தனை வலியையும் அந்த முதியவளிடத்தில் கண்ணீராய் பொழிந்தாள். அந்த முதுபறவை கயலை தன் மடியில் கிடத்தி அவளது மேலாடையை விலக்கி அவளது கருத்த முலைகளை வருடியபடி ஆறுதல் கூறியது. கயல்விழி மயக்கத்தின் பிடியில் 'ஸாகர்' என்று அலறினாள். சரியாக சிறிது நேரத்திலெல்லாம் அவன் அங்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்ட நொடியில் கிழிவி கயல்விழியைத் தாக்குதலுக்கு தயார் செய்பவள் போள் முதுகில் தட்டிக் கொடுத்தாள். கயலுக்குள் நூற்றாண்டுகளாய் தேக்கி வைத்திருந்த வன்மம் தலை விரித்து புன்னகைத்தது. "கே.எல், இது நீயா? என்ன பண்ற இங்க? காஞ்சாவா? என்றான். "
ஆமாம்" என்று தலையசைத்தவளின் இயல்பில் நிலையில்லை. அவள் கண்கள் சொருகியிருந்தன. "சரி வா, போலாம்" என்றவனைத் வலிமையாகத் தள்ளிவிட்டவள், "நீ போ, எனக்கு இங்க வேலையிருக்கு" என்றாள். அவ்விடத்தில் ஏதோ அமானுஷ்யம் சூழ்ந்திருப்பது போல் உணர்ந்த ஸாகர் அவளை வலுக்கட்டாயமாக இழுக்க முயன்றான். தூரத்தில் வருகையில் தென்பட்ட கிழவி இப்பொழுது அங்கு காணவில்லை. "அடங்.. சொல்றேன்ல , போடா எனக்கு வரத் தெரியும்"என்று கொச்சையான மொழியில் அவனை கடிந்து கொண்டாள். ஸாகர் அவளை விட்டு விலக முடியாதவனாய், அதே நேரத்தில் இந்த மூர்க்கத்திற்கு பழகாதவனாய் குழம்பி நின்றான். இருள் அவ்வனத்தை போர்த்தியிருந்தது.
வா கயல், மன்னிச்சிரு என்னைய என்றான். கயல்விழி அவனை ஒரு நொடி ஆர்வமாகப் பார்த்தாள். பிறகு அவன் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு அந்த குகைக் கோவிலுக்குள் சென்றாள். குளிர், மைனஸ் நான்கு டிகிரி என்று கடிகாரத்தில் மின்னியது. அவ்வளவுக் குளிரிலும் அந்தக் குகைக்குள் இனம்புரியாததொரு வெப்பம் பரவியது. கயல்விழி தான் அணிந்திருந்த ஊதா நிற சால்வையை அகற்றினாள். ஸாகர் பல நாட்களுக்குப் பிறகுக் கிடைத்த அவளது நெருக்கத்தின் பொருள் புரியாமல் விழித்தான்.அவளது முழுமையைக் காணத் திராணியில்லாதவனாய் அவ்விடம் விட்டு செல்லத் தயாரானான். ஆனால் அதற்கெல்லாம் அவகாசம் தராமல் கயல்விழி அவனை நிறைத்து விட்டிருந்தாள். மலைக்காடுகளிலிருந்து கிளம்பி வந்த யட்சியைப் போல் அவனுக்கு அவள் தெரிந்தாள்.
"ஸாகர் இது என்ன கோவில் தெரியுமா?"
"ம்ம்ஹூம்" என்று மட்டுமே அவனால் கூற முடிந்தது. அவளது கருமையும் இருளும் ஒன்றில் ஒன்று கலந்துவிட்டது போல், அவளது நாசியிடுக்கில் மின்னிய வைர மூக்குத்தியின் வெளிச்சத்தில் அந்த குகையில் ஒளிக்கீற்றொன்று பரவியது. அதில் ஸாகருக்கு கயல்விழி விரகம் பூண்டிருக்கவில்லை என்பது தெரிந்தது. அவள் பிடியிலிருந்து விலகியெழ முயன்றவனை தரையோடுக் கிடத்தி மீண்டும் கேட்டாள், "இது என்ன இடம் தெரியுமா? "
தெரியல கயல், நீ பயமுறுத்துற என்னைய வா இங்கருந்து போய்ரலாம்"
கயல்விழி அவன் மேல் படர்ந்தவாறு கூறினாள்,
"இதுதான் மனுதர்ம சாஸ்திரத்தை எழுதுன மனுவினுடைய குகையாம், 'மனு ஆலயா' என்ற பெயர்தான் மருவி மணாலி என்றானது.இங்கு அமர்ந்துதான் அவன் பெண்ணைக் குறித்த விதிகளை எழுதினானாம். பெண் சபையில் பேசும் அருகதையற்றவள், பெண்ணின் முலையளவை வைத்து அவர்களின் கற்பு நெறியை கணித்தான், கருமை நிறம் கொண்ட பெண்கள் தாசிகள் என்றான். உனக்கு அவன் எழுதியது தெரியும்தானே, தெரிந்ததால்தானே அன்று என் முகத்தை உன் வீட்டுப் பெண்ணின் கால்களை விட கீழானவை என்று சூளுரைத்தாய்?என்றாள்.
ஸாகர் களைத்துப் போயிருந்தான். குகையின் முனைகளில் இவளை மோதி கொன்று விட்டால்தான் என்ன என்று அவனுக்குத் தோன்றாமலில்லை, அது கயலுக்கு புரியாமலுமில்லை. ஆனாலும் அவன் சரிந்திருந்தான் அவள் அவனை சாய்த்திருந்தாள். விடியலின் முதல் கிரணங்கள் குகைக்குள் பாய்ந்த நேரத்தில் இருவரும் சதைப் பிண்டங்களாக குகையின் ஓரங்களில் கிடந்தனர். வெளிச்சத்தில் பார்த்த பொழுதுதான் கயலுக்கு 'மனு'
அமர்ந்து எழுதிய இடம் ஒரு பள்ளத்தில் இருப்பது தெரிந்தது. காவி நிற அம்புக்குறியீடு அதனை உணர்த்திற்று. ஆவேசம் வந்தவள் போல் எழுந்தவள் குகைக்கு வெளியிலிருந்து மணல் மற்றும் முயல் சாணத்தின் காய்ந்த வில்லைகள் என்று அனைத்தையும் எடுத்து வந்து அந்தப் பள்ளத்தில் நிரப்பி மூடினாள்.யாரோ மூச்சடைத்து விம்மும் ஒலி கேட்பது போலிருந்தது அவளுக்கு. அவ்வொலியில் அவள் ஆசுவாசமடைந்தாள். வேகவேகமாக உடைகளை அணிந்து கொண்டவளுக்கு ஸாகரை எழுப்ப வேண்டுமென்று தோன்றவில்லை. குகையை விட்டு வெளியேறியவள், தான் அணிந்திருந்த ஊதா நிற சால்வையை அங்கு முயல்கள் விற்றுக் கொண்டிருந்த கிழவியிடம் அளித்து விட்டு நடந்தாள். அந்த கிழவியின் கண்களில் ஒளிர்ந்த பரவசத்திற்கு மட்டும் புன்னகைத்தாள். வேறெதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
அன்று ஸாகர் அவ்வாறு கூறியிராவிட்டால், இந்நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை புனைவு என்று நிச்சயம் நான் நம்பிருப்பேன். ஆனால் அவன் கூறியது நிஜம் என்பதால், மேற்கூறிய அனைத்தும் நிஜம்.
Comments
Post a Comment