தாயுமானவன்


நான் பெயர்களை கவனிக்கத் துவங்கியது ஒரு சுவாரசியமான அனுபவம். இப்பொழுது கூட ஒரு கதை வாசித்தேன். அதில் வரும்  ஒரு குரங்கு, தான் விரும்பும் மனிதப் பெண்களின் பெயர்களின் ஒரு பகுதியைத் திருடி வைத்துக் கொள்ளுமாம். அதாவது அந்தப் பெயரின் ஆன்மாவை திருடிக் கொள்ளுமாம். அப்படிச் செய்வதால் அந்தப் பெண்களிடம் தனக்கு ஏற்பட்ட அதீத ஈர்ப்பு சற்று ஆசுவாசமடைவதாகத் தோன்றுமாம். மனிதப் பெண்கள் மேல் குரங்குகள் இச்சைக் கொள்வது அவ்வளவு மோசமான விஷயம் இல்லையென்றாலும் சமீப காலமாக அவ்வாறான ஒரு எண்ணம் மனிதக் கூட்டத்தின் மனதில் எழுந்துள்ளதால் தன் உணர்ச்சிகளுக்கு வேலியிட்டுக் கொள்ளும் விதமாக அந்தக் குரங்கு பெயர்களின் ஆன்மாவை மட்டும் கவர்ந்து கொள்ளுமாம். 

இந்தக் கதை என்னை வந்தடைந்தது. நான் தேடாத பொழுது என்னை வந்தடைந்தது. ஆனால் பெயர்கள் குறித்து சில நாட்களாக என் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். அதாவது மிகச் சாதாரண பெயர்கள் அதை ஏந்தி நிற்கும் அற்புதமான மனிதர்கள் ஒரு புறம், புனிதத்துவமான பெயர்கள் அதற்கு சற்றும் நியாயம் செய்யாத மனிதர்கள் மறுபுறம் என பெயர்களைக் கண்டவுடன் அதன் முகங்கள் மனதிலும்  பெயர்கள் செவியிலும் அறைந்து மோதுவது போல் ஒரு நிலை. காட்சி, ஒலி, பிம்பம், நிஜம் என அடுத்தடுத்து காட்சி, ஒலி, பிம்பம், நிஜம். இதே வரிசையில் காட்சி, ஒலி, பிம்பம்,நிஜம். 

இது தவறான கண்ணோட்டம் போல் தோன்றினாலும் என் வாழ்க்கையில் இந்தப் பெயர்,  உங்கள் வாழ்க்கையில் அது வேறொரு பெயராக இருக்கலாம்,இவ்வளவு ஏன் அது என்னுடைய பெயராகவும் இருக்கலாம். அப்பொழுது உங்களுக்கும் இதே போல் காட்சி, ஒலி, பிம்பம், நிஜம் எனும் வரிசையில், மனமானது தளர்ந்த வீணைத் தந்தியை மீட்டுவது போல் அவலமானதொரு தொனியில் அப்பெயரை உச்சரிக்கும். 


“நீ கருவுற்றிருக்கும்போது

    உனது வேதனையை அதிகப்படுத்துவேன்.

அதுபோல் நீ பிரசவிக்கும்போதும்

    அதிக வேதனைப்படுவாய்."

              

கனவில் கேட்ட அசரீரிக்கு திடுக்கிட்டு எழுந்த பொழுது இரயில் தாம்பரம் ஸ்டேஷன் வந்தடைந்திருந்தது. அதற்குமேல் செல்ல வேண்டிய தேவையில்லாததால் ஓரிரு முறை நீண்டு சுவாசித்து விட்டு தன் பயணத்தை முடித்துக் கொண்டது போல் இரயில் வண்டி சம்மணமிட்டு அமர்ந்து கொண்டது. அதுவரை உறங்கிக் கிடந்த என்னை ஒருவரும் தட்டி எழுப்பி விசாரிக்காதது புதிதல்ல எனக்கு. வாழ்க்கையிலுமே அப்படித்தானே, யார் நிலையை யார் தடுத்து வினவப் போகிறார்கள். நான் இறங்க வேண்டிய இடத்தைக் கடந்து வெகு தொலைவு வந்து விட்டேன் என்று நானும் யாரிடமும் முறையிட வேண்டியதில்லை என்ற சலுகை எனக்கு எப்பொழுதும் இருந்திருக்கிறது. அச்சலுகையை இம்மாதிரியான இடைவெளி நித்திரைகளின் போது நான் பிரயோகித்துக் கொள்வதுண்டு. 

இனி வரும் காலங்களில் இச்சலுகை எவ்வளவு பயன்படும் என்றும் தெளிவாகக் கூற முடியாது. என் முலைகளை நிரந்தரமாக பற்றியபடி ஒரு உயிர்ப் பிண்டம் என்னோடு இணைந்திருக்கிறது. சில நாட்கள் முன்னர் தான் அது நஞ்சுக் கொடி மாலையணிந்து கொண்டு என் சதையைக் கிழித்து வெளியே வந்தது. அப்பொழுதும் நான் அழவில்லை. அது என்னை முந்திக் கொண்டது. இனியும் அதுவே முந்திக் கொள்ளும். நான் பொறுத்திருக்கத்தான் வேண்டும். 

ஒரு சமயத்தில் அவன் முந்திக் கொண்டதால் நான் சூல் கொண்டேன். அதன்பின் எப்பொழுதுக்குமாக அவனது விதை முந்திக் கொண்டு விட்டது. 

நடைமேடையின் மறுபுறம், வந்த வழியே திரும்பிச் செல்வதற்கான இரயில் ஆயத்தமாகி நின்றிருந்தது. அதில் ஏறிவிட்டால் கடந்து வந்தத் தூரத்தை மீண்டும் கடக்கலாம். அர்த்தமில்லாத தூரம்தான் என்றாலும் என் உறக்கம் அதற்கு நியாயம் செய்து விட்டிருந்தது. கைகளுக்கும் தனங்களுக்குமிடையே முட்டி மோதிக் கொண்டிருந்த உயிரின் பசியை என்னுடல் தானாகவே ஆற்றிக் கொண்டிருந்தது. முன்பொருமுறை அவனும் அப்படித்தான் தவித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது முனைப்புடன் நான் செய்ததை இப்பொழுது என்னுடல் முனைப்பில்லாமல் செய்கிறது. எல்லாம் பழக்கத்தின் விளைவு. பழகிக்கொண்டதன் விளைவு. 

  ஒரு வழியாக மீண்டும் பயணம் துவங்கியது. உடல் முழுதும் வியர்வையால் நனைந்திருந்தும் ஆடைகளை விலக்கிக் கொள்ளும் சலுகை மட்டும் மனித பாலூட்டிகளுக்குக் கிடைப்பதேயில்லை. எனக்குப் புரிந்த உண்மை, தனங்களைப் பற்றியிருந்த ஜீவனுக்குப் புரியவில்லை போலும். பருகும் திரவத்தில் உவர்ப்புக் கலந்ததும் முன்பை விட தீவிரமாக என் முலைகளைப் பற்றிக் கொண்டது. வலி மிகுந்த பொழுதும் என்னை விட்டகலாத அந்தப் பிணைப்பு ஆறுதலாகவே இருந்தது. பொதுவாக மனிதர்கள் அப்படிச் செய்வதில்லையல்லவா. நானும் அப்பிண்டமும் ஒரே அலைவரிசையில் போராடிக் கொண்டிருந்தோம். அதனுடல் இயக்கத்தில் ஏதோ பாதிப்பு என்று கடந்த சில நாட்களாக எனக்கு அது புரிய வைக்க முயன்று கொண்டிருக்கிறது. நேற்றிரவு அதன் முனகலில் வலி கூடியிருந்தது பாதிப்பை உறுதி செய்தது. உடலின் எந்த  உறுப்பு அதை வருத்துகிறது என்று கண்டறியவே தாயுமானவனைச் சந்தித்து வரலாமென புறப்பட்டேன். 

அப்பொழுது நான் அவனை தாயுமானவன் என்று அழைக்கத் துணியவில்லை. தொலைபேசி உரையாடலிலும்  "தாயுமானவர் அப்பாயிண்ட்மென்ட் வேணும்" என்றுதான் கூறியதாக ஞாபகம்.

எதிர்முனையில் ஒரு இறுக்கமான குரல் " அவர் வருவதற்கு எட்டு மணிக்கு மேல ஆகும் ஆனா நீங்க அஞ்சு மணிக்கெல்லாம் வந்து டோக்கன் போடணும் அப்பதான் பாக்க முடியும், இல்லன்னா நாளைக்குதான்" என்றது. 

"இல்லங்க கொஞ்சம் சீரியஸ் மாதிரி தெரியுது, ஓயாம அழறான், எதாவது செய்ய முடியுமா?"

"இதையேத்தான் எல்லாரும் சொல்றாங்க, நீங்க அஞ்சு மணிக்கு வாங்க" என்று மறுமுனையில் அழைப்புத் துண்டிக்கப் பட்டது. 

யாரையும் நொந்து கொள்வதில் எந்த பயனுமில்லை. என்னைப்  போன்ற வீம்புக்காரிகளுக்கு அதற்கெல்லாம் உரிமையில்லை என்பது மட்டும் அப்பொழுதே புரிந்திருந்தது. காத்திருக்கவும், பொறுமையாக பேசவும் முதன் முதலாகப் பழகினேன். 

அந்த காத்திருப்பும் பொறுமையும் எனக்காக அல்லாமல் இன்னொரு உயிருக்காக என்ற புரிதல் என் பொறுமைக்கு அர்த்தமூட்டுவது போலிருந்தது. 

இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு வந்த நிறுத்தத்தில் அவள் நான் அமர்ந்திருந்த பெட்டிக்குள் நுழைந்தாள். இரயில் கிளம்பி வேகமெடுத்த சில நொடிகளுக்குப் பின்னர் காற்றைப் போல் இலகுவான தோரணையில் அவள் வந்தாள். அவளும் ஒரு பாலூட்டி என்பதையறிந்ததும் அவளைத் தொடர்ந்தது எனது கவனம். அவள் பாடத் துவங்கினாள்,

   "நான் பாவிதான்

    ஆனாலும் நீர்

    மாசற்ற இரத்தம் சிந்தினீர்

    வா என்று என்னை 

                 அழைத்தீர்

    என் மீட்பரே வந்தேன்

                            வந்தேன்"

அப்பாடலின் சோகத்தை எள்ளி நகையாடுவது போலிருந்தது அவளது செய்கையனைத்தும். அவளது முலைகளை விளையாட்டுப் பொருளை செல்லப் பிராணி கையாளுவது போல் அவள் ஈன்ற பிண்டம் தீண்டி விளையாடிக் கொண்டிருந்தது. எதைக் குறித்த சந்தேகமோ பயமோ அவளிடம் இருக்கவில்லை. அவள் பாடிய வரிகளை அவள் துளியும் நம்பவில்லை என்பதை பாடலின் இடையே வெளிப்பட்ட கொட்டாவி ஒலி உறுதிப் படுத்தியது. அவள் கைகளிருந்த அலுமினியத் தட்டில் விழுந்த சில்லறைக் காசுகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தது அந்த சிற்றுயிர். பணத்தின் சுவைக்கு அவன் தன்னை பழக்கத் துவங்கியது போலிருந்தது. அவளது பாடலுக்காகவோ அல்லது அந்த உடலுக்காகவோ என்று நிச்சயித்துக் கொள்ள இயலாதவாறு அவளது பிச்சைப் பாத்திரம் சில்லறைகளால் நிரம்பியது. ஆனால் எது குறித்தும் அவள் சிலாகித்துக் கொள்வதாய் தோன்றவில்லை. என் கையிடுக்கில் தொங்கிக் கொண்டிருந்த உயிரை ஒரு முறை பார்த்தேன். அழுகை,  கேவலாக இருந்தது இப்பொழுது  முனகலாக மாறியிருந்தது. ஆனாலும் ஓய்ந்த பாடில்லை. சுற்றுமுற்றும் கவனித்துக் கொண்டே இருந்தேன். என் தனங்கள் குறித்த கவனம் அது. எந்நிலையிலும் காட்சிப் பொருளாகிவிடக் கூடாதென்னும் பிரயத்தனத்தில் அயர்ச்சியின் உச்சத்தில் கண்கள் கலங்கின. எவ்வளவு கவனமாக நான் இருக்க வேண்டும்  இவ்வுலகில் உயிர் பிழைத்திருக்க. 

என்னை வெகுநேரமாக கவனித்துக் கொண்டிருந்த ஒரு நபர்,

  " ஓ, ஸச் எ யங் மதர், சோ சேட்" என்றார்

ஏன்? ஏன்? என்னைப்பார்த்து என்ன பரிதாபம் அது? ஏன் வந்தது?

அவரது பார்வையை பார்வையால் சந்தித்தேன்.  அடுத்த நிறுத்தத்தில் அவர் இறங்கி விட்ட பின்னும் அவரது வார்த்தைகள்  என் மனதிலிருந்து இறங்கவில்லை. எதனால் அந்த மனிதர் என்னைப் பார்த்து பரிதாபப்பட வேண்டும். இந்தக் குழந்தையை இவளை நம்பி இறைவன் படைத்து விட்டானே என்ற பரிதாபமா அல்லது இந்தக் குழந்தையின் கேவலை நிறுத்தும் திராணி இவளுக்கு இல்லையே என்ற ஏளனமா, எது அவரை அவ்வாறு சொல்லத் தூண்டியிருக்கும். உதடுகள் உலர்ந்தப் பிறகும் என் உடலைப் பற்றிப் பிடித்திருந்த ஜீவன் உலகிற்கு என் பயத்தையும் பலவீனத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுவது போலிருந்தது. தலை சுற்றி வருவதையும் பொருட் படுத்தாது எழுந்தேன். அவள் இரயில் பெட்டியின் நுழைவாயிலருகே அமர்ந்திருந்தாள். கால்கள் நீட்டி,உடல் தளர்த்தி சாய்ந்திருந்தாள். அவள் மடியிலிருந்து இறங்கி தவழ்ந்து கொண்டிருந்தது அந்தக் குழந்தை. சில்லறை காசுகளை நக்கிவிட்டு மீண்டும் தட்டில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தது. அவளோ வானத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். நான் அவளருகே சென்று அமர்ந்து கொண்டேன். அவளிடமிருந்த ஏதோ ஒன்றை நான் பெற வேண்டி அவளருகே சென்றேன். இருவரும் பேசிக் கொள்ளவோ பார்த்துக் கொள்ளவோ இல்லை. ஆனாலும் அந்த அருகாமையில் ஒரு பிணைப்பிருப்பதை இருவராலுமே உணர முடிந்தது. அவள் தனது சக்தியை என்னுள் பாய்ச்சுவது போலிருந்தது. மனம் சற்று நேரம் எண்ணங்களால் அலைக்கழிக்கப்படாதிருப்பதை உணர்ந்தேன். சித்தம் தெளிந்தது. அச்சம் விலகியது. தாயுமானவ(னை)ரை சந்தித்து விட்டால் போதும் என் சிசுவை பிழைக்க வைத்து விடலாம். நாட்டின் தலை சிறந்த நியோநேட்டாலஜிஸ்ட் அவர். அவர் எனக்கு வழிகாட்டுவார். இன்னும் சிறிது நேரத்தில் என் மகவின் கேவல் நின்று விடும். என் தனங்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும். அவற்றின் காயங்கள் ஆறும்.  நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் மனதில் பாய்ந்தன. நான் இறங்கும் இடம் வந்தது. மறவாமல் அவளது பிச்சைப் பாத்திரத்தில் சில ரூபாய் நோட்டுகளை வைத்து விட்டு எழுந்தேன். அந்தக் குழந்தை ஆவலுடன் ரூபாய் நோட்டுகளை சுவைக்கத் துவங்கியது. 


"டாக்டர் வந்துருவாரா?"

"ம்ம்ம்"என்ற இறுக்கமான குரலின் முகத்தைக் கண்டேன். இறுக்கத்திற்கு நேர்மாறான மென்மை அந்த முகத்தில் தவழ்ந்தது. மீண்டும் துரோகம். 

ஒரு மணிநேர காத்திருப்பிற்குப்பின் என் முறை வந்ததாக கூறினார் அந்தப் பெண்.

மீண்டும் அவர் 

" இங்கப் பாருங்க, குழந்தையோட ட்ரெஸ் கழட்டிட்டு உள்ள போங்க, செருப்ப வெளிய கழட்டுங்க, சார் கிட்ட தேவையில்லாம பேசாதீங்க, சார் கையில குழந்தைய குடுக்கக் கூடாது, பக்கத்துல இருக்குற பெட் ல தான் போடணும், சார் கிட்ட ஃபீஸ் கொடுக்கக்கூடாது, இதுக்கு முன்னாடி பார்த்த டாக்டர் அவர் குடுத்த மாத்திரை இந்த டீடெயில் எதுவும் சொல்லத் தேவையில்ல, புரியுதா? ரெண்டு நிமிஷம்தான் உங்க கன்ஸல்ட்டேஷன் டைம், புரியுதுங்களா?" என்றார்.

"தாயே வேளாங்கண்ணி மாதா,என்னை தாயுமானவ(னை)ரை மட்டும் சந்திக்க விடு. நான் மூச்சு விடாமல் இருக்கத் தயார். என் பிள்ளையின் கேவல் நின்றால் போதும்" என்று மன்றாடிவிட்டு அறைக்குள் நுழைந்தேன். 

குளிரூட்டப் பட்ட அறையின் தாக்கம் சிறிதும் தோன்றா வண்ணம் என் உள்ளங்கைகள் வியர்த்தன. குரல்வளையிலிருந்து ஓசை எழும்பவில்லை. தாயுமானவ(னி)ரின் தோற்றமும் பார்வையும் அந்த இரயில் பயணியை நினைவுப் படுத்தியது.

"ஸச் எ யங் மதர்,சோ சேட்". 

ஒரு வழியாக முயன்று நாவில் எச்சில் உலர்ந்து போய், "சார், என்னன்னு தெரியல, அழுதுட்டே இருக்கான்" என்றேன்

சரேலென்று தலையை நிமிர்த்தி தாயுமானவ(ன்)ர் முறைத்ததில் என் கால்கள் நடுக்கம் கொண்டன. 

அவரிடம் பேசக்கூடாது, குழந்தைய பெட் ல போட்டுட்டு அமைதியா நிக்கணும் என்பது நினைவுக்கு வரவே அவ்வாறே செய்து விட்டு ஒதுங்கி நின்று கொண்டேன். ஏதோ செய்யக் கூடாத பாவச்செயல் புரிந்தவள் போல் நின்றிருந்தேன். கனவில் ஒலித்த அசரீரி மீண்டும் காதுகளில் ஒலித்தது. ஏவாள் பெற்ற சாபம். ஆதாமிற்கு பகுத்தறியும் திறனை அளித்து உதவியதால் ஏவாள் பெற்ற சாபம். தாயுமானவ(ன்) தான் சாபமளித்த தெய்வமோ.இப்படி எதையெதையோ நினைத்து சஞ்சலமடைந்துக் கொண்டிருக்கையில் ஒரு அலறல் என்னை மீட்டது. என்னை ஒட்டியிருந்த அந்தப் பிண்டம் அலறியது.கேவல் அலறலாய் மாறியது. 

"சார், என்ன பண்றீங்க? கொஞ்சம் பாத்து சார் பாவம்"

தாயுமானவன் மீண்டும் முறைத்தான்.

என்ன ரொம்பத் துடிக்குறீங்க?

ரொம்பத் துடிச்சீங்களோ பெத்துக்க? 

ரொம்பத் துடிச்சீங்களா?

என்று உதட்டோரம் ஏளனத்தை படரவிட்டபடி சிரித்தான்.

"ஆமா, ரொம்பத் துடிச்சேன், படுக்கும் போதும் துடிச்சேன்,

பெத்தெடுக்கும் போதும் துடிச்சேன்,இப்பவும் துடிக்குறேன். ஆமா துடிச்சேன் என்ன இப்போ?"

தாயுமானவன் அவ்வார்த்தைகளை எதிர்பார்த்திருக்கவில்லை போலும். ரிஸப்ஷனிஸ்ட் வந்து வேகமாக என்னை வெளியில் இழுத்து வந்தாள்.

"சார் கிட்ட தேவையில்லாம பேசக்கூடாதுன்னு சொன்னேன் ல, அவரோட ஒவ்வொரு நிமிஷமும் எவ்ளோ மதிப்புடையது தெரியுமா? நீங்க பேசிட்டு போய்ருவீங்க, அவர் என்னைய எப்படியெல்லாம் திட்டுவாரு தெரியுமா?"

"தெரியும்,அவன் எப்படியெல்லாம் பேசக்கூடியவன் சிரிக்கக் கூடியவன் என்று தெரியும்" என்றேன்

"குழந்தைக்கு முடியாமக் கெடக்கு, பேசாம அந்தாளு சொல்றத பல்ல கடிச்சுட்டு கேட்டுட்டு போவீங்களா அத விட்டுட்டு இப்படி கோவப்பட்டுட்டீங்களே?"

"அவன் பொழைக்க வெச்சுதான் இது பொழைக்கணும்னு இல்ல, நான் துடிச்சேன்ல அதுக்கே பொழச்சுக்கும்" என்று கூறிவிட்டு வெளியேறினேன்.

"இனி நீ பிழைதிருக்கப் போவது என் முடிவு" என்று அந்தப் பிஞ்சுக் காதுகளில் கூறிவிட்டு, ஆட்டோ ஸ்டேண்டில் நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் 

" இங்க நல்ல குழந்தைங்க டாக்டர் இருந்தா கூட்டிட்டுப் போங்க" என்றேன்

அவரும் எனக்காகக் காத்திருந்தது போல் "சரிக்கா வாங்க போவோம்" என்று கிளம்பினார். 


தாயுமானவன் என்ற பெயர்ப் பலகை கண்களிலிருந்து மறையும் வரை அதைப் பார்த்துக் கொண்டேன். அந்தப் பெயரின் புனிதம் முழுவதையும் உள்ளிழுத்து எச்சில் கூட்டி உமிழ்ந்தேன்.


 ட்ரெட்மில்லில் நடக்கும் பொழுது கால் தடுமாறி கீழே விழுந்து தாயுமானவன் மடிந்ததாக செய்தித்தாளில் வாசித்த பொழுது 

"உன்னைப் பிழைக்க வைக்க ஒருத்திக்கூட முடிவெடுக்கவில்லை போலும்" என்று நினைத்துக் கொண்டேன். 

தாய்மையின் நிறம் ஊதா

Comments

Popular posts from this blog

ஹருகி முராகாமி- யதார்த்தத்திற்கு வண்ணம் பூசும் எழுத்து.

Light and Thread

ஊமை அழுக்கு