சோஹ்ரா


     சோஹ்ரா மேட்டுநிலப் பகுதியின் மழை நாட்கள் குறித்து நானும் சக்ஸேனாவும் சில மாதங்களுக்கு முன்பே பேசியிருந்ததாக ஞாபகம்.  அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக நான் இரண்டு முறை சோஹ்ராவிற்கு செல்வேன் என்றும் அதற்கு சக்ஸேனாவின் ஐந்து நிமிட வருணனை காரணமாக அமையும் என்று அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது அப்படியல்ல. காலத்தின் அளவுகோல்களை மீறி வாழ்கிறேன் என்பதாலோ என்னவோ, வருங்காலத்தைக் குறித்த சமிக்ஞைகளை காலம் இன்றே வழங்குவதை கணித்து விட முடிகிறது. நாளை வருபவற்றை காலம் நேற்றே உணர்த்தி விட்டதைப் போன்றதொரு மனநிலையின் பயனாக இப்பொழுதெல்லாம் அதிக நேரம் நேற்றைய நிகழ்வுகளைத்  திரட்டியெடுத்து அவற்றில்  சப்தமான நினைவுகளை மட்டும் தனியே சேகரித்து வைத்துக் கொள்கிறேன். கைப்பையில் வைத்திருக்கும் சொல்லகராதிப் போல் அவற்றையும் என் விரல் நுனிகளில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறேன். நாளைக் குறித்த குறியீடுகள் அல்லவா, அதனால் சுட்டிக்காட்ட வேண்டிய கவனத்தோடு அவற்றை விரல்களோடு பொருத்தி வைத்திருக்கிறேன். 

    சக்ஸேனா மிகவும் வேடிக்கையாக பேசுவார். ஒரு விகடகவியின் தோரணைத் தெரியும் அவரிடம். சமயங்களில் நகைச்சுவையாகவே ஆழமான தத்துவங்களையும் பேசக் கூடியவர்.சக்ஸேனா ஒரு தேர்ந்த சமையற்கலை வல்லுநர். பகல் நேரம் முழுதும் அதிகாரிகளிடம் முதுகு வளைந்து குறிப்பெடுத்துக் கொள்ளும் வேலைதான் என்றாலும் அலுப்பின் யாதொரு சுவடும் அவர் உணவு சமைக்கும் பொழுது தெரிந்ததில்லை. ஒரு முறை எனக்கு வீட்டிலியே எஸ்ப்ரெஸ்ஸோ தரத்தில் காஃபி தயாரிக்கும் இரகசியம்  சொல்லிக் கொடுத்தார். அவர் அச்செயலினுள் மூழ்கித் திளைத்து காஃபி தயாரித்துக் கொடுத்த அந்த சில நிமிட நேரங்களில் சக்ஸேனா எனக்கு நண்பரானார். இதில் ரசனையான விஷயமும் எதுவென்றால் எனக்கு சமையல் கலையில் ஆர்வம் தோன்ற ஒரு ஆண் காரணம் என்பதுதான். இத்தனைக்கும் அவரது மனைவி வீட்டில்தான் இருந்தார்."பீம்லா, பீம்லா" என்று சக்ஸேனா அழைத்தபடியே இருப்பார். அவரும் தன் அறையில் இருந்தபடியே 'சொல்லுங்க, சொல்லுங்க' என்றபடியே இருப்பார். 

'அவங்கள ஏன் கூப்ட்டுட்டே இருக்கீங்க சக்ஸேனா?' என்றேன், 

"அதுவா, அது பழகிருச்சு" என்று வெள்ளந்தியாய் சிரிப்பார் சக்ஸேனா. அவர் என்னளவில் ஒரு பேரழகன். பணியிலிருந்து ஓய்வு பெற இரண்டு வருடமே இருந்த நிலையில் உடலில் இரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் ஏகத்திற்கும் உயர்ந்து விட்ட நிலையில் அவருக்குக் கட்டாய ஓய்வளிப்பதற்கான ஏற்பாடுகளில் நிர்வாகம் மும்முரமாய் இருந்தது. இடைப்பட்ட ஒரு மாத இடைவெளியில்தான் சக்ஸேனாவும் பீம்லாவும் என் அண்டை வீட்டில் குடி புகுந்தனர். பீம்லா தன்னை 'அக்கா' என்று மட்டுமே அழைக்க வேண்டுமென்று என்று துவக்கத்திலேயே கட்டளையிட்டு விட்டார். "அக்கா' என்பது உங்கள் வயதைக் குறைப்பதாக  இருந்தாலும் என் வயதை மிகவும் கூட்டிவிடுமே" என்றேன். அதைப்பற்றி அவர் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் சக்ஸேனாவும் அதையே கூறிய பொழுது என்னால் அவரை மீற முடியவில்லை. "அவ சந்தோஷப்படுவா" என்றார். 

  நானும் சக்ஸேனாவும் ரேஷன் கடைக் கூட்டாளிகள் எனலாம். அவர் எனக்காகவும் நான் அவருக்காகவும் செய்திருந்த அன்பின் உடன்படிக்கையில் முக்கியமான அம்சமானது, யார் முந்திச் சென்றாலும் மற்றொருவருக்கு இடம் பிடித்துக் காத்திருக்க வேண்டும் என்பதுதான். பெரும்பாலும் அவர்தான் எனக்காக இடம்பிடித்துக் காத்திருப்பார். வேலை முடிந்துத் திரும்புகையில் சக்ஸேனாவால் தொடர்ந்து வெகுநேரம் நடக்க முடியாது. உடல் வியர்த்து சோர்ந்து அமர்ந்து விடுவார். அங்கிருந்து என்னுடைய உடன்படிக்கைக் கொள்கை அமலுக்கு வந்து விடும். முதல் சுற்றில் அவருடைய பொருட்களையெல்லாம் வீட்டில் சேர்த்து விட்டு, இரண்டாம் சுற்றில் அவரையும் கைப்பிடித்து அழைத்து வர வேண்டும். வழியில் ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் சிறிது தெம்பு வரும் அவருக்கு. நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்றே கூற வேண்டும். பீம்லா அக்காவும் மகிழ்ச்சியாக இருந்தார். திரைப்படங்களில் வருவது போலல்லாமல் எந்தத் திருப்புமுனைகளுமின்றி நாங்கள் மூவரும் சில மாதங்கள் வரை எங்கள் பாதைகள் மாறும் வரை  இன்பமாகவே வாழந்தோம் என்றேக் கூறலாம்

    ஒரு முறை சக்ஸேனா பீம்லாவுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அந்நேரம் நானும் அவர்கள் அறைக்குள் சென்றேன். அப்பொழுது சக்ஸேனா தன் வாயிலிருந்து பாதி மென்ற ரொட்டியை எடுத்து பீம்லாவுக்கு ஊட்டியதைக் கண்டேன். அசூயை மிகுந்த தொனியில் 'அய்யோ' என்று முகம் சுளித்தேன். 'அவ சந்தோஷப் படுவா அதான் இப்படி செய்றேன்' என்றார். "இது அன்பின் முட்டாள்த் தனங்களில் சேரும் சக்ஸேனா"என்றேன். அவரும் ஆமோதிப்பது போல தலையாட்டினார். ஆனால் மீண்டும் அப்படியே செய்தார். தான் பாதி மென்று சவைத்த ரொட்டியை பீம்லாவுக்கு ஊட்டினார்." இதற்குப் பதிலாக உணவைக் கூழாக்கிக் கொடுத்து விடலாமே" என்றேன். "அது எனக்குத் தெரியாமலா நான் இப்படிச் செய்கிறேன்" என்பது போல் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். 

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சக்ஸேனாவும் பீம்லாவும் இரு  சக்கர வாகனத்தில் புறப்படும் நேரத்தில், வண்டியில் அமர்ந்த பீம்லா நிலைத் தடுமாறி சாலையின் மறுப்பகத்தில் விழுந்து விட பின்னால் வந்த மினி வேன் ஒன்றின் இரும்புத் தட்டு பீம்லாவின் முகத்தைக் கிழித்துச் சென்றுவிட, முகத்தில் மட்டுமே சிறிதும் பெரிதுமாக முப்பத்தி நான்கு தையல்களுடன் பீம்லா அதன்பின் சக்ஸேனாவின் காதலியாகி விட்டார்.  மனைவி காதலியானத் தருணங்களை சக்ஸேனா விவரிக்கும் ஒவ்வொரு வரியும் உலகக் காவியங்களில் இடம்பெறாத கவிதை வகையில் சேரும்.

   சக்ஸேனாவுடனான சில மாத கால நட்பு சில அரிதான உண்மைகளை எனக்கு வழங்கியதென்றே கூற வேண்டும். "மரணமும் வாழ்வும் இரண்டுமே மனிதனுக்கு அவன் ஒப்புதலில்லாமல் நிகழ்வதில்லை" என்றார். சக்ஸேனா உணவு சமைத்துக் கொண்டே இவ்வாறான தத்துவங்களை உதிர்ப்பார்.

 "உடலிலிருந்து மூச்சுப் பிரிவதை மட்டும் மரணமென்று கொள்வது அபத்தம். மனிதன் அதற்குமுன்னரே சில முறைகள் மரணித்து விடுவான். அதை அவனால் நன்குணர முடியும். மரணித்த மறு நொடியிலிருந்து அவன் வேறொருவனாக மாறிவிட்டதையும் அவனால் உணர முடியும். அப்படி உணரும் பொழுது அவன் மீண்டும் சில முறை மரணிக்க ஆயத்தமாகிறான். அவன் அதை விரும்பிச் செய்கிறான். அந்த விருப்பமே அவனது பயணத்தை அர்த்தமுள்ளதாக்கி விடுகிறது" என்றார்

"ஓ ..சக்ஸேனா, இதெல்லாம் எனக்குப் புரியும்னு நெனைக்குறீங்களா? நான் இன்னும் ஒரு முறை கூட மரணிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?அதில் எனக்கு விருப்பமுமில்லை "

"அது அப்படியிருக்க முடியாது. என் பார்வையில் நீ மிகுந்த வலியுடன் மரணிக்கக் கூடியவள், அப்படியான நேரங்களில் என் சொற்கள் உனக்கு நினைவு வரும், இந்தக் கிழவனை அப்பொழுது நினைத்துக் கொள் சரியா?" என்றார்.

"அட போங்க சக்ஸேனா, ஏதாவது இளமைத் ததும்பும் விஷயங்கள் பேசலாமே, உணவின் சுவை கூடும் என்பார்கள் " என்றேன். அன்று அவர் அதற்கு மேல் ஏதும் பேசவில்லை. "பீம்லாவுடன் நேரம் செலவிட வேண்டும் நீ போ" என்று சட்டென எனக்கு விடை கொடுத்துவிட்டார். 

மனிதர்கள் நம்மை விட்டு ஒதுங்குவதும் அல்லது ஒதுக்குவதும் இதற்கெல்லாம் வெறுப்போ விரோதமோ மட்டும் காரணங்களாயிருந்து விட முடியாது. அதீத அன்பும் அப்படியானதொரு விளைவையேத் தரும் என்பதும் சக்ஸேனாவின் பார்வையிலிருந்து அன்று எனக்குப் புரிந்தது. 

  அதற்குப் பின் பல நாட்கள் சக்ஸேனா என்னை உணவருந்த அழைத்தும் நான் செல்லவில்லை. அவர் அன்று என்னுடனான உரையாடலை கிள்ளியெறிந்தார். காய்ந்துப் பழுத்து போன இலைகளைக் கிள்ளியெறிவது போன்ற அசட்டையான செயலாக எனக்கு அதுத் தோன்றியது. நான் அவருடனும் பீம்லாவுடனும் செலவழித்த நேரங்கள் நான் வற்புறுத்தித் தேர்வு செய்தவையாகும். அந்நேரத்தில் நான் வேறெதும் செய்திருக்கலாம். நானும் டேவிட்டும் வைன் குடித்து விட்டு நடனமாடியிருக்கலாம் அல்லது எனது  மாணவர்களுக்கான தேர்வுப் பயிற்சி வினாத்தாள்களை நான் தயாரித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விடுத்து என் நேரத்தை சக்ஸேனாவுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்று யோசிக்காமல் அவருடன் பழகியதுதான் அவருக்கு செளகரியமாகி விட்டது போலும் என்று எனக்குத் தோன்றாமலில்லை. அவரைத் தவிர்க்க வேண்டிய காரணம் மிக அற்பமானதுதான் என்றாலும் அற்பத்தனங்களில் குளிர் காயும் பருவத்தில் அப்பொழுது இருந்தேன் என்றே கூற வேண்டும். 

"இரவு உணவுக்கு 'லிட்டி செளக்கா' செய்யப் போறேன், நீங்க வர்றீங்களா இல்லையா?" என்று சாலையிலேயே என்னை வழிமறித்துக் கேட்டார் சக்ஸேனா. "வர்றேன்" என்று கூறிவிட்டு அவரைத் தாண்டி செல்ல முற்பட்டேன். அவருக்கும் அந்த ஒரு வார்த்தை போதுமாக இருந்தது போல் என்னுடன் அதற்குமேல் வேறெதும் பேசாமல் தன் வழியில் சென்று விட்டார்.  

அன்று மாலையே அவர் வீட்டின் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்ததை  வராந்தாவில் சிந்திய ஒளிச் சிதறல்களிலிருந்துத் தெரிந்து கொள்ள முடிந்தது.

"நல்லாப் பேசிட்டு திடீர்னு போகாம இருந்துட்ட அதான் அவங்க ரெண்டு பேரும் வருத்தமா இருக்காங்கப் போல" என்றான் டேவிட். டேவிட் பேசும்போது நான் அப்படியே கேட்டுக்கொள்வேன். அதைக் குறித்த ஆழமான சிந்தனையெல்லாம் எனக்கு எப்பொழுதுமே இருந்ததில்லை. வானொலியில் கேட்கும் காலைச் செய்தியைக் கேட்டுக் கொள்ளுமளவிற்கு கவனம் செலுத்தினால் போதும். டேவிட் செய்திகளால் தன்னை நிரப்பிக் கொள்பவன். அதனால்தானோ என்னவோ இப்பொழுதெல்லாம் அவன் பேசுவதும் தட்டையானப் பார்வையோடு மட்டுமே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

'லிட்டி செளக்கா' தயாரிப்பது நினைத்ததைவிட கடினமாகவே இருந்தது. வெகு நாட்கள் சந்தித்திராததால் சக்ஸேனாவின் பேச்சிலும் நடவடிக்கையிலும் சிறு பதற்றம் வெளிப்படவே செய்தது. நானும் சற்றுத் தாமதமாகவே சூழ்நிலைக்குப்  பழகினேன். பீம்லாவின் முகத்தழும்புகள் முன்பை விட சற்றுப் புடைத்து விட்டிருப்பது போலிருந்தது. குளிர் காலத்தில் தசையிறுக்கம் ஏற்படும்போது அப்படி ஆகிவிடுமாம். பீம்லாவின் முகம் முதன் முறையாக விகாரமாகத் தெரிந்தது எனக்கு.

 சக்ஸேனா வழக்கத்தை விட நிதானமாக வேலை செய்தார். அவருடைய இயல்பான நகைச்சுவையும் இல்லாமலிருந்தது. 

"சக்ஸேனா, இன்னும் ரெண்டு நாளில் கெளம்பணும் அதனால இவ்வளவு வருத்தமா?"

"இல்லை" என்பது போல் வேகமாகத் தலையசைத்தார்.

"இதெல்லாம் தெரியும்தானே, நமக்கென்ன இதெல்லாம் புதுசா?"

அவர் சிறிது நேரம் ஏதும் பேசவில்லை. பீம்லாவுக்கு உணவளித்து விட்டு வருவதாக சைகையில் கூறிவிட்டுச் சென்றார். வழக்கமான அதே முறையில் அவர் பாதி சவைத்த உணவை பீம்லாவிற்கு ஊட்டினார். பீம்லாவும் நானும் சக்ஸேனாவும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர்களது மகன் மறுநாள் வருவதாகக் கூறியபோது பீம்லாவின் தழும்புகள் இறுக்கத்தையும் மீறி புடைத்துச் சிரித்தன. "ரொம்ப நல்லப் பையன், அவங்க அப்பாவ மாதிரியே" என்று மிகவும் பிரயத்தனப்பட்டு பீம்லா கூறினார். அதிகம் பேசினால் வலிக்கும் என்பது போல் சக்ஸேனா சைகையில் அவரை அமைதிப் படுத்தினார்.

நேரம் நள்ளிரவைத் தொட்டு விடும் தூரம். நானும் சக்ஸேனாவும் உணவருந்த அமர்ந்தோம். அவர் உணவு பரிமாறினார். அதுவும் கவிதை போலிருந்தது. பச்சை மிளகாயை வினிகரில் ஊற வைத்து அதன் காரத்தின் அளவைக் குறைத்திருந்தார். உவர்ப்பும் புளிப்பும் சிறிது காரமுமாக பச்சை மிளகாய் அத்தனை ருசியாக இருந்தது. 

"சோஹ்ரா போயிருக்கீங்களா?" என்றார் திடீரென்று.

"இல்லையே, சோஹ்ரா? கேள்விப் பட்டதேயில்ல"

"சிரபுஞ்சி கேள்விப் பட்டிருக்கீங்களா?"

"ஆமா, உலகின் மிக ஈரமான இடமல்லவா? அதிகமான மழை பொழியுமிடமல்லவா, நல்லாத் தெரியுமே, ஆனா போனதில்ல."

"நிச்சயமா அங்க நீங்க போய்ட்டு வாங்க, அழகான மேட்டு நிலம் அது. மேகங்கள் தரையில் தவழும் காட்சியைக் காணலாம்."

"அப்படியா? வாய்ப்பு அமையணுமே?"

"வாய்ப்பு ஏற்படுத்திட்டுப் போங்க, நான் சொல்றேன்.

திருமணத்திற்கு முன் இரண்டு வருஷம் அங்க வேலை செய்ய போயிருந்தேன். அப்போ  மனிதர்கள் தீண்டாத இடமா அது இருந்தது. காசி இன மக்கள் மட்டுமே அதிகம் இருந்தனர். இப்போ நெறைய மாறிடுச்சுன்னு சொல்றாங்க. சுற்றாலாத் தலமா ஆக்கிட்டாங்கல்ல"

 "சரி.. பார்ப்போம் சக்ஸேனா, போகும்படி இருந்தா போறேன்". 

எனது ஆர்வமின்மை அவருக்கு எரிச்சலூட்டியது போலும், சிறிது நேரம் மெளனமாய் உணவருந்தினார். மீண்டும் சட்டென்று முகம் முழுதும் பிரகாசம் நிரம்பியது. பேசத்துவங்கினார்.

"அப்ப என் அறைக்கு அருகே ஒரு பள்ளிக் கூடமும் தேவாலயமும் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் என் அறையின் சன்னலருகே அமர்ந்து வெகு நேரம் வேடிக்கை பார்த்திருப்பேன். கண்ணுக்கெட்டும் தூரம் வரை மேகங்கள் கண்ணாமூச்சி ஆடுவது போலிருக்கும். மேகம் விலகும் பொழுது அங்கு மனித முகங்கள் தெரியும், மீண்டும் மேகங்கள் மறைத்துக் கொள்ளும் மனிதர்களும் மறைந்து விடுவர். சில மேகச் சிறகுகள் வேண்டுமென்றே என் அறைக்குள்ளும் தவழ்ந்து வரும். கடந்து செல்லும் மேகம், 

முகத்தை முழுதும் ஈரமாக்கி விட்டிருக்கும். மழைப் பொழிவதை மட்டுமே அதுவரை அறிந்திருந்த எனக்கு மழைப் படர்வதென்பது பெரும் பரவசமளிப்பதாக இருந்தது. அப்பொழுதுதான் அந்தக் காட்சியை கண்டேன். மேட்டுப் பகுதியிலிருந்து இறங்கி வந்த சில கால்களைக் கண்டேன்."

"என்னது கால்களையா?" என்று இடைமறித்தேன். சக்ஸேனா இம்முறை சலனமில்லாமல் தொடர்ந்தார்.

"ஆம்!! கால்கள் மட்டும், உடல்களின் மேற்பகுதி மேகங்களில் ஒளிந்திருக்க கால்கள் மட்டும் இறங்கி வந்தன. ஒன்றன் பின் ஒன்றாக நான்கு ஜோடி கால்கள் இறங்கி வந்தன. வெண்மையான தோல் நிறத்தாலான காலுறைகள் அணிந்திருந்த கால்கள் அவை. தேவதைகளின் கால்கள். பிஞ்சுக் கால்கள் என்றுமல்லாமல் முதிர்ந்த தடிமனுமல்லாமல் மிகுந்த நேர்த்தியோடு சிற்பியொருவன் செதுக்கிய யெளவனத் தூண்கள் அவை. அவைப் படியிறங்கி என்னைக் கடந்து செல்லும் வரை அந்தக் கால்களுக்குச் சொந்தமான முகங்களை மேகங்கள் எனக்குக் காண்பிக்கவேயில்லை. எனக்கும் முகம் பார்க்க வேண்டிய தேவையிருக்கவில்லை. அந்த  நான்கு ஜோடிக் கெண்டைக் கால்களின் வனப்பிலேயே என் மோகம் தளும்பியது. அவற்றின் முகங்களைக் காணும் துணிவை நான் பெற்றிருக்கவில்லை என்றே கூற வேண்டும். தேவதைக் கால்கள் அவை. தேவாலய ஆராதனைக்குச் சென்றுக் கொண்டிருந்தத் தேவதைக் கால்கள் அவை"

"சக்ஸேனா..என்ன ஆச்சு? போதும் போதும்"என்றேன்.

அவர் கனவு கலைந்தது போல் சற்றுத் திகைத்துப் போனார். 

"ஆனா நல்லா பேசுனீங்க, சக்ஸேனா, அற்புதம்" என்றேன்.

"ஏதோ சொல்லணும்னு தோணுச்சு, கெளம்பிருவேன், இன்னும் ரெண்டு நாளுதான்,நாளைக்கு மகனும் வந்துருவான் அதுதான்" என்றார்

"அதனால என்ன?".

"இந்தாங்க" என்று ஒரு மரப்பெட்டியை என்னிடம் அளித்தார். மூங்கிலால் செய்யப் பட்ட அழகான சிறியப் பெட்டி அது. அதனுள் வெண்ணிறப் பஞ்சுத்துணியின் மென்மையினூடே மினுங்கின நீலக் கற்கள் பதித்திருந்த ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசுகள். 

"என்ன இது?" என்பது போல் அவரைப் பார்த்து புருவமுயர்த்தினேன்.

"வெச்சுக்கோங்க ஏஞ்சலின்" உங்களுக்கு நல்லாருக்கும் என்றார். 

"ஆம், என் பெயர் ஏஞ்சலின் ப்ரியா". 

Comments

Popular posts from this blog

ஹருகி முராகாமி- யதார்த்தத்திற்கு வண்ணம் பூசும் எழுத்து.

Light and Thread

ஊமை அழுக்கு