போஜ்புரி மால்புவா
தன் வாழ்நாளின் அறுபது வருடங்களை எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார் என்று காமேஷ்வர் பிரஸாத்தின் மால்புவாவை ருசித்த பொழுது யதேச்சையாக ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது. காமேஷ்வரின் மனைவி புஷ்பா எனது தோழி. சற்று வயது முதிர்ந்த தோழிதான் ஆனாலும் அவரின் இளமையில் மயங்காத ஆண்களே இல்லை எனலாம். காமேஷ்வர் புஷ்பா தம்பதியினர் பீகார் மாநிலம் போஜ்பூரை சேர்ந்தவர்கள். இருவருக்குமிடையே பதினைந்து வருட இடைவெளி. அவர்களுக்கு மிகவும் காலந்தாழ்ந்து ஒரு மகன் பிறந்தான். அவனுக்கும் என் மகனுக்கும் ஒரிரு வயது வித்தியாசம்தான். ஆனால் அவருக்கோ என் தந்தையின் வயது. இப்படி சில முரண்பாடுகளுடன் எங்களது நட்பு இருந்தது.
புஷ்பாவை விட பல வயது மூத்தவரான போதிலும் காமேஷ்வர் பிரஸாத் சற்றும் மனந்தளராமல் குடும்பஸ்தனின் பொறுப்புகளில் கவனம் கொள்வார். எப்பொழுதும் புஷ்பாவை ஸ்கூட்டரில் நகர்வலம் அழைத்துச் செல்வார். அவருக்கு தவறாமல் சேலைகளும் பரிசுப்பொருட்களும் வாங்கித்தருவார். மாதமிருமுறை பியூட்டி பார்லர் அழைத்து செல்வார். இப்படியாக சிறந்த தம்பதியினராக ஊருக்குள் வலம் வந்த அவர்களைப் பார்த்து எனக்கு சில நேரம் பொறாமையாகக்கூட இருக்கும், "இந்த வயசுல கூட மனைவிய எப்படி கவனிச்சுக்குறாரு" என்று கணவரிடம் கூறி புலம்பியதுண்டு.
காமேஷ்வர் பிரஸாத்தின் தோற்றம் முதல் பார்வைக்கு சற்று கொடூரமாகவே இருக்கும். முகம் முழுவதும் பெரியம்மை தழும்புகள், பெரிய குடைமிளகாய் மூக்கு, அடர்த்தியான புருவம், எல்லாவற்றையும் விட அவரது குரலின் கடுமையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. புராணச் சித்திரங்களில் வரும் அரக்கர்களின் முகமும் குரலும் போன்ற அவரது தோற்றத்தை நான் கேலி செய்ததுண்டு. "இந்தாளுக்கு புஷ்பா மாதிரி ஒரு அழகி பொண்டாட்டியா கெடச்சிருக்கு" என்பேன்.
புஷ்பாவின் இளமையும் அழகும் சுற்றுப்புறமெங்கும் பிரசித்தி. ஆல்ட்டா எனப்படும் சிவப்பு நிற பொடியை பாலில் குழைத்து உள்ளங்கையிலும் கால்களிலும் மருதாணி போல் தீட்டியிருப்பாள். நெற்றியிலும் செந்தூர குங்குமக் கோடு முன் நெற்றியிலிருந்து தலையின் மையம் வரைக்கும் நீண்டிருக்கும். அவள் மணமானவள் என்று அனைத்து வழிகளிலும் உலகினுக்குத் தெரிவிக்க வேண்டிய ஏதோ ஒரு கட்டாயம் போல் இருந்தது. இந்த குறியீடுகளெல்லாம் எப்பொழுதும் அவளை விட்டு அகலவில்லை.
ஒரு முறை புஷ்பாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். கல்வியறிவோ மற்ற எந்த முன்னேற்றத்தின் அறிகுறிகளோ இல்லாத அவள் சுத்தமான போஜ்பூரி மொழியில் பேசினாள். புரிவது சற்று கடினமாக இருந்தாலும் அவளது உணர்வுகள் அதற்கு ஈடுகட்டின. அவள் காமேஷ்வரின் மூன்றாவது மனைவியாம். முதல் இரண்டு மனைவிகளும் உடல் நல குறைபாட்டில் மரித்துவிட்டதாகவும், மூன்றாவதாக தன்னை மணந்ததாகவும் கூறினாள். புஷ்பா வேற்று சாதி ஆணை காதலித்ததை அறிந்ததும் அவசர அவசரமாக அவளை குறைந்த வரதட்சணைக்கு உடன்பட்ட காமேஷ்வர் பிரஸாத்திற்கு மணமுடித்து வைத்தனர் புஷ்பா குடும்பத்தினர். நீங்க ஏன் எதிர்க்கல? என்றேன். " "அதெல்லாம் முடியாதுங்க எங்க பக்கத்துல தூக்கிக்கொண்டு போய் எரிச்சிருவாங்க பொதுவா, நா மொரண்டு புடிக்காததால விட்டுட்டாங்க" என்றாள்.
காமேஷ்வருக்கு ஒரு குணம் இருந்தது. தினமும் இரவு அவரது வாட்சப் நண்பர்களுக்கெல்லாம் ஒரு போஜ்பூரி ரெக்கார்ட் நடன காணொளியை அனுப்புவார். தினமும் இரவு தவறாமல் என் கணவரின் அலைபேசியில் ஒரு காணொளி இருக்கும். "கெழவனுக்கு ஆசைய பாத்தியா?" என்று நானும் கணவரும் சிரித்து கொள்வோம். ஆனால் புஷ்பாவிடம் பேசியதிலிருந்து என்னால் இந்த காணொளிகளை நகைச்சுவையுடன் அணுகமுடியவில்லை. போஜ்பூரி ரெக்கார்ட் டான்ஸ்கள் அவ்வளவு அருவருப்பானவை. அதில் ஆடும் பெண்களெல்லாம் நிஜமாகவே எந்த மாதிரி மனநிலையில் ஆடுவார்கள் என்று யோசிக்கலானேன். ஒருபுறம் சாதியின் பேரில் பெண்களை எரித்து சாம்பலாக்கும் அதே சமுதாயம்தான் இம்மாதிரியான பெண்களின் உடலை பொதுவெளியில் ரசித்து மகிழ்கின்றது, இது எத்தகைய ஆபத்தான நிலை என்று எண்ணத் தோன்றியது.
காமேஷ்வர் பிரஸாத்திடம் கணவரை கண்டித்து கூற சொல்லிவிட்டேன், இனி இம்மாதிரியான விஷயங்கள் விளையாட்டாகக் கூட அனுப்பக் கூடாதென்று. புஷ்பாவையும் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டேன். அவள் என்றுமே காமேஷ்வரை குறை கூறியதில்லை. அவருடன் இணக்கமாகவே வாழ்வது போல் இருந்தது.
ஒருமுறை ஹோலி பண்டிகையின் பொழுது அவர்கள் வீட்டிற்கு எங்களை அழைத்திருந்தார் காமேஷ்வர் பிரசாத். மிகுந்த தயக்கத்துடன்தான் சென்றேன். வீட்டிற்குள் நுழைந்ததும் அவரும் புஷ்பாவும் மிகுந்த அன்புடன் விருந்தோம்பல் செய்தனர். அன்றுதான் "போஜ்பூரி மால்புவா" என்னும் இனிப்புப் பண்டத்தை முதன்முறையாக ருசித்தேன். நம்மூரின் பணியாரம் போல்தான் என்றாலும், கலவையில், ரவையும் பனீரும் சேர்த்திருந்ததால் அதன் சுவை அலாதியாக இருந்தது. மிகவும் நேர்த்தியாக அதை சமைத்திருந்தது காமேஷ்வர் பிரஸாத். புஷ்பாவிற்கு அதில் அத்தனை பெருமை.
எத்தனை இனிமையான மனிதர்களாக தெரிந்தபொழுதும் புஷ்பா அன்று கூறிய நிகழ்வு மனதை நெருடிக்கொண்டே இருக்க, சமயம் பார்த்து காமேஷ்வரிடம் கேட்டேன், "இவ்ளோ சின்ன பொண்ண கட்டிருக்கிங்க, அந்த புள்ள ஆசப்பட்ட பையனோட வாழ ஏன் விடல நீங்களும், உங்க சமூகமும்? அவ என்னதான் சந்தோஷமா இருந்தாலும், அவளுக்கு புடிச்ச வாழ்க்கை இதுவல்லஙகுறது உங்களுக்கு தெரியுமா? என்றேன்.
இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்த்திராத காமேஷ்வர் சற்று சுதாரித்துக் கொண்டு கூறினார், "மேடம் அவளோட கடந்தகாலம் தெரியாமத்தான் அவள கட்டிக்கிட்டேன், ஆனா நீங்க சொல்றது உண்மை, எங்கூர்ல வேற ஜாதி ஆணையோ பெண்ணையோ காதலிச்சா கொடூரமாத்தான் கொல்றாங்க. ஆனா இப்பலாம் கொஞ்ச நாளா நெலமை மாறுது. அங்க வாழ முடியாத நெலையில நெறைய பேரு கல்யாணம் கட்டிகிட்டு பக்கத்துல வங்காளத்துக்கும், தில்லி, மும்பைன்னு ஓடி போய்ர்றாங்க, தப்புதான் இந்த நெலமை மாறணும். ஆனா எனக்கு தெரியாது புஷ்பாவோட காதல். அவள கட்டுனதுலர்ந்து இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னால சொன்னா, ஒருவேள அவன கட்டிருந்தா கூட இவ்ளோ சந்தோஷமா இருந்திருப்பேனான்னு தெரியலன்னு", ஏன் புஷ்பா உண்மைதான? என்பது போல் புஷ்பாவை பார்த்தார். புஷ்பாவின் புன்னகையில் ஒரு கோடி அர்த்தங்கள் பெருமூச்சோடு வெளிவந்தது.
காமேஷ்வர் பிரஸாத்தை அதற்கு மேல் என்ன கேட்பது அல்லது சாடுவது. அவர் மனதளவில் புஷ்பாவிற்கு ஒரு சிறு குறையும் வைக்கவில்லை. புஷ்பாவின் மற்ற மனப்போராட்டங்களுக்கெல்லாம் அவளும் இந்த சமூகமும்தான் விடைகாண முயல வேண்டும்.
ஆனால் அன்றிலிருந்து காமேஷ்வர் பிரஸாத்தின் எண்ணிலிருந்து எந்தவொரு ரெக்கார்ட் நடன காணொளியும் பிறருடன் பகிரப்படவில்லை. மாற்றமென்றே எனக்கு அது புரிந்தது.
Comments
Post a Comment