மனீஷ்- வரையாடு
இமயமலைத் தொடரின் மிக சுலபமான மலையேற்றம் திரியுண்ட் மலையேற்றப் பாதைதான். சுமார் பத்து கிலோமீட்டர் தூர மலையேற்றம். ஒரு நாளில் ஏறி இறங்கிவிடலாம். ஆனால் பொதுவாக யாரும் அவ்வாறு செய்வதில்லை. அடுத்தநாள் காலை சூரிய உதயத்தைக் காண வேண்டி இரவு அங்கேயே கூடாரங்களில் தங்கி விடுவர்.அயல்நாட்டவர்களின் விருப்பமான சரணாலயமாக இவ்விடம் திகழ்கிறது. தரம்கோட்டில் அறைகள் வாடகைக்கு எடுத்து தங்கிவிடுவர். பின்னர் மாதக்கணக்கில் இங்குள்ள மலைப்பகுதிகளில் சுற்றித்திரிதல் அவர்களின் வழக்கம். இந்தியர்களுக்கு இது மற்றுமொரு புகைப்படக் கிடங்கு. அருகிலிருப்பதாலேயே அவமதிக்கப்படும் அதே வழக்கம்.
தரம்கோட்டில் சுற்றுலா ஒருங்கிணைப்பு ஏஜென்சி மூலம் மனீஷ் அறிமுகமாகினார். அவர் வழிகாட்டியல்ல, மலைமேல் எங்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரத்தின் மேனேஜர். இரவு தங்கிவிட சித்தமாயிருந்ததால் உணவு தண்ணீர், மளிகை சாமான், என அத்தியாவசியப் பொருட்களோடு எங்களுடனே பயணிப்பதாகத் திட்டம். மனீஷ் இளைஞர்.மலைவாழ் குடியைச் சேர்ந்தவர். மிக இயல்பாக எங்களுடன் கலந்துவிட்டார். மேல் திருப்பதி என்பது போல் "மேல் தரம்கோட் "என்ற இடத்திலிருந்துதான் மலையேற்றம் துவங்கும். அங்கு வனத்துறையினர் அலுவலகத்தில் பூரண சோதனை செய்யப்பட்டு நம்மிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களெல்லாம் களையப்பட்டு, துணிப்பைகளில் பழங்களும் மரக்குடுவைகளில் தண்ணீரும் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. இனி மனீஷ் பற்றித் தொடரலாம்.
மனீஷ் தன் வயதிற்கே உரிய துடிப்புடனும் இசையுடனும் வேகத்துடனும் திகழ்ந்தார். பேசும்போது இந்திப் படங்களின் கதாநாயகர்களின் தோரணை, பெண்களை ஓரவிழியால் ரசிக்கும் கண்கள். எந்நேரமும் ஒரு அசட்டையான பாணி. "இவனை நம்பியா ராவெல்லாம் தங்கப் போறோம்? நல்லா விசாரிச்சுட்டீங்களா அண்ணி?"
"வந்துட்டோம் இனி யோசிக்கக்கூடாது பாத்துக்கலாம் வா".
மலையேற்றத்தின் இறுதி நான்கு கிலோமீட்டர் குறித்து முன்னமே அறிவுறுத்தப்பட்டிருந்தது. செங்குத்தான ஏற்றமாயிருக்குமாம். எங்களுக்கோ பயணம் முழுதுமே அப்படித்தான் தெரிந்தது. மலைவாசிகளுக்கும் சமவெளி உயிரினங்களுக்குமான வித்தியாசம் அப்பொழுதுதான் புரிந்தது. மனீஷ் எங்களுடன் நடக்கவேயில்லை. அவன் மலையின் குறுக்குவாட்டில் இறங்கி ஓடிச்சென்று நாங்கள் ஒரு மணி நேரம் கழித்து சென்றடையும் இடத்திற்கு சென்று இளைப்பாறிக்கொண்டிருப்பான். என்னுடன் வந்தவர்கள் அயர்ச்சியடையத் துவங்கிவிட்டனர். மூன்று கிலோமீட்டர் ஏற்றத்திலேயே பெரும்பாலானோர் முழங்காலைப் பிடித்துக் கொண்டனர். இத்தனைக்கும் அனைவரும் இளைஞர்கள்தான்.
"இனி திரும்பி போக முடியாது
ஏறி மேலப் போறது மட்டும்தான் ஒரே வழி" என்றான் மனீஷ் சிரித்துக் கொண்டே. வாழ்க்கைத் தத்துவமாகக் காதில் விழுந்து எதிரொலித்தன அவனது சொற்கள், "இனி திரும்பிப் போக முடியாது. மேல ஏறிப் போறது மட்டும்தான் ஒரே வழி".
மனீஷை எங்களுடனே வருமாறு வேண்டிக் கொண்டேன். "நீங்க எதாச்சும் சொல்லிட்டே வந்தா நாங்க ஜாலியா வருவம்ல" என்றேன். "
"அர்ரே ..இங்க வந்தும் பேசிட்டேதான் வரணுமா, பேசாம மலையோட உச்சிய பாத்துட்டே அப்பப்ப திரும்பி எவ்ளோ தூரம் ஏறி வந்துருக்கோம்னு பாத்து நீங்களே உங்களத் தட்டிக் கொடுத்துட்டே ஏறுங்க" என்றான்.
"அட யார்றா இவன், பெரிய ஞானி மாதிரி போற போக்குல என்னன்னமோ சொல்றானே" என்று வியந்துக் கொண்டே அவன் கூறியது போலவே அப்பொழுதோடு பேசுவதை நிறுத்தி விட்டேன். அனைவரின் வேகமும் அவரவர் சக்திக்கேற்ப கூடி குறையத் துவங்கியதால் சிலர் மிக வேகமாகவும் வேறு சிலர் பொறுமையாகவும் பயணப்பட்டோம். ஆங்காங்கே தென்பட்ட வாடிக்கைக் குதிரைகளில் ஏறிக்கொண்டு இன்னும் சிலர் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு சென்றுவிட்டனர். நான் தனியாளாக மிகவும் பின்தங்கியிருந்தேன். அதற்குக் காரணம் நான் ஆங்காங்கே நின்று பாடல்கள் கேட்டு இளைப்பாறிவிட்டு பயணம் செய்தேன். ஒரு கட்டத்தில் யாரைப்பற்றிய சிந்தனையும் எழவில்லை. குடும்பம், உறவுகள், லட்சியங்கள், கனவு, தோல்வி, காமம் என அனைத்தைக் குறித்த சிந்தனைகளும் அழிந்து போயிருந்தன.சுத்திகரிக்கப்பட்ட ஓர் மனம் வாய்க்கப்பெற்று பயணம் குறித்த தவிப்புகள் முற்றிலும் மறைந்து போய் நான் மட்டுமே மிஞ்சியிருந்தேன்.
மற்றவர்கள் எனக்கு முன்னரே மலையேறிவிட்டனர்,உச்சத்தை அடைந்து விட்டனர். நான் இரண்டு மணிநேரங்கள் தாமதமாக சென்றடைந்தேன். பொறுமையாக, காலடிகளை உற்று கவனித்தவாறே,அங்கங்கே சறுக்கியவாறு,சிராய்த்துப்போன பாதங்களோடு வியர்வை சிந்தி, வலியோடு, இயலாமையில் எழும் வெறுமையோடு, கைவிடுதல் பற்றிய யோசனைகளோடு முன்னேறினேன். எதிரில் இறங்கி வந்து கொண்டிருந்த எழுபது வயது முதியவர் ஒருவர் சிரித்தார்,"நான் இறங்கிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கிட்டத்தட்ட மலையுச்சியை அடைந்துவிட்டீர்கள் தொடருங்கள், அங்குக் காணப்போகும் காட்சிகள் இந்த வலியெல்லாம் ஒன்றுமில்லாது செய்துவிடும்" என்றார். அவர் முகம் அயர்ச்சியில் சிவந்து போயிருந்தது. ஆனால் கண்களில் பேரொளி மின்னியது.
சூரிய அஸ்தமனத்தால் சிவந்திருந்த வானத்தின் தரிசன வேளையில் மிகச்சரியாக நான் மலையுச்சியை அடைந்தேன். அந்த முதியவரை அழைத்து உரக்கக் கூற வேண்டும் போலிருந்தது " ஆமாம் வலி தெரியவில்லை, நீங்கள் கூறியது உண்மை" என்று.
மனீஷ் எனக்காகவே காத்திருந்தது போல் வேகமாக என்னை நோக்கி வந்தான். "என்னங்க நல்லாருந்துச்சா உங்களுக்காகத்தான் காத்திருக்கோம், நீங்க சரியான நேரத்துல வந்திருக்கீங்க, ஒரு வேள முன்னாடியே வந்திருந்தாலும் இந்தத் தருணம் கெடச்சிருக்காது, கொஞ்சம் தாமதிச்சு வந்திருந்தா இருட்டியிருக்கும்" என்றான். சரியான தருணத்தில் வந்தடைதல் என்பது எத்தனை முக்கியம் என்று புரிந்தது.
பயணக் களைப்பும் குளிர்ந்த காற்றும் ஒருசேர கிறங்கடிக்க அனைவரும் அவரவர் கூடாரத்தில் தத்தமது துணையோடு ஒதுங்கினர். ரம்மியமான மாலைப்பொழுது அது. தேநீரும் சிகரெட்டுமாக நானும் என் துணையும் கூடாரத்தின் வெளியே அமர்ந்து எங்களின் கடந்தகால நிகழ்கால காதல் படிநிலைகள் குறித்துக் கதைத்திருந்தோம்.
"வயசாகிருச்சுடி உனக்கு, அப்பல்லாம் என்னா ஃபிகர் தெரியுமா நீ!"
இன்னும் வயசாகிரும் டா அப்ப என்ன பண்ணுவ?
அப்ப என்ன பண்ணுவேன் சின்னதா கைக்கு அடக்கமா ஒரு பொண்ணக் கட்டிப்பேன்.
சரி அப்ப நானும் எனக்கேத்த ஒரு கெழவன பாத்துக்குறேன்.
நீ செய்வ ,போனா போகுது நான் உன்னோடயே இருந்துரேன்".
அபத்தம்தான் எத்தனை அழகு.
இரவு கவியத் துவங்கியது. வெளிநாட்டவர்களின் கூடாரங்களிலிருந்து கிட்டார் இசையும் மெல்லிய குரல்களில் அவர்கள் பாடுவதும் காற்றில் மிதந்து வந்தது. அதனோடு சேர்ந்து ஒரு புதுவித வாசம், சிகரெட் புகையல்ல வேறுமாதிரியான கிறக்கும் மணம் அது. நான் என்ன கேட்கபோகிறேன் என்று புரிந்தது போல்
" அது வெள்ளைக்காரனுங்க எதையாவது கலந்து புடிப்பானுங்க, இப்ப அது எனக்கும் வேணும்னு கேக்காத கொன்றுவேன்" என்றான். நான் சிரித்துக் கொண்டே " இல்லடா இப்ப எதுவும் வேணும்னு தோணல, நீ கூட வேணாம்னு தோணுதுன்னா பாரேன்". "ஆமாடி இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்தன் ல இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ
நீ கூட்டிட்டு வந்தியா?
பின்ன ஒங்கப்பனா? உனக்கு இதெல்லாம் புடிக்கும்னு நாந்தான கூட்டிட்டு வந்தேன்.
எங்கிருந்து முளைக்கிறது மகனே, இந்த நான் நான் எனும் ஆணவம்? இந்த உடம்பு நீயா? மனசு நீயா? எதுதான் நீ?பின்பு ஏன் எல்லாவற்றிலும் உன்னைப் புகுத்திக் கொண்டு நான் நான் என்று பிதற்றுகிறாய்??
அடியேய் இன்னும் குடிக்கவேயில்ல அதுக்குள்ள அனத்துற நா அந்த வெள்ளக்காரியோட போய் படுத்துக்குறேன் போடி.."
மூன்று லார்ஜ் பியர்களுக்குப்பின் கிறக்கம் அதிகரித்தது. தெளிந்த கருவானம் முழுவதும் நட்சத்திரச் சிதறல். அனைவரும் உறங்கச் சென்றுவிட்டனர். மனீஷ் தயாரித்த ரொட்டியும் பருப்பும் அமிர்தமாக இருந்தது. அனைவரும் உணவருந்திவிட்டு கலைந்து சென்றோம். அத்தனை உயரத்தில் கழிவறைகள் இருக்காது. காம்போஸிட் குழிகள் வெட்டப்பட்டிருந்தன. பெண்களுக்காக ஒரு கூடாரத் துணியை மறைப்பாக சுற்றி வைத்திருந்தனர். இருள் சூழ்ந்துவிட்டிருந்தது. மொபைல் டார்ச்சுகளுடன் பெண்கள் ஒவ்வொருவராய் அந்த மறைகுழிக்கு சென்று வந்தோம். அதில் சிலருக்கு இந்த ஏற்பாடுகள் பிடிக்கவில்லை. ஆனால் மாற்று வழிகள் எதற்கும் அங்கு அனுமதியில்லை. இயற்கையில் புதைந்து உரமாகிவிடுதல் மட்டுமே அங்கு சாத்தியம்.
மனீஷ் தன் கூடாரத்திற்கு சென்றுவிட்டான். நிசப்தம் சூழ்ந்தது. அனைவரும் உறங்கியிருந்தனர். குளிர் மைனஸ் நான்கு டிகிரி என்று கூகுள் காட்டியது. ஏதோ ஒரு அசெளகரியம் அடிவயிற்றை பிசையத் துவங்கியது. மாதவிடாய்க்கான காலமல்ல அது. கணக்கிட்டுக் கொண்டுதான் கிளம்பினேன். ஆனாலும் மலையேற்றம் கொடுத்த அழுத்தத்தில் உதிரப்போக்கு துவங்கிவிட்டிருந்தது. அந்நேரத்தில் காம்போஸிட் குழியைத் தேடி செல்வது குறித்து யோசனையாக இருந்தது. கணவர் ஏழாம் உலகத்தில் சஞ்சரித்திருப்பது தெரிந்தது. ஏனோ அவன் உறங்கும்போது மட்டும் அவனுக்குத் தொல்லை கொடுக்க மனம் விரும்பாது. உலகத்தின் மொத்த குழந்தைமையும் அந்நேரத்தில் அவன் முகத்தில் தவழும்.
ஒருவழியாக சென்று சுத்தம் செய்துகொண்டு திரும்பி வந்து படுத்தேன். ஏனோ உறக்கம் பிடிக்கவில்லை. மனம் எதிலும் ஒன்றவில்லை. நடுநிசியைக் கடந்து விட்டிருந்தது. நேரம் ஒன்றரை மணி காட்டியது. கம்பளிப் போர்வை ஒன்றை எடுத்து சுற்றிக் கொண்டு வெளியே வந்தேன். கூடாரத்தின் வெளியே சற்று தூரத்தில் ஒரு பாறை தெரிந்தது. ஆனால் நடக்க வேண்டும். வண்டுகளின் கிறீச்சிடல்கள் மட்டுமே அந்நேரத்தின் ஓசையாக இருந்தது. காற்று திசைமாறி வீசத் துவங்கியிருந்தது. கவனமாக அடிமேல் அடி வைத்து நடந்தேன். சடாரென்று அவன் மேடேறி வந்தான். "ஆத்தீ" என்று அலறியதில் அடிவயிற்றிலிருந்து குருதி சூடாக வெளியேறியது. "மனீஷ் நீங்களா? நான் பயந்துட்டேன்" என்றபோது குரல் நிஜமாகவே அச்சத்தில் நடுங்கியது.
"இல்லங்க இங்க ஏதோ ரத்த வாடையடிக்குறா மாதிரி இருக்கு அதான் எதாச்சும் மிருகம் வந்துபோச்சான்னு பாக்க வந்தேன்".
மிருகம்னா எந்த மாதிரி?
பயப்படுறா மாதிரி ஒண்ணுமில்லங்க எப்பவாச்சும் செந்நாய் ஒண்ணு ரெண்டு திரியும், இங்க இருக்குற ஆட்டுக் குட்டிங்கள சாப்பிட வரும் மத்தபடி ஒண்ணுமில்ல.
அந்த வாடை என்னாலதாங்க, பீரியட்ஸ் வந்துட்டுது, நெறைய தண்ணி இல்லாததால காத்துல வீச்சம் தெரியுது போல .
ஓ அந்த மிருகம் நீங்கதானா? என்றான்.
அவன் மீண்டும் ஒரு ஞானிபோல் தெரிந்தான். அந்த மிருகம் நீங்கதானா??
ஆம் நான்தான் அந்த மிருகம். மிருகத்திடம்தானே குருதி வாடை வீசும். நான் மிருகம்.
மனீஷும் நானும் பாறை மேல் ஏறி அமர்ந்து கொண்டோம். "என்னவோ தெரியல மனீஷ், பொதுவா இந்தமாதிரி நேரங்கள்ல உடம்பு ரொம்ப அசதியா இருக்கும், கால் வலிக்கும் ஆனா இன்னிக்கு இவ்வளவு தூரம் ஏறி வந்து இந்த குளிருல , ரத்தம் கொட்டுது அடிவயித்துல இருந்து ஆனா ஒரு சொட்டு வலி இல்லை, விசித்திரமா இருக்கு" என்றேன்.
அதெல்லாம் சொகுசா வாழும்போது வர்ற வலிங்க, எங்க பொம்பளைங்கலாம் ஒருநாள் கூட வலி வேதனைன்னு சொன்னதில்ல, இடுப்பெலும்பு நல்லா வளைஞ்சு விரிஞ்சு வழிவிடுறப்போ ஒரு வலியும் இருக்காது. அந்த குறுக்கெலும்பும் கால்களும் நல்ல திடமா வலுவா இருக்ககையில ஒரு வலியும் வராது என்றான். உண்மைதான் போலும், அன்று எனக்கு நிஜமாகவே ஒரு துளி அசெளகரியம் கூட தெரியவில்லை. மிருகம் போலவே அமர்ந்திருந்தேன் பாறைமேல்.
தூரத்தில் தெரிந்த வான்முட்டும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் குறித்து மனீஷ் பேசினான். ஒரு நாள் மலையேற்றத்தில் பரவசம் குறைவென்றும் நான்கைந்து நாட்கள் தொடர்ந்து நடப்பதும், ஆங்காங்கே இளைப்பாறி மீண்டும் பயணம் தொடர்வதிலும்தான் உச்சபட்ச இன்பம் இருப்பதாகவும கூறினான். நீங்க அந்த மாதிரி போவீங்களா? என்றேன்.
அதுதாங்க என் வாழ்க்கையே அப்படித்தான் போய்க்கிட்டே இருப்பேன். அம்மாவுக்கு உதவியா இந்த மாதிரி சம்பாதிச்சு குடுத்துட்டு மீண்டும் கெளம்பிருவேன் என்றான்.
படிக்கலையா?
படிச்சேன் கொஞ்சமா, மனசு படிப்புல உக்காரல விட்டுட்டேன். காசுக்கு பஞ்சமில்லங்க வெள்ளக்காரங்கள நல்லபடியா கவனிச்சுகிட்டா அவங்க நல்லா காசு தருவாங்க. நம்மாளுங்களவிட அவங்க நல்லவங்கதான். நல்ல கம்பெனி குடுப்பாங்க, ஆர்வமா நெறைய சொல்லுவாங்க கேட்டுப்பாங்க, காசும் நெறைய குடுப்பாங்க. போதும்ங்க சந்தோசமா இருக்கேன்.சரி நீங்க போய் படுங்க தூக்கம் வரலையா?
வரலையே வேற எதாச்சும் சொல்லுங்க
சொல்லுவேன் எனக்கு ஒரு உதவி பண்றீங்களா?
சொல்லுங்க மனீஷ்.
நீங்க இங்லீஸ் பேசுறத பாத்தேன், ஒரு நாலு வரி லவ்வருக்கு எழுதுற மாதிரி எதாவது எழுதிக் குடுங்க, என் காதலி ரிஜ்வானாவுக்குக் குடுக்கத்தான்.
வாவ், உங்களுக்கு லவ்வர் இருக்காங்களா?
ஆமா நர்ஸரி டீச்சர் டிரெயினிங் படிக்கிறா
பரவால்லயே..ஆனா இப்ப சட்டுனு ஞாபகம் வரல, நாளைக்கு கீழ இறங்குறதுக்குள்ள எழுதித்தாரேன்
சரிங்க..இன்னொண்ணு கூட சொல்லணும்..
சொல்லுங்க..
ஆப்கி ஹசி பேஹத் சுந்தர் ஹே! (உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு)
ஆஹா!! மனீஷ் தேங்க்ஸ்.
சரிங்க காலையில பார்ப்போம். ரொம்ப நேரம் இங்கயே இருக்காதீங்க பேய் வரும் என்று குறும்பாக சிரித்தான்.
நான் அங்கேயேதான் அமர்ந்திருந்தேன். வானத்தில் நட்சத்திரங்கள் கொட்டிக் கிடந்தன. அவற்றின் புள்ளிகளையெல்லாம் இணைத்துப் பார்த்து மனதில் கோலமிட்டபடி படுத்திருந்தேன். வானில் வெள்ளி முளைப்பதை அன்றுதான் வாழ்வில் முதன்முறையாகக் கண்டேன்.
இருளின் கட்டுக் குலைந்து மெல்ல விடியல் மலர்ந்தது, பறவைகளின் துயிலெழுதல் கூட கேட்டது. உறங்கவேயில்லை ஆனால் நீண்ட கனவொன்றின் பிடியிலிருந்து விடுபட்டதுபோல் எழுந்து நடந்தேன்.
அடுத்தநாள் மதியம் மலையிலிருந்து இறங்கினோம். மனீஷ் கேட்டபடி அவனுக்கு நான் எழுதி கொடுத்தது நபோகோவின் வரிகள்.
"Yes, I need you, my fairy-tale. Because you are the only person I can talk with about the shade of a cloud, about the song of a thought — and about how, when I went out to work today and looked a tall sunflower in the face, it smiled at me with all of its seeds".
"ஆம், நீ எனக்கு வேண்டும் என் தேவதைப் புனைவே, ஏனெனில் உன்னிடம்தான் என்னால் மேகத்தின் நிறக்கோர்வைக் குறித்தும், எண்ணத்தின் பண்ணைக் குறித்தும் பேச முடிகிறது. நான் இன்று பணிக்கு செல்லும் வழியில் என்னைப்பார்த்துத் தன் விதைகள் முழுவதுமாய்த் திரட்டி புன்னகைத்த அந்த நெடிய சூரியகாந்தி பூவைப்பற்றி பேசமுடிகிறது".
இந்த விளக்கத்தைக் கேட்டதும் மனீஷ் ரிஜ்வானாவை நினைத்து சிரித்துக் கொண்டான்.
"தேங்க்ஸ் ங்க இந்த காகிதத்தை என்னிக்கும் பத்திரமா வெச்சிருப்பேன்" என்றான்.
நானொரு மிருகம் என்று நினைவூட்டியவன் மனீஷ்
Comments
Post a Comment