நட்டாஷா-சினமன் சிகரெட் குறியீடு
நீலா, சினமன் மணம் வீசும் சிகரெட்டைத் தேடுகிறாளென்றால் அவள் நிலை பிறழ்ந்து விட்டாள் என்று பொருள். அருள் அதை நன்கறிந்திருந்தான். அவ்வாறான நேரங்களில் அவன் அவளுக்கு தூக்க மாத்திரை அளவினை அதிகரித்து விடுவான். அவள் தொடர்ந்து இரண்டு நாட்கள் தூங்கினாலும் பரவாயில்லை என்று அவன் விட்டுவிடுவான். அவனுக்கு நீலா வேண்டும். அந்த அப்பாவித்தனம் ததும்பும் பெண், எதைப் பற்றியும் பெரிதும் சிலாகித்துக் கொள்ளாத எளிமையான நீலா அவனுக்கு வேண்டும். ஆனால் அவள் சினமன் சிகரெட் கேட்கும் போதெல்லாம் அருள் பரிதவித்து போய்விடுவான்.
"நீலா வேணாம் நீலா.... நாம நல்லா இருக்கோம். நமக்கு நெனச்சு சந்தோஷப்பட நெறைய நல்ல விஷயம் இருக்கு, சினமன் சிகரெட் வேணாம் நீலா" என்று கிட்டத்தட்ட கெஞ்சும் தொனியில் கேட்பான். நீலாவிற்கு அச்சமயத்தில் கேட்பதெல்லாம் நட்டாஷாவின் குரல் மட்டுமே.
நட்டாஷா பீட்டர்ஸ். நீலாவின் உலகில் அவள் ஒரு தேவதை.
பரங்கிமலை பட் ரோடு பகுதியில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் நட்டாஷா வசித்து வந்தாள். நீலாவும் அவளும் கல்லூரி நண்பர்கள். நட்டாஷா பொருளாதாரமும் நீலா இலக்கியமும் படித்தார்கள். அவர்களது
சந்திப்பு அதிகம் நிகழ்ந்ததென்னவோ பேருந்து பயணங்களின் போதுதான். நீலாவிற்கு அவள் அறிந்திராத இசை, இலக்கியம், உடை நேர்த்தி, இரசனை நேர்த்தி என அனைத்தையும் கொடுத்தவள் நட்டாஷா. அவள் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற முதல் தமிழ் பெண் நீலாதான். நீலாவைத்தவிர நட்டாஷாவின் நண்பர்கள் அனைவருமே தமிழரல்லாதவர்கள். நட்டாஷாவின் வீடும் சுற்றமும் சற்றும் தன் வாழ்வியலோடு பொருந்தாதவை என்று முதல்முறையிலேயே நீலா தெரிந்து கொண்டுவிட்டாள். மேற்கத்திய உலகின் நகலாக நட்டாஷாவின் வாழ்வும் சுற்றமும் அமைந்திருந்தது நீலாவிற்கு பெரிதும் ஆச்சரியத்தைத் தந்தது. நமக்கு மிக அருகிலேயே ஆனால் நம் கலாச்சாரத்திற்கு நேரெதிர் வாழ்வியல் கொண்ட மனிதர்களை அப்பொழுதுதான் நீலா சந்தித்தாள்.
நட்டாஷாவின் வீட்டின் உட்புறம் முழுதும் மரத்தச்சு வேலைபாடுகளால் அமைந்திருந்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு எளிமையான தோற்றம் பூண்டிருந்தாலும் வீட்டினுள் அவ்வளவு நேர்த்தியான வடிவமைப்பைக் கண்டு நீலா திகைத்துப் போனாள். ஒண்டுக் குடித்தன வாழ்வை மட்டுமே அதுவரை அறிந்திருந்த நீலாவிற்கு நட்டாஷாவின் வீடு புதியதொரு பரிமாணத்தை பரிசளித்தது. நட்டாஷாவின் உறவு அவளுக்கு முற்றிலும் புதிதான ஒரு உலகை அறிமுகப்படுத்தியது. அவ்வுலகம் நறுமணங்களால் நிரம்பியிருந்தது. சிவப்பு திராட்ச ரசத்தின் வாசம், சிவப்பு ரோஜாக்களின் வாசம், செர்ரி பழ வாசத்தில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் மற்றும் சினமன் சிகரெட் வாசம். ஆம், நீலா முதன்முறையாக சினமன் சிகரெட் புகைத்ததும் நட்டாஷாவுடன் தான்.
அப்பொழுதெல்லாம் அவர்களிருவருக்கும் ஒரு வழக்கமிருந்தது. அந்தி சாயும் பொழுதில் வீதியிலறங்கி நடந்து பரங்கிமலைக் குன்றின் படிக்கட்டுகளில் ஏறத் துவங்குவார்கள். நீலாவிற்கு மலைகள் மேல் காதல் துளிர்த்ததும் அப்பொழுதுதான். பகலெல்லாம் பொறுமையாக இருக்கும் மலைகளின் மேல் இரவு படரத்துவங்கியதும் மர்ம வாசம் வீசத்துவங்கிவிடும். அது மலைகளுக்கேயுரிய குணம். அந்நறுமணத்தை மலைகளில் வாழ்பவர்களால் மட்டுமே உணர முடியும். மலைகளிலெல்லாம் கடவுளர்களின் ஆலயம் அமைத்த மனிதர்களுக்கு நிச்சயம் அந்த மர்மம் புரிந்திருக்கும். சாத்தான்கள் சிறகு விரித்து பறக்கும் சுதந்திரத்தை மலைகள் வழங்கியிருந்தன. அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் மனித இனம் வந்து விடக் கூடாதென்கிற அச்சத்தில்தான் மலைகள் தோறும் காவல் தெய்வங்களின் கூடாரங்களை அவர்கள் அமைத்திருக்கக் கூடும். நட்டாஷா நீலாவை அழைத்துச் சென்றாள். படிக்கட்டில் ஏறும் பொழுது அவள் நீலாவிற்கு பற்பல கதைகள் கூறுவாள். நட்டாஷா அபாரமாக பாடுவாள். மேற்கத்திய இசையில் அமைந்த பாடல்களை அவள் பாடும் பொழுதெல்லாம் அதிலொரு இனம்புரியாத வலியும் வன்மமும் புதைந்திருக்கும். தன்னால் அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத மண்ணோடும் மனிதர்களோடும் வாழ விதிக்கப்பட்ட அவளினத்தின் ஒட்டுமொத்த வலியையும் அவளது பாடல்கள் வெளிப்படுத்தும். நீலாவிற்கு அந்த வலியும் வேகமும் ஏதோ ஒரு வகையில் ஆறுதல் அளித்தது. படிக்கட்டுகளின் இருபுறமும் இயேசு கிறிஸ்துவின் இறுதி யாத்திரையை மையப்படுத்திய சிலைகள் அமைந்திருந்தன. நட்டாஷா ஒவ்வொன்றாக நீலாவிற்கு விவரிப்பாள். இயேசு கிறிஸ்து சிலுவையில் பேசிய இறுதி வார்த்தைகளான " என் தேவனே ,என் தேவனே, ஏன் என்னைக் கை விட்டீர்" என்ற வசனத்தை உச்சரிக்கும் பொழுது நட்டாஷாவின் குரலில் ஒரு தீவிரம் தொனிக்கும். நீலா அதை கவனிக்கத் தவறியதேயில்லை. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கை விட்டீர்". அப்பொழுது அவர்கள் மலையுச்சியை அடைந்திருப்பர். அங்கு குளிர்ந்த காற்று வீசும். அங்கிருந்து பார்த்தால் நகரம் மிகவும் அழகாகத் தெரியும். நட்டாஷா சினமன் சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகைத்துவிட்டு நீலாவிடம் தருவாள்.
நட்டாஷா விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தாள். பேஸ்பால் விளையாட்டில் அவள் தேர்ச்சி பெற்றிருந்தாள். அவள் பேஸ்பால் மட்டையைப் பிடிக்கும் பாங்கே அவ்வளவு கவர்ச்சியாக இருக்கும். நட்டாஷாவின் மேல் பல ஆண்கள் மையல் கொள்ளவும் அதுவே காரணமாக அமைந்தது. அதிலும் முக்கியமாக டென்வர் அவளை அனைவர் முன்னிலையிலும் முத்தமிட்டு காதல் பகர்ந்ததும் அத்தகைய ஒரு தருணத்தில் தான். வியர்வையில் நனைந்திருந்த நட்டாஷா தன் அணியின் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தாள். பரபரப்பான கட்டத்தை நெருங்கியிருந்தது ஆட்டம். பார்வையாளர் கூட்டத்தில் நீலாவும் டென்வரும் அமர்ந்திருந்தனர். நீலா தன் தோழியின் திறன் கண்டு வியந்தபடி ஆர்ப்பரித்தாள். டென்வர் அமைதியாக நட்டாஷாவை இரசித்துக் கொண்டிருந்தான். நட்டாஷா ஒரு மிருகம் போல் விளையாடிக் கொண்டிருந்தாள். முகத்தில் வழிந்தொழுகிய வியர்வையை தோள் பட்டையில் துடைத்தவாறு அவள் நின்று களமாடிக் கொண்டிருந்தாள்.டென்வர் சட்டென பவுண்டரி கயிற்றைத் தாண்டி களத்தில் பிரவேசித்தான். அவனுக்கு நட்டாஷா மட்டுமே தெரிந்தாள். நிதானமாக தன்னை நோக்கி வந்த டென்வரை எந்த வியப்புமின்றி எதிர்கொண்டாள் நட்டாஷா. டென்வர், நட்டாஷாவின் கையிலிருந்த மட்டையை லாவகமாகப் பிடித்திழுத்த வேகத்தில் அதனோடு சேர்ந்து நட்டாஷாவும் வளைந்து கொடுக்கவும் அங்கு ஒரு அற்புதமான முத்தக் காட்சி அரங்கேறியது. நீலாவின் மனதில் முதன்முறையாக வன்மத்தின் விதை விதைக்கப்பட்டது. அதற்கு காரணம் புரியாமலே பல இரவுகள் அவளுக்குத் தூக்கமின்றி கழிந்தன. நட்டாஷா டென்வர் சற்றுத் தள்ளி நீலா. அன்று முதன்முறையாக நட்டாஷா இல்லாமல் நீலா சினமன் சிகரெட் புகைத்தாள்.
"என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்" என்று நட்டாஷா உச்சரித்து முடித்ததும் அவள் நீலாவை அழைத்துக் கொண்டு மலையினூடே நடப்பாள். அங்கு மிகப் பழமையான ஒரு சிலை, அதில் இயேசு சிலுவையில் அறையப்பட்டிருப்பார். அவரின் விலாவிலிருந்து வடிந்த குருதி அழகாக செதுக்கப்பட்டிருக்கும். அவரது கால் கட்டைவிரலின் நுனிவரை குருதி வழிந்திருக்கும். அக்குருதியின் கடைசிச் சொட்டு நிலத்தில் வீழ்வதற்கு ஒரு நொடிக்கு முன்னதாக சிற்பம் முடிந்திருக்கும். இயேசுவின் குருதி அவ்விடத்தில் உறைந்து விட்டதெனக் கொள்ளலாம். அச்சிலையினடியில் தான் நட்டாஷா நீலாவை கிடத்தி முத்தமிடுவாள். கிடத்தப்பட்ட நீலாவிற்கு அப்பொழுது சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் தோற்றம் தான் தெரிந்தது. இயேசுவின் விரல் நுனியில் உறைந்து போன குருதிச் சொட்டு உருகி அவள் நாவில் இறங்கியது போலிருக்கும். அவள் நட்டாஷாவின் முத்தத்தை அவ்வாறு காட்சிப் படுத்திக் கொண்டாள். பரலோக ராஜ்ஜியத்திலிருந்து சபிக்கப்பட்டு வீழ்ந்த தேவதைகளாக நீலா தன்னையும் நட்டாஷாவையும் கற்பனை செய்து கொண்டாள் . அது அவளுக்குள் இனம்புரியாத ஒரு நிம்மதியை விதைத்தது. இனி இந்த உலகிற்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. வீழ்த்தப்பட்டவர்களுக்கு அந்த உரிமை இருந்தது.
நட்டாஷாவும் நீலாவும் அதற்கு பிறகு அடிக்கடி சந்தித்துக் கொள்ளவில்லை. மாதமொருமுறை என்றிருந்த தூரம் நாளடைவில் இன்னும் அதிகமானது. டென்வர் நட்டாஷாவின் காதல் கதை வலுப்பெற்று கரை புரண்டோடி ஒருவழியாக வடிந்தும் விட்டது. டென்வர் இப்பொழுது பாலே நடனம் பயில்விக்கும் சிந்தியாவை நேசிக்கத் துவங்கியிருந்தான். அது நட்டாஷாவிற்கு மிகுந்த வேதனையளித்தது போலும். அப்பொழுதுதான் அவளுக்கு மீண்டும் நீலாவின் நினைவு வந்தது. நீலாவும் அவளும் மீண்டும் சிலுவைப்பாடு சரித்திரத்தை கதைத்துக் கொண்டே ஏறினார்கள். இம்முறை நட்டாஷா ,"என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கை விட்டீர்?" என்று கூறிக் கொண்டே மண்டியிட்டு அழுதாள். நீலா சினமன் சிகரெட்டை எடுத்து அவளிடம் நீட்டினாள். இருவரும் அதே சிலையினடியில் அமர்ந்து புகைத்தனர். நீலா காத்திருந்தாள், நட்டாஷா பொலிவிழந்து அமர்ந்திருந்தாள். இயேசுவின் விரலிலிருந்து வடிய முற்பட்ட குருதி உறைந்தேயிருந்தது. நட்டாஷாவை மடியில் கிடத்திய நீலா அவளை இணக்கமாக அணைத்துக் கொண்டாள். நட்டாஷா " டென்வர்" என்று அலறித் துடித்து அழுதாள். நீலா அன்று மீண்டும் தனிமையில் சினமன் சிகரெட் புகைத்தாள்.
அடுத்த முறை நீலா நட்டாஷாவை சந்திக்க வந்த பொழுது அவள் வெண்ணிற உடையில் அலங்கரிக்கப்பட்ட தேவதைபோல் சவப்பேழையில் கிடத்தப்பட்டிருந்தாள். வெண்ணிற ஆர்கிட் மலர்களால் அவளது சவப்பேழை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இடது கை மணிக்கட்டைச் சுற்றி கட்டப்பட்டிருந்த துணியில் சிவப்பு பரவியருந்தது. ஒரு துளி குருதி வழிந்து உறைந்திருந்தது. நீலாவிற்கு ஒரு நொடி உடல் நடுங்கியது. மரணத்தின் குறியீட்டை எத்தனை முறை கண்டிருப்பாள். நட்டாஷாவை தான் மட்டுமே காப்பாற்றியிருக்க முடியும். அது புரியாமல் ஏதேதோ காரணம் கூறி விலகியிருந்து விட்டோமே என்று நீலா பரிதவித்து அழுதாள். டென்வர் திருப்பலி ஆராதனையில் கலந்து கொண்டான். அனைவரும் போல அவனும் மலர் வளையம் வைத்துவிட்டு அமைதியாக கைக்கட்டி நின்று கொண்டான்.
டென்வர் என்னாச்சு? ஏன் என்னைய கூப்டல? நட்டாஷா இப்படி யோசிக்குற பொண்ணு இல்லையே, என்ன நடந்தது? டென்வர் ஒரு கனத்த பெருமூச்சின் இறுதியில் கூறினான் " ஷீ இஸ் ஏன் எக்ஸன்ட்ரிக் பிட்ச்" அவள் உணர்ச்சிவயப்பட்ட பெண் என்றான்.
"யார்தான் உணர்ச்சி வயப்பட்டவர்கள் இல்லை டென்வர்? அன்று நீ அவசர அவசரமாக அனைவரின் முன்னிலையிலும் அவளை முத்தமிட்டதும் அதைக் கண்டு நான் வன்மம் கொண்டதும் அதனால் அவளை பிரிந்ததும் அவளது கவனம் உன்னிடம் குவிந்ததும், அவள் இசை மறந்ததும் விளையாட்டு மறந்ததும் கல்வி மறந்ததும், நீ மிக எளிதாக சிந்தியாவிடம் நேசம் கொண்டதும், நான் இப்பொழுது என் தோழியைத் மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து நிற்பதும் இப்படி அனைத்துமே உணர்ச்சி வயப்பட்ட செயல்கள்தான் டென்வர், இதில் நட்டாஷாவை மட்டும் குற்றவாளியாக்கிவிட முடியாதல்லவா டென்வர்?" என்றாள் நீலா. அவள் பேசி முடிப்பதற்குள் டென்வர் அவ்விடம் விட்டு சென்று விட்டான்.
நட்டாஷாவின் முதலாமாண்டு நினைவு தினத்தன்று நீலா தனித்து பரங்கிமலைக் குன்றில் ஏறினாள். "என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்?" என்ற வசனத்தை வாசித்து முடித்து சிலுவையின் நிழலில் அமர்ந்து சினமன் சிகரெட்டை எடுத்து நிதானமாக புகைத்து முடித்தாள். அவள் முதுகில் ஒரு துளி ஈரம் விழுந்ததை உணர்ந்தாள். மழைக்கான எந்த அறிகுறியும் வானில் தென்படவில்லை. அத்துளியை விரல்களால் துடைத்தவள் ஒரு நொடி அச்சத்தில் உறைந்து போனாள். இயேசு கிறிஸ்துவின் விரலில் உறைந்த இரத்தம் உருகி அவள் முதுகில் வீழ்ந்தது.
மறுநாள் காலை செய்தித்தாளில் "சென்னை ஈ சி ஆர் ரோட்டில் சட்டத்திற்கு புறம்பாக நடந்த பைக் ரேஸில் விபத்துக்குள்ளாகி வாலிபர் மரணம் என்ற தலைப்புச் செய்தியோடு டென்வரின் புகைப்படம் அச்சிடப்பட்டதைக் கண்ட பொழுதுதான் நீலாவிற்கு முந்தைய நாள் மாலையின் சம்பவத்திற்கான காரணம் புரிந்தது.
சினமன் சிகரெட்டைத் தேடும் பொழுதெல்லாம் அவளது கதையில் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுவது வழக்கமாகிப் போனது அவளுக்கு.
Comments
Post a Comment