பதகளிப்பு
பெருங்கூட்டமொன்றில் செய்வதறியாது சுற்றித் திரியும் சிறு குழந்தை போல என் வாழ்வின் பல பகுதிகளில் நான் நின்றிருக்கிறேன். இவ்விடத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று யாரிடமாவது வாய்விட்டுக் கேட்டுவிடும் அளவிற்கு அந்நியப்பட்டுப் போன இடங்கள் உண்டு. வாழ்வைக் குறித்த மற்றவர்களது மதிப்பீடுகள் எனக்கு விளங்குவதில்லை. வேண்டி வருந்தி என்னை நானே அனைவருடனும் பொருத்திக் கொள்ள முயலும் பொழுதெல்லாம், முன்பை விட அதிகமாக வழி மாற்றி விடும் சம்பவங்கள் அரங்கேறுவதுண்டு.
ஒரு சமயம் வீட்டில், பெரிய கடவுளின் தரிசனம் பெற்று வரலாமென்று முடிவு செய்யப்பட்டது. முந்தைய நாள் மாலையே கிளம்பிச் சென்று மலையடிவாரத்தில் தங்கி, விடிவதற்குள் வரிசையைக் கடந்து விட்டால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தரிசனம் பெற்று, காணிக்கை கைமாறெல்லாம் செய்து விட்டு, ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, வரும் வழியில் ஜவுளிக்கடையில் துணிமணிகள் வாங்கிக் கொண்டு, உறவினர் ஒருவரின் வீட்டில் சொத்து விபரங்கள் குறித்து பேசிவிட்டு என்று இன்னும் ஏதேதோவென்று நிகழ்ச்சி நிரல் நீண்டு கொண்டே சென்றதில் இறுதியில் பெரிய கடவுள் முக்கியத்துவம் இழந்து முதல் எண்ணை சுழித்து வேலை முடிந்தது என்னுமளவில் வந்து நின்றார். பல நேரங்களில் வாழ்க்கையின் போக்கும் இப்படித்தான் இருக்கிறது. ஏதோவொன்றை நிர்ணயித்துக் கொண்டு துவங்குவது, பின்பு மற்ற ஏதோவெல்லாம் இணைந்து கொண்டு பின்னிப் பிணைந்து, வழிமாறி, இறுதியில் பயணம் துவங்கியக் காரணமே சுவடின்றி மறைந்து ஏதோவொரு முட்டுச் சந்து மேடையில் கூத்துக் கட்டிக் கொண்டிருப்போம்.
"ஏன் கோவிலுக்கு மட்டும் போய்ட்டு வந்தா என்ன? மத்த விஷயமெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாமே? இது நான்.
"என்னடா இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன். ஒரு வேலையா கிளம்புறோம், அப்படியே நாலு வேலைய முடிச்சுட்டு வந்துரலாம்ல? உனக்கு ஏன் எதுவுமே பிரச்சனையா இருக்கு?" இது உறவு.
"நாலு வேலைக்கு நடுவுல எதுக்கு கோவிலுக்கு போகணும், அந்த நாலு வேலையப் பாக்கலாமே, என்று நாநுனி வரை வந்த சொற்களை சிரித்தபடியே விழுங்கினேன். மனிதர்களின் நிலைப்பாடுகளில் தலையிடுவதை மிக அரிதாகவே நான் செய்வதுண்டு. முடிந்தவரை அவர்களுடன் வாதிடுவதைத் தவிர்த்து விடுதல் எனக்கு எளிதான காரியமாகத் தோன்றுவதுண்டு."
"வாங்க கனி தம்பி" என்ற வீட்டுப் பெரியவரின் குரல் எங்கள் கவனத்தைத் திசைத் திருப்பியது."
கனி, எங்கள் வீட்டின் கார் டிரைவர். நெடுந்தூர பயணங்களின் பொழுது மட்டும் அவரை வரவழைப்பதுண்டு. கனி என்ற அவரது பெயரின் விசித்திரம் அவரது குணத்திலும் தெரிந்தது. குங்குமத்தைக் குழைத்து நெற்றியில் பட்டையாகத் தீட்டியிருப்பார். கறை படிந்து போன மஞ்சள் பல் வரிசை முழுதும் வெளிக்காட்டி கண்கள் விரித்து பேசுவார். கார் ஓட்டுவதைத் தவிர்த்து, கந்து வட்டித் தொழில், நிலத்தரகு செய்வது மற்றும் அரசியல் கட்சியொன்றின் களப்பணியாளர் என கனியின் அவதாரங்கள் பல. அவர் வட்டி வசூல் செய்வதில் மிகவும் கறார் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். அவரும் அவரது மனைவி ரூபாவும் அவ்விஷயத்தில் கை தேர்ந்தவர்கள் என்றே கூற வேண்டும். மாதாந்திரத் தவணையை செலுத்தத் தவறியவர்களின் வீட்டிற்கு மாலை வேளைகளில் படையெடுப்பாள் 'ரூபா'. அவளது வசை மொழிக்கு அஞ்சாதவர்களே இல்லையெனலாம். கனியை விட நல்ல உயரம் அவள். அவளது தமிழில் தெலுங்கு வாசம் வீசுவது போலிருக்கும். நடிகை ரோஜாவின் முகச்சாயலும், விஜயசாந்தியின் உடற்கட்டும் சேர்ந்த கலவை ரூபா. அவள் குதிரைவால் கொண்டை அணிவது வழக்கம். வட்டி வசூலிக்க மாலை வேளைகளையே தேர்வு செய்வாள்.
"வெளக்கு வெக்குற நேரத்துக்கு போனாத்தான் பயந்துட்டு வேகமா காசு எடுப்பாங்க. ஒரு வேள பாக்கிய செட்டில் செய்யாம இருந்தா, ரூபா பேசுற பேச்சுல குடும்பமே கைக்கட்டி நிக்கும். காசு வரலன்னாலும் அந்த பயம் இருக்குறது பாக்க நல்லாருக்கும். ரூபா எப்படியும் வசூல் செஞ்சிரும். அதுகிட்ட யாரும் வெவகாரம் வெச்சுக்க பயப்படுவாங்க" என்று கனி அவரது மனைவியின் செயல்கள் குறித்து பேசும்பொழுது அவரது முகமெங்கும் குரூரப் புழுக்கள் நெளிவது போலிருக்கும் எனக்கு.
"இவரா நம்மள கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகப் போறாரு?" என்றேன்.
எனக்கு பதில் ஏதும் தருவது குறித்து யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.
கனியிடம் ஒரு பழக்கத்தை எப்பொழுதும் கவனித்திருக்கிறேன். இம்முறையும் அவர் அதைச் செய்வதைப் பார்த்தேன். கனி அடிக்கடி கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பார். எங்குத் தண்ணீர் கண்டாலும் அவர் விரைந்துச் சென்று தண்ணீர் அள்ளி கைகளை அழுந்தத் தேய்த்து கழுவுவதுண்டு. விரல் நகங்களின் இடுக்குகளில் அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுவதாகவும் அதனாலேயே கைகளைக் கழுவுவதாகவும் ஒவ்வொரு முறையும் கூறுவார்.
" என்னவோ தெரியலம்மா, சின்னதா தோல் பிரியுறா மாதிரி இருக்கும், அடுத்த நாளே சலம் வெச்சிரும்" என்பார்
"அதில்ல கனி, மனசுல குற்றவுணர்ச்சி அதிகமானாலும் இந்த மாதிரி செய்வாங்களாம், உளவியல் ரீதியா ஏற்படுற பாதிப்பாம்" என்று கூறிவிட்டு முகந்திருப்பிக் கொண்டேன்.
குடும்பத்தின் அனைத்துக் கண்களும் ஒருசேர என்னை விழுங்குவது போல் பார்ப்பதை முதுகுக் காட்டிய நிலையிலும் என்னால் உணர முடிந்தது.
கனி என்னிடம் பேசுவதைத் தவிர்த்தார். பார்ப்பதையும் கூட. ரூபாவை அழைத்து என்னைத் திட்டித் தீர்க்க சொல்ல வேண்டும் போலிருந்தது அவருக்கு. தாயிடம் முறையிட வேண்டி அவசரப்படும் குழந்தையின் துடிப்பு அவரது கண்களில் தெரிந்தது. தாயின் செட்டை வெப்பத்திற்கு பழகி விடும் ஆண்கள அதே சார்ந்திருத்தலை மனைவியிடமும் எதிர்பார்த்துத் தவிக்கின்றனர். கனி மற்றுமொரு சான்று அவ்வளவே. நானும் அவரைத் தவிர்க்கவே விரும்பினேன். கனி மாதிரியான மனிதர்கள் குறித்து எனக்கு நிச்சயமாகக் கருத்து ஏதுமில்லை. ஆனால் இப்பொழுது இருபத்தி நான்கு மணி நேரங்கள் அவருடன் பயணிக்க வேண்டிய கட்டாயம்.
சொத்து விவரம் குறித்த உரையாடலுக்கு கனி அரசியல் பிரமுகரின் அறிமுகக் கடிதம் எடுத்து வருவதாகக் கூறியதால் இம்முறை அவருக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி உபசரிப்பும் வீட்டில் விமரிசையாக நடந்தது.
அன்று மாலை சரியாக ஐந்து மணியளவில் கனி தூய வெண்ணிற ஆடையணிந்து வந்திருந்தார். நெற்றியில் செந்திலகத்தின் ஈரம் வியர்வையோடு கலந்து மூக்கு நுனி வரை வழிந்து விட்டிருந்ததைத் துடைத்துக் கொண்டே சிரித்த பொழுது ரூபாவின் கணவர் என்பதற்கான அனைத்து நியாயமும் அம்முகத்தில் தெரிந்தது.
"கனி கோவில் வேலைய முடிச்சுட்டு நேரா அங்கப் போய்ருவம். நீ வந்தாத்தான் பேச்சுவார்த்தைய ஒழுங்கா முடிச்சுட்டு வர முடியும். அந்தாளு பிடிபடாம பேசிட்டே இருக்காப்ல"
கனிக்கு தனது முக்கியத்துவம் குறித்த சிறு செருக்குத் தோன்றி புருவத்தினிடையே கண்ணாய் நின்று என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. அந்த அகந்தைக் கண்ணை கீரைத் தளிரைக் கிள்ளுவது போல் கிள்ளியெறியவே மனம் விரும்பியது என்றாலும் அவ்வாவலை பிறிதொரு நேரத்தில் தீர்த்துக் கொள்ளலாம் என்று அமைதியடைந்தேன்.
"இப்பவும் விரல்களில் இன்ஃபெக்ஷன் ஆகுதா கனி? டாக்டர பாத்தீங்களா? என்று மட்டும் கேட்டுவிட்டு அவ்விடம் விட்டகன்றேன்."
"ம்ம்ம் இப்ப பரவால்ல" என்று சன்னமான குரலில் பதிலளித்து விட்டு பேச்சைத் திசைத் திருப்ப குடும்பத்தில் வேறு யாரிடமோ பேச்சைத் துவக்கினார்.
ஒரு வழியாக எங்களது பல வேலைகள் அடங்கியப் பயணம் இனிதேத் துவங்கியது. கனி, விநாயகர் அகவலை ஒலிக்க விட்டு பயணத்தைத் துவக்கினார். வீட்டுப் பெரியவர் "அடடா" என்று ஆனந்தம் வெளிப்படுத்தினார். மனிதர்கள் கூடி இப்படி பயணிக்கையில் நான் எப்படியுமே அபலையாகி விடுவதுண்டு. அவர்களும் என்னைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இக்கட்டான சூழல் ஏதும் நேர்ந்தால் என் மூளை மற்றவர்களைக் காட்டிலும் துரிதமாக செயல்படும் என்பதால் மட்டுமே என்னை அவர்கள் உடனழைத்துச் செல்வர். வாகனங்களின் ஆபத்துதவிக் கருவிகள் போல் நானும் ஒரு மூலையாக இருந்து கொள்வது வழக்கம்.
கனி பயணம் துவங்கியதிலிருந்தே பேசவும் துவங்கி விட்டார். வாய் ஓயாமல் பேசிய அவர், நொடிக்கொரு முறை ரூபாவை நினைத்துக் கொள்ளத் தவறவில்லை. "ரூபா சொல்லுச்சு, ரூபா கேட்டுச்சு, ரூபா கிட்ட கேட்டு சொல்றேன், ரூபாவ பேசச் சொல்றேன்" என்றபடியே வந்தார். இந்த மனிதருக்கு ரூபா எவ்வளவு முக்கியமானவளாக இருக்கிறாள் என்று நினைத்து வியந்து கொண்டே சன்னல் வெளிக் காற்றுக்கு முகம் கொடுத்தேன். ரூபா, கனியின் ஆதாரத் துடிப்பு.
கார் சென்னையைத் தாண்டி வேகமாக சென்று கொண்டிருந்தது. ஆந்திர எல்லையை அடைவதற்கு சற்று முன்னர் தேநீருக்காக ஓரிடத்தில் கனி காரை நிறுத்தினார். தேநீர் கடைக்காரரிடம் கடன் பாக்கி வசூலிக்க வேண்டியதை பெருமையாகக் கூறினார். நானும் குடும்பத்தினரும் ஒரு பக்கமாக நின்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கையில் கனி கடைக்காரரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஓரிரு நொடியிலெல்லாம் கனி அலை பேசியில் யாரையோ அழைத்து தேநீர்க கடைக்காரரிடம் நீட்டினார். கடைக்காரர் " அண்ணே என்னண்ணே பேசிட்டே இருக்கையிலே இப்படி பண்ணிட்டீங்க" என்று பதறியபடியே அலைபேசியை கையில் வாங்கினார். சற்று நேரத்திலெல்லாம் அவரது முகம் களையிழந்து போனது. ஏதோ கூற முன்வந்து ஒவ்வொரு முறையும் அவரைப் பேச விடாதவாறு எதிர்முனைக் குரல் அவரை ஸ்தம்பிக்கச் செய்தது. அது ரூபா என்பது விளங்கியது.
தேநீர்க் கடைக்காரரின் குனிந்தத் தலை வெகுநேரம் நிமிரவில்லை. மனிதக் கண்களைச் சந்திக்க திராணியற்றதொரு அவமானம் அவரை சூழ்ந்திருப்பதை அவரது உடல் மொழி நன்றாக வெளிப்படுத்தியது. கனிக்கு ரூபாவை நினைத்து பெருமிதம். உலகின் மிக பலம் வாய்ந்த பெண்ணைத் தான் திருமணம் செய்திருப்பதாக எண்ணி அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். தன் மனைவியைக் குறித்த புகழுரைகளை அவர் மீண்டும் அவிழ்த்து விடவே எனக்கு சினம் மூண்டது.
" ஏன் கனி, யாமிருக்க பயமேன்னு எழுதிருக்குல்ல உங்க கார் பின்னாடி, அத அழிச்சிட்டு ரூபா இருக்க பயமேன்னு எழுதிருங்க, பொருத்தமா இருக்கும்" என்றேன். அதிசயமாக என் கூற்றை ஆமோதிப்பது போல் காரில் அனைவரும் சிரித்து விட்டனர். கனியிடமிருந்து எந்தவொரு எதிர்வினையுமில்லை. நானும் அதையே விரும்பினேன். கனி போன்றவர்களின் குரல் உயர்ந்தொலிக்கக் கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பதுண்டு.
ஆனால் சற்று நேரத்திலெல்லாம் கனி, சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு வந்தார். இம்முறை என்னிடம் நேரடியாக பேசத்துவங்கினார். "சிஸ்டர், இங்க நாம போற வழியில ஹைவே ஒட்டி குறுக்கால போனம்னா வயல் வரப்புக்கு நடுவுல ஒரு அம்மன் கோவில் இருக்கு. அம்மனோட பெயர் ஆனந்த வல்லி."
எனக்கு அவர் பேசுவதைக் கேட்க மனம் ஒப்பவில்லை. அவர் பேசுவதை இடையில் துண்டிப்பதெப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கையில், குடும்பம் அவசரமாக அவரை தடுத்தது. வீட்டுப் பெரியவர்,
" கனி நீ நேரா வண்டிய பெரிய கடவுள பாத்து விடப்பா, நமக்கு பாக்க ஏகப்பட்ட சோலி கெடக்கு" என்றார்.
உடனே கனி " அதில்ல சார், அம்மன் சிலை அம்சமா இருக்கும். அவ்வளவு அழகான சிலை. வச்ச கண்ணெடுக்காம ஒரு நாள் முழுக்க பாத்துட்டே இருக்கலாம். அம்மனோட கண்ணு சிரிக்கும். இந்தப் பக்கம் வந்தா அவளப் பார்க்காம போறதில்ல. அதான் மனசு சலனப்படுது" என்றார்.
அவர் கூறிய வார்த்தைகள் வழக்கம் போல் எனக்கு மட்டும்தான் வேறு மாதிரி புரிந்தன போலும். மற்றவர் அனைவரும் அவர் பக்தியின் மேன்மையை மெச்சி அவருடன் அக்கோவிலுக்குச் செல்ல தயாராகினர்.
நெடுஞ்சாலையிலிருந்து வண்டி சற்று தாழ்வில் இறங்கி வயல் வரப்புகளுள் பயணித்தது. சுமார் ஒரு மணி நேரம் திசை மாறிச் சென்று இறுதியில் ஆனந்தவல்லி வீற்றிருக்கும் கோவிலை அடைந்தோம். கனியின் நெற்றி வியர்க்கத் துவங்கியது. உடலில் இனம்புரியாததொரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது. நானும் மற்ற அனைவரும் அருகிலிருந்த இளநீர்க் கடையில் இளநீர் வாங்கி அருந்தினோம். கனி எங்களுக்காகக் காத்திருக்கவில்லை. அவர் ஆனந்தவல்லியைக் காணத் தவித்ததை அவரது நடை உணர்த்தியது. அனைவரும் மீண்டும் அவரை மெச்சிக் கொண்டனர். நாங்களும் அவரை பின்தொடர்நதுச் சென்றோம்.
அடர்ந்து நெடுநெடுவென கொழுத்துப் பின்னிக் கொண்டு வளர்ந்திருந்த இரண்டு வேப்ப மரங்களை குடையாகக் கொண்டு அமைந்திருந்தது ஆனந்தவல்லியின் இருப்பிடம். அம்மரங்கள் பின்னப்பட்டிருந்த விதமே ஒரு வித அசெளகரியத்தை என் மனதில் தோற்றுவித்தது. சற்று அந்த பின்னலைத் தளர்த்தி விட்டால் மரங்கள் இரண்டுமே இலகுவாக சுவாசிக்க முடியுமே என்று தோன்றாமலில்லை. அதே நேரம், வேண்டி விரும்பித்தானே அவை இவ்வாறு பின்னிக் கிடக்கின்றன, ஒன்றையொன்று இப்படி நெருக்கிக் கொண்டு சுவாசமடைத்துக் கிடக்கின்றன. தனக்கான வாழ்வு முறையை நிர்ணயிக்கும் உரிமை எல்லா உயிருக்கும் இருக்கிறது. அடைந்துக் கிடப்பதும், திணறித் தவிப்பதும் அந்தந்த உயிரின் விருப்பம். கனியும் ரூபாவும் இந்நேரத்தில் ஏனோ நினைவுக்கு வந்தனர்.
கோவிலுக்குள் நுழைந்ததுமே என் பார்வை கனியைத் தேடியது. அவர் கைகள் விரித்த நிலையில் நின்று அம்மனை அல்ல அல்ல ஆனந்தவல்லியைப் பார்த்திருந்தார். அவரது பார்வை ஆனந்தவல்லியின் உடலெங்கும் பரவியது. நீராட்டு நிகழ்ந்து கொண்டிருந்தது. வழமைக்கு மாறாக ஆனந்த வல்லியின் உடலில் சேலைச் சுற்றியிருக்கவில்லை. நீராட்டும் பொழுது மாராப்பும் இடைத்துணியும் போல் ஒரு துணியை அணிவித்து நீராட்டுவதையே இது வரை கண்டுப் பழகிய எனக்கு அக்காட்சி வித்தியாசமாகப் பட்டது.
என்ன கனி ஆனந்தவல்லி குளிக்குறத இரசிச்சு பாக்குறீங்களோ? என்றேன்
கனி என்னைத் திரும்பிப் பார்த்தார். எங்களிருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டன. சற்று நேரம் அப்படியே நிலைத்தன.
"அம்பாளுங்க, ஆனந்தவல்லி அவ" என்றார் கனி.
"அதான் கேட்டேன் சரணடைஞ்சு பார்த்திட்டிருக்கீங்களா?" என்றேன்.
அவர் புரிந்தும் புரியாதது போல் முகந்திருப்பிக் கொண்டார்.
ஏன் திரை போடாம, ஒத்தத்துணி கூட இல்லாம அம்மன நீராட்டுறாங்க? ஏதும் சடங்கா? இதுவரை நான் பார்த்ததில்லையே இப்படி? என்றேன் பூசாரியிடம்.
பூசாரி எவ்விதத் தயக்கமுமின்றி "ஓ, சேலத்துணி சுத்த மறந்துட்டேன் போல" என்று சுவற்றிடுக்கில் திணித்து வைத்திருந்த எண்ணெய் பிசுக்கேறியத் துணியை ஆனந்தவல்லி மேல் மாராப்பாக போட்டுவிட்டு, மஞ்சள் கிண்ணத்திலிருந்து ஈர மஞ்சள் குழைவையெடுத்து அவள் மீது பூசினார்.
கனி அவ்விடம் விட்டு அகலாது நீராட்டு முழுவதையும் கண்கள் பனிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். நீராட்டு முடிவது போல் தெரியவில்லை. என்னுடன் வந்த அனைவரும் அங்கு நிகழும் எதைக் குறித்தும் பெரிதாக அலட்டிக் கொள்வது போல் தெரியவில்லை. பெண்கள் உட்பட அனைவருமே அடுத்த இலக்கைப் பற்றியே சிந்தித்தபடி இருந்தனர். அம்பாளுக்கென்ன நீராட்டிவிட ஆயிரம் கைகள் என்றும் மனதோடு அவர்கள் பொறுமியிருக்கக் கூடும்.
கனியின் பார்வை ஆனந்தவல்லியை விட்டகவவில்லை. அவர் புறப்படுவதற்கான அறிகுறி ஏதும் தெரியவுமில்லை. குடும்பத்தினர் மத்தியில் சலசலப்புக் கூடியது. தாமதமானால் நிர்ணயித்து வைத்திருந்த அத்தனை திட்டங்களிலும் மண் விழுந்து விடும் போல் அனைவரும் பதைத்தனர். வீட்டுப் பெரியவர் மெல்ல கனியின் தோள்களைத் தட்டினார். கனி சிறிதும் கவனம் திருப்பாமல் "அங்க பாருங்க சார்,அந்த கண்ணப் பாருங்க சார், அந்த தொடைகளைப் பாருங்க சார், அவள் வளைந்து நிற்கும் ஒய்யாரத்தைப் பாருங்க சார்" என்று கண்ணீர் மல்கக் கூறினார். வீட்டுப் பெரியவர் வாயடைத்து நின்றுவிட்டார்.
நான் கனியை கவனித்துக் கொண்டே தேவைக்குமதிகமான முறைகள் பிரகாரத்தைச் சுற்றி வந்து விட்டேன். இறுதியில் கனி செவிபட "ஆனந்த வல்லி பாவம்" என்றேன். கனி என்னை வெறித்துப் பார்த்தார். சரியாக அதே நேரத்தில் கனியின் அலைபேசி அலறியது. அதுவரை மோகப் பெருவெளியில் பரவசமாக ஆனந்தவல்லியை இரசித்திருந்தவர் உறக்கம் கலைந்தாற் போல் பரபரப்புடன் அலைபேசியை எடுத்து காதில் வைத்தார். எதிர்முனையில் யாரென்று புரிந்து கொள்ள எனக்கு நெடுநேரமாகவில்லை.
"வாங்க வாங்க கெளம்பலாம்" என்று அனைவரையும் அழைத்தவாறே வேகமாக கோவிலை விட்டு வெளியேறினார்.
அதுவரை கூனிக்குறுகி நின்றிருந்த ஆனந்தவல்லி சற்றே பெருமூச்சிழுத்துக் கொண்டு ஆசுவாசமடைந்தாள். எனக்கு அப்படித்தான் தெரிந்தது.
தொடர்ந்த எங்களது பயணத்தில் நான் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமர வேண்டிய சூழல். கனி அதை விரும்பவில்லை.
"அப்றம் கனி, ஏதாவது பேச்சுக் கொடுத்துட்டே வாங்க இல்லன்னா தூங்கிருவீங்க" என்றேன்
அவர் மேலோட்டமாக சிரித்து வைத்தார். அலைபேசி அதிர்ந்தது. "செப்பு ரூபா" என்று இம்முறை தெலுங்கில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
இரவு உணவுக்காக ஒரு ஓட்டலில் கார் நின்றது. கனியின் உடல்மொழியில் மீண்டும் பரபரப்பு. அனைவரையும் உணவருந்துமாறு கூறிவிட்டு, கைகழுவுமிடத்திற்கு வேகமாகச் சென்றார். அவசரமாக நானும் அவரைப் பின் தொடர்ந்தேன். அங்கு கனி தன் இரு கைகளையும் அழுந்தத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு விரல் நகத்தையும் அதன் இடுக்களில் கீறி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
என்ன கனி ஆனந்தவல்லியா?
என்னது புரியலங்க? என்றார் .
"கழுவுங்க கழுவுங்க நல்லா தேய்ச்சு கழுவுங்க"என்றேன்.
பெரிய கடவுளை தரிசிக்க மனம் விரும்பியது.
dot.
Comments
Post a Comment