காலனியம்
தேசிகன் எனது உதவியாளராக சேர்ந்ததிலிருந்து எனது அறையின் தோற்றம் முற்றிலும் மாறிப்போனது. நான் இருக்கைக்கு வருமுன்னரே கோப்புகள் மேசையில் சீராக அடுக்கி வைக்கப் பட்டன. முன்பு அப்படியிருக்கவில்லை. என் வசதிக்கேற்றார் போல் பொருட்களையும் கோப்புகளையும் வைத்திருந்தாலும் அதில் ஒரு ஒழுங்கிருப்பதை நான் அறிவேன். ஆனால் தேசிகன் அந்த ஒழுங்கை கலைத்து விட்டார். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சாமி படங்களுக்கு பூ வைக்கப்பட்டு ஊதுபத்தி ஏற்றப்பட்டிருந்தது. அவற்றினருகே வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள், அம்பேத்கர் மற்றும் கலாம் படங்கள் துடைத்து வைக்கப்பட்டிருந்தன. "அந்த சாமி படங்களை அகற்றி விடுங்கள்" என்றேன். "இன்னைக்கு வேணாம் மேடம். இன்னொரு நாள் செந்தில்கிட்ட சொல்லி கழட்டி வெக்கச் சொல்றேன்" என்றார்.
அன்று சனிக்கிழமை. ஜவ்வாது மலைப் பகுதிகளின் கிளை அலுவலகங்களுக்கு இன்ஸ்பெக்ஷன் செல்ல வேண்டியிருந்தது. அதிகாரி வருவதை முன்கூட்டியே தெரிவித்து அங்கு தேவையான ஏற்பாடுகள் செய்து விட்டதாக தேசிகன் கூறினார். "எந்த அறிவிப்பும் இல்லாமல் சென்றால்தான் அலுவலக பணிகளை துல்லியமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள முடியும்"என்றேன்
"எல்லாரும் டிரைபல் ஆளுங்க மேடம், பாவம் நாம திடுதிப்புனு போய் நின்னா பயந்துருவாங்க"என்றார்.
விருந்தினர் அறையில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள். தேசிகன் தன் மகளை உடனழைத்து வருவதாகக் கூறியிருந்தது நினைவிற்கு வந்தது. அந்த பெண்ணை அழைத்து சில நிமிடங்கள் உரையாடினேன். அவள் தனது முதுகில் பெரிய பை ஒன்றை சுமந்திருந்தாள். செஞ்சியில் தனது பாட்டி வீடு இருப்பதாகக் கூறினாள். நம்முடன் அவளும் வருகிறாளா என்றேன் தேசிகனிடம்.
"ஆமா மேடம், லீவ் தானேன்னு கூட்டிட்டு வந்தேன். நம்ம கூட இருந்துட்டு ரிட்டரன் வர்றப்போ நானும் அவளும் என் அப்பா வீட்டில் இறங்கிக் கொள்கிறோம்" என்றார். இதுவும் என்னை கேட்காமலேயே அவர் செய்த ஏற்பாடுகளில் ஒன்று.
சனிக்கிழமை பயணம் என்பதால் நான் அலுவலக வண்டியை வர வேண்டாமென்று கூறியிருந்தேன். எனது காரில் மூவரும் புறப்பட்டோம்.
செஞ்சி நெடுஞ்சாலையில் காரின் வேகத்தைக் கூட்டினேன். இதமான காலநிலை மனதிற்கு உற்சாகமளித்தது. தேசிகன் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு நாங்கள் செல்லவிருக்கும் அலுவலக பணியாளர்களை அழைத்து பலவிதமான கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். ஃப்ளாஸ்க்கில் டீ அல்லது காஃபி தயாராக வைத்திருக்குமாறு கூறினார். "மேடம் உங்களுக்கு டீயா காஃபியா" என்றார்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு டீ கடையில் வண்டியை நிறுத்தினேன். தேசிகனும் அவரது மகளும் காஃபி அருந்தினர். நான் தேநீர் வாங்கினேன். உடனே தேசிகன் அலைபேசியில் யாரையோ அழைத்து "மேடம் டீ குடிப்பாங்க..டீ வாங்கி வெச்சிருங்க" என்றார்.
அதற்குப் பிறகு நான் தேசிகனை பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ளச் சொன்னேன். அவர் யார் யாரையோ அழைத்து பேசினார்.
"காயத்ரி அங்கதான இருக்கா..இல்ல வேலைய விட்டு போய்ட்டாளா"
"சரி...அவகிட்ட ஸ்கூட்டி இருக்குல்ல... லஞ்ச் முடிச்சதும் மேடம் வாட்டர்ஃபால்ஸ் பாக்க ஆசப்படுவாங்க..லேடிஸ் யாராவது கூட்டிட்டு போகணும்"
"முப்பது கிலோமீட்டர்தான கெளம்பி வரச்சொல்லு சீக்கிரமா...மேடமும் நானும் முக்கால் மணிநேரத்துல வந்துருவோம்" என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.
தேசிகனும் அவரது மகளும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இருவரும் ஆளுக்கொரு பக்கம் கார் கண்ணாடி வழியே வெளியே பார்த்துக் கொண்டு வந்தனர்.
"மேடம்..உங்க குலதெய்வம் லஷ்மி நரசிம்மர்னு கேள்விப் பட்டேன்" என்றார் தேசிகன்.
"அப்படியா"என்றேன்.
"செந்தில் சொன்னாரு. நீங்க ஃபோன்ல யார்கிட்டயோ சொன்னீங்களாம்"
"ம்ம்ம்" என்றேன்.
"இங்க இஞ்சிமேடு நரசிம்மர் ரொம்ப ஃபேமஸ். ஃபாரின் ல இருந்து கூட வருவாங்க தரிசனம் பண்ண. வெர்ரி பவர்ஃபுல். நெனச்ச காரியம் நடக்கும். நீங்க கூட சார கூட்டிட்டு ஒரு முறை போய்ட்டு வாங்க. நான் அங்க ஃபோன் பண்ணி நம்ம ப்ரான்ச் ஆஃபீசுக்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன். தரிசனம் முடியுற வரைக்கும் கூடவே இருந்து எல்லாம் பார்த்துப்பாங்க" என்றார்.
தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த தேசிகனை இடைமறித்தேன்.
"தேசிகன் .. ரூல் 38 பனிஷ்மென்ட் ல வந்திருக்கீங்களா? அப்படி என்ன பண்ணிட்டீங்க" என்றேன்.
கேள்வியின் தொனியை உள்வாங்கியவர் ஒரு நொடி யோசித்துவிட்டு நிதானமாக
" அதொண்ணுமில்ல மேடம்..ஆஃபீஸர் காலனி ஆளு. நம்மள கண்டா ஆகல. தூக்கிட்டாரு" என்றார்.
"ம்ம்" என்றேன்.
அதற்குமேல் நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. நாங்கள் செல்ல வேண்டிய அலுவலகம் வந்து சேர்ந்தோம். 'மேல்ராயனூர் கிளை அலுவலகம்' என்று எழுதப்பட்டிருந்த பலகை புதிதாக பெயின்ட் அடிக்கப் பட்டிருந்தது. அலுவலகத்தின் வாசலில் ஊழியர்கள் கைக் கட்டி நின்றிருந்தனர்.
"நீங்க போங்க தேசிகன். நான் கார் பார்க் பண்ணிட்டு வர்றேன்." என்றேன்.
தேசிகனும் அவரது மகளும் காரிலிருந்து இறங்கினர். தேசிகன் கையசைத்ததும் இரண்டு இளைஞர்கள் ஓடி வந்தனர். அவரிடமிருந்து பையை வாங்கிக் கொண்டவர்கள் என்னிடம் வரத் தயங்கினார்கள். தேசிகன் "மேடம் ...கார் பார்க் பண்ண சொல்லவா" என்றார்.
நான் அவருக்கு பதிலேதும் சொல்லாமல் காரை ஒரு மரத்தடி நோக்கித் திருப்பினேன். மரநிழலில் காரை நிறுத்திவிட்டு இன்ஸ்பெக்ஷனுக்குத் தேவையான கோப்புகளை எடுத்துக் கொண்டு இறங்கினேன்.
அலுவலக வாசலில் வருக வருக என்று கோலமிடப் பட்டிருந்தது. ஊழியர்கள் அனைவரும் வாசலில் நின்று வணங்கி வரவேற்றனர். அலுவலகத்தின் மூத்த பணியாளர் எனக்கு சால்வை ஒன்றை பரிசளித்தார்.
"தேசிகன் சார்..எல்லாம் சொல்லிட்டாரு மேடம். எல்லாம் ரெடியாருக்கு. கெளம்பும்போது கார்ல கொண்டு வந்து வச்சிருவாங்க" என்றார் தலைமை ஊழியர். நான் தேசிகனைத் திரும்பிப் பார்த்தேன். அவர் கைக்கட்டி நின்று ஆமோதிப்பது போல் சிரித்தார். பனிஷ்மென்ட் போஸ்ட்டிங்கில் வந்திருந்த தேசிகனை அப்பொழுது பார்த்தேன்.
அலுவலகத்தில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லாத வகையில் கோப்புகள் அனைத்தும் தேதி வாரியாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கணக்கு வழக்கு சரியாக எழுதப் பட்டிருந்தது. அலுவலகத்தின் உள்ளும் புறமும் தூய்மையாக இருந்தன. கழிவறை சுத்தமாக கழுவப் பட்டு குழாயில் தண்ணீர் சொட்டாமல் மூடப்பட்டிருந்தது. புதிய பிளாஸ்டிக் பக்கெட்டும் மக் ஒன்றும் வைக்கப் பட்டிருந்தன. ப்ளீச்சிங் பவுடர் நெடி அதிகமாக இருந்தது.
ஆய்வு முடிய சரியாக அரைமணி நேரமே ஆனது. நான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். சுற்றிலும் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலரை அழைத்து அலுவலகப் பணியாளர்களின் சேவை மற்றும் அணுகுமுறை பற்றி கேட்டறிந்தேன். அனைவரும் சொல்லி வைத்தாற்போல் சேவையில் ஒரு சுணக்கமும் இல்லை. அலுவலக ஊழியர்கள் தங்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்துவதாக கூறினர்.
அலுவலகத்தினருகே இருந்த கோவிலில் ஏதோ விசேஷம் போல் தெரிந்தது. "குலசாமிக்கு கெடா வெட்டி பொங்கல் வெக்குறோம். மேடம் வர்றீங்களா" என்றார் ஒரு பெண்.
எனக்கும் வேலை பெரிதாக இல்லை என்பதால் நான் அவர்களுடன் செல்ல ஆயத்தமானேன். தேசிகனின் மகளிடம் 'வர்றியா' என்றேன். அவள் ஆட்சேபம் ஏதும் கூறாமல் என்னுடன் வர ஒப்புக் கொண்டாள்.
கோவில் என்று அடையாளப்படுத்த முடியாத அந்த சிறிய குடிலின் வாசலில் பெரிய மண் விளக்கில் தீபம் சுடர் விட்டு எறிந்து கொண்டிருந்தது. அதன் முன் அச்சு வெல்லம் அரிசிச் சோறு காய்கள் பழங்கள் தேன் தட்டுகள் என பல்வேறு விதமான படையல் பொருட்கள் வைக்கப் பட்டிருந்தன. குடிலின் இடப்புறம் கைகளில் ஆளுக்கொரு கோழியுடன் நீண்ட வரிசையில் ஆண்களும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர். பூசாரி ஒவ்வொரு கோழியாக வாங்கி பலி கொடுத்துவிட்டு மீண்டும் அவர்களிடமே கோழியை கொடுத்தார். அவ்விடம் இரத்தத்தால் சிவந்திருந்தது. தத்தமது குடும்பத்தினர் கூடியிருந்த இடத்திற்குச் சென்று கோழியைச் சுத்தம் செய்து நெருப்பிலிட்டு சுடத் தொடங்கினர். அந்த சூழலும் காட்சியும் என் மனதில் ஒருவித கிளர்ச்சியை தோற்றுவித்தன.
அப்பொழுது அலைபேசியில் அழைப்பு வந்தது. தேசிகன்தான் அழைத்தார்.
"மேடம் நீங்க சுத்தி பாத்துட்டு வர்றதுக்குள்ள இங்க லஞ்ச் ரெடி பண்ண சொல்லிரவா" என்றார்.
"வேணாம் தேசிகன் ..நான் உங்க வீட்டுக்கு லஞ்ச்க்கு வர்றேன். இன்ஃபார்ம் பண்ணிருங்க" என்றேன்.
"சரி மேடம்" என்றார் தேசிகன். நான் அழைப்பைத் துண்டித்து அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்தேன்.
அருகிலிருந்த இடங்களுக்கு காயத்ரி என்னை அழைத்துச் சென்றார். ஸ்கூட்டியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு ஒரு மலைப்பாதையை பிடித்து நடந்தோம். பரிச்சயமான இடம்போல் நான் செல்வைதைப் பார்த்த காயத்ரி
"மேடம் ..நீங்க ஏற்கனவே இங்க வந்திருக்கீங்களா"
"ம்ம் ..வந்திருக்கேன்" என்றேன்.
பணியில் சேர்ந்த புதிதில் ட்ரெயினிங் காலத்தில் எனது உயரதிகாரி அஷ்வினை காதலித்தேன். அவருடன் இங்கு வந்த பொழுது அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. நான் குழந்தையாக மாறி அருவியில் இறங்கி விளையாடியதை தூரத்தில் நின்று அவர் இரசித்துக் கொண்டிருந்தார். எங்கள் உறவு வெளியில் தெரியாமலிருந்த ஐந்து வருடங்களும் அவர் என்னை தூரத்தில் நிறுத்தியே இரசித்தார். அதை நான் கண்ணியம் என்று நினைத்து அவர் மேல் பெரும்பித்துக் கொண்டேன். "என்ன மனிதர் இவர். ஒரு பெண்ணைத் தொடாமலேயே இத்தனை வருடங்கள் நேசிக்க முடியுமா" என்று வியந்திருக்கிறேன். வார இறுதி நாட்களில் என்னை கிளப்புக்கு அழைத்து செல்வார் அஷ்வின். நான் புகைப்பிடிப்பதை நடனமாடுவதை அருகில் அமர்ந்து மணிக் கணக்காக இரசிப்பார். போதை மயக்கத்தில் என்னுடலில் கிளர்ந்தெழுந்த காமத்தை தனது அன்பின் வருடலால் மடைமாற்றுவார். வீட்டில் பத்திரமாக டிராப் செய்து விட்டுத் திரும்பும் பொழுது முதுகில் ஆதுரமாக தட்டிக் கொடுத்து அனுப்புவார்.
"ஏன் என்னைய தொட மாட்டேங்குறீங்க அஷ்வின்." என்றேன்.
"தொட்டாத்தான் காதலா சூர்யா. உன்னை பாத்தாலே என் உடம்பும் மனசும் நெறஞ்சிருது. என் ஃபோன் கேலரி முழுதும் உன் ஃபோட்டோஸ்தான். உன் உதட்டு மச்சம் மட்டுமே அம்பது ஃபோட்டோக்கு மேல இருக்கும். அத பாத்தாலே போதும். என் உடம்பு ஆடி அடங்கிரும். இதுக்கு மேல தொடவும் வேணுமா" என்றவரைப் பார்த்து கண் கலங்கி நின்றேன்.
ஒருமுறை அவரது மனைவி என்று கூறி ஒரு பெண் அழைத்தாள். நானும் அஷ்வினும் பேசிக் கொண்ட உரையாடலைப் படித்ததாகக் கூறினாள். நான் மிகவும் பதறிப் போனேன். என்னை விடவும் அஷ்வினின் நிலைப் பற்றி அதிகம் பதற்றம் கொண்டேன்.
"காவ்யா..அஷ்வின தப்பா நெனச்சிராதீங்க. அவர் மாதிரி ஒரு கண்ணியமான மனிதரைப் பார்க்க முடியாது. நான் அவரை மிகவும் மதிக்கிறேன். இத்தனை வருட நட்பில் ஒருமுறை கூட அவர் தவறாக என்னிடம் நடந்து கொண்டதில்லை. அவரது விரல் கூட என்மீது பட்டதில்லை" என்று ஏதேதோ உளறி வைத்தேன்.
"எப்படி படும் சூர்யா... உங்க கம்யூனிட்டி சர்டிஃபிக்கேட் பார்த்தேன்." என்று கூறிய காவ்யா, அஷ்வினுடனான எனது நட்பைத் துண்டித்துக் கொள்ளச் சொன்னார்.
(2)
மேல்ராயனூரிலிருந்து கிளம்ப ஆயத்தமானோம். தேசிகனின் மகள் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டு பெரிய பலா பழங்கள், இரண்டு பெரிய ஃபேன்ட்டா பாட்டில்களில் மலைத்தேன், ஐந்தாறு தலை சீவிய இளநீர் தேங்காய்கள், இரண்டு மூட்டைகள் அரிசி, கேழ்வரகு, கம்பு என காரின் பின்னிருக்கையில் அனைத்தும் ஏற்றப்பட்டன.
புறப்படும் பொழுது தலைமை ஊழியரை அழைத்து
"என்ன பண்றீங்க" என்றேன்.
அவர் "இருக்கட்டும் மேடம், எல்லாம் நம்ம பக்கத்துல கெடைக்குற பொருட்கள் தான"
தேசிகனும் மற்றவர்களும் மும்முரமாக அனைத்து பொருட்களையும் காரில் ஏற்றினர்.
கார் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தது. நான் தேசிகனைப் பார்த்தேன். அவரது முகத்தில் ஒருவித கலக்கம் தெரிந்தது.
"என்னாச்சு தேசிகன்" என்றேன்.
"ஒண்ணுமில்ல மேடம், அப்பா அம்மா ரெண்டு பேரும் ரொம்ப ஏஜ்ட். சமையல் எல்லாம் பெருசா செய்ய மாட்டாங்க"
"அவ்வளவுதானே. அவங்களுக்கு என்ன சமைக்க முடியுமோ அதை செய்யச் சொல்லுங்க. எனக்கு எல்லாமே ஓகே" என்றேன்.
சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவர் காரை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். காரிலிருந்து இறங்கியவர் சற்று விலகிச் சென்று அலைபேசியில் யாரையோ அழைத்துப் பேசினார். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தார் தேசிகன்.
"என்ன தேசிகன் ஆல் ஓகேதான?" என்றேன்.
"சொல்லிருக்கேன் மேடம் வீட்ல. அம்மா அப்பா மட்டும்தான் வீட்ல இருக்காங்க. அம்மாவுக்கு அடிக்கடி அருள் வரும். அதனால BP லோ ஆகிருது இப்பல்லாம். மந்திர உச்சாடனம் அதிகம் பண்ணாதன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறாங்க"
"ஓஹோ..எனக்கு நல்ல பசி வந்துட்டு தேசிகன் ..சமைச்சிருப்பாங்கல்ல அம்மா" என்றேன்.
"மேடம் நாம வேணா நல்ல ஹோட்டலா பாத்து சாப்பிட்டுருவோமா" என்று அவரது கண்களில் மின்னல் வெட்டியது.
"இல்ல..அதெல்லாம் வேணாம்..நாம உங்க வீட்டுலயே சாப்பிடுவோம்..கூப்பிட்டு இன்ஃபார்ம் பண்ணுங்க வந்துட்டிருக்கோம்னு" என்றேன்.
என் பிடிவாதம் அவருக்கு எரிச்சலாக இருந்தது போலும். அந்த கோபத்தை அவர் தன் மகள் மீது திருப்பினார். வழிநெடுக அவளை ஏதோ குறை சொல்லிக் கொண்டு வந்தார்.
தேசிகன் தன் வீடென அடையாளம் காட்டிய கட்டிடம் மீது பழங்காலத்து சாயல் அப்பியிருந்தது. எந்நொடியும் இடிந்து விழுந்து விடக்கூடும் என்கிற அளவில் வீட்டின் சுவரெங்கும் விரிசல்கள் விட்டு அதில் சின்னஞ்சிறிய அரச மரக் கன்றுகள் முளைத்திருந்தன.
வீட்டிற்குள் சென்று அமர்ந்து ஐந்து நிமிடங்கள் கழித்து ஒரு பெண்மணி வெளியே வந்தார். தேசிகன் அவரிடம் ஒரு பலாப்பழம், ஒரு ஃபேன்ட்டா பாட்டில் தேன், மூன்று இளநீர் காய்கள் மற்றும் அரிசி பருப்பு மூட்டை ஒன்றையும் ஒவ்வொன்றாக கொடுத்தார். அப்பெண் மகிழ்வுடன் அவற்றை வாங்கிக் கொண்டார்.
"என்ன தேசிகன் இதெல்லாம் உங்க ஷேரா?" என்றேன்.
"ஏதோ..ஏழப்பட்ட சனங்க பாசமா கொடுக்குறாங்க மறுக்க முடியுறதில்ல மேடம்" என்றார். "ஆனா பொருளெல்லாம் ஏ ஒன் ரகம் மேடம்..சுத்தமா தரமா இருக்கும். வீட்டுக்குப் போய் டேஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்க. நாள பின்னைக்கு ஏதும் வேணும்னாலும் வரவெச்சுக்கலாம். ஒரு வார்த்த சொன்னா போதும் வீட்டுக்கே கொண்டு வந்து அடுக்கிருங்க ஜனங்க" என்று அவர் பேசியதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். என்ன மாதிரியான மனிதர் இவர்.
தேசிகனின் தாய் என்னருகே வந்து அமர்ந்தார். கைகளில் கண்ணாடி வளையல்களின் எண்ணிக்கை அவர் வயதிற்கு சற்று அதிகமாக இருந்ததாக எனக்குத் தோன்றியது.
"சரி சாப்பிடலாம் தேசிகன் ..இப்பவே மணி மூணாகிருச்சு" என்றேன்.
அவர் தனது அம்மாவிடம் சைகையில் உணர்த்த அந்த பெண்மணி உள்ளே சென்று உணவுப் பாத்திரங்களுடன் வெளியே வந்தார். ஒரு கிண்ணத்தில் புளியோதரையும் மற்றொரு கிண்ணத்தில் தயிர் சாதமும் , ஒரு தட்டில் அரிசி வடகமும் மோர் மிளகாயும் இருந்தன.
"ஏழை வீட்டுச் சாப்பாடு ..மேடம்க்கு புடிக்குமான்னு தெரியல " என்றார்.
"ஏழையா நீங்களா..சரிதான்"
என்றேன்.
உணவு பறிமாறப்பட்டது. நான் உணவுண்ண தொடங்கிய சில நொடிகளில் பக்கத்து அறையிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. உடல் மெலிந்து தள்ளாடியபடி ஒரு முதியவர் வெளியே வந்தார்.
"மேடம்..இவர்தான் என் அப்பா. இவர் வாலன்டரி ரிட்டையர்மென்ட் குடுத்ததும் அந்த வேலைதான் எனக்குக் கெடச்சுது" என்றார் தேசிகன்.
நான் அந்த முதியவரைப் பார்த்து வணங்கி விட்டு மீண்டும் உணவுண்ணத் தொடங்கினேன். அவர் என்னெதிரே வந்தமர்ந்தார். அவரதுத் தோற்றத்தை மெல்ல உள்வாங்கினேன். அதற்குமேல் உணவுண்ண முடியாமல் தொண்டைக் குழி அடைத்துக் கொண்டது போலிருந்தது.
அவரது இடது கையில் கட்டை விரல் தவிர அனைத்து விரல்களின் எலும்புகளும் தேய்ந்து பழுத்து குன்றியிருந்தன. வலது கை விரல்களைச் சுற்றி துணி சுற்றப் பட்டிருந்தது. அதே போல் இரண்டு கால் விரல்களிலும் துணி சுற்றப்பட்டிருந்தது.
மேற்கொண்டு உணவுண்ண முடியாமல் நான் எழுந்து விட்டேன். அந்த முதியவரின் பார்வையில் ஒரு விஷமச் சிரிப்புப் படர்வதை நான் பார்த்தேன்.
"மேடம் பசிக்கலையா" என்றார்.
"ஆமா ..கார் ஓட்டிட்டு வந்தது வயிறு ஒரு மாதிரி பெரட்டுது" என்றேன்.
தேசிகனைப் பார்த்து "என்னாச்சு அப்பாவுக்கு" என்றேன்.
"தெரியல மேடம்..எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம் இருக்கும். திடீர்னு காய்ச்சல் வந்து கொஞ்ச நாள்ல இப்படி ஆகிருச்சு. போளூர் லெப்ரஸி ஹாஸ்பிடல்ல வெச்சு ட்ரீட்மென்ட் குடுத்தோம். ரொம்ப நாள் வெச்சிருக்க முடியாதுன்னு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. மருந்து சாப்ட்டா நார்மலா இருப்பாரு. அப்பப்ப வலி காய்ச்சல்னு கஷ்டப் படுவாரு" என்று கூறினார்.
அந்த முதியவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
"அப்பலாம் ஒரு வசதியும் கெடையாது. இந்த மொத்த செஞ்சி ஜவ்வாது மலை ஏரியாவுக்கும் நான்தான் ஒரே மெயில் சூப்பர்வைசர். ராகவன்னா தெரியாதவாளே இருக்க முடியாது. வேலையெல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கும். அய்யா அய்யான்னு ஒவ்வொருத்தனும் கைக்கட்டி நின்னு மணி ஆர்டர் வாங்கிட்டு போவான். ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ப்ளாஸ்டிக் டப்பா வெச்சிருப்பேன். யாரையும் கிட்ட நெருங்க விட மாட்டனே. என்ன மாதிரி மனுஷா நமக்கு தெரியாதோன்னோ .அந்த டப்பாவுல அவாளோட லெட்டர்ஸ் மணியார்டர் ஸ்லிப் பணம் எல்லாரும் போட்டுரணும். நான் அதுலேந்து எடுத்து பட்டுவாடா பண்ணிருவேன். பண்டிகை நாள் கிழமைன்னா அப்பலாம் லெட்டர்ஸ் வந்து குவியும்" என்று மூச்சு முட்ட பேசிக் கொண்டிருந்தார் ராகவன்.
அவ்வறை முழுவதும் நோய்மையின் நெடி ஊறுவது போலிருந்தது எனக்கு. அறையின் ஒரு மூலையில் மர நாற்காலியில் கால்களை ஒடுக்கி உட்கார்ந்திருந்த தேசிகனின் மகள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் ராகவனைப் பார்த்தேன், செல்லரித்துப் போன பொம்மை போன்ற அவரது உடலைப் பார்த்தேன். கண்ணாடி வளையல்கள் குலுங்கும் அவரது மனைவியின் கைகளைப் பார்த்தேன். ஃபேன்ட்டா பாட்டிலிலிருந்த தேனை கொஞ்சமாக சாய்த்து உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கி ருசிப் பார்த்துக் கொண்டிருந்த தேசிகனைப் பார்த்தேன். அறையின் மூலையில் அமர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது மகளைப் பார்த்தேன். என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்.
நான் அங்கிருந்து கிளம்ப சித்தமானேன். தேசிகனின் தாய் குங்குமம் எடுத்துக் கொள்ளுமாறு அழைத்தார். பூசையறையிலும் அதே கரப்பான் நெடி. சாமி படங்களின் பின்னால் நிற்க வைக்கப் பட்டிருந்த ஒரு குச்சியைக் காட்டி " இது எங்க அப்பாவோட அப்பா வெச்சிருந்தது. இத வெச்சுதான் அப்பலாம் பேய் ஓட்டுவாங்க. அது யார் யார்கிட்டயோ கை மாறி கடைசியா என்கிட்டயே வந்துருச்சு" என்று கூறினார். "பிள்ளை உண்டாகலன்னு நேத்து கூட ஒரு லேடி வந்து மந்திரிக்க சொல்லி கேட்டாங்க. "இந்த மாதிரி வேண்டுதலோட இன்னும் நெறைய பேர் இங்க அடிக்கடி வருவாங்க" என்றார். உள்ளிருந்து அழிந்துக் கொண்டிருந்ந அந்த கட்டிடமும் அவர்களும் ஒரே மாதிரிதான் எனக்குத் தெரிந்தனர் என்று அவர்களுக்கு எப்படி உணர்த்துவது என்று புரியாமல் வேகமாக வெளியேறினேன்.
"மேடம் நீங்க கூட எதாவது கேட்க நெனச்சா அம்மாகிட்ட கேளுங்க, தெளிவா பரிகாரம் சொல்லுவாங்க" என்றார் தேசிகன்.
காரை ரிவர்ஸ் எடுத்து வலப்புறம் திருப்புவதற்கு வாகாக நிறுத்தி விட்டு திரும்பிய பொழுது தேசிகன் வேகமாக காரை நோக்கி வந்தார்.
" மேடம் ..நாளைக்கு பெர்ணமல்லூர் கேஸ் விசாரிக்க போகணும்" என்றார்.
"ஏன் அங்கருந்து என்ன தகவல்" என்றேன்.
"ஃப்ராட் நடக்க அதிக வாய்ப்பிருக்குற ஏரியா அது"
"யார் அங்க ஆஃபீஸ் இன்சார்ஜ்"
"தனுஷ் குமார் னு ஒரு காலனி பயதான் இன்சார்ஜ். நாம உடனே அங்க இன்ஸ்பெக்ஷன் போறது பெட்டர்." என்றார் தேசிகன்.
"நான் யாருன்னு நெனச்சிங்க தேசிகன்" என்றேன்.
"புரியல மேடம்" என்று தயங்கினார் தேசிகன்.
"கேஸ்ட் பத்தி பேசல தேசிகன்...பொதுவா கேட்டேன்" என்றேன்.
தேசிகனும் அவருக்கு பின்னால் நின்றிருந்த அவரது தந்தையும் ஒரே உருவமாக தெரிந்தனர் அப்பொழுது.
நான் ஏக்சிலரேட்டரை அழுத்தியதில் கார் ஒரு மாதிரி உறுமியது. அஷ்வினின் முகம் ஏனோ அந்நேரம் என் மனதில் தோன்றி மறைந்தது.
தேசிகன் ஒரு புள்ளியாக மறையும் வரை நான் அவரைப் பார்த்தேன். அவரது கைவிரல்கள் முகம் கால் விரல்கள் என ஒவ்வொன்றாக தேய்ந்து குன்றி ஒரு புள்ளியாக மறையும் வரை நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



Comments
Post a Comment