பாபா

 பாபாவின் கடிதங்கள் வருவது நின்று ஐந்து வருடங்களாகின்றன.  பாபா தனது கடிதங்களுக்கு விலைவைத்த நாளில் நான் அவரது தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டேன். அது எனக்கு ஒருவிதத்தில் இழப்புதான் என்றாலும் நான் அப்படிச் செய்ததைக் குறித்து துளியளவும் வருந்தவில்லை.  ஐந்து வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரத்தில் நான் வேளாங்கண்ணியில் இருந்த பொழுது மீண்டும் பாபாவின் கடிதம் ஒன்று மின்னஞ்சலில் வந்திருந்தது. நான் அந்த கடிதத்தைத் திறவாமலேயே அழித்து விட்டேன்.

 பாபாவின் கடிதங்கள் வந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். அவரது கடிதங்கள் என்னை சுமார் நான்கு வருடங்களுக்கும் மேலாக உயிர்ப்புடன் வைத்திருந்தன. அப்பொழுது நான் சொற்களைத் தின்றுச் செரித்து உயிர் பிழைத்திருந்தேன். 

ஒவ்வொரு மாதமும் அம்மாதத்தின் கடைசி வாரத்தில் பாபாவின் கடிதம் என் மின்னஞ்சல் முகவரிக்கு வந்துவிடும். ஒவ்வொரு கடிதமும் அதனதன் இயல்பில் தனித்துவமானவை. 

 பாபாவின் முதல் கடிதத்தில் அவர் தன்னை ஒரு நாடோடியென்று அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கிருந்தோ தோன்றிய மேசியாவின் அறிவுரைகள் போல் அவரது கடிதங்கள் எனது மோசமான அனுபவங்களிலிருந்து என்னை மீட்டெடுத்தன.

  முதலும் கடைசியுமாக என் வாழ்வில் அப்பொழுது ஒரு கருக்கலைப்பு நடந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை, கென்னியின் விதை எனது கருவறையில் வேர்ப்பிடித்து வளர்வதை நான் விரும்பவில்லை. கென்னி  என்னருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனது மூச்சுக்காற்று அவ்வேளையில்  எனக்கு  பேரிடி போல் கேட்டது.


 கருக்கலைப்பிற்கு தேவையான செய்முறைகள் ஏதும் செய்யாமலேயே அந்த கரு என் வேதனையை தானே புரிந்து கொண்டு என்னை விட்டு வெளியேறியது.  நொடிந்து போன மனமும் உடலும் என்னை அசைவற்ற பிண்டமாக மாற்றியிருந்தன. 

கென்னியால் இத்தகைய நிலைக்குள் என்னை எளிதில் தள்ளிவிட முடியுமென்று அறிந்ததால்தானோ என்னவோ அவனது விதையும் வேர்விடாமலேயே அழிந்து கொண்டது. அது ஒரு தாய்க்கும் மகளுக்குமான புரிதல். தோன்றாமலேயே அழிந்து போதல். அப்படியென்றால் அவள் மகள்தான்.  


அன்றிரவு கணிணியைத் திறந்து மின்னஞ்சல் பெட்டியை கிளறித் தூசுத் தட்டினேன். கலைந்து போன எதையாவது சுத்தம் செய்து சீராக்க வேண்டும் போன்ற ஒரு மனநிலை.  மின்னஞ்சல் பெட்டியில் சிவப்பு நோட்டிஃபிகேஷன் மின்னியது. 'பாபாவிடமிருந்து கடிதம்' என்று தலைப்பிடப் பட்ட அந்த மின்னஞ்சல் இணைப்பை திறந்தேன். 

'டியர் மிஷெல்' என்ற தொடக்க வரியின் அணுக்கம் மனதிற்கு ஆசுவாசமாக இருந்தது.  உள்ளாடையை முழுதும் நனைத்துப் பரவிய இரத்தம் படுக்கை விரிப்பிலும் படர்ந்தது. மடிக் கணிணியை அருகிலிருந்த டீப்பாய் மீது வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்று ஷவரைத் திறந்தேன். தலையில் குளிர்ந்த நீர் விழுந்ததும் பின்னங்கழுத்தில் வெப்பமான ஒரு உணர்வு. செவிகளிலிருந்து வெப்பக் காற்று வெளியேறியதைப் போலுணர்ந்தேன். தலையைப் பிடித்துக்கொண்டு கால்கள் குத்திட்டு அமர்ந்து கொண்டேன். கசாப்பு கடையில் எப்பொழுதோ பார்த்த ஆட்டு இரத்தத்தின் வில்லைகளை நினைவூட்டுவதாயிருந்தன என் வழியே வெளியேறிய கருவறைக் கழிவுகள். 


உடலின் மொத்த இரத்தமும் வெளியேறியது போன்ற அயர்ச்சி. நான் குளியறை சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தேன். பார்வை இருட்டிக் கொண்டு வந்தது. ஷவரிலிருந்து கொட்டிய நீருடன் கலந்து அவ்விடமே சிவப்பு நிறக் குளம் போல் காட்சியளித்தது. என்னுடலின் வாசம் இவ்வளவு அருவருப்பானதா  என்பது போல் அவ்விடத்தில்  பச்சைக் குருதியின் நெடி மிகுந்தது. ரூம் ஃப்ரெஷ்னரை அடித்தும் பயனில்லை. சில நிமிடங்கள் அங்கேயே அசைவற்றுக் கிடந்தேன். 


கென்னி உறங்கிக் கொண்டிருந்தான். ஒரு வேளை அவன் விழித்திருந்து என்னிடம் ஏதும் பேச முயற்சித்திருந்தால் அங்கு ஒரு  தற்கொலை அல்லது கொலை ஏதாவதொன்று நடந்திருக்கக் கூடும். கென்னியின் சாம்பல் நிற குணம்தான் அதற்குக் காரணம்.  தனது மனதிற்கு ஆயிரம் வாசல்கள் வைத்திருப்பவன் அவன். எளிமையற்றவன்.  

  மனமும் உடலும் எப்பொழுதும் ஒரே மாதிரி இயங்குவதில்லை. என்னையுமீறி என் உடல் அவன் உடலின் கதகதப்பை விரும்பியது. அவனது உடல் மட்டும் போதும். அவனிடமிருந்து பெறுவதற்கு வேறெதுமில்லை என்று அவ்வபோது தோன்றினாலும் நான் என் மனதிற்கு பொய்யான நம்பிக்கை அளித்து சமாதானப் படுத்தி வந்திருக்கிறேன். காதல் என்ற நம்பிக்கை.  அந்த நம்பிக்கை என் கருவறையைக் கிழிக்குமளவிற்கு பாதகமாகிப் போனது. 

   அந்த மோசமான மனநிலையிலும் நான் காமத்திற்கு இடங்கொடுப்பதையெண்ணி வருந்தினேன்.  அவனது போர்வைககுள் நுழைந்து அவனை அணைத்துக் கொண்டேன். மனதின் சஞ்சலம் அதிகரித்தது. எனக்குள் நிகழும் எதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லாதது போல் அவன் உறங்கிக் கொண்டிருந்தது என்னை நிலைகுலையச் செய்தது. 

அவனை என் பக்கம் திருப்பினேன். உயிர் மட்டுமே என்னுடலில் மிஞ்சியிருந்தது போன்ற அந்நிலையிலும் அவனைப் புணரத் துணிந்தேன். அவன் மீது ஏறி அமர்ந்தேன். அவன் உறக்கம் கலைவது போல் தெரியவில்லை. அவன் கன்னத்தில் வேகமாகத் தட்டினேன். 


"கென்னி எந்திரி...கம் ஆன் கென்னி எந்திரி" 


"மிஷெல் ..என்ன பைத்தியமா புடிச்சிருக்கு உனக்கு..வாட் ஆர் யூ டூயிங்..யூ பிட்ச்..."என்று திமிறினான் கென்னி. என்னிடம் இவன் ஏன் கோபப்படுகிறான். நான்தானே கோபப்பட வேண்டும். 


"என்ன வுமன் நீ...கோ அவே..யூ பிட்ச்.." என்று என்னை அவன் மேலிருந்து தள்ளினான். 


"கொஞ்ச நேரம் கென்னி. ஜஸ்ட் ஹோல்ட் ஆன்...எனக்கு உன் முகத்துல சந்தோஷம் பாக்கணும்..ஜஸ்ட் ஹோல்ட் ஆன்.." என்றேன். 


"ஆர் யூ க்ரேஸி..ஏன் இப்படி அப்யூஸிவா பிஹேவ் பண்ற மிஷெல்..எனக்கு என்னவோ மாதிரி இருக்கு..விடு என்னை" என்று என்னை உதறித் தள்ளிவிட்டு எழுந்தவன் சட்டையை மாட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். 


நான் படுக்கையை சரி செய்தேன். பழைய விரிப்புகளை மாற்றி புதிய படுக்கை விரிப்புகளை விரித்தேன். தலையணை உறைகளையும் மாற்றினேன். ஒரு மனிதன் நம்மை விட்டு வெளியேறியதும் இவ்வளவு அமைதித் திரும்புமா என்பது போல் கென்னி அவ்விடம் விட்டுச் சென்றது எனக்கு ஆறுதலாக இருந்தது. கணிணியைத் திறந்துத் துழாவினேன். பாபாவின் கடிதத்தை படிக்கத் தொடங்கினேன்.


டியர் மிஷெல்,

இப்பொழுது நான் எங்கிருக்கிறேன் தெரியுமா.  திபெத்திய எல்லையில் இமய மலைச்சிகரங்களின் ஒரு மலை கிராமத்தில் தங்கியிருக்கிறேன். கடந்த ஒரு மாத காலம் என் வாழ்வின் மோசமான நாட்கள் என்பேன். கார்ப்பரேட் வேலையின் அழுத்தம் தாளாமல் வேலையை ரிசைன் செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பினேன். லட்சக் கண்க்கில் ஊதியம் ஈட்டிய வேலையை விட்டு வந்ததால் அப்பா அம்மா என் மேல் கோபமாக இருக்கிறார்கள். நான் ஒரு கோழை என்று அப்பா ஏசுகிறார். அவரிடமிருந்துத் தப்பித்தால் போதும் என்று வீட்டிலிருந்து கிளம்பி எங்கெங்கோ சுற்றித் திரிந்து இதோ இப்பொழுது இங்கே வந்து ஒரு வார காலமாகிறது. 


என்னை அவர்கள் வீட்டு விருந்தினராக இந்த குடும்பம் ஏற்றுக் கொண்டதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. ஒரு வாரமாக இவர்கள் வீட்டின் ஒரு அங்கத்தினனாக மதித்து உணவளித்து, இருக்க இருப்பிடம் தந்து கவனித்துக் கொள்கிறார்கள். இந்த குடும்பத்தில் ஒரு பெண் இருக்கிறாள்.  அவள் பெயர் லீமா. அவள்தான் வீட்டையும் தனது வயோதிக பெற்றோரையும் கவனித்துக் கொள்கிறாள். செம்மறியாடுகளை மேய்க்கிறாள். அவற்றின் ரோமங்களை சுத்தம் செய்து பதனிட்டு பின்னலாடை தயாரித்து வருவாய் ஈட்டுகிறாள். 


கடந்த மழை காலத்தில் ஒரு நாள் செம்மறியாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற அவளது தந்தை ஒரு பள்ளத்தில் விழுந்து அவரது  இரண்டு கால்களின் எலும்பும் முறிந்து படுத்த படுக்கையாகிப் போனார். அன்றிலிருந்து லீமா குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். 


லீமா தனது வயதையும் அழகையும் பொருட்படுத்தாமலிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவள் வயதையொத்த என்னை ஒரு முறை கூட ஏறிட்டுப் பார்ப்பதில்லை. விடிந்தவுடன் தொடங்கும் அவளது வேலைகள் இரவு வரை தொடர்கின்றன. தாய் தந்தையை கவனிக்கிறாள். ஆடுகளை பராமரிக்கிறான். வீட்டை சுத்தம் செய்கிறாள். உணவு சமைக்கிறாள். அனைவரும் உணவுண்ண அமர்கையில் என்னை வந்து அழைத்து விட்டுப் போகிறாள். தேவைக்குமதிகமாக ஒரு வார்த்தைக் கூட பேசுவதில்லை. எவ்வளவு நாட்கள் இங்கு தங்குவீர்கள் என்று அந்த குடும்பத்தின் யாருமே என்னைக் கேட்கவில்லை. 


மிஷெல், இங்கு அமர்ந்து கொண்டு, எங்கோ இருக்கும் உன்னிடம் இதெல்லாம் ஏன் கூறுகிறேன் என்று தெரியவில்லை. இதை நீ முழுவதுமாக படிப்பாயா என்று கூட தெரியவில்லை. ஆம் என் தந்தை கூறியது போல் நான் ஒரு கோழை. முகந்தெரியாத மனிதர்களுடன் உறவாடுகிறேன், பேசுகிறேன். என்னைச் சார்ந்தவர்களுடன் ஏற்படாத இணக்கம் ஏன் மூன்றாம் மனிதர்களிடம் ஏற்படுகிறது. நான் பொறுப்புகளை ஏற்கத் துணியாத கோழைதானோ தெரியவில்லை. இரவு உணவுக்கு நேரமாகிவிட்டது. லீமா இரண்டு முறை அழைத்து விட்டாள். நான் இப்பொழுது செல்கிறேன். மிஷெல், நீ விரும்பினால் எனக்குக் கடிதம் எழுதலாம். உன் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். ஏதாவது எழுது. 

          அன்புடன் 

           பாபா. 


கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்தேன்.  பாபாவிற்கான எனது முதல் கடிதத்தை அன்று எழுதினேன். சொற்கள் வரிகளாக, வரிகள் பத்திகளாக, பத்திகள் பக்கங்களாக மாறும் விந்தையை பரவசமாக என் விரல்கள் உணர்ந்தன. 


கடிதத்தில் என்ன எழுதினேன் என்று இப்பொழுது நினைவில்லை. பாபாவின் அடுத்தக் கடிதத்திற்காக காத்திருந்தேன். ஒரு மாதம் ஓடிய சுவடே தெரியாமல் பாபாவின் அடுத்த கடிதம் வந்த நாளில்தான் நேரத்தின் நீளம் உணர்ந்தேன். 


டியர் மிஷெல், 

இந்த உலகம் ஆண்களிடம் நிறையவே எதிர்பார்க்கிறது. நாங்கள் பலவீனமானவர்கள் என்பதை ஏன் இந்த உலகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இங்கு லீமாவைப் பார்க்கிறேன். கம்பீரமான பெண்ணாக எனக்கு அவள் தெரிகிறாள். ஆனால் அதை அவள் நம்ப மறுக்கிறாள். இத்தனை நாட்களில் நேற்றுதான் அவளுடன் பேசுவதற்கான வாய்ப்பு அமைந்தது. அவள் காணாமல் போன தனது மூத்த சகோதரனின் வரவிற்காகக் காத்திருப்பதாகக் கூறினாள். அவன் வந்து தனது தாய் தந்தையரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றாள். 

"ஏன் லீமா? நீ அவர்களை கவனித்துக் கொள்கிறாயே அது போதாதா?" என்றேன்.


அவள், "நான் பார்த்துக் கொள்வதில் அவர்கள் மனம் திருப்தியடையவில்லை. அவர்கள் தங்கள் மகனை எதிர்பார்க்கிறார்கள். என்னை மரணம் தழுவுமுன் என் மகன் வந்துவிட வேண்டும் என்று நேற்றிரவு பிரார்த்தனையின் போது அப்பா வேண்டிக் கொண்டார்" என்றாள்.

"சரி, உன் சகோதரன் எங்கு சென்று விட்டான்" என்றேன்.


"தெரியவில்லை, ஒருநாள் யாரிடமும் ஏதும் சொல்லாமல் இங்கிருந்து சென்று விட்டான். அதன் காரணம் என்னவென்று எங்களுக்குப் புரியவில்லை. அவனுக்கு இங்கு எந்த குறையும் இருக்கவில்லை" என்றாள். 


மிஷெல், லீமாவின் கூற்றைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய். நான் கூறுவது சரிதானே. இந்த உலகம் ஆண்களை வலிமையானவர்கள் என்று நினைக்கும் முட்டாள்தனத்தை எப்பொழுது கைவிடும். உனக்கு இது பற்றி தோன்றுவதை நீ எழுது. 

       அன்புடன்

         பாபா.


கடிதத்தை மறுவாசிப்பு செய்தபின் நான் எனது வேலைகளில் மூழ்கிப் போனேன். பாபாவின் கேள்வி மட்டும் மனதில் எதிரொலித்தபடியே இருந்தது. ஆண்களிடம் இந்த உலகம் ஏன் அதிகமாக எதிர்பார்க்கிறது. அவர்கள் பலவீனமானவர்கள் என்று ஏன் நம்ப மறுக்கிறது. 


கென்னியைப் பற்றிய நினைவுகள் என் மனதை ஆக்கிரமித்தன. ஒரு வகையில் அவனை நான் துன்புறுத்தவே செய்திருக்கிறேன் என்ற குற்றவுணர்ச்சி மனதை நெறித்தது. அவனை அழைத்துப் பேசலாமா என்று கூட தோன்றியது. ஆனால் நான் அதை செய்யவில்லை.  கென்னி, பாபா, லீமாவின் சகோதரன், லீமாவின் தந்தை ஆகிய ஆண்களின் இயலாமைகள் என் கேள்விகளின் பதில்களாக விரிந்தன. இரண்டாம் முறை நான் பாபாவிற்கு கடிதம் எழுதவில்லை. அவரது கடிதங்கள் சரியான இடைவெளியில் என்னை வந்து சேர்ந்தன. 


நான் நாடகக் கலை பயிற்சி மையம் ஒன்றில் கணக்கராக சேர்ந்து இரண்டு மாதங்களாகியிருந்தன. பாபாவின் கடிதங்களை வாசிப்பதிலும். தோன்றினால் அவற்றுக்கு பதிலெழுதுவதும் அல்லது அமைதி காப்பதுமாக என் நாட்கள் நகர்ந்தன. உறவுப் பேணலுக்கு நேரமும் உரையாடலும் போதுமானது என்று எனக்குப் புரியத் தொடங்கிய அந்நாட்களில் நான் தனி மனுஷியாக இருப்பதில் நிறைவை உணர்ந்தேன். 


பாபா,அலஹாபாத்தின் கங்கை கரையில்  சந்தித்த காலாமுகர்களைப் பற்றி சுவாரசியமான ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  கடுங்குளிர் வாட்டும் பனிகாலத்தில் கங்கை கரையில் தீ மூட்டி கடுந்தவம் புரியும் சாமியார்களுடன் தானும் சேர்ந்து கொள்ள ஆசைப் படுவதாக எழுதியிருந்தார். கடிதத்தில் இடம்பெற்றிருந்த வருணனைகள் எனக்கு மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தின. பாபாவின் கடிதங்கள் வாயிலாக நான் அவர் சென்ற ஒவ்வொரு இடத்திற்கும் மனோமார்க்கமாக சென்று வந்தேன். பாபாவிற்கு நீண்ட கடிதங்கள் எழுதினேன். நான் எழுதுவதற்கு பதிலெழுதி இதுவரை ஒரு கடிதமும் பாபாவிடமிருந்து வந்ததில்லை. அவர் தன் போக்கில் எழுதுவார். அதில் சில சமயம் எனக்கான பதில் பொதிந்திருக்கும் அல்லது எனது மன வெளிப்பாடுகளுக்கு சற்றும் பொருந்தாத புது வெளிகளத் திறந்து வைக்கும் வகையில் அது அமைந்திருக்கும். எப்படியோ நானும் பாபாவும் அவரவர் அலைவரிசையில் ஏதோ ஒரு புள்ளியில் மட்டும் இசைந்து பின் விலகிக் கொண்டோம். 


நான் இயக்கவிருக்கும் முதல் நாடகமான் "பாஞ்சாலி சப்தம்" பற்றி பாபாவிற்கு ஆர்வமாக எழுதினேன். தவறாக படித்து விடாதீர்கள் அது பாஞ்சாலி சபதமல்ல பாஞ்சாலி சப்தம் என்று தெளிவாக எழுதினேன். பாபாவின் அடுத்த கடிதத்தில் என் நாடகத்தைப் பற்றிய எந்த கேள்விகளுமில்லை. அவர் அலஹாபாத்திலிருந்து கொல்கத்தா பயணிப்பதாக தனது அடுத்த கடிதத்தில் எழுதியிருந்தார். இரயிலில் வாங்கி சாப்பிட்ட ரொட்டியும் பருப்பும் தரமில்லாத போகவே கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.

" கொல்கத்தாவின் பழைய வீதிகளில் ஒரு மேன்ஷனில் குறைந்த வாடகைக் கொடுத்துத் தங்கியிருக்கிறேன். நோய் ஒரு மனிதனின் மனத் திடத்தை அசைத்துப் பார்க்கிறது. அம்மா சமைக்கும் உணவையும் அப்பாவின் அரவணைப்பையும் மனம் நாடுகிறது மிஷெல். தனிமனிதனின் அகங்காரத்தினால் விளையும் எண்ணங்களுக்கு நோய் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. நமக்கானவர்கள் யார் இருக்கிறார்கள் என்று தேட வைத்து விடுகிறது இந்த நோய். நீயும் நான் சொல்வதை ஆமோதிக்கிறாயா. அதைப் பற்றி எழுது.

         அன்புடன் பாபா.


எனக்கு பாபாவின் மீது சிறிது கோபம் இருக்கவே செய்தது. என் உளக்குமுறல்களுக்கு எந்தவொரு பதிலும் தர முயலாதவர் தனது குமுறலுக்கு மட்டும் ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும் என்னிடம் பதில் கேட்பது என்ன நியாயம். நானும் அதற்கு பதிலளித்து எழுதுவது என்ன பலவீனம் என்று யோசிக்கலானேன். நான் அன்று பதில் கடிதம் எழுதவில்லை.


அடுத்த சில வாரங்களில் பாபாவின் கடிதம் வந்தது. உடல் நலம் தேறிவிட்டதாக அதில் எழுதியிருந்தார். நீ ஏன் பதில் எழுதவில்லை என்று என்னை கேட்கவில்லை. 

"ஒரு நல்ல எழுத்தாளர் சிறந்த தேநீர் தயாரிப்பவராகவும் இருப்பார். உனக்கு சுவையான தேநீர் தயாரிக்கத் தெரியுமா மிஷெல். தெரியுமென்றால் நீயும் ஒரு எழுத்தாளரே." என்று அந்த கடிதத்தை முடித்திருந்தார். 


 வெவ்வேறு திசையில் சுழற்றியடிக்கும் காற்றாக மாறி பாபாவின் கடிதங்கள் ஒவ்வொரு முறையும் என்னை புதியதொரு பரிமாணத்திற்குள் தள்ளின. வடிவங்களுக்குள் சிக்காத ஓவியம் போல் நானும் பாபாவும் எங்கள் தூரிகைகள் கொண்டு ஒருவருக்கொருவர் புது வண்ணங்கள் பூசிக் கொண்டோம். 


தேநீர் தயாரிப்பது குறித்து பாபாவிற்கு பதிலெழுதினேன். "சிறந்த முறையில் தேநீர் தயாரிக்கக் கூடியவள் நான். அதனை நீங்கள் எழுத்தோடு ஒப்புமைப் படுத்திய விதம் நன்றாக இருந்தது." என்று எழுதினேன். 


பாபாவின் அடுத்த கடிதம் கிடைக்கப் பெற்றபொழுது சில மாதங்கள் கடந்திருந்தன. இடையில் நான் எழுதிய இரண்டு கடிதங்களுக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. காத்திருப்பு என்று திட்டவட்டமாக கூற முடியாவிட்டாலும் மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷன் பார்க்கும் பொழுது எதிர்பார்ப்பின் சிறு பொறி மனதில் மினுங்கவே செய்தது. அது அப்படியே அமிழ்ந்தும் போனது. 


கென்னியின் திருமண அழைப்பிதழ் மின்னஞ்சலில் வந்திருந்தது. அவனை வாழ்த்தி மடலெழுதினேன். அவன் மீது நான் கொண்டிருந்த வெறுப்பு முற்றிலும் மறைந்து போனது குறித்து ஆச்சரியமாக இருந்தது. நேசம் போலவே வெறுப்பும் தற்காலிகமான ஒரு உணர்வுதான் என்று புரிந்த பொழுது நான் கென்னியை விட்டு வெகு தூரம் கடந்து வந்திருந்தேன். ஒரு வகையில் பாபாவுடனான வகைதொகையற்ற தலைசுற்றல் போன்ற உறவின் விளைவாகக் கூட  இருக்கலாம். முகவரி தொலைத்து விட்ட ஒருத்தி ஏதேதோ ஊர்களெல்லாம் பயணித்து கடைசியில் தனக்குப் பிடித்தமான ஒரு ஊரை கண்டடைந்து அதில் சிறு குடில் அமைத்து வாழ்வதைப் போல் நான் வாழத் தொடங்கியிருந்தேன். பாபாவிற்கு நன்றி கூறி கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது. 

இந்த உலகம் ஆண்களிடமிருந்து ஏன் அதிகமாக எதிர்பார்க்கிறது என்கிற வரி சட்டென நினைவிற்கு வந்தது. நான் கடிதம் எழுதவில்லை. 


பாபாவுடனான உறவும் முறிந்து போகும் என்று எனக்கு உணர்த்திய கடிதம் அது. பாபாவின் கடைசி கடிதம்.

டியர் மிஷெல்,

நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும். பாபாவின் கடிதங்கள் என்ற எங்களது செயலி வாசகர்கள் மத்தியில் பெரிய வரவேற்புப் பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதே வேளையில் இந்த செயலியை மேலும் விரிவுப் படுத்தி, எழுதுவதில் ஆர்வமிருப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இதன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு பண உதவி தேவைப்படுகிறது. இனி இந்த செயலியின் கடிதங்களை நீ பெற விரும்பினால் மாதம் எண்ணூறு ருபாய் கட்டினால் மட்டுமே அது சாத்தியமாகும். பாபாவின் கடிதங்கள்  ப்ரீமியம் மெம்பர்களுக்கு மட்டுமே இனி கிடைக்கும். நம் உறவு வருடங்கள் கடந்து தொடர்வதால் நீ இந்த ப்ரீமியம் திட்டத்தில் சேர தாமதிக்கமாட்டாய் என்று நம்புகிறேன். பாபாவின் கடிதங்கள் உன்னை ஏமாற்றாது வந்தடைய உடனே கட்டணத் தொகையை செலுத்தவும்

             அன்புடன்

             அட்மின்

       ( பாபாவின் கடிதங்கள் )


கென்னியை பிரிந்த அந்த நாளை நினைத்துப் பார்த்தேன். அவனை வன்புணர்ந்து காயப்படுத்தி என்னிடமிருந்து வெளியேற்றியபின் பாபாவிடம் தானாக சென்று தஞ்சம் புகுந்து கொண்ட என் மனதின் நோய்மையை நினைத்துப் பார்த்தேன் கென்னி என்பவன் மனிதன். ஆனால் பாபா? மனித மூளைகளின் கூட்டுத் திட்டத்தால் உருவான ஒரு செயலி. அதன் அரவணைப்பில் ஐந்து வருட காலம் வாழ்ந்ததை என்னவென்று புரிந்து கொள்வது. இந்த மனத்திற்கு எதையாவது சார்ந்திருப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாதா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். 


ப்ரீமியம் தொகை கட்டி செயலியை புதுப்பிக்க நான் விரும்பவில்லை. பாபா என்னைப் பொறுத்தவரை ஒரு ஆண். நான் பெண் என்பதால் ஆண்பால் கண்ணோட்டத்தில் வந்த கடிதங்கள் மற்றொரு ஆணுக்கு பெண்பால் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கும் என்பது புரிந்தாலும் என்னளவில் பாபா என்பவர் ஐந்து வருட காலம் நான் பழகிய ஒரு முகந்தெரியாத ஆண். 


இன்று, மீண்டும் பாபாவிடமிருந்து கடிதம் என்று மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷன் அறிவித்திருக்கிறது. நான் அந்த மின்னஞ்சலைத் திறக்கப் போவதில்லை. நான் ப்ரீமியம் மெம்பர் அல்லவே. பின் எப்படி பாபாவின் கடிதம் எனக்கு வந்திருக்கிறது. ஒரு வேளை செயலியின் அட்மின் அனுப்பிய டிஃபால்ட் தகவலாக இருக்கலாம். நான் அந்த கடிதத்தைத் திறவாமலேயே டெலீட் செய்தேன். 

இந்த உலகம் ஆண்களை  பலம் பொருந்தியவர்கள் என்று ஏன் நம்புகிறது? என்று ஒரு முறை என்னிடமே கேட்டுக்கொண்டேன். 

(பி:கு)

திறக்கப்படாமலேயே அழிந்து போன அந்த கடிதத்தில் எழுதியிருந்தது பின்வருமாறு,

டியர் மிஷெல்,

நான் கார்ப்பரேட் வேலையில் சேர்ந்திருக்கிறேன். ஹைதராபாத்தில் வேலை கிடைத்திருக்கிறது. அம்மா அப்பாவை உடனழைத்து வந்திருக்கிறேன். உன் கடிதங்கள் என்னை சில காலம் உயிரோடு வாழ வைத்தன.  செயற்கை விளக்குகளுக்கு கண் கூசும் இந்த வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்க உதவிய உனது எழுத்து எனக்கான வரம். எனக்கு எழுது மிஷெல். 

            அன்புடன் 

               கார்த்திக்.

               உனது பாபா. 








  


 



Comments

Popular posts from this blog

ஹருகி முராகாமி- யதார்த்தத்திற்கு வண்ணம் பூசும் எழுத்து.

Light and Thread

ஊமை அழுக்கு