ருத்ரம் நமகம் சமகம்!
இருபது வருடங்கள் முன்பு வரை பிராமின்ஸ் என்றழைக்கப் படும் சமூகத்தினர் மற்ற வகை மனிதர்களோடு இணக்கம் கொள்ளாதிருந்தனர். அந்தரங்கமாக அவர்களது செயல்பாடுகள் வேறு விதமாக இருந்தாலும் பொதுவெளியில் அவர்கள் மற்ற சாதியைச் சேர்ந்தவரிடமிருந்துத் தள்ளியே இருந்தனர்.
அந்த நிலை இப்பொழுது மாறியிருப்பதாகத் தோன்றுகிறது. பிராமின்ஸ் கொஞ்சம் விதி தளர்த்தல் செய்திருக்கின்றனர் போலும். சென்ற வாரத்தில் ஒரு நாள் என் தோழி ஒருவரின் தாய் தந்தைக்கு எழுபதாம் கல்யாணம் செய்வதாக அழைப்பு வந்திருந்தது.தோழியின் தாய் பிராமணர் தந்தை ஆதி திராவிடர். குடும்பமும் சுற்றமும் அவர்களை விலக்கி வைத்த வன்மத்தை பெரும்பணக்காரர்களான பிறகு அவர்கள் தீர்த்துக் கொள்ள நினைத்தனர்.
பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்து கோலாகலமாக "பீம ரத சாந்தி" நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். அவரது மகனும் மகள்களும் அப்பாவிகளாக நின்று அனைவரையும் விருந்தோம்பி வரவேற்றனர். அபபன் ஆத்தாளின் மனதில் கொழுந்தெழுந்த வன்மத் தீயில் புடமிடப் பட்ட அமைதி அவர்களது முகத்திலும் குணத்திலும் மிளிர்ந்தது.
அதிகாலைத் தொட்டே பரபரப்பாகியிருந்த அவர்களது வீட்டில் முதன்முறையாக பல வித வேள்விகளை நடத்தத் திட்டமிட்டிருந்தாள் அந்த பிராமணத்தி அம்மாள். நானும் அதிகாலையிலேயே அங்கு சென்று விட்டேன். விடிந்தும் விடியாததுமாக ஒரு சுமோ கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. காரினுள்ளிருந்து வில்லனின் அடியாட்கள் இறங்கி வருவார்கள் என்று நினைத்தேன். மாறாக, வெண் பூணூல் தரித்து, பஞ்ச கச்ச வேஷ்டிகள் அணிந்த ஏழெட்டுப் பேர் வேகமாக இறங்கி வந்தனர். வந்தவர்களின் தலைவன் போல் தெரிந்த ஒருவர் அங்கு நின்றிருந்த அனைவரையும் பார்த்து ரஜினிகாந்த் பாணியில் வணங்கி விட்டு படியேறிச் சென்றார். அவரைத் தொடர்ந்து அவரது சிஷ்யக் கோடிகள் சென்றனர். எனக்கு பின்னணியில் "பாஷா, பாஷா" பிஜிஎம் ஒலிப்பது போல் கேட்டது.
வீட்டிற்குள் நுழைந்த வேத வித்துக்கள் இராணுவ கதியில் வேள்விக்கான ஏற்பாடுகளை செய்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டம்மாள் அவர்கள் கேட்ட லிஸ்ட் படி அனைத்துப் பொருட்களையும் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வைத்திருந்தாள். அவளது கணவரான ஆதிதிராவிட கதாநாயகன் தனக்குக் கிடைக்கப் போகும் பெரும்பேற்றை எண்ணியெண்ணி சிலாகித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வீட்டின் நடுநாயகமாக ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து அவர் தனது வைபவ ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
வீட்டின் முதலாளி அம்மாள் ஐயர் பாணி மடிசார் அணிந்து வலம் வந்தாள். தலைமை குருக்களுடன் ஓயாது சம்பாஷித்துக் கொண்டிருந்தாள். அவளது மடியுடன் ஒரு ஹேன்ட் பவுச் தொங்கியது. அதிலிருந்து ருபாய் நோட்டுகளை அவள் அள்ளி வீசிக் கொண்டிருந்தாள். தலைமை குருக்கள் தன்னை சுவாமிநாத தீட்சிதர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். அவர் தலைசாய்த்து வீட்டம்மாளிடம் ஏதோ கூறிய பொழுதெல்லாம் அந்தம்மாள் தனது ஹேன்ட் பவுச்சைத் திறந்து ஒரு ரூபாய் நோட்டை எடுத்தாள். பெரும்பாலும் அது ஐநூறு ரூபாய் தாளாக இருந்தது.
சகல ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. வேள்வி குண்டத்தில் சகலவித திவ்விய மூலிகைகள் இடப்பட்டு பசுநெய் ஊற்றப்பட்டு தீ மூட்டப்பட்டது. சுவாமிநாத தீட்சிதர் வீட்டின் தலைவரைப் பார்த்து திருவாய் மலர்ந்தார்.
"இங்க பாருங்கோ, இன்னைக்கு இங்க வந்திருக்கவாளெல்லாம் சாதாரணவா இல்ல. எல்லாம் வேதபாடசால வாத்யார்கள். அவா இங்க வந்திருக்கான்னா நீங்க போன ஜென்மத்துல பண்ணின புண்ணியம். புரிஞ்சதா? அதனால வந்தவாள சேவிச்சுட்டு அந்த நாற்காலிய உக்காருங்கோ. எங்கள பொறுத்த வரைக்கும் "நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்" அப்டின்னு நம்புறவா. நீங்க பெரிய தர்மவான் னு மாமி சொன்னா. அதனாலதான் இன்னைக்கு உங்களுக்கு இதெல்லாம் நடக்கறது" என்று ஆதிதிராவிட பெருமானைப் பார்த்து கூறினார். வீட்டம்மாளின் கை ஹேன்ட் பவுச்சை நாடியது.
வேள்வித் தீ மூண்டது. சிவனும் பார்வதியும், மகாவிஷ்ணுவும் லட்சுமியும், பிரம்மனும் சரஸ்வதியும் மற்றும் சப்த ரிஷிகளும், தேவர்களும் அங்கு வருகைத் தந்திருப்பதாக சமஸ்கிருத ஸ்லோகத்தைத் தமிழில் மொழிப் பெயர்த்துக் கூறினார் சுவாமிநாதன். கூட்டத்தில் ஒருத்தியாக அமர்ந்திருந்த எனக்கு அவரது செயல்பாடுகள் பிடித்திருந்தன. அனைத்து தேவ துதிகளையும் தமிழில் மொழிப் பெயர்த்து கூறியது அங்கு கூடியிருந்தவர்களின் கவனத்தை வேள்வியின் பக்கம் திருப்பியது. வீட்டுப் பணியாளர்கள் முதற்கொண்டு அனைவரும் வேள்வியின் முன் அமைதியாக வந்து அமர்ந்தனர்.
ருத்ரம் எனும் சிறப்பு வாய்ந்த மந்திரத்தை வாத்யார்கள் கூறத் தொடங்கினர். சுவாமிநான் எங்களனைவரையும் அலர்ட் செய்தார். "இப்ப இவா சொல்லப் போற மந்திரம் ரொம்ப பவர்ஃபுல் மந்திரம். இத சொல்றது ரொம்ப கஷ்டம். பல்லெல்லாம் உதிர்ந்து போற அளவுக்கு வலிச்சிரும். அவ்ளோ சிரமப்பட்டு கத்துண்டு இவாள்ளாம் சொல்றா. உடம்பு அவ்ளோ ஹீட் ஆகும் இத கத்துக்கறச்சே. அதனால எல்லாரும் கவனமா கேளுங்கோ" என்று கூறினார்.
அவர் கூறியது போலவே 'ருத்ரம்' ஜபிக்கப் பட்ட பொழுது அங்கு வேறொரு உணர்வு நிலை படர்வதை என்னால் உணர முடிந்தது. மனம் தானாகவே ஒருமுகப் பட்டது. எண்ணங்கள் ஏதும் ஆக்கிரமிக்காமல் மனம் அந்த ஒலியில் மட்டும் நிலை கொண்டது.
வேள்வித் தீ நிதானமாக எரிந்து கொண்டிருந்தது. சுவாமிநாத தீட்சிதர் தனது சிஷ்யர்களின் மந்திர உச்சாடன பக்குவத்தை தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்தார். உச்சரிப்பில் தவறு நிகழும்பொழுது அவர் அவர்களை தடுத்து மீண்டும் அதே ஸ்லோகத்தை சொல்ல வைத்தார். அவர்களும் முகஞ்சுழிக்காமல் வாத்தியாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். வீட்டம்மாளும் அவரது கணவரும் முதுமை காரணமாக அவ்வபொழுது தூங்கி வழிந்தனர். அவர்களுக்கு சரியான இடைவெளியில் காபி கொடுக்கப் பட்டது.
வேள்வி ஜபங்கள் ஓங்கி ஒலித்தபடி இருக்க அக்கம் பக்கத்தினரும் வந்து எட்டிப் பார்த்தனர். வீட்டு எசமானருக்கு நிலைகொள்ளா பெருமிதம். தன் வாழ்நாளில் இப்படியொரு கெளரவம் அவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது என்பது போல் தனது மனைவியான பிராமணத்தியை நொடிக்கொரு முறை ஆதுரமாக பார்த்து சிரித்தார். அந்தம்மாள் அவர் பக்கமே திரும்பவில்லை. அவளது கவனம் முழுக்க வேள்வியின் மீதும் பார்க்க வந்திருக்கும் சுற்றத்தார் அக்கம் பக்கத்தினரின் மீது மட்டுமே இருந்தது. தனது பிள்ளைகள் மூவரையும் பம்பரமாக சுழல வைத்தாள். அவர்கள் அவளது சாட்டைக்கு பழக்கப் பட்டவர்கள்தான் என்றாலும் அன்று தங்கள் தாயின் இயல்பில் உக்கிரம் கூடியது போலிருந்தது.
வேள்வி முடிந்து, நிவேதன சம்பிரதாயம் முடிந்து, தம்பதியினருக்கு புனித நீராட்டு முடிந்து, உணவு பரிமாறப்பட்டு வைபவம் ஒரு வழியாக முடிந்தது. நானும் எனது தோழியுடன் சேர்நது அனைவரையும் கவனித்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன்.
"எல்லாம் நன்னா முடிஞ்சதா மாமி, குறையொன்றுமில்லையே" என்றார்.
அந்தம்மாளின் பூரிப்பு கண்களையும் மீறி முகத்தில் வடிந்தது. தனது செல்லப் பிராணி போல் பழக்கியிருந்த தனது கணவனை அழைத்தாள். அவரும் குழைந்து கொண்டே ஓடி வந்து அனைத்து பிராமணர்களையும் கைக் கூப்பி வணங்கினார். சுவாமிநாதன் மாமா அவரைத் தொடாமல் ஆசி வழங்கினார். தன்னுடன் வந்த டீமை அழைத்தார். வீட்டம்மாள் ஒவ்வொருவரிடமும் போத்தீஸ் கட்டைப் பையில், பட்சணங்கள், புத்தாடைகள், மங்கலப் பொருட்கள் நிரப்பிக் கொடுத்தாள். அவர்கள் வாங்கிக் கொண்டதும் தனது ஹேண்ட் பவுச்சைத் திறந்து ரப்பர் பேன்ட் கொண்டு சுற்றி வைக்கப் பட்டிருந்த ஐநூறு ரூபாய் கத்தைகளை ஆளுக்கொன்றாக ஏழு பேரிடமும் தந்தாள். சற்றே பெரிய கத்தை சுவாமிநாதன் மாமாவிற்கு சென்றது.
வீட்டம்மாளும் அவளது கணவரும், பிள்ளைகளும் வாசல் வரை வந்து அவர்களை வழியனுப்ப நின்றிருந்தனர். சுவாமிநாதன் தீட்சிதர் அனட் டீம் சுமோவில் ஏறி புறப்படத் தயாராகினர். அங்கு நின்றிருந்த அனைவரையும் பார்த்து ஒரு அரசியல் தலைவர் போல் கையசைத்த சுவாமிநாதன் வீட்டம்மாளின் மகளை அருகில் அழைத்தார். "பாத்துண்டிருந்தேன்.. நன்னா லயிச்சு கவனிச்சேள் ஹோமத்தை." என்றார். அவள் அவரை வணங்கி சிரித்தாள்.
"என்ன பண்றேள்" என்றார்.
"எழுதுறேன்" என்று பணிவாக அவள் கூறினாள்.
"ஓ, ரைட்டரா, பேஷ்..பேஷ்"
"ஒண்ணு பண்ணுங்கோ, குரு ஆக்டிவேஷன் ஹோமம் ஒண்ணு பண்ணிருங்கோ. குருதான் எழுதறவாளுக்கு கடவுள். அவர ஆக்டிவேட் பண்ணிட்டா ஓஹோன்னு வந்துருவேள். எப்பன்னு சொல்லுங்கோ, நானும் என் டீமும் வந்து பேஷா பண்ணி குடுத்துருவோம். " என்று கூறிவிட்டு சுமோவின் பிரதான சீட்டில் ஏறி அமர்ந்தார். அவரைப் பார்க்க ஒரு கேங் லீடர் போல் தெரிந்தது.
வீட்டம்மாள் வீட்டிற்குள் செல்ல அவளது கணவர் அவளைப் பின் தொடர்ந்து சென்றார். காலியான தனது ஹேன்ட் பவுச்சை கழற்றி வீசினாள் அந்தப் பெண். வேள்வி குண்டத்தில் தீ அணைந்த பின்னும் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது.
"நெருப்பிற்கு அனைத்தையும் சுத்திகரிக்கும் குணமுண்டாம், அதனாலதான் இந்த ஹோமத்தை ஆர்கனைஸ் பண்ணேன்" என்று தன் மகளிடம் பெருமையாக கூறினாள் மாமி.
"நெருப்பு மட்டுமா, உங்கள் ஹேன்ட் பவுச் கூட அனைத்தையும் சுத்தம் செய்து விட்டதே" என்றாள் மகள்.
ருத்ரம்..நமகம்..சமகம் ..மந்திரத்தை எனது ஸ்மார்ட் ஃபோனில் டவுன்லோட் செய்து கொண்டேன் நான்.




Comments
Post a Comment