பதகளிப்பு
பெருங்கூட்டமொன்றில் செய்வதறியாது சுற்றித் திரியும் சிறு குழந்தை போல என் வாழ்வின் பல பகுதிகளில் நான் நின்றிருக்கிறேன். இவ்விடத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று யாரிடமாவது வாய்விட்டுக் கேட்டுவிடும் அளவிற்கு அந்நியப்பட்டுப் போன இடங்கள் உண்டு. வாழ்வைக் குறித்த மற்றவர்களது மதிப்பீடுகள் எனக்கு விளங்குவதில்லை. வேண்டி வருந்தி என்னை நானே அனைவருடனும் பொருத்திக் கொள்ள முயலும் பொழுதெல்லாம், முன்பை விட அதிகமாக வழி மாற்றி விடும் சம்பவங்கள் அரங்கேறுவதுண்டு. ஒரு சமயம் வீட்டில், பெரிய கடவுளின் தரிசனம் பெற்று வரலாமென்று முடிவு செய்யப்பட்டது. முந்தைய நாள் மாலையே கிளம்பிச் சென்று மலையடிவாரத்தில் தங்கி, விடிவதற்குள் வரிசையைக் கடந்து விட்டால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தரிசனம் பெற்று, காணிக்கை கைமாறெல்லாம் செய்து விட்டு, ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, வரும் வழியில் ஜவுளிக்கடையில் துணிமணிகள் வாங்கிக் கொண்டு, உறவினர் ஒருவரின் வீட்டில் சொத்து விபரங்கள் குறித்து பேசிவிட்டு என்று இன்னும் ஏதேதோவென்று நிகழ்ச்சி நிரல் நீண்டு கொண்டே சென்றதில் இறுதியில் பெரிய கடவு...