தாயுமானவன்
நான் பெயர்களை கவனிக்கத் துவங்கியது ஒரு சுவாரசியமான அனுபவம். இப்பொழுது கூட ஒரு கதை வாசித்தேன். அதில் வரும் ஒரு குரங்கு, தான் விரும்பும் மனிதப் பெண்களின் பெயர்களின் ஒரு பகுதியைத் திருடி வைத்துக் கொள்ளுமாம். அதாவது அந்தப் பெயரின் ஆன்மாவை திருடிக் கொள்ளுமாம். அப்படிச் செய்வதால் அந்தப் பெண்களிடம் தனக்கு ஏற்பட்ட அதீத ஈர்ப்பு சற்று ஆசுவாசமடைவதாகத் தோன்றுமாம். மனிதப் பெண்கள் மேல் குரங்குகள் இச்சைக் கொள்வது அவ்வளவு மோசமான விஷயம் இல்லையென்றாலும் சமீப காலமாக அவ்வாறான ஒரு எண்ணம் மனிதக் கூட்டத்தின் மனதில் எழுந்துள்ளதால் தன் உணர்ச்சிகளுக்கு வேலியிட்டுக் கொள்ளும் விதமாக அந்தக் குரங்கு பெயர்களின் ஆன்மாவை மட்டும் கவர்ந்து கொள்ளுமாம். இந்தக் கதை என்னை வந்தடைந்தது. நான் தேடாத பொழுது என்னை வந்தடைந்தது. ஆனால் பெயர்கள் குறித்து சில நாட்களாக என் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். அதாவது மிகச் சாதாரண பெயர்கள் அதை ஏந்தி நிற்கும் அற்புதமான மனிதர்கள் ஒரு புறம், புனிதத்துவமான பெயர்கள் அதற்கு சற்றும் நியாயம் செய்யாத மனிதர்கள் மறுபுறம் என பெயர்களைக் கண்டவுடன் அதன் முகங்கள்...